Published:Updated:

விகடன் மேடை : தமிழருவி மணியன்

படம் : கே.ராஜசேகரன்

பிரீமியம் ஸ்டோரி
##~##
கே.சுபாஷ், திருவண்ணாமலை.

 ''தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பற்றி உங்கள் அரசியல் கருத்து என்ன?''

''எம்.ஜி.ஆரை எப்படிப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை, ஜெயலலிதாவைவிட மிகச் சரியாக அறிந்துவைத்திருப்பவர்!''

என்.குமரேசன், விழுப்புரம்.

விகடன் மேடை : தமிழருவி மணியன்

 '' 'ஒருநாள் முதல்வர்’ வாய்ப்பு உங்களிடம் வந்தால்..?''

 ''வாக்குச் சாவடிக்கு வந்து வாக்கு அளிக்காதவர்களின் ரேஷன் அட்டைகளையும் பாஸ்போர்ட்டுகளையும் பறிமுதல் செய்யும்படி உடனே ஆணை பிறப்பிப்பேன். சட்டம் அதற்கு இடம் தராது என்கிறீர்களா? நான் முதல்வராகும் வாய்ப்பும் வராதே!''

விகடன் மேடை : தமிழருவி மணியன்

ஆர்.ராஜா, திமிரி.

''அரசியல்வாதிகளின் வாரிசுகள் எந்தத் தியாகமும் இன்றி பதவிக்கு வருவதை எப்படிப் பல வருடங்கள் கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்?''

''பொதி சுமக்கும் கழுதை, எந்த மூட்டை தன் முதுகில் ஏற்றப்படுகிறது என்றா பார்க்கிறது? வண்டி இழுக்கும் காளை, யார் அமர்ந்திருக்கிறார்கள் என்று அறிந்த பின்பா அடியெடுத்துவைக்கிறது. கழுதை, காளை, தொண்டர் மீது நாம் பரிதாபப்படத்தான் முடியும்!''

எம்.ராஜேஷ், பெருங்களத்தூர்.

''என்னதான் கருணாநிதி மீது ஊழல், குடும்ப அரசியல், அதிகார துஷ்பிரயோகம் என்று குற்றச்சாட்டுகள் இருந்தாலும்... சமத்துவபுரம், அருந்ததியர்க்கு உள் இட ஒதுக்கீடு, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு, திருநங்கையர் நல வாரியம் என்று ஒதுக்கப்பட்டோருக்கு உரிய திட்டங்கள் அவர் ஆட்சியில்தானே நிறைவேறின? இவை எல்லாம் ஜெயலலிதா ஆட்சியில் நிறைவேற்றப்படாது என்பது உண்மைதானே?''

விகடன் மேடை : தமிழருவி மணியன்

'' 'என்னதான் ஆசிரியர், வகுப்பறையில் மாணவர்களுக்கு முன்பு மது அருந்தினாலும், சிகரெட் புகைத்தாலும், வெற்றிலை போட்டுத் துப்பினாலும், இடையிடையே கொஞ்சம் பாடம் நடத்துகிறாரே, அது போதாதா?’ என்று கேட்பது போல் இருக்கிறது உங்கள் கேள்வி.

ஆசு இரியர்தான் ஆசிரியர். குற்றம் களைபவராக இருப்பதுதான் ஆசிரியரின் முதல் லட்சணம். ஊழலின் நிழல் படாத, மக்கள் நலன் சார்ந்த, செப்புக் காசும் கொள்ளை அடிக்காத நேரிய நல்லாட்சியை வழங்குவதுதான் அரசியல்வாதிக்கு உரிய அடிப்படை இலக்கணம். இட ஒதுக்கீடு, நல வாரியம் எல்லாம் வாக்கு வங்கியை விரிவுபடுத்தும் ஜால வித்தைகள். வித்தை காட்டுவதில் கலைஞர் வித்தகர். வாக்கு சேகரிக்க எவை எல்லாம் பயன்படுமோ, அவற்றை ஜெயலலிதாவும் செய்வார். அவர் உயர் சாதி மனோபாவம் உள்ளவர் என்பதுதான் உங்கள் மறைமுகமான குற்றச்சாட்டு. அரசியல்வாதிகள் ஓட்டுப் பொறுக்குவதில் சாதி பார்ப்பதே இல்லை!''

ஆர்.தனசேகரன், சென்னை-75.

''டி.வி, கிரைண்டர், மிக்ஸி, ஆடு, மாடு... அடுத்து?''

''வீட்டுக்கு ஒரு கட்டில்... பக்கத்தில் ஒரு தொட்டில்!''

என்.மனோஜ்குமார், ஆரணி.

''வைகோ...?''

