Published:Updated:

விகடன் மேடை - அப்துல் கலாம்

விகடன் மேடை - அப்துல் கலாம்

விகடன் மேடை - அப்துல் கலாம்

விகடன் மேடை - அப்துல் கலாம்

Published:Updated:
##~##

மாணிக்கம்.வி, சிங்கப்பூர்.

 ''அணுகுண்டு, ராக்கெட் எல்லாம் உருவாக்கி, இந்தியாவைத் தலை நிமிரவைத்த உங்களால், ஒரு சிறந்த அரசியல் தலைவரை தமிழ்நாட்டுக்காக உருவாக்கித் தர முடியுமா? இந்தக் கேள்வியின் வலியை, ஆதங்கத்தை உணர முடிகிறதா?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''இதுவரை கடந்த 12 ஆண்டுகளில், நான் 1.2 கோடி இளைஞர்களைச் சந்தித்து கலந்துரையாடி இருக்கிறேன். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு இருக்கிறேன். அவர்களின் கனவுகளை அறிந்துவைத்திருக்கிறேன். சமீபத்தில் மகாராஷ்டிராவில் உள்ள அமராவதியில், கிட்டத்தட்ட ஒரு லட்சம் இளைஞர்கள் கூடிய கூட்டத்தில், 'எத்தனை பேர் மருத்துவர், பொறியாளர், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட ஆட்சிப் பணிகள், ஆசிரியர்கள், தொழில் முனைவோர் ஆகப்போகிறீர்கள்?’ என்று கேட்டேன். சில நூறு பேர் கைகளை உயர்த்தினார்கள். 'எத்தனை பேர் சந்திரனுக்கும் வியாழன் கிரகத்துக்கும்

விகடன் மேடை - அப்துல் கலாம்

செல்ல விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டேன். அனைவரும் கை உயர்த்தினார்கள். 'எத்தனை பேர் நல்ல அரசியல் தலைவர்களாக விரும்புகிறீர்கள்?’ என்று கேட்டேன். 50 பேர் 'நாங்கள் நல்ல அரசியல் தலைவர்கள் ஆக விரும்புகிறோம்!’ என்றார் கள். அதில் ஐந்து பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம், 'நீங்கள் அரசியல் தலைவரானால் என்ன செய்வீர்கள்?’ என்று கேட்டேன். ஒரு மாணவன், 'இந்தியாவை 10 ஆண்டுகளுக்குள், வளர்ந்த இந்தியாவாக மாற்றுவேன்’ என்று சொன்னான். ஒரு மாணவி, 'லஞ்சத்தை ஒழிப்பேன்’ என்று சொன்னாள். இன்னொரு மாணவன், 'இளைய சமுதாயத்துக்கு 'என்னால் முடியும்!’ என்ற நம்பிக்கையைக் கொடுத்து, 'நம்மால் முடியும்’ என்ற ஒருமித்த மனப்பான்மையை வளர்ப்பேன். அப்படி என்றால், இந்தியாவால் முடியும் என்ற சூழ்நிலை உருவாகும்!’ என்று கூறினான். எங்கு சென்றாலும், இளைஞர்களிடம் இந்த நம்பிக்கையை, லட்சியத்தை, கனவைப் பார்க்கிறேன். எனவே, தகுதியான நல்ல அரசியல் தலைவர்கள், இளைஞர்கள் மத்தியில் இருந்து தோன்றுவார்கள். அவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க... அதிகரிக்க, நல்ல வளர்ச்சியோடு கூடிய... தொலைநோக்கோடு கூடிய அரசியல் மாற்றம் வரும்!''

வாசுகி, திருப்பூர்.

''சினிமா நடிகர்கள் அரசியலுக்குள் நுழைவது எனக்குப் பிடிக்கவே இல்லை.குறைந்த பட்சம் இந்தியாவின் வரலாறு, புவியியல் அமைப்பு, வாழ்க்கை முறை, பொருளாதாரம் ஆகியவைபற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர் கள் எப்படி ஒரு சமூகத்தை வழி நடத்த முடியும்? இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''

''தொலைநோக்குப் பார்வையும் சமூக விழிப்பு உணர்வும், பொது நல நோக்கத்தோடு சுயநலம் அற்ற நற்பண்புகளும், தன்னைவிடத் தேசம் பெரியது என்ற உணர்வும்கொண்ட, மக்கள் மனோநிலையை அறிந்த நற்பணி செய்யக் கூடிய தலைவர்கள் யாராக இருந்தாலும், அவர் களைத் தேர்ந்தெடுக்கலாம். ஜனநாயக நாட்டில் மக்களின் ஓட்டு உரிமை மிகவும் முக்கியம். அதைச் சரியாகப் பயன்படுத்தினால், அப்படிப்பட்ட தலைவர்கள் நிச்சயம் நமக்குக் கிடைப்பார்கள்!''

விகடன் மேடை - அப்துல் கலாம்

எஸ்.ரேவதி, கட்டளை.

 ''தற்போதைய அரசியல் சட்டத்தில் ஒரே ஒரு மாற்றத்தை நீங்கள் மேற்கொள்ளலாம் என்று இருந்தால், எந்தச் சட்டத்தைத் திருத்துவீர்கள்... ஏன்?''

''ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், மக்கள் எண்ணங்களைப் பிரதிபலிக்கவில்லை என்றால், அதற்கு மாறாகச் செயல்படுவார்கள் என்றால், அவர்களைத் திரும்ப அழைக்கும் சட்டத்தைக் கொண்டுவருவேன்!''

சித்திரை சிங்கர், அம்பத்தூர்.

''எப்போதும் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகளுடன் மட்டுமே உரையாடுகிறீர்கள்! பொதுமக்களுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி இதுவரை நிகழவில்லை. எதனால்..?''

''நாட்டில் நடக்கும் நல்ல நிகழ்ச்சிகளை பேப்பரில் நீங்கள் படிப்பது இல்லையா? மாணவர் களிடம் கலந்துரையாடுவது ஒரு பகுதிதான். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று, அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து, அவர்களிடம் கலந்துரையாடி இருக்கிறேன். சமீபத்தில், மே 2011-ல், பீகார் பாலிகஞ்ச் பகுதியில் 300 விவசாயிகளைச் சந்தித்தேன். கர்நாடகாவில் குடலசங்கமத்தில் ஒரு லட்சம் விவசாயிகளைச் சந்தித்து, organic farming பற்றி உரையாடினேன். உத்தரப்பிரதேசத்தில் உள்ள பஸ்தியில் 800 விவசாயிகளைச் சந்தித்து கலந்துரையாடினேன். உடுப்பியில் விவசாயிகளைச் சந்தித்து உரையாடி னேன். சட்டீஸ்கரில், மத்தியப்பிரதேசத்தில், கேரளாவில், தமிழ்நாட்டில், ஜார்கண்டில், ஆந்திராவில், ஒரிஸ்ஸாவில், கிராம மக்களை, மலை வாழ் மக்களை, இன்னும் பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்து, அவர்களது வாழ்க்கை முறைகளைப்பற்றி அறிந்தேன். அவர்களது மேம்பாட்டுக்குத் தேவையான ஆலோசனைகளை அந்தந்த மாநில அரசுகளுக்கு அளித்துள்ளேன். பல அரசுகள் அதை நிறைவேற்றி வருகின்றன. மக்களுக்கான ஆக்கபூர்வமான பணிகளை நான் தொடர்ந்து செய்வேன்!''

அல்லன், புதுச்சேரி.

 ''இந்திய மக்கள்தொகையில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மக்கள் 60 சதவிகி தத்துக்கும் மேல். 35 சதவிகிதத்துக்கும் மேல் உள்ள குழந்தைகளுக்கு உண்ண உணவு இல்லை. 2 கோடிக்கும் மேல் உள்ள குழந்தைகளுக்கு, கல்வி வசதி அளிக்க முடியவில்லை. உலக அளவில் இந்தியாவில் மட்டுமே வறுமையில் வாடும் மக்கள்தொகை அதிகம். இந்த நிலையில், இந்தியா எப்படி வல்லரசாக முடியும்?''

'' 'இந்தியா 2020’ என்ற திட்டம், அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை 10 சதவிகிதத்துக்கு உயர்த்தி, அதை நிலை நிறுத்த வழிவகை செய்யும் திட்டமாகும். அப்படிச் செய்யப்படுமேயானால் - வேலைவாய்ப்பைப் பெருக்கி, தனி நபர் வருமானத்தை உயர்த்தி, விவசாயத்தைப் பெருக்கி, கல்வி மற்றும் ஆராய்ச்சி, மருத்துவம், தண்ணீர், எரிசக்தி, நதி நீர் இணைப்பு, தொழில் வளர்ச்சி, நகர்ப்புற வசதிகளைக் கிராமப்புறங்களுக்கு அளித்து, ஒருங்கிணைந்த நீடித்த வசதிகளைக் கிராமப்புறம் பெறத் தேவையான பன்முகப் பொருளாதார வளர்ச்சியை அடைந்து, வறுமையில் வாடும் மக்களை அதில் இருந்து விடுவித்து, மேல் தட்டுக்குக் கொண்டுவந்து,  சமூகப் பொருளாதார வேறுபாடு அற்ற, ஓர் அறிவார்ந்த சமுதாயமாக மாற்ற முடியும். இன்றைக்கு நாட்டில் தொடர்ந்து வரும் மத்திய அரசுகளும் பல்வேறு மாநிலங்களும் இந்த லட்சியத்தை அடைய முயற்சித்து வருகின்றன. அது மட்டும் போதாது, நம் இளைய சமுதாயம் நம்பிக்கையுடன் உழைத்தால்... அவசியம் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். இந்தியா வளர்ந்த நாடாக மாறும்!''

ம.பாரதி, செங்கல்பட்டு.

''எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத் தும் அல்லது எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கும் அறிவியல் உலகத்தில் இருந்துகொண்டு, எப்படி உங்களால் கடவுளை மாற்றுக் கருத்தின்றி ஏற்றுக்கொள்ள முடிகிறது? கடவுளை ஏற்கத் தயங்கும் ஒருவனின் கேள்வி என்றே இதனைக்கொள்க.''

