Published:Updated:

பொன்னியின் செல்வன் - கோடையில்... மேடையில்...

கதிர்பாரதி

பிரீமியம் ஸ்டோரி

கோடையில்... மேடையில்... வலம் வரவிருக்கிறான் 'பொன்னியின் செல்வன்’!

கல்கியின் அமர காவியமான 'பொன்னியின் செல்வன்’ புதினத்தின் கதாநாயகன் வந்தியத்தேவனாக நடிக்க எம்.ஜி.ஆர். பெரும் விருப்பம் கொண்டிருந்தார். கமல் ஹாசனுக்கும் அதே ஆசை. இயக்குநர் மணிரத்னம், பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக இயக்கும் ஆரம்பக் கட்டப் பணிகளில் இறங்கி, பிறகு அதன் பிரமாண்டம் கருதி கைவிட்டார். ஆனால், இவர்களுக்கே கைவராத இந்த சாகசத்தை நிகழ்த்திக்காட்ட பெரும் ஆர்வத்துடன் இயங்கிக் கொண்டிருக்கிறது எஸ்.எஸ். இன்டர்நேஷனல் லைவ் நிறுவனம்!

தமிழர்களின் வீர வரலாற்றுக்கும், தமிழின் நாவல் கலாசாரத்துக்கும் சாட்சியாக நிற்கும் 'பொன்னியின் செல்வன்’ புதினத்தை மேடை நாடகமாக, ஜூன் மாதம் சென்னையில் அரங்கேற இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளில் தடதடத்துக்கொண்டிருக்கும் எஸ்.எஸ். இன்டர்நேஷனல் லைவ் நிறுவன இயக்குநர்களில் ஒருவரான இளங்கோ குமணனிடம் பேசினேன்...

''சென்னை வானொலியில் 'ஆனந்தமான 60 நிமிடங்கள்’ நிகழ்ச்சித் தயாரிப்பில் ஆரம்பிச்ச எங்கள் பயணம், வித்தியாசமான கலை நிகழ்ச்சிகளை வடிவமைப்பதில் மையம் கொண்டது. இதுவரை மேடையில் யாரும் செய்யாத ஒரு விஷயத்தைச் சாதிக்கணும்னு பேசிட்டே இருப்போம்.

பொன்னியின் செல்வன் - கோடையில்... மேடையில்...

நாங்க எல்லாருமே 'பொன்னியின் செல்வன்’ நாவலின் அதிதீவிர ரசிகர்கள். இன்னைக்கும் வரலாற்றுப் புதினங்களில் 'பெஸ்ட் செல்லர்’ பொன்னியின் செல்வன்தான். அந்தப் புதினத்தை மிஞ்ச, தமிழில் இதுவரை வேற யாரும் முயற்சிக்கவே இல்லை. ஏதோ ஒரு தருணத்தில், 'பொன்னியின் செல்வனையே நாடகமாக்கினால் என்ன?’னு தோணுச்சு. 'அது சாத்தியமா?’னு அடுத்த நொடியே சந்தேகமும் எழுந்தது. 'எந்தக் காரியமும் நிகழும் வரை சந்தேகம்தான்... நிகழ்ந்த பிறகு சாதனை’னு எங்களை நாங்களே உற்சாகப்படுத்திக்கிட்டு வேலைகளை ஆரம்பிச்சோம்.

