Published:Updated:

விகடன் மேடை - விக்ரம்

விகடன் மேடை - விக்ரம்

விகடன் மேடை - விக்ரம்

விகடன் மேடை - விக்ரம்

Published:Updated:
##~##

கே.ரஹீம், காங்கேயம்.

 ''இந்த வயதிலும் உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறீர்கள். உங்கள் ஃபிட்னெஸ் ரகசியம் என்ன?''

''எனக்கு 60 வயசு ஆயிடுச்சுங்கிற பரம ரகசியம் உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது மகனே?!

நல்ல பழக்கங்கள், ஆரோக்கியமான டயட், எப்பவும் மனசைச் சந்தோஷமா வெச்சுக்கிறது, ஒவ்வொரு நிமிஷத்தையும் ஆனந்தமா அனுபவிக்கிறது... இதெல்லாம்தான் என் நீண்ட, எனர்ஜெட்டிக்கான லைஃப் ஸ்டைல் ரகசியம். மேக்கப், விக், ஸ்பெஷல் கேமரா டெக்னிக்... இதெல்லாமும்கூட சமயத்தில் உதவும்!''

விகடன் மேடை - விக்ரம்

மு.புகழேந்தி, செங்கல்பட்டு.

''நிறையக் கிளிகள் வளர்க்கிறீர்கள் என்று ஒரு பேட்டியில் படித்தேன். அதைப்பத்திச் சொல்லுங்களேன்?''   

''என்கிட்ட ஒரு ஆப்பிரிக்கன் கிரேயும் ஒரு கோக்கடூவும் இருக்கு. ஆப்பிரிக்கன் கிரேவுக்கு (பேர் ரவுடி) என் மேல செம லவ்வு. நான் ஊர்ல இல்லாதப்போ, என்னை ரொம்ப மிஸ் பண்ணுவா. நிறையப் பேசுவா. கோக்கடூ (மிஷ்டி) ரொம்ப அமைதி. அவள் கிளின்னு அவளுக்கே தெரியாதுன்னு நினைக்கிறேன். பழங்கள் பிடிக்காது. சிக்கன், பிரியாணி, தயிர் சாதம், மீன் குழம்பு சாதம் எல்லாம் சிக்கினா... செம பிடி பிடிப்பா!''

எஸ்.வையாபுரி, திருவாரூர்.

''நல்ல நடிகனுக்கு எது இலக்கணம்?''

''ஒவ்வொரு நடிகனுக்கும் ஒரு இலக்கணம் இருக்கலாம்!

எனக்கு நான் கடைப்பிடிக்கிறது... என் தொழிலின் மீது எனக்கு இருக்கும் தீராத மோகம். எப்பவும் சரியா இருக்கிறது, வித்தியாசமா இருக்கணும்னு நினைக்கிறது, கேரக்டருக்குள் ஊடுருவிப் போய்ப் பார்க்கிறது, சவாலான விஷயங்களைச் செய்யுறது, ரிஸ்க் எடுக்கிறது, திரையில் தி பெஸ்ட் கொண்டுவரக் கடுமையா உழைக்கிறது, வித்தியாசமான ஸ்க்ரிப்ட் தேடுறது, எதிர் நீச்சல் போடுறது, நடை, உடை, பாவனைகளை ஒவ்வொரு வேஷத்துக்கும் மாத்திக்கிறதுனு... இப்படி நிறைய இருக்கு. ஒருத்தர் என்னை சரியான 'மனுஷ பச்சோந்தி’ன்னு சொன்னார். இதைவிடப் பெரிய பாராட்டு எதுவும் ஒரு நடிகனுக்கு இருக்க முடியாது!''

கி.மனோகரன், பொள்ளாச்சி.

''ஐஸ்வர்யா ராயுடன் பணிபுரிந்த அனுபவம்..?''