''நண்பர் ரவிக்குமார் அவர்களே, மேகம் இல்லாத நாட்களில் தென் வானத்தை அண்ணாந்து பாருங்கள். அங்கு, பிரகாசமாகத் தெரிவதுதான் 'மில்கி வே’ என்ற நம் Galaxy. அந்த பால்வெளியில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மின்னுகின்றன. ஒவ்வொரு நட்சத்திரத்தைச் சுற்றிலும் பல்வேறு விண்மீன்கள் உள்ளன. நமது பூமி, சூரியனைச் சுற்றுகிறது. சூரியன், நமது கேலக்ஸியான பால்வெளியைச் சுற்றுகிறது. பால்வெளியே, பிரபஞ்சத்தைச் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறது. நமது பால்வெளியைப்போல், ஆயிரக்கணக்கான பால் வெளி கள் உள்ளன. இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் போது, ஒரு பெரும் சக்தி இந்தப் பிரபஞ்சத்தை இயக்கிக்கொண்டு இருக்கிறது. அந்த சக்திதான் ஓர் அரும்பெரும் சக்தி. இதைத்தான் பாரதியார் சொல்கிறார்....

இடையின்றி அணுக்களெலாஞ் சுழலுமென
இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்;
இடையின்றி கதிர்களெலாஞ் சுழலுமென
வானூலார் இயம்புகின்றார்
இடையின்றித் தொழில்புரிதல் உலகினிடைப்
பொருட்கெல்லாம் இயற்கை யாயின்
இடையின்றிக் கலைமகளே நினதருளில்
எனதுள்ளம் இயங்கொணாதோ?’
என்று!''

அ.குமரேசன், சென்னை.

 ''குடியரசுத் தலைவராக இருந்தபோது, உங்களைக் கவலைக்கு உள்ளாக்கிய சம்பவம் ஏதேனும் உண்டா?''

''Office of Profit bill உருவாக்கப்பட்ட விதம் மற்றும் அந்த ஷரத்துகளைப் படித்தபோது, இந்த மசோதா நமது நாட்டின் நாடாளுமன்றப் பண்புக்கு உகந்ததாக இருக்காது என்று நினைத்து கவலைக்கு உள்ளானேன். அதை, சில ஆலோசனைகளுடன் நாடாளுமன்றத்துக்குத் திருப்பி அனுப்பினேன்!''

மகா.ராஜேந்திரன், சென்னை-15.

 ''கச்சத் தீவை நம்மால் மீட்கவே முடியாதா?''

''இலங்கையும் இந்தியாவும் கலாசாரத்தால், இனத்தால், மொழியால் பல நூறு ஆண்டுகளாக ஒரு பன்முக இணைப்பைப் பெற்ற நாடுகள். மக்களின் வாழ்க்கை முறை இரு தேசங்களுக்கும் இடையே பின்னப்பட்டு இருக்கிறது. இந்த உண்மையின் அடிப்படையில், இரு தேசங்களுக்கும் இடையே ஒரு புரட்சிகரமான அரசியல் கொள்கை உருவாக்கப்பட்டு, ஜனநாயக முறைப்படி தமிழர் பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். உடனடியாக, ஓர் இணக்கம் உருவாக்கப்பட வேண்டும். இரண்டு நாடுகளுக்கும் கடல், மீன்பிடிப்பு மற்ற தீவுகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஒரு பொதுவான கொள்கை உருவாக்கப்பட்டு, மக்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். இதற்கு இந்தியாவும் இலங்கையும் இதய சுத்தியோடு பாடுபட வேண்டும். அதைச் செயல்படுத்தக்கூடிய மனோதிடமும் தலைமைப் பண்பும் தலைவர்களுக்கு வேண்டும்!''

சத்தியநாராயணன், அயன்புரம்.

''மரண தண்டனை தேவையா?''

''மரண தண்டனை வேண்டுமா, வேண்டாமா என்று நாடாளுமன்றத்தில் விவாதித்து முடிவு எடுக்க வேண்டும் என்று நான் ஜனாதிபதியாக இருந்தபோதே, தெரிவித்து இருக்கிறேன். கொடும் செயல்களுக்காக மரண தண்டனை பெற்ற பல கைதிகளின் வரலாற்றைப் படிக்கும்போது, பெரும்பாலும் கல்வி அறிவு குறைந்தவர்களாகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களாகவும்தான் இருக்கிறார்கள்.கல்வி அறிவு, சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் களைவதில் நமக்கு உள்ள அக்கறையின் தன்மையைப் பொறுத்து, குற்றத்தின் தன்மை மாறுபடுகிறது. அறிவார்ந்த சமுதாயத்தை நோக்கி நாம் பயணப்படும்போது, தெரிய£மலும், அறியாமலும், கோபத்திலும் செய்யும் குற்றச் செயல்கள், வன்கொடுமைகள் குறைய வேண்டும். அப்போதுதான் 2020-க்குள் நாம் வளர்ந்த நாடாவோம் என்பதில் அர்த்தம் உள்ளது!''

விகடன் மேடை - அப்துல் கலாம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism