Published:Updated:

விகடன் மேடை - அப்துல் கலாம்

விகடன் மேடை - அப்துல் கலாம்

விகடன் மேடை - அப்துல் கலாம்

விகடன் மேடை - அப்துல் கலாம்

Published:Updated:
##~##

மகா.ராஜேந்திரன், சென்னை-15.

 ''தனுஷ்கோடி அழிவுகள் பற்றிய உங்கள் நினைவுகள்..?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ராமேஸ்வரம் தீவு முழுவதுமே புயலால் மிகப் பெரும் அழிவைச் சந்தித்தது. தனுஷ்கோடி, எங்கள் தீவில் உள்ள ஒரு புனிதமான ஊர். ஐந்து வருடம் கஷ்டப்பட்டு, தச்சர்களுடன் சேர்ந்து கட்டிய, 40 பேர்களை ஏற்றிச் செல்லும் திறன்கொண்ட பாய்மரக் கப்பல் என் அப்பாவின் பெரும் சொத்து. உழைத்து உருவாக்கிய சொத்து. என் கல்விக்கு உதவிய சொத்து. எங்கள் குடும்பங்களுக்கு ஆதாரமாக விளங்கிய ஒரே சொத்து என் கண் முன்னாலேயே புயலால் தூள் தூளானதைப் பார்த்தேன். அந்த மிகப்

விகடன் மேடை - அப்துல் கலாம்

பெரிய இழப்பைச் சந்தித்த என் தந்தை, 'இன்ஷா அல்லா... இன்ஷா அல்லா’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அதன் அர்த்தம் இறைவனின் நாட்டம் என்பதாகும். அந்த ஒரு வார்த்தை எனது நீங்கா நினைவாக மாறிவிட்டது. என் பெற்றோரின் இறை நம்பிக்கை யும் தொழுகையும் அவர்களுக்கு நம்பிக்கை கொடுத்தது. அதன் மூலம்தான் அந்த இழப்பை ஈடுகட்டும் அளவுக்கு உழைத்து நல்வாழ்வை அடைந்தார்கள்!''

கி.ராஜ்மோகன், மயிலாடுதுறை.

''அரசியல்வாதிகள் ஊழல்வாதிகளாக மலிந்துவிட்ட இந்தக் காலத்தில், நீங்கள் ஏன் ஓர் அரசியல் கட்சி துவங்கக் கூடாது? இளைஞர்கள் நாங்கள் உங்களுக்குத் தார்மீக ஆதரவு அளிப்போமே?''

''நண்பர்களே, ஊழலை ஒழிப்பதற்காகப் பல சட்டங்கள் இருக்கின்றன. பலர் கைது செய்யப்படுகிறார்கள். சட்டத்தின் முன் நிறுத் தப்படுகிறார்கள். சிலர் தண்டிக்கப்படுகிறார் கள். லஞ்சம் எங்கே இருந்து ஆரம்பிக்கிறது. நம் வீட்டில் இருக்கும் ஆண், பெண்கள்தான் தங்கள் பணிகளின்போது ஊழலில் ஈடுபடு கிறார்கள். ஆனால், ஊழல் என்பது எனக்கு இழுக்கு என்று ஒவ்வொருவரும் நினைக்கக் கூடிய சூழ்நிலை வர வேண்டும். அது எப்படிச் சாத்தியமாகும்? இந்தியாவில் 200 மில்லியன் வீடுகளில், 80 மில்லியன் வீடுகள் லஞ்சத்தில் ஈடுபட்டு இருக்கும் என்று வைத்துக்கொண்டால் கூட, அந்த வீடுகளில் எப்படி லஞ்சத்தை ஒழிப்பது? இளைஞர்கள், இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளரும்போது, அவர்களின் மனநிலை எப்படி இருக்கும்? லஞ்சத்தால் வரும் இழிவுகளை எப்படி அந்தக் குழந்தைகளால், இளைஞர்களால் தாங்கிக்கொள்ள முடியும்? ஊழலால் வரும் பணத்தில் எங்களுக்கு எந்த வசதியும் வேண்டாம் என்று முடிவெடுத்தால், அவர்களால் துரதிர்ஷ்டவசமாக லஞ்சத்தில் ஈடு படும் பெற்றோர்களை மாற்ற முடியுமா என்பது தான் கேள்வி. மாற்ற முடியும் என்பதுதான் எனது நம்பிக்கை. ஏனென்றால், அன்பு, பாசம் என்ற மிகப் பெரிய ஆயுதம், இளைய சமுதாயத்தின் கையில் இருக்கிறது. அதை அவர்கள் லஞ்சம் வாங்கும் தங்களின் பெற்றோர்கள் மீது பிரயோகிப்பார்கள் என்றால், லஞ்சத்தைவிட்டு பெற்றோர்களால் கண்டிப்பாக வெளியே வர முடியும். ஏனென்றால், தான் பெற்ற பிள்ளைகள் அவமானமாக நினைக்கும் ஓர் இழி செயலான ஊழலைச் செய்ய, எந்த ஒரு பெற்றோருக்கும் மனம் வராது. ஒவ்வொரு குடும்பமும், அந்தக் குடும்பத்தில் உள்ள இளைய சமுதாயமும், லஞ்சத்துக்கு எதிராக தங்கள் குடும்பத்தில் இந்த மாற்றத்தைக் கொண்டுவந்தால், நல்ல சமுதாயம் உருவாகும். சமூக உணர்வோடு கூடிய நல்ல தலைவர்கள் கிடைப்பார்கள். நாடு, ஊழலில் இருந்து விடுபடும். அதை விடுத்து, ஒரு தலைவனால் மட்டுமே, அல்லது ஒரு கட்சியால் அல்லது மீடியாவால் அல்லது சட்டத்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. நாடு மாற வேண்டும் என்றால், ஒவ்வொரு வீடும் மாற வேண்டும்.

