Published:Updated:

விகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்

விகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்

விகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்

விகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்

Published:Updated:
விகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்

எம்.பாரதி, தஞ்சாவூர்.

''உங்களுக்குத் தமிழ்நாட்டில் பிடித்த அரசியல்வாதி யார்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தோழர் நல்லக்கண்ணு. எளிமையும் நேர்மையும்கொண்ட மகத்தான அரசியல்வாதி!''

எஸ்.பாலா, காரைக்குடி.

''உங்களைப்போன்ற எழுத்தாளர்கள், துணிச்சலான அரசியல் கருத்துகளை முன்வைப்பது இல்லையே... பயமா?''

 ''தீவிர இலக்கிய எழுத்து என்பதே ஓர் அரசியல்தான். அது கலாசாரத்தின் அரசியலைப் பேசுகிறது. அரசியலைத் தீர்மானிப்பதில் கலாசாரமும் மதமும் ஆற்றும் பங்கை, அது சுட்டிக்காட்டுகிறது. சாமான்ய மனிதனை, அரசியல் வெறும் பகடைக்காயாகப் பயன்படுத்தித் தூக்கி எறியும்போது, அவனது பிரச்னைகளைக் கண்டுஉணர்ந்து, அதற்காக அக்கறைகொள்வதும் அவனுக்காக வாதிடுவதும் இலக்கியத்தின் வேலையாக எப்போதும் இருக்கிறது. அது அரசியல் இல்லையா?

விகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்

எது எனது அரசியல் என்று கேட்பவர்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். 'ஒரு நகரத்தில் யாராலும் உடைக்க முடியாத பெரிய தடுப்புச் சுவர் ஒன்று இருந்தது. அதனால் மக்கள் பிரித்துவைக்கப்பட்டு இருந்தார்கள். அந்தச் சுவரை மோதி உடைத்து, மக்களை ஒன்றுசேர்க்க ஒரு முட்டை நினைத்தது. அதனால், அது ஆவேசமாகச் சுவரில் தன் தலையை மோதி, உடைந்து சிதறித் தன்னை அழித்துக்கொண்டது. ஆனால், சுவர்  உடைபடவில்லை. இதைப் பார்த்த அடுத்த முட்டை, தானும் சுவரில் மோதி சுவரை உடைக்கப் பார்த்து அழிந்துபோனது.’

'இப்படியாகத் தகர்க்க முடியாத சுவரின் மீது நம்பிக்கையோடு தொடர்ந்து மோதிக்கொண்டே இருக்கும் முட்டைகளுக்காகப் பரிந்து பேசுவதும், அதன் நியாயத்தை உலகறியச் செய்வதும் அந்த மொழியற்ற போராட்டத்துக்குத் துணை நிற்பதுமே எழுத்தின் வேலை. ஒருநாள் நிச்சயம் முட்டை மோதி, அந்தப் பெருஞ்சுவர் உடைந்து விழுந்தே தீரும். அந்த நம்பிக்கையை உருவாக்குவதே எழுத்தின் அரசியல்’ என்கிறார் ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முராகமி. என் நிலைப்பாடும் அதுவே!''

எம்.பிருந்தா, சென்னை-42.

விகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்

''சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன்... யாருக்கு ரசிகர்கள் அதிகம்?''

''ஒரே வாசகர்கள்தான் வேறுவேறு காரணங்களுக்காக மூவருக்கும் வாசகர் களாக இருக்கிறார்கள் என்ற உண்மை எனக்குத் தெரியும் பாஸ், சும்மா உசுப்பு ஏற்றிவிடாதீங்க!''

ஆ.கீர்த்தனா, மதுரை.

 ''இதுவரை படித்ததிலேயே உங்களுக்குப் பிடித்த படைப்பு?''

''கேப்ரியல் கார்சியா மார்க்வெஸின் 'ஒரு நூற்றாண்டு காலத் தனிமை’ என்ற நோபல் பரிசு பெற்ற நாவல் (One Hundred Years of Solititude).''

கே.வசந்தி, தூத்துக்குடி.

''சர்ச்சைகள், தனி மனித சாடல்கள் எதுவும் இல்லாமல், இலக்கியக் கூட்டங்கள் நடைபெறாதா?''

''நமது சமூகத்தில் எந்தத் துறையில்தான் சண்டை சச்சரவுகள் இல்லை? ஒன்றைச் சுட்டிக்காட்டுங்கள் பார்க்கலாம். இலக்கியக் கூட்டங்களில் ஏற்படும் சாடல்கள், காரசாரமான சர்ச்சைகள் எல்லாக் காலத்திலும் எல்லா நாடுகளிலும் நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கின்றன. சண்டையும் சச்சரவும் இலக்கியத்தின் ஒரு பகுதியே. அங்கே சண்டையிட்டுக்கொள்ளும் யாரும் சொத்தைப் பிரிக்கச் சொல்லி சண்டை இடவில்லை. தனக்குப் பதவி கிடைக்கவில்லை என்று சண்டையிடவில்லை. தான் நம்பும் ஒரு கோட்பாட்டுக்காக, ஓர் எழுத்தாளனுக்காக, தன் எழுத்தின் மீது வாரி இறைக்கப்படும் அவதூறுகளுக்கு எதிராகவே சர்ச்சை செய்கிறார்கள்.  

விகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்

முந்தைய காலத்தில் தர்க்க வாதத்தில் தோற்றுப்போனவர்களைக் கழுவேற்றிய கதைகளைப் படிக்கும்போது, நாம் எவ்வளவோ நாகரிகமாக நடந்துகொண்டு இருப்பதுபோலத்தான் தோன்றுகிறது. அருட்பா எழுதிய வள்ளலாருக்கு எதிராக,  'அது மருட்பா’ என ஆறுமுக நாவலர் கோர்ட்டுக்கே சென்றார் என்பதுதானே நமது கடந்த கால வரலாறு. ஆகவே, கொதிக் கும் உலை எப்போதும் சத்தமிடத்தான் செய்யும். அதுதான் இயல்பு!''

விகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்

கா.அமுதன், கானாடுகாத்தான்.

 ''உங்களுக்குத் தமிழில் பிடித்த சினிமா இயக்குநர் யார்? ஏன்?''

''மகேந்திரன். அவரே ஒரு சிறந்த எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர். ஆனாலும், அவர் தனது திரைப்படங்களை இலக்கியப் படைப்புகளில் இருந்து உருவாக்கியிருக்கிறார். அதற்காக அவரை நாம் கொண்டாட வேண்டும். அவரது 'உதிரிப்பூக்கள்’ படத்தின் கதை புதுமைப்பித்தனின் சிற்றன்னை. 'முள்ளும் மலரும்’ - உமா சந்திரன் நாவல். 'பூட்டாத பூட்டுகள்’ - பொன்னீலன் நாவல். 'நண்டு’ - சிவசங்கரியுடையது. 'சாசனம்’ - கந்தர்வனின் சிறுகதை. இப்படி இலக்கியத்தை நேசித்து, அசலான தமிழ் வாழ்க்கையைத் திரைப்படமாக்கியவர்!''

கா.ரமேஷ், மயிலாடுதுறை.

விகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்

''ஜெயமோகனிடம் பிடித்தது என்ன? பிடிக்காதது என்ன?''

''நாஞ்சில் வட்டார மொழியை உயிரோட்டமாகக் கையாளும் லாகவம், மற்றும் அவரது ஆழ்ந்த தத்துவ ஈடுபாடு.

பிடிக்காதது... தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கிக்கொள்வது மற்றும் குரு மனப்பாங்கு!''

எஸ்.ஜெயராமன், மேலூர்.

'' 'பாபா’ சமயத்தில் ரஜினிகாந்த்துடன் மிகவும் நெருக்கமாகப் பழகி இருக்கிறீர்கள். அவரைப்பற்றி (அறியப்படாத) ஏதாவது சொல்லுங்களேன்?''

''அன்பும் நேசமும்கொண்ட பல்லாயிரம் பேரின் பிரார்த்தனையால் ரஜினி இன்று பூரண நலம்பெற்று இருக்கிறார். அவரது நலம் நாடும் எளிய மனிதர்களில் நானும் ஒருவன்.

ரஜினி ஒரு Great Soul. 'பாபா’ படத்தில் பணியாற்றியதன் மூலம் ரஜினி அவர்களுடன் நெருங்கிப் பழக நேர்ந்தது. அந்த நட்பு 10 ஆண்டு காலமாக இன்றும் தொடர்ந்து வருகிறது. impossible friend என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே... அப்படித்தான் ரஜினியோடு உள்ள நட்பை உணர்கிறேன்.

விகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்

ரஜினியோடு நிறைய பயணம் செய்திருக்கிறேன். நிறைய நாட்கள் அரசியல், சினிமா, தத்துவம், ஆன்மிகம் என்று எவ்வளவோ விவாதித்து இருக்கிறேன். என் மீதும் என் எழுத்தின் மீதும் அதிக அக்கறையும் அன்பும்கொண்ட உயர்ந்த பண்பாளர்.

திரை உலகின் உச்ச நட்சத்திரமாக ரஜினி மின்னும்போதும், அவரது மனது இன்னமும் வறுமையிலும் சுதந்திரமாக, சந்தோஷமாகச் சுற்றி அலைந்த சிவாஜி ராவாகவே இருக்கிறது. கடந்த காலத்தின் வலியே அவரை இன்றும் வழி நடத்துகிறது என்பேன். மாறாத குரு பக்தி, தன்னை அறிந்த அடக்கம், பேரன்பு, அயராத உழைப்பு, இயல்பான எளிமை - இவையே அவர் வெற்றிக்குக் காரணம்!

அதிகப் பணம் சம்பாதிப்பதைப்பற்றி ஒரு முறை பேச்சு வந்தது. உடனே ரஜினி சொன்னார், 'பணம் எப்போதும் தனியே வராது, அது தன் சகோதரனாகிய பிரச்னையைக் கூட்டிக்கிட்டுதான் வரும். முதல்ல பணம் வந்துரும். பின்னாடி பிரச்னை வந்து சேரும். அதுபோல, வெளியேறிப் போகும் போது... முதல்ல பணம் போயிடும். ஆனா, பிரச்னை போகவே போகாது. நம்மால விரட்டியடிக்கவும் முடியாது. இதுதான் பணத்தோட உண்மையான தன்மை’னு  சொன்னார். ஒரு பெரிய உண்மையை எவ்வளவு எளிமையாக விளக்கிவிடுகிறார் என்று வியப்பாக இருந்தது.

விகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்

குடும்பம், நண்பர்கள், பணம், புகழ், மரியாதை எல்லாமும் கிடைத்தபோதும், ரஜினி தனியாக இருக்க விரும்புவதற்குக் காரணம், தன்னைத்தானே உணர்ந்துகொண்ட நிலை. தனிமை என்பது மற்றவர்களை விட்டு விலகி இருப்பது இல்லை. தன்னை ஆழ்ந்து அறிந்து, புரிந்துகொள்வதே தனிமை.

அரசனுக்கும் துறவிக்கும் ஒரே தனிமைதான் இருக்கிறது. அரசன் பயத்தால் தனிமையில் இருக்கிறான். துறவி பயமே இல்லாததால், தனியாக இருக்கிறார். ரஜினி அரசனாக வாழ்ந்தபடியே துறவியின் மனநிலையில்  இருக்கிறார். அது மிகவும் அபூர்வமானது.

தனக்குப் பிடித்தமான ஒன்றை ரஜினியைப்போல மனம் திறந்து பாராட்டுபவர்கள் வேறு எவரும் இல்லை. தனது எதிரிக்குக்கூட கஷ்டம் என்று அறிந்தால், ஓடிப் போய் உதவி செய்யும் உயர்ந்த பண்பு அவருக்கு இருக்கிறது. ரஜினி சிறு வயதில் பெங்களூரில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளி யில் பயின்று இருக்கிறார். இன்று ராமகிருஷ்ணனாகிய நான் அவரது ஃப்ரெண்ட்ஷிப் எனும் பள்ளியில் நிறையக் கற்றுக்கொண்டு வருகிறேன்!''

- அடுத்த வாரம்...

'சண்டக்கோழி’ விவகாரத்துக்குப் பிறகு, உங்களுக்கும் பெண்ணியவாதிகளுக்குமான உறவில் விழுந்த விரிசலை நீங்கள் உணர்கிறீர்களா?''

''மறைக்காமல் சொல்லுங்கள்... தமிழில் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?''

''எப்படி ஒரு குடும்பஸ்தராக இருந்துகொண்டு வெற்றிகரமாக ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறீர்கள்?''

- விறுவிறு பதில்கள் தொடர்கின்றன...

விகடன் மேடை - எஸ்.ராமகிருஷ்ணன்