Published:Updated:

விகடன் மேடை - தொல்.திருமாவளவன்

விகடன் மேடை - தொல்.திருமாவளவன்

விகடன் மேடை - தொல்.திருமாவளவன்

விகடன் மேடை - தொல்.திருமாவளவன்

Published:Updated:
##~##

க.தேசப்பன், தேன்கனிக்கோட்டை.

''டெசோ மாநாட்டில், கருணாநிதி கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர்போலப் பேசி இருக்கிறீர்களே... வெளி உலகத்துக்கு எல்லாம் சரி, அன்றைய இரவு தூங்கப்போகும் முன் மனம் உறுத்தவில்லையா?''

''ஈழ விடுதலை ஆதரவு, விடுதலைப் புலி கள் ஆதரவு என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொள்கை. அதை நீங்கள் அறிந்துகொள்ளும் அளவுக்கு நாங்கள் செயல்படவில்லை என்பதை எண்ணி வருந்துகிறேன். அதே வேளை யில், ஈழ விடுதலையையும் விடுதலைப் புலி களையும் ஆதரிப்பது தி.மு.க-வின் கொள்கை என்பதையாவது அறிந்துவைத்திருக்கிறீர்களே... அதற்காகப் பாராட்டுகிறேன்.''

நீல.தமிழேந்தி, சென்னை-24.

''நீங்கள் கற்பனை செய்துவைத்திருந்த தலைவர் பிரபாகரனை, நேரடிச் சந்திப்பின்போது உணர்ந்தீர்களா?''

விகடன் மேடை - தொல்.திருமாவளவன்

''மேதகு பிரபாகரன் அவர்கள் ஒரு மாபெரும் மக்கள் தலைவர் என்றாலும், இன விடுதலைக்கான படைத் தலைவர் என்பதால் அவ்வளவு எளிதாகச் சந்திக்க இயலாது என்றுநினைத்திருந்தேன். ஆனால், கனவா நனவா என்று வியக்கும் வகையில், மிடுக்கான அந்த ராணுவ உடையோடு அவரே வாசலில் நின்று எங்களை வரவேற்றதைக் கண்டு அதிர்ந்தும் வியந்தும் போனேன். 'ஆயுத இரைச்சல்களும் மரணக் கூச்சல்களும் நிறைந்த போர்ச் சூழலில் பகையை எதிர்த்துப் படையை நடத்தும் ஒரு மாவீரன், சில மணித் துளிகளைக்கூட நமக்காக எப்படி ஒதுக்க முடியும்’ என்று எண்ணியிருந்த நிலையில், சில மணி நேரம் எங்களோடு இருந்தார் என்பதே எங்களது வியப்பை மேலும் விரிவாக்கியது.

குடும்ப வாழ்க்கை, பொது வாழ்க்கை, தமிழக அரசியல், இந்திய அரசியல், உலக நடப்புகள் இப்படி ஏராளமான, இயல்பான உரையாடல்கள். ஒவ்வொரு நொடிப் பொழுதும் நெருப்பு ஆறுகளைக் கடக்கும் போராட்ட வாழ்க்கையிலும் நகைச்சுவை மிகுந்த ஒரு போராளியாக எப்படி இவரால் இருக்க முடிகிறது என்று வியக்கும் அளவுக்கு அவரது உரையாடலின் பெரும் பகுதி அமைந்திருந்ததைக் கண்டு சிலிர்த்தேன்.

விகடன் மேடை - தொல்.திருமாவளவன்

நண்பகல் உணவின்போது, அவரது வலப் பக்கம் அமர்ந்திருந்த எனது இலையில், அவரது இலையில் இருந்து கோழிக் கறித் துண்டு ஒன்றை எனக்கு எடுத்துவைத்தார். 'நான் கறி சாப்பிடுவது இல்லை அண்ணா’ என்று சொன் னதும், அடுத்த நொடியே 'இது என்ன சைவ சிறுத்தையா?’ என்று சொல்லி அனைவரையும் சிரிக்கவைத்தார்.

அவர் ஒரு மாபெரும் படைத் தலைவராக இருந்தாலும், இயல்பான மக்கள் தலைவராகவும் இருந்ததை உணர்ந்தேன்!''

ஆர்.சிவா, பெரியகோவில்.

''ஒரு மாநாட்டில் ராமதாஸ் முன்னிலையில், 'யாராவது கலப்புத் திருமணம் செய்தால் வெட்டுங்கள்’ என்று காடுவெட்டி குரு பேசினாரே... அதைக் கண்டித்து நீங்கள் எந்தப் போராட்டத்தையும் அறிவிக்காதது உங்கள் பலவீனத்தைத்தானே காட்டுகிறது?''

''சாதி ஒழிப்பு, தமிழ்த் தேசியம், பாட்டாளி வர்க்க விடுதலை, மகளிர் விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆகிய கொள்கைகளை ஆயுதங்களாக ஏந்திக் களமாடுகிற ஓர் இயக் கம் விடுதலைச் சிறுத்தைகள். எனவே, சமூக நல்லிணக்கத்துக்கு எதிராகவும் தமிழர் ஒற்றுமைக்கு எதிராகவும் தூண்டப்படும் சாதியவாதச் சேற்றுக்குள்போய்ச் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை.

எனினும், தமிழகத்தில் இதை யாருமே கண்டிக்க முன்வராதபோது, விடுதலைச் சிறுத் தைகள் மட்டுமே கண்டித்திருக்கிறது!''

நா.சக்திவேல், போச்சம்பள்ளி.

''வைகோவுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவதில் விருப்பம் இருக்கிறதா?''

''அவரோடு இணைந்து செயல்பட முடியாத அளவுக்கு அவருக்கும் எமக்கும் இடையில் எந்த முரண்பாடுகளும் இல்லை.

2006 சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரே கூட்டணியில் இணைந்து செயல்பட்டு இருக்கிறோம். 2009 நாடாளுமன்றத் தேர்தலின்போது ம.தி.மு.க., பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் என வெளிப்படையாக விடுதலைப் புலி களை ஆதரிக்கும் கட்சிகளா வது ஓர் அணியில் திரள்வோம் என்று மனப்பூர்வமாக அறை கூவல் விடுத்தேன்.

விகடன் மேடை - தொல்.திருமாவளவன்

இன்னும் சொல்லப்போனால், கல்லூரி மாணவப் பருவத்தில் இருந்தே ஈழ ஆதரவு, புலிகள் ஆதரவு எனும் அடிப்படையில் அவர் மீது ஈர்ப்புகொண்டேன். எனவே, தேர்தல் அரசியலை யும் தாண்டி எம்மிடையே ஓர் ஈர்ப்பும் இணக்கமும் எப்போதும் உண்டு!''

க.நவீன், செய்யாறு.

''விரும்பிப் படித்த புத்தகம்?''

''அண்மையில் விரும்பிப் படித்த புத்தகம்... 'ராஜீவ் கொலை வழக்கு’!''

டி.ஜேம்ஸ், வேளாங்கண்ணி.

''அருந்ததியர் இடஒதுக்கீட்டை முதலில் எதிர்த்த நீங்கள், தற்போது வரவேற்கிறீர்கள். இந்த மனமாற்றத்துக்கு என்ன காரணம்?''

''விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை முதலில் கவனிக்கத் தவறிய நீங்கள், இப்போது கவனிக்கத் தொடங்கியிருக்கிறீர்கள். இந்த மனமாற்றம் எப்படி நேர்ந்தது?

அருந்ததியினருக்கான இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் தனிப்பட்ட முறையிலும் தோழமை இயக்கங்களோடு இணைந்தும் தொடர்ந்து போராடிவந்திருக்கிறது. தமிழகத்தில் அருந்ததியினருக்கான 3.5 சதவிகித இடஒதுக்கீட்டைப் பெற்றதில் விடுதலைச் சிறுத்தைகளின் பங்க ளிப்பு மகத்தானது. அந்த இடஒதுக்கீட்டை வழங்கியதற்காகவே அன்றைய முதல்வர் கலைஞருக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் 'அம்பேத்கர் சுடர்’ விருது வழங்கிப் பாராட்டினோம்!''

எஸ்.காளிராஜன், வேடசந்தூர்.

''இத்தனை வருட அரசியல் வாழ்வில் நீங்கள் வெறுக்கும் விஷயம்?''

''ஆதாரம் இல்லாத அவதூறுகளும் அடிப்படை இல்லாத விமர்சனங்களும்!''

எஸ்.வேலு, அம்மையார்குப்பம்.

''தமிழ்நாட்டில் சாதிக் கட்சிகள் என்றாலே உங்கள் நினைவும்  ராமதாஸ் நினைவும்தான் வருகிறது. இது உங்களுக்கு மைனஸ்தானே?''

