Published:Updated:

விகடன் ஜன்னல்

விகடன் டீம்படங்கள் : ச.இரா.ஸ்ரீதர்

விகடன் ஜன்னல்

விகடன் டீம்படங்கள் : ச.இரா.ஸ்ரீதர்

Published:Updated:

மாத்தி யோசி!

விகடன் ஜன்னல்

 ''பாருங்கய்யா சாமீ இப்படித்தான் இருப்போம்... கேளுங்கய்யா சாமீ இப்படித்தான் இருப்போம்'' - வசீகரக் குரலுக்கு வளைந்து ஆடியது மொத்தக் கூட்டமும். மெரினா வில் ஓரினச் சேர்கையாளர்கள் நடத்திய பேரணியில்தான் இந்தப் பாடல் ஒலித்தது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இந்தியத் தண்டனைச் சட்டம் 377-ஐ நீக்கக் கோரி குரல் கொடுத்தனர். 'மிருக வதைத் தடை செய்யப்பட்ட நாட்டில், மனித வதை மட்டும் ஏன்?’, 'அன்புக்கு உண்டு ஆயிரம் வடிவங்கள்... யார் வகுத்த விதியில் எங்கள் காதல் அடங்கும்?’ என்று வித்தியாசப் பதாகைகள். 'ஐ சப்போர்ட் மை சன்’ என்று மகனுக்கு ஆதரவாகப் பங்கேற்ற ஒரு தாய்தான்... நெகிழவைத்தார்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னையில் 'போபால்!’

விகடன் ஜன்னல்

ராகுல் வர்மா எழுதிய புகழ்பெற்ற 'போபால்’ நாடகத்தை சென்னையில் அரங்கேற்றினார்கள் 'மாஸ்குரேட் யூத் தியேட்டர்’ குழுவினர். 'வறுமைதான் இருப்பதிலேயே மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பு’, 'அமெரிக்காவுடன் போட்டியிட்டதால் எங்களுக்குக் கிடைத்த பரிசு இந்த விபத்துதான்’ போன்ற கூர்மையான வசனங்கள், போபால் 'யூனியன் கார்பைட்’ தொழிற்சாலையைக் கண் முன் நிறுத்தும் செட்டுகள், மிகையற்ற நடிப்பு, அட்டகாசமான இயக்கத்தால் எல்லோரையும் கவர்ந்து இழுத்தார்இயக்குநர் துஷ்யந்த்!

இது மம்மி டாடி மேரேஜ்!

விகடன் ஜன்னல்

43 வயதான 'ஜேம்ஸ் பாண்ட்’ டேனியல் சமீபத்தில் நடிகை ராசேல் வெய்ஸை ரகசியமாகக் கரம் பிடித்து உள்ளார். 'ட்ரீம் ஹவுஸ்’ படத்தில் ரீல் ஜோடியாகத் தலைக் காட்டியவர்கள், ரியல் வாழ்க்கையிலும் ஜோடி சேர்ந் தனர். இந்தத் திருமணத்தில் மண மக்களைத் தவிர பங்கேற்றவர்கள், ஜேம்ஸ் பாண்டின் 18 வயது மகள் எல்லா மற்றும் ராசேலின் நான்கு வயது மகன் ஹென்றி மட்டும்தான்!

சைடு மாறும் சைஃப்!

விகடன் ஜன்னல்

பாலிவுட்டின் பரபர ஹாட் ஜோடியான சைஃப் - கரீனா ஜோடி காரசார சண்டை யுடன் வலம் வருகிறது. கரீனாவின் பிஸி ஷெட்யூல்தான் சண்டைக்குக் காரணம் என்பது சைஃபின் குற்றச்சாட்டு. விளைவு, தீபிகா படுகோன் பக்கம் சைஃபின் பார்வை திரும்பி உள்ளதாம்!

சத்தியம்... சர்க்கரைப் பொங்கல்!

விகடன் ஜன்னல்

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் முன்னாள் முதல்வர் குமாரசாமியும் செய்த சத்திய அரசியல்தான் கர்நாடகத்தின் ஹாட் டாபிக். ''ஊழல் புகார்களைத் தவிர்க்கத் தன்னிடம் எடியூரப்பா சமாதானத் தூதுவிட்டு, ரகசிய பேரம் பேசினார்'' என்று பாலிடிக்ஸ் பகீர் குண்டைப் போட்டார் குமாரசாமி. ''குமாரசாமி பொய் சொல்கிறார்'' என்று எடியூரப்பா மறுத்ததோடு விட்டிருந்தால், விஷயம் முடிந்து இருக்கும். ''என் மீது தவறு இல்லை என்று நிரூபிக்க, தர்ம ஸ்தலா மஞ்சுநாதா சுவாமி கோயிலில் சத்தியம் செய்வேன்'' என்று அவர் சவால்விட, ''நானும் சத்தியம் செய்வேன்'' என்று சவாலுக்குச் சவால்விட்டார் குமாரசாமி. ஜூன் 27 அன்று இந்தச் சத்திய சவாலை அரங்கேற்ற நாள் குறிக்கப்பட்ட நிலையில், ''அரசியல் விளையாட்டுக்குக் கோயில்களை மேடை ஆக்காதீர்கள்'' என்று கொதித்து எழுந்தனர் மடாதிபதிகள். சங்கடத்துக்கு ஆளான பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி, எடியூரப்பா வைச் சந்தித்து, ''சத்தியம் வேண்டாமே'' என்று கூற, சவாலைக் கைவிட்டுவிட்டு கோயிலுக்குப் போய் சாமி மட்டும் கும்பிட்டு வந்தார் எடியூரப்பா. குமாரசாமியோ எதையும் கண்டுகொள்ளாமல் சத்தியம் செய்துவிட்டு வந்துவிட்டார். இப்போது குமாரசாமி மீது அவதூறு வழக்கு போட ஆலோசனை நடத்திக்கொண்டு இருக்கிறார் எடியூரப்பா!

சோடி போடலாமா சோடி!

விகடன் ஜன்னல்

முதல்வர் ஜெயலலிதாவின் டெல்லி விஜயம், காங்கிரஸுக்கு இனிப்பாக இல்லாத நிலையில், பா.ஜ.க. மீண்டும் அம்மாவுடன் ஜோடி போட நினைக்கிறதாம். சென்னை வந்தபோது மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் ஜெ-வைச் சந்தித்தது இந்தப் பின்னணியில்தான் என்கின்றன காவிப் பட்சிகள். ஜெ. முதல்வரானதற்கு வாழ்த்து தெரிவிக்க வந்ததாகச் சொன்ன சுஷ்மா, தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 'கச்சத் தீவு மீட்பு’, 'இலங்கை மீது பொருளாதாரத் தடை’ தீர்மானங்களை பா.ஜ.க. ஆதரிப்பதாகச் சொன்னதோடு, தீர்மான நகல்களையும் கேட்டு இருக்கிறார். நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்னையை பா.ஜ.க. எழுப்பும் என்கிறார்.

சூப்பர் மாற்றம்!

விகடன் ஜன்னல்

''சூப்பர் ஸ்டாரின் உடல் நலப் பாதிப்புக்கு, அவரது போயஸ் கார்டன் வீடு வாஸ்து முறைப்படி கட்டப்படாததும் ஒரு காரணம். வாஸ்துப்படி வீட்டை மாற்றி அமைத்தால், பழைய சுறுசுறு விறுவிறு ரஜினியாக மாறிவிடுவார்’ என்று யாரோ சொல்ல, உடனே செயலில் இறங்கிவிட்டார் லதா. வாஸ்து நிபுணரான 80 வயது ருத்ராபதியிடம் வீட்டை மாற்றி அமைக்க ஆலோசனை கேட்கப்பட்டு இருக்கிறது. ருத்ராபதி அந்தக் காலத்தில் டைரக்டர் யோகானந்திடம் உதவியாளராகப் பணி புரிந்தவர். ருத்ராபதியின் பரிந்துரைப்படி, இப்போது ரஜினி வீட்டில் மாற்றங்கள் நடக்கின்றன. பிரபல கட்டடக் கலை நிறுவனமான 'பிதாவடியன் அண்டு பார்ட்னர்ஸ்’ வசம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு இருக்கிறதாம். இதை மேற்பார்வையிடுவதற் காகவே, இடையில் இரண்டு நாட்கள் சிங்கப்பூரில் இருந்து லதா சென்னை வந்து திரும்பினாராம். 'வாஸ்து அடிப்படையில், தேவையான மாற்றங்கள் மட்டும் செய்யப்படும்’ என்கிறது ரஜினி வட்டாரம். சிங்கப்பூரில் இருந்து ரஜினி திரும்பி வருவதற்குள் வீடு ரெடியாகிவிடுமாம்!