விகடன் மேடை - அப்துல் கலாம்

இதற்காகத்தான் இளைய சமுதாயத்துக்காக ஓர் இயக்கத்தை ஆரம்பித்துள்ளேன். அதில் தலைவர் என்று யாரும் இல்லை. அது ஓர் இளைஞர்கள் இயக்கம். அந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம், 'என்னால் எதைக் கொடுக்க முடியும்’ அல்லது 'உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்’ என்ற எண்ணத்தை, இளைஞர்கள் மனதில் உருவாக்குவதுதான். 10 இளைஞர்கள் ஒன்று கூடி இந்த உணர்வை வளர்த்து, அதைச் செயல்படுத்துவதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம். எந்த ஊரிலும் இதை ஆரம்பிக்க முடியும். 'எனக்கு வேண்டும்’ என்ற சுய நல எண்ணம்தான் லஞ்சம் வாங்கத் தூண்டுகிறது. அந்த எண்ணத்தை மாற்றி, நாம் ஒவ்வொருவரும் நம்முடைய மனத்தை, வீட்டை, குடும்பத்தைத் தூய்மையானதாக மாற்றினால் நாடு மாறும்.

'நான் என்றென்றைக்கும் கொடுத்துக்கொண்டே இருப்பேன்’ என்ற மனநிலை நம் இளைஞர் களுக்கு வரும் என்றால், அந்த மனநிலை, 'எனக்கு வேண்டும்... எனக்குத்தான் வேண்டும்’ என்ற எண்ணத்தைச் சுட்டெரிக்கும். இளைஞர்களே நீங்கள் எல்லோரும் இப்பணிக்குத் தயாரா? வாருங்கள் நண்பர்களே!''

ரவி சுவாமிநாதன், சென்னை.

 ''ஓர் அமைச்சர், சில அதிகாரிகள், சில தொழிலதிபர்கள் இவர்கள் எல்லாம் சேர்ந்து, ஒரு நாட்டுக்கு

விகடன் மேடை - அப்துல் கலாம்

1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற் படுத்த முடியும் என்றால், பிரச்னை அரசியல்வாதிகளிடமா அல்லது அரசியல் சட்டத்திடமா?''

''இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் சொல்கிறது, 'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்று!''

தாமரை நிலவன், திருத்துறைப்பூண்டி.

''தாங்கள் சிறுபான்மை இனத்தவராகப் பிறந்ததற்கு வருத்தப்பட்டதோ, சந்தோஷப்பட்டதோ உண்டா?''

''அதைப்பற்றி சிந்தித்ததே இல்லை. அப்படிச் சிந்திக்க வேண்டிய நிலைமை எனக்கு ஏற்பட்டதே இல்லை. ஒரு முறை டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா மேல்நிலைப் பள்ளி யில் ஹமீலா அக்தர் என்ற மாணவி இதே கேள்வியைக் கேட்டார். அந்த மாணவிக்கு பினாச்சியோ என்ற கவிஞரின் வரிகளில் சொன்ன பதில் என்ன என்றால்...

'நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை,
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால்,
நீ எண்ணியது
 உன்னை வந்து சேரும்!’

என்னுடைய கருத்து என்னவென்றால், உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும். லட்சியத்தை அடைய அறிவாற்றலைப் பெருக்கு. அதை அடைய உழைப்பு முக்கியம். உழை... உழைத்துக்கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கு இருந்தால்... நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்!''

ஹோஷ்மின், ஆப்பிரிக்கா.