''நெறி சார்ந்த அரசியல்வாதி. கொள்கைப் பிடிப்புள்ள லட்சியவாதி. பேச்சில் எரிமலை. செயலில் புயல். எல்லாம் இருந்தும், இன்று இலவு காத்த கிளி!''

பா.குமரய்யா, சென்னை.

''இத்தனை இடர்கள், முரண்பாடுகள், அநீதிகள், ஊழல்கள் இருந்தும் இந்த நாட்டை எது கட்டிக் காத்துக்கொண்டு இருக்கிறது? மக்கள் ஏன் எழுச்சிகொண்டு போராடவில்லை?''

''மதங்களால் பிரிந்து, சாதிகளால் சரிந்து, ஆள்பவரின் ஊழல் முறைகேடுகளால் சிதைந்து, மேலான வாழ்வியல் விழுமியங்களை மெள்ள இழந்து வரும் இந்தியா, இன்று வரை கட்டுக் குலையாமல் காப்பாற்றப்படுவதற்கு, நம் முன்னோர்கள் அமைத்துவைத்த ஆன்மிக அடித்தளம்தான் முக்கியக் காரணம்.

உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள் இயல்பாக எழுச்சிகொள்வது இல்லை. சமூக லட்சியத்தை முன்னெடுத்துச் செல்லும் சுயநலமற்ற அறிவுஜீவிகளின் நெருப்பு எழுத்துக்களும், கந்தக வார்த்தை களும்தான் சாதாரண மக்களைச் சரித்திரம் படைக்கச் செய்யும். மேல்தட்டு வர்க்கம், யார் எப்படிப் போனாலும் தன்னலனைக் காப்பதில் தனிக் கவனம் காட்டும். அடித்தட்டு வர்க்கம் வயிற்றுப் பசியாற வழி தேடுவதிலேயே அன்றாடம் அலைக்கழிப்புக்கு ஆளாகும். ஓரளவு வாழ்க்கை உத்தரவாதம் உள்ள நடுத்தர வர்க்கத்தினரால்தான் எந்த இடத்திலும் புரட்சிக்குப் பூபாளம் வாசிக்கப் படும். ஆனால், இந்த மண்ணின் துர்பாக்கியம்... நடுத்தர வர்க்கம் 'மானாடுவதிலும் மயிலாடுவதிலும்’ மயங்கிக்கிடக்கிறது. அறிவுஜீவிகள் என்று பெயர் பெற்றவர்களோ, அதிகார பீடத்தில் யார் அமர்ந்தாலும் சலுகைகளுக்காக அன்றாடம் சாமரம் வீசுவதை வாழ்க்கை நெறியாக வகுத்துக்கொண்டனர். பின், மக்களிடம் எப்படி வரும் போராட்டத்துக்கான எழுச்சி?

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

''இன்றுள்ள அரசியல் நாகரிகம்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''கேழ்வரகில் நெய் வந்தால், கள்ளிப் பாலில் சிசு வளர்ந்தால், நம் அரசியல் அரங்கிலும் நாகரிகம் நிலைக்கும். ராஜாஜியின் இறுதிச் சடங்கில் பெரியார் குலுங்கிக் குலுங்கி அழுததும், கட்சி வேற்றுமைகளை மீறி அண்ணா, பெருந் தலைவர் காமராஜரை, 'குணாளா! குலக் கொழுந்தே’ என்று கொண்டாடியதும்... இன்று பொய்யாய், கனவாய், பழங்கதையாய்ப் போய்விட்டது. இப்போது எல்லாம், அரசியல் துர்தேவதையின் பீடத்தில் முதலில் பலியாவது நாகரிகம்தான்!''

கே.சீனிவாசன், மதுரை.

''ரசிகன், தொண்டன் இருவரில் யார் அப்பாவி?''

''தன் நெஞ்சம் கவர்ந்த நாயகனின் திரைப்படம் வெளியாகும் நாளில் தோரணம் கட்டுபவன் ரசிகன். தான் நேசிக்கும் தலைவருக்காகத் தோரணம் கட்டுவதிலும், சுவரொட்டி ஒட்டுவதிலும், மேடை போடுவதிலும், கோஷம் முழங்குவதிலும் மொத்த வாழ்க்கையையும் தொலைத்துவிடுபவன் தொண்டன். இருவரில் யார் அப்பாவி என்று இப்போது புரியுமே!''

விகடன் மேடை : தமிழருவி மணியன்
விகடன் மேடை : தமிழருவி மணியன்

சு.ஜானகி, செங்கல்பட்டு.

''சினிமா பார்ப்பது உண்டா? சமீபத்தில் பார்த்த படம்?''

