ஸ்பெஷல் -1
Published:Updated:

விகடன் ஜன்னல்

விகடன் டீம்

''தமிழர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்!''

விகடன் ஜன்னல்

 'தமிழர்கள் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்கள். அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்!’ - ராஜபக்ஷே வின் இந்திய வருகையின்போது பாதுகாப்புக் காக இருந்த இந்தியப் படை வீரர்களுக்கு மத்திய அரசு கூறிய எச்சரிக்கை வார்த்தைகள் இவை. செப்டம்பர் 19-ம் தேதி மாலை மத்தியப் பிரதேசத்தை வைகோ தனது தொண்டர்களுடன் நெருங்க... பட்சிசோலி கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டார்கள். வழக்கமாகப் பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள். ஆனால், வைகோவுக்குப் பூங்கொத்து கொடுத்து தடுத்து நிறுத்தினார் சிந்துவாரா மாவட்ட ஆட்சியர் நீரஜ் சோனி. சளைக்காமல் கொதிக்கும் சாலையில் அமர்ந்துவிட்டார் வைகோ. இந்தப் பயணத்தின்போது மத்தியப் பிரதேசத்தின் கிராம மக்கள் தமிழர்களுக்குக் காட்டிய ஆதரவை மறக்கவே முடியாது. ஊர்த் தலைவரில் தொடங்கி பெண்கள், குழந்தைகள் எல்லாம் ஈழத்தின் துயரக் கதையைக் கேட்டுக் கண்ணீர் வடித்தார்கள். பாமரனுக்குப் புரிவது படித்தவருக்குப் புரியவில்லை என்பதுதான் இந்திய அரசியலின் இன்னொரு முகம்!

பவர் போச்சே!

ஓவர் பப்ளிகுட்டி பவர் ஸ்டார், இப்போது 'நோ பப்ளிகுட்டி!’ என்று முடிவு எடுத்திருக்கிறார்! சென்னையில் இருக்கும் அவரது ஆறு அலுவலகங்களையும் பூட்டிவிட்டு, மூன்று மனைவிகளையும் தனது சொந்த ஊரான மதுரைக்கு பேக் செய்துவிட்டார் பவர். உண்மையான 'பவர் சென்டருடன்’ நடக்கும் பேச்சுவார்த்தைகள் மூலம், விரைவில் வழக்குகளில் இருந்து விடுதலையாகி, அடக்கஒடுக்கமாக கோலிவுட்டில் வலம் வருவார் என்கிறார்கள் பவரின் அடிப்பொடிகள்!

ஒரு 'ஹீரோயின்’ நடிக்கிறாள்!

விகடன் ஜன்னல்

அட... கரீனா கபூருக்கு இவ்வளவு நடிக்கத் தெரியுமா? இன்றைய பரபர பப்ளிசிட்டி யுகத்தில், ஒரு சினிமா கதாநாயகி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள என்னவெல்லாம் 'அரசியல்’ செய்ய வேண்டி இருக்கிறது என்பதை 'ஹீரோயின்’ படத்தில் பளீர் சுளீர் காட்சிகளாக்கி இருக்கிறார் இயக்குநர் மதூர் பண்டார்கர். திருமணம்ஆனவனாகவே இருந்தாலும் டாப் ஸ்டார் ஹீரோவைக் காதலிப்பது, மீடியா கவனம் ஈர்க்க இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனுடன் காதலைப் பராமரிப்பது, மது-சிகரெட்-லெஸ்பியன் பழக்கம், படத்தின் பப்ளிசிட்டிக் காகக் காதலனுடன் படுக்கையறையில் நெருக்கமாக இருந்த காட்சிகளைத் தானே இணையத்தில் வெளியிடுவது என ஒரு ஹீரோயின் தனது சினிமா புகழைத் தக்கவைக்க எந்த அளவுக்குத் தனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சிதைத்துக்கொள்கிறார் என்பதை எந்தச் சமரசமும் இல்லாமல் வெளிப்படுத்தி இருக்கிறார் கரீனா. ஹிட் படங்களில் மட்டுமே இடம் பிடிக்கும் நடிக்கத் தெரியாத நடிகை என்ற விமர்சனத் தைப் போக்க, வசூலைக் குவிக்காது என்று தெரிந்தும் ஒரு ரியல் சினிமாவில் கரீனா நடிப்பதாகப் படத்தில் திரைக்கதை நகர்கிறது. ஆனால், ஹிட் படத்தில் 'நடித்த’ ஹீரோயின் என்கிற அந்தஸ்தை கரீனாவுக்கு கொடுத் திருக்கிறாள் 'ஹீரோயின்’!

'மரிச்ச மாதிரி நடிக்கிறார்!’

விகடன் ஜன்னல்

அச்சனை இழந்து தவிக்கிறது மலையாள சினிமா. பத்து நிமிட வசனத்தைப் பத்தே நொடி முகபாவங்களில் காட்டிவிட்டு 'கட்’ சொல்லிக் கர்ஜிக்கும் கம்பீரம் இந்திய சினிமாவில் எத்தனை பேருக்கு வரும்? அது திலகனின் வரம்!

அடிப்படையில் திலகன் ஒரு நாடக மேடைக் கலைஞர். திலகனின் கால்ஷீட்டை ஒட்டியே படப்பிடிப்பு நாட்களை நிர்ணயித்த காலம் மலையாள சினிமாவின் பொற்காலம். யாருக்கும் சமரசம் செய்யாத போக்கு திலகனின் ஆகப் பெரிய அடையாளம். மலையாள சினிமாவுக்கு சிலர் மசாலா பூச ஆரம்பித்தபோது சரவெடியாக வெடித்தார் திலகன். 'கலர் கண்ணாடியை மாட்டிக்கிட்டு, கழட்டிக் கழட்டி மாட்டுறவர் சூப்பர் ஸ்டார் கிடையாது’ என்று திலகன் கொளுத்திப்போட, மல்லுவுட்டின் ஹீரோக்களுக்கு முகம் சிவந்தது. மலையாள நடிகர்கள் சங்கமான 'அம்மா’ இவருக்கு நடிக்கத் தடை விதித்தபோது, 'எனக்குள் இருக்கும் கலைஞன் தற்கொலை செய்துகொள்வான்!’ என்று வெதும்பினார். திலகனின் உடல் உறுப்புகள் சில செயல் இழந்ததால் படுக்கையைத் தழுவிய திலகனை மாரடைப்பு நிரந்தரமாக நம்மைவிட்டுப் பிரித்துவிட்டது. ஆனால், கேரளம் இன்னமும் திலகனின் இறப்பை நம்பவில்லை... 'மரிச்ச மாதிரி நடிக்கிறார்’ என்கிறார்கள்!