''உங்கள் இளமைப் பருவத்து நண்பர்கள் உங்கள் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறார்கள்?''

''என் இளமைப் பருவத்து நண்பர் திரு. சம்பத்குமார் என் சுக துக்கங்களில் இன்னும் பங்கெடுக்கிறார். என் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறார். சமூக நல சேவைகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறார். என் நண்பரின் மகிழ்ச்சி என்னுடைய மகிழ்ச்சி. அவர் குடும்பமும் எங்கள் குடும்பமும் நல்ல குடும்ப நண்பர்களாகத் திகழ்கிறோம்!''

ஹோஷ்மின், ஆப்பிரிக்கா.

''நீங்கள் வாசித்த வரிகளில், நேசித்த வரிகள்?''

''ஹோஷ்மின் உங்கள் கேள்விகள் இரண்டும் நல்ல கருத்துள்ளவை. வாசித்த வரிகளில்

2 + 2 = 4 வரிகள் நான் நேசித்தது.

'உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து’

'இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்’

திருக்குறளின் இந்த நாலு வரிகளும் ஒவ்வொருடைய வாழ்விலும் அச்சாணிகளாகத் திகழ வேண்டும்!''

ஆ.சுரேஷ், துறையூர்

''இந்தியனாகப் பிறந்ததற்குப் பெருமைப்பட்ட தருணம் எது?''

''52 டிகிரி வெப்பத்தில் பயங்கரமான வெயிலில், பொக்ரான் பாலைவனத்தில், அணு சக்தி நண்பர்களுடன் 1998, மே 11-ம் தேதி அன்று 40 ஷிமீநீs, 35 ஷிமீநீs, 30, 25, 15, 10, 9, 8... 1 என்று கவுன்ட் டவுன் முடிந்தது. அதன் முடிவில், இந்தியா வின் அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டு, இந்தியா அணு சக்தி நாடாகமாறும் போது ஏற்பட்ட அதிர்வை உணர்ந்த தருணம்தான், நான் இந்தியனாகப் பிறந்ததற்குப்பெருமைப் பட்ட தருணம்!''

அ.ஜெயபாலன், மதுரை.

''வெளிநாட்டு சுவிஸ் வங்கியில், இந்தியர்கள் பதுக்கிவைத்துள்ள 20.8 லட்சம் கோடி மதிப்புள்ள கறுப்புப் பணத்தை மீட்க இந்திய அரசு தயங்குவதற்கு என்ன காரணம்?''

''எவ்வளவு பணம் இருக்கிறது என்று தெரிய வில்லை. இந்திய மக்களின் பணம், இந்தியாவுக்கு வந்து சேர வேண்டும். அதை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்பட வேண்டும்!''

விகடன் மேடை - அப்துல் கலாம்

கு.இரத்தினம், ஆண்டிபட்டி.

'' 'இவர் இல்லையேல் நான் இல்லை’ என்று நீங்கள் நினைக்கும் மனிதர் யார்?''

''திருவள்ளுவர்!''

எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்-3.

''நீங்கள் ஜனாதிபதியாக, சிறப்பாகப் பணியாற்றியவர். நீங்கள் சொல்லுங்கள்... இலங்கைப் பிரச்னையில் இந்தியா என்ன செய்திருக்க வேண்டும்?''

''இந்தியா ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாடு. நம் பக்கத்து நாடுகளில் ஜனநாயகம் தழைத்தோங்க, நாம் உதவியாக இருக்க வேண்டும். அப்போதுதான், இந்தப் பகுதியில் அமைதி நிலவும். இலங்கைத் தமிழ் மக்கள், தங்கள் வாழ்வை ஜனநாயகரீதியில் அமைத்துக் கொள்வதற்கு அனைத்து உதவிகளையும் இந்தியா செய்ய வேண்டும்!''

சத்தியநாராயணன், சென்னை-38.

''கருணைக் கொலைக்குத் தாங்கள் ஆதரவா... எதிர்ப்பா?''

''இறைவன் அளித்த மனித உயிரை யாருக்கும் எடுக்க உரிமை இல்லை!''

- அடுத்த வாரம்...

''எங்கள் எல்லாரையும் கனவு காணச் சொன்ன உங்களின் நிறைவேறாத கனவு என்ன?''

''ஜனாதிபதி பதவி ஒரு ரப்பர் ஸ்டாம்ப் பதவி என்கிறார்களே! உங்கள் கருத்து என்ன?''

''2020-ல் இந்தியா வல்லரசாக உருவாகும் என்று கூறியிருந்தீர்கள். உண்மையைச் சொல்லுங்கள். அந்த நம்பிக்கை இப்போதும் இருக்கிறதா?''

- கலாம் பதில்கள் தொடர்கின்றன...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism