உத்தரப் பிரதேசம் லக்னோவில் ஸ்கூட்டி ஓட்டும் நபரை, பெண் ஒருவர் முன்புறமாக அமர்ந்து கட்டியணைத்தபடி செல்லும் வீடியோ, தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. போக்குவரத்து விதிகளை மீறி, பிற வாகன ஓட்டிகளுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் இவர்கள் பயணித்ததால், உத்தரப் பிரதேச காவல்துறை அதிகாரிகள், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ பதிவு காட்சிகளை வைத்து விசாரித்த காவல்துறை அதிகாரிகள், அந்த ஸ்கூட்டியை ஓட்டியது ஆண் அல்ல பெண் என்றும், இரு பெண்கள் சேர்ந்து இப்படிச் செய்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மத்திய கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் ராஜேஷ் ஸ்ரீவஸ்தவ் கூறுகையில், ``வீடியோவில் வண்டியை ஓட்டுவது ஆண் அல்ல; அவர்கள் இருவருமே பெண்கள். முழு சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோட்டார் வாகன சட்டத்தோடு தொடர்புடைய பிரிவுகளின் கீழ் மற்றொரு விசாரணை நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோன்ற ஒரு சம்பவம் ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் நடந்தது. 19 வயது பள்ளி மாணவியும், 22 வயதுடைய அஜய் குமார் என்ற இளைஞரும் பைக்கில் பயணித்தனர். மாணவியை பெட்ரோல் டேங்க் மீது அமர வைத்துக் கட்டிப்பிடித்தபடி இவர்கள் ரொமான்ஸ் செய்துகொண்டே சிறிது தூரம் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

அவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டம் 336, 279, 132, 129 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை அழைத்து உரிய ஆலோசனைகள் கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் லக்னோவில் இந்த ஜோடி ஸ்கூட்டியில் கட்டியணைத்தபடி செல்லும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.