1999-ம் வருஷம் 'பொன்னியின் செல்வனை’ நாலு மணி நேர நாடகமாக்கி அரங்கேற்றிய மேஜிக் லேன்டர்ன் நாடகக் குழுவுடன் பேசினோம். அப்போ, ஒரு வாரத்துக்கு தினம் ஒரு ஷோ மட்டும் அந்த நாடகம் நடந்தது. திறந்தவெளி அரங்கில் நடந்த நாடகத் துக்கு ஆரவார அப்ளாஸ். ரஜினி, கமல் என எல்லாரும் பார்த்துட்டு மனசுவிட்டுப் பாராட்டினார்கள். 'இது ரொம்ப அற்புதமான முயற்சி. ஆனா, நாலு மணி நேரத்துக்கும் மேலே திரைக்கதை அமைச்சிருக்கீங்க. அதை மட்டும் மூணு மணி நேரத்துக்குள் சுருக்கி விறுவிறுப்பாக்கிட்டா, இளைஞர்களையும் நாடகம் ஈஸியா ஈர்க்கும்’னு கமல் சொல்லியிருக்கார். அதை மனசுல வெச்சுக்கிட்டு 'மேஜிக் லேன்டர்ன்’ குழுவினர் பழைய ஸ்க்ரிப்ட்டில் 45 நிமிஷம் சுருக்கிட்டாங்க. இப்ப ஜோரா ரிகர்சல் போயிட்டு இருக்கு!'' என்று பூரிக்கிறார் இளங்கோ.

'பொன்னியின் செல்வன்’ நாடகத்தை இயக்கும் 'மேஜிக் லேன்டர்ன்’ குழுவின் இயக்குநர் பிரவீன், நாடகத் தயாரிப்புகள் குறித்துப் பேசினார்.

''கிட்டத்தட்ட 15 வருஷத்துக்கு முன்னாடி 'பொன்னியின் செல்வன்’ கதையை நாடகமாப் பண்ணலாம்னு முடிவெடுத்தப்ப, பல ஆராய்ச்சிகள் பண்ணோம். அதுக்காக முதல்ல நாங்க போய் நின்ன இடம் சோழர்கள் காலத்தில் 'வீரநாராயணன் ஏரி’ என்று அழைக்கப்பட்ட இப்போதைய வீராணம் ஏரி. அந்த ஏரிக்கரையில்தான் பொன்னியின் செல்வன் கதை ஆரம்பிக்கும். அந்த ஏரியின் வயசு ஆயிரத்தைத் தாண்டும். ஆக்கிரமிப்பு, மராமத்துப் பணிகள்னு பல மாற்றங்களுக்குப் பிறகும் வீராணம் ஏரியின் பிரமாண்டம் குறையலை. இத்தனைக்கும் அந்த ஏரியை உருவாக்கினது, பொறியாளர்கள் இல்லை; போர் வீரர்கள். அவ்வளவு பிரமாண்டத்தைச் சாதிச்ச நம்ம முன்னோர்களின் மதியூகம் இப்பவும் ஆச்சரியம்.

பொன்னியின் செல்வன் - கோடையில்... மேடையில்...

இப்படி நிறையக் கள ஆய்வுகளுக்குப் பிறகு, 1999-ம் வருஷம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாடகத்தை அரங்கேற்றினோம். நாடகத்தை கமல் சார் பார்த்துட்டு, ரொம்ப நேரம் எங்ககூடப் பேசிட்டு இருந்தார். 'திரும்ப எப்போ மேடை ஏத்துவீங்க?’னு அப்போ கேட்டார். அதுக்கு இப்போதான் வாய்ப்பு வந்திருக்கு.

1999-ல் நாடக மேடைக்கு ஆர்ட் டைரக்ஷன் பண்ணின தோட்டாதரணி சார்தான் இப்பவும் நாடகத் துக்கு கலை இயக்கம். அரசவை, காடு, போர்க்களம்னு கலவையா வரும் காட்சிகளுக்காக, நாடக மேடையில் சிறப்பு ஏற்பாடுகள் பண்ணியிருக்கோம். இந்த முறை ஆக்ஷன் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும்.