'' 'சேது’-அபிதா, 'சாமுராய்’-அனிதா, 'தூள்’-ரீமா, 'தில்’-லைலான்னு எல்லா ஹீரோயின்ஸையும் நான் ஒரே மாதிரிதான் நினைப்பேன். ஐஸ்வர்யாகூட நடிக்க  ஆரம்பிச்சப்ப வும் அப்படித்தான் நினைச்சேன். ஆனா, ரெண்டு நாள்லயே தெரிஞ்சிருச்சு... அவங்க சம்திங் ஸ்பெஷல்!

விகடன் மேடை - விக்ரம்

'ராவணன்’ படத்துக்காக கொல்கத்தாவில் ஷூட்டிங். மணி சார் ஷூட்டிங் ஸ்டைல்தான் உங்களுக்குத் தெரியுமே... செம ஸ்ட்ரிக்ட். ரொம்ப ரகசியம். ஆனா, கொல்கத்தாவில்  ஷூட்டிங் ஆரம்பிச்ச முதல் நாள், வெஸ்ட் பெங்காலில் அதிக சர்க்குலேஷன் ஆகும் நியூஸ் பேப்பரில் ஐஸ்வர்யா படம் முதல் பக்கத்தில் பெரிசா வந்து இருந்தது. அப்போ ஆரம்பிச்சு ஷூட்டிங் நடந்த 13 நாட்களும் ஐஸ்வர்யா போட்டோதான் அந்த பேப்பரின் ஃப்ரன்ட் பேஜ். ஐஸ்வர்யா நிக்கிறது, மேக்கப் போட்டுக்கிறது, 'ஷாட் எப்படி வரணும்னு ஐஸ்வர்யாகிட்ட  டைரக்டர் டீடெய்ல் பண்றது, காபி குடிக்கிறது,  தலை முடி கோதுறது, தூக்கக்  கலக்கத்தோட இருக்கிறதுனு ஐஸ்வர்யா பண்ற ஒவ்வொரு விஷயமும் பேப்பர்ல வந்துட்டே இருந்தது. ஷூட்டிங்கின் கடைசி நாள் முழுப் பக்கத்துக்கு ஐஸ்வர்யா படம்  போட்டு, கீழே ஒரே ஒரு கேப்ஷன்... 'We Are Watching You’! நான் அசந் துட்டேன். இல்லை இல்லை... மிரண்டுட் டேன். உண்மையிலேயே இந்த உலகம் ஒருநாள்கூட மிஸ் பண்ணாம அந்த உலக அழகியை வாட்ச் பண்ணிட்டே இருக்கு. அப்படி ஒரு வெளிச்சத்துக்கு மத்தியில், எல்லார் எதிர்பார்ப்பையும் தாண்டி, ஐஸ்வர்யா பெர்ஃபார்ம் பண்ணணும். குடோஸ் டு ஐஸ்!

'ஷாட் ரெடி’னு சொன்ன பிறகு, டேக்ல என்ன நடந்தாலும் நான் சமாளிச்சுருவேன். ஆனா, ஐஸ்வர்யாவுக்கு எல்லாமே பின் பாயின்ட் பெர்ஃபெக்ஷனோட இருக்கணும். சேத்துல விழுற மாதிரியான ஸீன்ல... நான் டபக்குனு சேத்துல விழுந்து எழுந்து  நிப்பேன். ஆனா, ஐஸ் தன் ஒவ்வொரு முடியிலும் எவ்வளவு சேறு  இருக்கணும்னு கணக்கு பண்ணி  பொறுமையாத் தடவிட்டு இருப்பாங்க. இங்கே ரெண்டு சேறு பொட்டு, அங்கே மூணு ரத்தச் சொட்டுனு 'பார்ட்டி மேக்கப்’ மாதிரி பண்ணிட்டு வருவாங்க. ஸ்பாட்டுக்கு வந்துட்டா 1 +1=2... 2+ 1=3... அப்படி எல்லாமே செட் ரைட்டா  இருக்கணும் அவங்களுக்கு. எத்தனையோ  உலக அழகிகள் வந்தாலும், ஐஸ்வர்யா அவங்க எல்லாரையும் தாண்டிய அழகி!''

ஏ.எஸ்.நடராஜ், சிதம்பரம்.

'' 'ச்சே... இப்படிப் போட்டு நம்மைப்  பாடாய்ப் படுத்துறாரே’னு உங்களை  நினைக்க வெச்ச இயக்குநர் யார்?''

''ஆஹா! அவனா நீயியியியியி? நட்ராஜ் தலைவா. இன்னும் 100 படம்  பண்ண ணும்னு நான் ஆசைப்படுறேன். அதை ஒரே கேள்வியிலேயே கெடுத்துராத  தலைவா!''

வை.சுரேஷ், துறையூர்.

விகடன் மேடை - விக்ரம்

 ''கமலின் எந்தப் படத்தை ரீ-மேக்  செய்து நடிக்க ஆசை?''

''ரீ-மேக் செய்து நடிக்க ஆசைனு சொல்ல முடியாது. ஆனா, '16 வயதினிலே’ சப்பாணி கேரக்டர் மேல எனக்கு  அவ்வளவு கிரேஸ். அந்தப் படத்தை இதுவரை எத்தனை தடவை  பார்த்திருப்பேன், இனிமே இன்னும் எத்தனை தடவை பார்ப்பேன்னு கணக்கு சொல்ல முடியாது. என்னா ஒரு  கேரக்டர்!

மொத்த கேரியருக்கும் அந்த  ஒரு கேரக்டரே போதும். வாய்ப்பு  கிடைக் கிறப்பலாம் சப்பாணியைப் பார்த்து ரசிப்பேனே தவிர, அதை ரீ-மேக்  பண்ணி நடிக்க முடியாது. ஏன்,  கமல் சாரே நினைச்சாலும் 'சப்பாணி’யைத் திரும்ப ரீ-மேக் பண்ண முடியாது. அதுதான் உண்மை!''

சக்சஸ் ராஜசேகர், செய்யாறு.

''உங்கள் பார்வையில்  எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல்,  விஜய் - அஜீத்... இவர்களைப்பற்றி ஒரு  வரியில் சொல்லுங் கள்...''  

''ம்ம்ம்.... ஒரு வரியில் சொல்றது  ரொம்பக் கஷ்டமாச்சே. வேணும்னா, ஒரு  வார்த்தையில் சொல்லவா? லெட் மீ  ட்ரை...

எம்.ஜி.ஆர். - சாமி
சிவாஜி - பிதாமகன்
ரஜினி -  கிங்
கமல் - தெய்வத் திருமகள்
விஜய் - தூள்
அஜீத் - தில்

ஓ.கே-வா பாஸ்!''

த.சத்தியநாராயணன், அயன்புரம்.

''நீங்கள் நடித்த படங்களில் உங்க ளுக்கே பிடிக்காத படம் உண்டா?''

''இந்தக் கேள்விக்கு நான் நேர்மையான பதில் சொல்ல மாட்டேன்னு நீங்க நினைக்க லாம். ஆனா, நான் உண்மை சொல்றேன். வெல்... 'சேது’வுக்குப் பிறகு நான் பண்ண துல ரெண்டு படம் எனக்குப் பிடிக்கலை. அந்தப் படத்தில் நடிச்சுட்டு இருந்த சமயமே, அதை நான் சொல்லவும் செஞ்சேன். ஆனா, எல்லா விஷயங்களும் எப்பவும் நாம நினைச்ச மாதிரி நடக்கிறது இல்லையே!

அந்த இரண்டு படங்கள்... ஏழு எழுத்துப் படம் ஒண்ணு, 12 எழுத்துப் படம் ஒண்ணு. முடிஞ்சா, கண்டுபிடிச்சுக்கோங்க. ரொம்ப ஈஸிதான் சத்தி!''

ஆர்.முருகன், காங்கேயம்.

''உங்கள் 'முஸ்தபா முஸ்தபா’ தோஸ்த் யார்?''

''ரமேஷ்!