''கல்லூரிப் பருவத்தில் சிவாஜி கணேசன் படங்களை விரும்பிப் பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆரின் 'எங்க வீட்டுப் பிள்ளை’, 'அன்பே வா’, 'ஆயிரத்தில் ஒருவன்’ இப்போது பார்த்தாலும் பிடிக்கும். சமீபத்தில் பார்த்து ரசித்த படம் 'மதராசபட்டினம்’. இந்தியில் 'குஜாரிஷ்’. கருணைக் கொலையை மையமாக்கி எடுக்கப்பட்ட கலைப் படைப்பு. எனக்கு இந்தி தெரியாது. நல்ல படத்தை ரசிக்க, மொழி ஒரு தடை இல்லை என்பதை எனக்கு அழுத்தமாக உணர்த்திய அற்புதமான படம்!''

என்.பாலகிருஷ்ணன், மதுரை.

''மௌன விரதம், உண்ணாவிரதம் போன்றவற்றைக் கடைப்பிடிப்பது உண்டா... ஏன்?''

''வாரத்தில் ஒரு வேளை உண்ணுவது இல்லை. செவ்வாய் அன்று நாள் முழுவதும் வாய் திறந்து யாரிடமும் பேசுவது இல்லை. ஒரு வேளை உண்ண மறந்தால், ஆரோக்யம் வளரும். ஒருநாள் முழுவதும் பேச மறுத்தால், ஆன்ம ஞானம் மலரும்!''

கு.பாண்டியன், திருப்பத்தூர்.

''சுயமரியாதை என்றால் என்ன?''

''தன் உடம்பில் இருந்து வழியும் வியர்வை யில், குடும்பத்துக்கான உணவைத் தேடுவதற்குப் பெயர்தான்... சுயமரியாதை!''

சி.மணி, வேலூர்.

''திராவிடக் கட்சிகளின் சாதனைதான் என்ன?''

'' 'பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை. போட்டுப் பழகிய பை!’ - ஒரு கூட்டத்தில் கண்ணதாசன் சொன்னது. நான் பக்கத்தில் அமர்ந்து கேட்டது!''

என்.பாலகிருஷ்ணன், மதுரை.

''வரும் காலங்களில் 'நேர்மையான தேர்தல்’ சாத்தியமா?''

''தேர்தல் கமிஷனின் அதிகாரங்கள் சட்டபூர்வமாக விரிவுபடுத்தப்பட்டால், நேர்மையும் நெஞ்சுரமும் கொண்டவர்கள் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டால், ஆள்பவருக்கு ஏற்றபடி ஆடாமல் அரசு ஊழியர்களும், காவல் துறையினரும் சமுதாயப் பொறுப்பு உணர்வுடன் செயற்பட்டால் 'நேர்மையான தேர்தல்’ நிச்சயம் சாத்தியம்!''

எம்.குணசீலன், மேட்டுப்பாளையம்.

''தனது தேர்தல் அறிக்கை மூலம் இப்போதே 'தி.மு.க. தேவலாம்’ என்று சொல்லவைத்துவிட்டதே அ.தி.மு.க?''

''ஆளும் கட்சி பதவியில் இருந்து இறங்காமல் பார்த்துக்கொள்ள ஆயிரம் இலவச வாக்குறுதிகள் வழங்குவது நியாயம் என்றால், எதிர்க் கட்சி அந்தப் பதவியில் ஏறி அமர்வதற்கு இன்னும் ஓராயிரம் அள்ளிவிடுவது எப்படி அநியாயமாகும்? நியாயத் தராசை நேராக நிறுத்துங்கள். கலைஞரும் ஜெயலலிதாவும் நாற்காலிப் போட்டியில் காட்டும் நாட்டம் தம் மக்கள் வாழ்வுக்காக; தமிழர்தம் வாழ்வுக்காக என்று தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்!''

அடுத்த வாரம்...

''நீங்கள் உங்களை 'அரசியல் அநாதை’ என்று குறிப்பிட்டீர்கள். ஆனால், தற்போது வைகோவைப் பார்த்தால் என்ன தோன்றுகிறது?''

''மறைமுகமாக உங்கள் ஆதரவு ஜெயலலிதாவுக்குத்தான் என்பதை நாங்கள் அறிவோம். இவ்வளவுக்குப் பிறகும் ஜெயலலிதா தன் மனநிலையை மாற்றிக்கொள்வார் என்று நம்புகிறீர்களா?''

'' 'காந்திய மக்கள் இயக்கம்’ ஆரம்பித்து இருக்கிறீர்கள். உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்... காந்தியின் கொள்கைகள் இன்றைய சூழலுக்கு ஏற்புடையதாக இருக்குமா?''

- கலக்கல் பதில்கள் தொடர்கின்றன...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு