Published:Updated:

விகடன் மேடை - வாலி

விகடன் மேடை - வாலி

விகடன் மேடை - வாலி

விகடன் மேடை - வாலி

Published:Updated:
விகடன் மேடை - வாலி

பா.ஸ்ரீதர், சேலம்.

 ''இளையராஜா - ரஹ்மான் ஒப்பிடுங்களேன்... ப்ளீஸ்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''திரு.இளையராஜாவிடம் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்   திரு.ரஹ்மான். ஒப்பிட என்ன இருக்கிறது? ஒவ்வொருவர் பாணி உலகறிந்ததே!''

ச.முகுந்தன், சங்கரன்கோவில்.

''பெண் - பொன் - மண்... எதில் உங்களுக்குப் பற்று அதிகம்?''

''எதிலும் நான் அதிகப் பற்றுவைக்காததால்தான் - இந்த எண்பத்தோரு வயதிலும் ஓரளவு மன நிம்மதியோடு இருக்கிறேன்... உடன் வருவது அறம் மட்டுமே என்று அறிந்தவன் நான்!''

க.வடிவுக்கரசன், நெய்வேலி.

''கவிஞர் பெண்மையை உணர்ந்து அனுப வித்த தருணம் எப்போது... மனதின் மென்மையிலா... ஸ்பரிசத்தின் மென்மையிலா?''

''என் தாய் என்னை ஸ்பரிசித்தபோது; என் தாய் என் பிழைகளைப் பொருட்படுத்தாமல் மென்மையாய்த் திருத்தியபோது!''

##~##

கா.மணி, செங்கல்பட்டு.

''அந்த ரெங்கராஜன் ( சுஜாதா) பற்றி இந்த ரெங்கராஜன் (வாலி) என்ன சொல்கிறார்?''

''அந்த ரெங்கராஜன் என் பாசத்துக்கும் நேசத்துக்கும் உரிய நண்பர். நான் அவருடைய எழுத்துக்குப் பரம ரசிகன். சினிமாக்காரர்களை அவர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பது தான் என் வருத்தம். அவருடைய எழுத்துக்குத் திரையில் உரிய மரியாதை தரப்படவில்லை. நானாயிருந்தால் - என்னை அவ்வளவு எளிதாகப் பயன்படுத்திக்கொள்ள இடம் தந்திருக்க மாட் டேன். ANYHOW திரு.சுஜாதா அவர்கள் காலம் வென்று நிற்பவர் என்பது சத்தியம்!''

கி.பாரதி, கொற்கை.

''உங்கள் பாடல்கள் பல... கண்ணதாசன் எழுதியது என்றே பலர் நம்பிக்கொண்டு இருக்கின்றனர். (உம்) 'அன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்’, 'இதோ உந்தன் தெய்வம்...’, 'காற்று வாங்கப் போனேன்...’ போன்ற பாடல்கள். எப்படி நிகழ்ந்தது இந்த விபத்து?''

''இது விபத்தல்ல; எனக்குக் கிடைத்த விருது!''

எஸ்.கே.சங்கர், போத்தனூர்.

''உங்களுடன் பிடிவாதமாக இருக்கும் பிரிய மறுக்கும் (நீங்கள் விட நினைக்கும்) பழக்கம் எது ஐயா?''

''சின்னச் சின்ன முன்கோபம்!''

அ.ராஜப்பன்,கருமத்தம்பட்டி.

 '' 'கற்பனை என்றாலும் கற் சிலை என்றாலும்’ என்ற பாட்டை தபால் கார்டில் எழுதியதைப் பார்த் துத்தான் டி.எம்.எஸ். தங்களை சென்னை வருமாறு அழைத்தாராமே. அப்படியா? நீங்கள் முதல் பாடல் எழுதிய சூழல்பற்றி விரிவாகப் பகிர்ந்துகொள்ளுங்களேன்...''

''1958 - டிசம்பரில் நான் திரு.கெம்பராஜ்  அவர்கள்  தயாரித்து இயக்கிய 'அழகர்மலைக் கள்ளன்’ என்ற படத்தில்தான் - திரு.கோபாலம் என்கிற இசையமைப்பாளரிடம் என் முதல் பாடலை எழுதினேன். திருமதி. பி.சுசீலா பாடினார்கள். புரட்சிதாசன் அவர்கள்தான் அந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல் கள் எல்லாம். திரு.வி.கோபாலகிருஷ்ணன் சிபாரிசில் எனக்கு அதில் ஒரு பாடல் கிடைத்தது. நான் அரை மணி நேரத்தில் முழுப் பாடலையும் மெட்டுக்கு எழுதி முடித்தேன். புரட்சி தாசனே முதுகில் தட்டிக்கொடுத் தார்!''

அ.ராஜப்பன், கருமத்தம்பட்டி.

''இன்றைக்கு கலைஞர் பிரியர்! என்றென்றைக்கும்?''

''என்றென்றைக்கும் கலைஞர் பிரியர்தான். வாலி என்பதனால், மரத்துக்கு மரம் தாவும் மந்தி என்று நினைத்தீர்களா?''

வி.ஜானி, சென்னை-89.

''வாலி சார் பளிச்னு சொல்லுங்க... கடவுள் இருக்காரா இல்லையா?''

''இருக்கிறார்!''

என்.காளிதாஸ், சிதம்பரம்.

''சமீபத்தில் வாசித்த புத்தகம்பற்றி...''

''பழநிபாரதியின் 'காற்றின் கையெழுத்து’; அற்புதமான புத்தகம். IT PLAYED ON MY NERVES!’’

விகடன் மேடை - வாலி

காத்தவராயன், மம்சாபுரம்.

 '' 'தசாவதாரம்’ படத்தில் 'ராஜ லட்சுமி நாயகன் ஸ்ரீனிவாசன்தான் ஸ்ரீனிவாசன் சேய்’ என்று கமல்ஹாசனுக்கான வரியை எழுதிவிட்டு, அடுத்த வரியில் 'நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜர்தான்... ராஜனுக்கு ராஜன் இந்த ரெங்கராஜன்தான்’ என்று நீங்கள் குறிப்பிடுவது உங்களைத்தானே? கமலையும் சந்தோஷப்படுத்தி யாயிற்று... உங்கள் இருப்பையும் பதிவுசெய்தாயிற்று... அப்படித் தானே?''

''காட்சியோடு ஒன்றியிருந்தால் இந்தச் சந்தேகம் உங்களுக்கு வராது!''

ப.கோபாலகிருஷ்ணன், தேனி.

''குடி (மது) 'குடி’யைக் கெடுக்கும்! மாது?''

''மனதைக் கெடுக்கும்!''

கி.ரங்கா, ஆலப்புழை.

'' 'ஹே ராம்’ படத்தில் கமல் இயக்கத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்?''

''என்னை மிகமிகக் கண்ணியமாக நடத்தினார். அவர் முன்னால் நடிப்பது என்பது பகல் விளக்குக்கு முன்னால் அகல் விளக்கு ஏற்றுவதுபோல்! அவர் என்னைச் சரியாக வேலை வாங்கி யிருக்கிறார் என்பதற்குச் சான்று - அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு என் நடிப்பை ஒருவர் பாராட்டினார் என்பதுதான்!

அந்த ஒருவர் வேறு யாருமல்ல, கலைஞர்!''

ப.ஸ்ரீதர், சென்னை-4.

''அது என்ன வாலி 1000?''

''என்னுடைய ஆயிரம் பாடல்களை, 'சாதகப் பறவைகள்’ இசைக் குழுவினர் திரு.சங்கர் தலைமையில் - வாரம் தோறும் எட்டு பத்து பாடல்களாக 'வசந்த் டி.வி’-யில் பாடுகிறார்கள். என்னை திருமதி குஷ்பு; திருவாளர்கள் ஏவி.எம்.சரவணன்; எம்.எஸ்.வி.; தேவா; பா.விஜய்; நா.முத்துக்குமார்; மதன்; கிரேஸிமோகன்; டைரக்டர்கள் திரு.மகேந்திரன்; திரு.எஸ்.ஜே.சூர்யா; திரு.கதிர்; திரு.வெங்கட்பிரபு; திரு.எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் பேட்டி காண்கிறார்கள். மூன்று வருஷத்துக்கு மேல் இந்த நிகழ்ச்சி வரும். இந்த நிகழ்ச்சி மூலம் என்னையும் என் பாடல்களையும்பற்றி நீங்கள் முன்னம் கேட்டறியாத தகவல்களைப் பெறக் கூடும்!''