என்னோட காலேஜ்மேட். முதன்முதலா லயோலா காலேஜ் போனப்ப, ஏதோ சீனியர் மாதிரி என்னைக் கூப்பிட்டு வம்பு இழுத்துட்டு இருந்தான். ஆனா, அவனும் என் கிளாஸ்தான். நல்ல உயரம், செம ஸ்டமினா, பெர்ஃபெக்ட் ஃபிட்டா இருப்பான். தமிழ் பிடிக்கும், டெக்னாலஜி பிடிக்கும், கிளாஸை பங்க் பண்ணப் பிடிக்கும். நான் அப்போ அம்பி. பரம சாதுவா கிளாஸ்ல உக்காந்து இருப்பேன். என் தலையில் தட்டி இழுத்துட்டுப் போவான். ஸ்டெர்லிங் ரோடு கார்னர் வரைக்கும் போயிட்டுத் திரும்ப ஓடி வந்துருவேன். உலகத்துல எதைப்பத்தியும் அவன்கிட்ட பேசலாம். ரொம்ப இன்ட்ரெஸ் டிங் இளைஞன். வீட்ல ஷட்டில் விளையாடும் போது காக் வெளியே விழுந்துட்டாக்கூட, அம்மாகிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு வெளியே போய் எடுத்துட்டு வர்ற ஆளு நான். ஆனா, அவனோட சேர்ந்த பிறகுதான், சென்னை எவ்வளவு பெருசு, உலகம் எவ்வளவு சிறிசுனு எனக்குப் புரிஞ்சது. அம்மாகூட ரொம்ப பயந்தாங்க. ஆனா, ஒரு தடவை எனக்கு ஆக்சிடென்ட். ரத்தம் கொடுக்க காலேஜையே கிளப்பிக் கூட்டிட்டு வந்துட்டான் ராஸ்கல். 'நல்ல பையனைத்தான் ஃப்ரெண்ட் பிடிச்சு இருக்கான்’னு அப்புறம் தான் அம்மா சமாதானம் ஆனாங்க.

இப்பவும் என்னோட டச்லதான் இருக்கான் ரமேஷ். சென்னையில் ஒரு மெகா கம்பெனி யில் மதிப்பான வேலை. அதுவும் சினிமா சம்பந்தமான வேலைதான். வருஷத்தில் ரெண்டு அல்லது மூணு தடவை பார்ப்போம். அப்பப்போ பேசிப்போம். ஆறு மாசம் கழிச்சுப் பேசினாலும், விட்ட இடத்துல இருந்து அதே ஃப்ளோவோட பேசுவான். அப்பவும் இப்பவும் எப்பவும் என்னை கென்னியாக மட்டுமே பார்க்கும், ரசிக்கும் மிகச் சிலரில் முக்கியமானவன்... ரமேஷ். டேய் ரமேஷ், மிஸ் யூடா! give me a call..!''    

மாரி குணா, கும்பகோணம்.

''நிஜ வாழ்க்கையின் இயல்பான விக்ரமை நாங்கள் சினிமா ஸ்க்ரீனில் எப்போ பார்க்கலாம்?''

''('இந்தியன்’ கவுண்டமணி ஸ்லாங்கில் படிங்க..) 'அவன் கிடைக்க மாட்டான்.’ ஹாஹாஹா... நண்பா, ஒவ்வொரு ரீல் கேரக்டரும் ரியல் லைஃப் விக்ரம்கிட்ட இருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்கான்கிறதுதான் எனக்கான சவால். அதனால், ரியல் விக்ரமை நீங்க ஸ்க்ரீனில் பார்க்க சான்ஸே இல்லை!''

அடுத்த வாரம்...

''பாலா, ஷங்கர், மணிரத்னம் - ஒவ்வொருவரின் வொர்க் நேச்சர் பத்தி சொல்லுங்களேன்?''

''என்னதான் பெர்ஃபெக்ட்டா செய்திருந்தாலும் 'I AM SAM’ படத்தைத் தழுவித்தான் 'தெய்வத் திருமகள்’ படம் செய்ய வேண்டுமா? நம்மிடம் சொந்தச் சரக்கே இல்லையா?''

 ''உண்மையைச் சொல்லுங்கள்... உங்க ஒரிஜினல் வயசு என்ன?''

- விறுவிறு பதில்கள் தொடர்கின்றன...

விகடன் மேடை - விக்ரம்