''விடுதலைச் சிறுத்தைகள் சாதிக் கட்சி அல்ல... சாதி ஒழிப்புக் கட்சி! விடுதலைச் சிறுத்தைகள், சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை எனும் முழக்கத்தை அடிப்படையாகக்கொண்ட பேரியக்கம். தமிழகத்தில் சாதி ஒழிப்பை ஓர் அடிப்படை அரசியலாகவும் வெளிப்படைக் கொள்கையாகவும் ஏற்று இயங்குகிற ஒரே இயக்கம் விடுதலைச் சிறுத்தை கள் கட்சி.

'எங்கள் சாதி உயர்ந்த சாதி’, 'எங்கள் சாதி ஆண்ட சாதி’ என்று சாதியவாதிகள் மார்தட்டிக்கொள்வதைப்போல, விடுதலைச் சிறுத்தை கள் சாதிப் பெருமைகளைப் பேசி, சாதி மோதல்களைத் தூண்டி சாதி அரசியல் செய்ததாக ஏதேனும் ஒரு சான்று காட்ட முடியுமா?''

கு.பிரேம்குமார், கிருஷ்ணகிரி.

''உங்கள் அரசியல் வழிகாட்டி கள் யார்?''

 ''எனது அரசியல் வழிகாட்டிகள் என்பதைவிட, எனது அரசியல் உந்து சக்திகள் - புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், மேதகு பிரபாகரன்!''

மா.புருஷோத், பெரம்பூர்.

விகடன் மேடை - தொல்.திருமாவளவன்

''உங்களைப் போல இலக்கியம், சமூகம்குறித்த கருத்தாழம் மிக்க பேச்சாளர் அரசியலில் யாரும் இல்லை. ஆனால், சிந்தனையாளரான நீங்களே கொள்கைக்கு மாறாகக் கூட்டணி வகிக்கிறீர்களே... ஏன்?''

''தேர்தல் களத்தில் பெரும்பாலும் அதிகாரப் பகிர்வு எனும் அடிப்படையில்தான் கூட்டணிகள் அமையும். போராட்டக் களங்களில் மட்டுமே கொள்கை அடிப்படையில் கூட்டணிகள் உருவாகும்.

கொள்கை அடிப்படையில் மட்டுமே தேர்தல் கூட்டணி அமைய வேண்டும் எனில், இந்தியாவில் எந்த ஒரு கட்சியும் இன்னொரு கட்சியோடு கூட்டணி வைக்கவே முடியாது. முற்றிலும் நேர் எதிரான கொள்கைகொண்ட கட்சிகளோடு மட்டுமே கூட்டணி அமைப்பதைத் தவிர்த்து, ஓரளவு கொள்கை உடன்பாடு உள்ளவர்களோடு அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வது என்னும் வகையில்தான், நடைமுறையில் உள்ள தேர்தல் முறை யில் கூட்டணி அமைத்துக்கொள்ள முடியும்!''

எல்.சந்திரன், திண்டுக்கல்.

''ராமதாஸுக்கும் உங்க ளுக்குமான நட்புகுறித்துச் சொல்லுங்களேன்?''

''அண்ணனும் தம்பியுமாக உறவு தொடர்கிறது. அண்மை யில்கூட மறவாமல் பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.

மொழிக்காக, இனத்துக்காக, சமூக நீதிக்காக, மண்ணுக்காக இணைந்த எமது கைகள் எப்போதும் இறுக்கமாகவே இருக் கும்!''

எஸ்.தாஸ், திருச்சி.

''கட்சிக்குத் தங்கம் கொடுக் கும் அளவுக்கா வசதி வந்துவிட்டது சிறுத்தைகளுக்கு?''

''குறைந்தது 20 பேர் சேர்ந்து, ஒரு கிராம் தங்கத்தைக் கொடை அளிக்கும் அளவுக்குத்தான் சிறுத்தைகளின் வசதி உள்ளது!''      

- இன்னும் பேசுவோம்...

அடுத்த வாரம்

''தி.மு.க., அ.தி.மு.க. என்ன பெரிய வித்தியாசத்தைக் கண்டிருக்கிறீர்கள்?''

''சாதியை ஓட்டு அரசியலுக்குப் பயன்படுத்தும் அரசியல்வாதிகளும் சாதி ஒழியாமல் இருக்க ஒரு காரணம்தானே?''

''தமிழ்நாட்டில் தலித் ஒருவர் முதல்வர் ஆக முடியுமா? முடியாது எனில் ஏன், எது காரணம்?''