இலங்கைக் காட்டுக்குள் அருள்மொழி என்கிற ராஜராஜனுக்கும் அவரைச் சந்திக்க அரசாங்க ஓலையோடு போகும் வந்தியத் தேவனுக்கும் பெரிய வாட்போர் நடக்கும். அந்தக் காட்சிகளைப் பார்வை யாளர்களுக்குத் தத்ரூபமாக் கொடுக்கணும். அதனால் உண்மையான வாள் சண்டையே அரங்கேற்றப் போறோம். அதுவும் போக, நாடக அரங்கின் ஒலிப்பதிவிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக் கோம். மொத்தத்தில், முழு நீள அதிரடி வரலாற்றுக் காவியமா இருக்கும் இந்த நாடகம்!'' என்கிறார் உற்சாக வார்த்தைகளில்.

பொன்னியின் செல்வன் - கோடையில்... மேடையில்...

'பொன்னியின் செல்வன்’ நாடகத்துக்குத் திரைக்கதை, வசனம் எழுதியிருப்பவர் நடிகர் குமரவேல். இயக்குநர் ராதாமோகனின் படங்களில் தவறாமல் இடம் பிடிப்பாரே... அவரேதான்! '' 'பொன்னியின் செல்வன்’ நாவல் அஞ்சு அத்தியாயங் களா ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இருக்கும். அதன் கிளைக் கதைகளைக் குறைச்சு, மூணே கால் மணி நேர நாடகத்துக்குத் திரைக்கதை அமைச்சிருக்கேன். நாடகத்தில், கிட்டத்தட்ட 50 சீன்ஸ் வரும். தேவராட்டம், இலங்கைக் காட்டுக்குள் நடக்கும் ஆக்ரோஷமான சண்டை, நந்தினியின் அறிமுகக் காட்சி, அருள்மொழி யானை மூலம் தப்பிப்பதுனு பல அத்தியாயங்கள் 'பவர்ப்ளே ஆக்ஷன்’. அந்தக் காட்சி களின் வீரியம் குறையாமல் ஒரு நாடக மேடைக்குள் அடக்குவது நிச்சயம் பெரிய சவால்தான். அதைச் சந்தோஷமாச் சமாளிச்சிருக்கோம்!'' என்கிறார்.

எல்லாம் சரி... நாடகத்தின் பட்ஜெட்..?!

''வியாபார நோக்கத்தைத் தாண்டி, தமிழின் பாரம்பரியப் பெருமையை அடுத்தத் தலைமுறைக்கும், அடுத்த வடிவத்துக்கும் கொண்டுபோகணும்கிறது மட்டும்தான் எங்க ஆசை. கோடியைத் தாண்டும் இந்த புராஜெக்ட்டுக்கு ஸ்பான்சர் தேடி கிளம்பினப்போ, பல கலை ஆளுமைகள், வணிக நிறுவனங்கள் எல்லாம், 'பொன்னியின் செல்வன் புராஜெக்ட்டில் எங்க பங்கும் நிச்சயம் இருக்கணும்’னு சொல்லி ஆர்வமா முன்வந்து ஆனந்த அதிர்ச்சி கொடுத்தாங்க. ஒரு கை, ரெண்டு கைனு தேர் இழுக்க ஆரம்பிச்சு, இப்போ ஊர் கூடி இழுத்துட்டு இருக்கோம். இந்தச் சந்தோஷத்தில் விகடன் வாசகர்களுக்குப் பெரிய பங்கு கொடுக்கணும்னு ஆசை. அதான் நாடகம் அரங்கேறும் வரை வாராவாரம் வாசகர்களுக்குப் பளீர் பரிசுகள். சென்னையில் இந்த வருடக் கோடையின் குதூகலம்... பொன்னியின் செல்வன்தான்!'' என்று மகிழ்கிறார் எஸ்.எஸ். இன்டர்நேஷனல் லைவ்  நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான முரளிதரன்.

வந்தியத்தேவனை வரவேற்போம்!

பி.கு: வாராவாரம் ஆரவாரமான பரிசுத் தொகையுடனான 'பொன்னியின் செல்வன்’ போட்டிகள் அடுத்த இதழ் முதல்..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு