Published:Updated:

விகடன் ஜன்னல்

விகடன் டீம்

விகடன் ஜன்னல்

விகடன் டீம்

Published:Updated:

நிலா, பாட்டி, ஆம்ஸ்ட்ராங்!

விகடன் ஜன்னல்

ந்திரனில் காலடித் தடத்தைப் பதிவுசெய்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் தனது 82-வது வயதில் வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்துகொண்டார். நிலவில் முதல் மனிதனாகக் காலடி வைத்து அமெரிக்கக் கொடியை நட்ட நீல் ஆம்ஸ்ட்ராங், அங்கு மொத்தம் 2 மணி நேரம் 31 நிமிடங்கள் இருந்தார். அந்தப் பயணம் முடிந்து பூமிக்குத் திரும்பிய ஆம்ஸ்ட்ராங்கை உலகமே கொண்டாடியது. ஆனால், அவர் அந்தப் புகழ் போதையை மனதில் ஏற்றிக்கொள்ளாமல் இறுதி வரை எளிமையாகவே வாழ்ந்து மறைந்திருக்கிறார். பாராட்டு விழாக்களைக்கூடத் தவிர்த்தவர், ஓய்வுக்குப் பின்னும் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சித் திட்ட மேம்பாடுகளுக்காக நாசாவுக்கு மெயில் அனுப்பாத நாளே கிடையாது என்கிறார்கள். யார் கண்டது? உடலைவிட்டுப் பிரிந்த அவரது ஆன்மா சந்திரனில் சுற்றிக்கொண்டு இருக்கலாம். இனி நிலா - பாட்டி கதை சொல்பவர்கள் ஆம்ஸ்ட்ராங்கையும் அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

தீரா ஈழத் துயரம்!

விகடன் ஜன்னல்

ழத் தமிழனின் துயரம் தமிழகத்தில் தீரவில்லை. கடந்த 6-ம் தேதி தன்னை 'க்வாரன்டைன்’ முகாமில் இருந்து பொது முகாமுக்கு மாற்றக் கோரி காலவரையற்ற உண்ணாவிரத்தை மேற்கொண்டார் இலங்கை அகதியான செந்தூரான். 15 நாட்களுக்கு மேல் அவர் உண்ணாவிரதம் இருந்தும் அரசு செவிசாய்க்கவில்லை. செந்தூரானின் உடல்நிலை மிகவும் மோசம் அடையவே கடந்த 25-ம் தேதி ஆபத்தான நிலையில் அவர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வைகோவின் ம.தி.மு.க. சார்பில் தொடர் உண்ணாவிரதம் தொடங்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழன் என்ற உணர்வு இல்லாவிட்டாலும்கூட ஒரு மனிதன் என்றாவது இறங்கி வருமா தமிழக அரசு?

இந்த வாரம்... வதந்தி வாரம்!

விகடன் ஜன்னல்

முதலில் வடகிழக்கு மாநிலத்தவர்கள் மீதான தாக்குதல் என வதந்தி, அடுத்து மெஹந்தி வதந்தி... பிறகு தேங்காய். இந்த வாரம்... வதந்தி வாரம்! 'பிறந்த குழந்தை பேசியது’ என்று கோக்குமாக்காகக் கிளம்பிய வதந்தியால் கடந்த வாரம் தேங்காய் கைக்கெட்டா வஸ்துவானது. வடுமாங்காய்போல இருந்த தேங்காய்க்குக்கூட மார்க்கெட்டில் 30 ரூபாய் விலை வைத்தார்கள்.

இத்தனைக்கும் 'பல்க்’ எஸ்.எம்.எஸ்ஸுக்குத் தடை இருந்த காலகட்டத்திலும் பல்கிப் பரவி இருக்கிறது வதந்தி. மூன்று நாட்களாகப் பல ஹோட்டல்களில் தேங்காய் சட்னிகூடக் கிடைக்கவில்லை. எதற்கும் பாடல், காமெடி க்ளிப்பிங்ஸ் டெடிகேட் செய்வதுதானே தமிழனின் பழக்கம். ஆகவே, இந்த வதந்தியைப் பரப்பிய தமிழனுக்குத் தேங்காயில் பாம் என்ற கவுண்டமணியின் காமெடி டெடிகேட் ஆகுக!

கிரிக்கெட் தமிழன்கள்!

விகடன் ஜன்னல்

மூன்றாவது முறையாக ஜூனியர் உலகக் கோப்பையை வென்று அசத்தி இருக்கிறது இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி. மறுபுறம் நியூஸிலாந்தை இன்னிங்ஸ் தோல்வி அடையவைத்திருக்கிறது சீனியர் கிரிக்கெட் அணி. இரண்டு அணிகளின் அசத்தல் வெற்றிகளில் தமிழர்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.

ஜூனியர் உலகக் கோப்பை கால் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 136 ரன்கள் எடுத்தாலே வெற்றி என்கிற நிலையில் தடுமாறியபோது 51 ரன்கள் குவித்து இந்திய அணியைச் சரிவில் இருந்து மீட்டு வெற்றிக்கு வித்திட்டார் சென்னையைச் சேர்ந்த பாபா அபராஜித். ஆல் ரவுண்டர் அபராஜித் தொடர் முழுக்க ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். அபராஜித்தின் இரட்டைச் சகோதரர் இந்திரஜித் தமிழக ஜூனியர் அணியின் கேப்டன். அடுத்த மார்க் வாஹ், ஸ்டீவ் வாஹ் ரெடி!

நியூஸிலாந்தைத் தனது கேரம் பாலால் நசுக்கிவிட்டார் தமிழரான ரவிச்சந்திரன் அஷ்வின். இரண்டு இன்னிங்ஸிலும் அஷ்வினின் சுழலில் சிக்கிச் சீரழிந்தது நியூஸிலாந்து. இரண்டாவது இன்னிங்ஸின் இறுதியில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசரவைத்தார் அஷ்வின். இரண்டு இன்னிங்ஸ்களிலும் தலா ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வினுக்கு 'ஆறு அஷ்வின்’ எனச் செல்லப்பெயர் வைத்துவிட்டாராம் அவரது காதல் மனைவி ப்ரீத்தி!