கே.செந்தில்குமார், சேலம்.

 ''60 வயதைத் தாண்டினாலே மறதி நோயால் பெரும்பாலானோர் அவதிப் படும்போது, தங்கள் ஞாபக சக்தியின் ரகசியம் என்ன?''

''இறையருள்!''

மு.மனோ, திருச்சிற்றம்பலம்.

 '' 'எங்கள் தங்கம்’, 'இவர்கள் வித்தியாசமானவர்கள்’, 'வருஷம் 16’, 'அபூர்வ சகோதரர்கள்’, 'கேளடி கண்மணி’, 'தசாவதாரம்’ - இந்தப் படங்களின் பாடல்களுக்காக தமிழக அரசின் விருது வென்றிருக்கிறீர்கள். இதில் உங்களுக்குப் பிடித்த பாடல் எது? ஏன்?''

'' 'அபூர்வ சகோதரர்கள்’ படத் தில் வரும் 'நான் உன்னை நெனச்சேன்; பாட்டு படிச்சேன்’ என்ற பாடல். காரணம், நூறு சதவிகிதம் அந்தப் பாடல் கதையை, காட்சியைக் கவ்வி நிற்கிறது!''

கே.இக்பால், மேலப்பாளையம்.

 ''தங்களுக்குக் கவிதை எழுத உகந்த நேரம், சிறந்த இடம் எது?''

''அதிகாலை - என் வீட்டு அறையில்!''

பெ.கோபி, திருவண்ணாமலை.

  ''கவியரசர் கண்ணதாசனிடம் நீங்கள் வியந்து ரசித்த அம்சம் என்ன?''

''நான் எத்தனையோ எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற மேடைகளில் அவரைக் கடுமையாக விமர்சித்துப் பேசியும்கூட - என்னை - எந்தச் சந்திப்பிலும் ஒரு புன்னகையால் வீழ்த்திப்போகும் அவரது பெருந்தன்மை!''

எஸ்.காந்தி, சென்னை-10.

 ''தமிழருவி மணியன் 'நான் கண்ணதாசனின் காதலன். வாலி, வைரமுத்துவின் விமர்சகன்’ என்கிறாரே? அதற்கு உங்களின் பதில் என்ன?''

''அவர் பாராட்டும்படியாக என்றாவது ஒருநாள் ஏதாவது ஒன்றை எழுத வேண்டும் என்பதுதான் என் கவலை!''

அ.ராஜப்பன், கருமத்தம்பட்டி.

 '' 'கவிஞர் வாலி’யோடு எந்த விஷயத்தில் முரண்படுவீர்கள்?''

''என்னோடு நான் முரண்பட்டால் - எனக்கு ஙிகிலிகிழிசிணி ளிதி ஙிஸிகிமிழி இல்லைஎன்று அர்த்தம். நான் வேறு; கவிஞர் வாலி வேறு - என்று உங்களுக்கு யார் சொன்னது?''

கே.இக்பால், மேலப்பாளையம்.

 '' 'நினைத்ததை முடிப்பவன்’ படத்தின் 'கண்ணை நம்பாதே’ பாடலுக் கான சிச்சுவேஷனைத் தங்களிடம் இயக்குநர் சொல்லி, அதற்குத் தாங்கள் எழுதிய பாடலை எம்.ஜி.ஆர். நிராகரித்து, பிறகு கவியரசு கண்ணதாசன் அந்த சிச்சுவேஷனுக்கு எழுதிய பாடலும் நிராகரிக்கப்பட்டு, பிறகு மருதகாசி எழுதிய பாடல்தான் 'கண்ணை நம்பாதே...’ என்றொரு செய்தி கேள்விபட்டிருக்கிறேன்... உண்மையா?''

''உண்மை.''

- இன்னும் சொல்வார்

அடுத்த வாரம்

''உங்களுக்கு நண்பர்கள் பட்டாளம் அதிகமாமே... உங்களால் மறக்க முடியாத நண்பர் யார்?''

''கண்ணதாசனைப் பல நேரங்களில் விஞ்சியவரில்லை வாலி! ஒப்புக்கொள்ள மனமிருக்கிறதா வாலிபக் கவியே?''

''உங்களுக்கு 'அரசியல்’ தெரியுமா?''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism