Published:Updated:

படிக்கச் சொன்னால் இங்க் பேனாவை ரிப்பேர் பண்ண வேண்டியது! - 90s கிட்ஸ் எக்ஸாம் நினைவுகள் #MyVikatan

Representational Image
Representational Image ( Credits : Pixabay )

சொல்லி வைத்த மாதிரி முதலில் எல்லோரும் தேசியக்கொடியும் கம்பமும் வரைவார்கள். ஆனால் அதிலிருந்து விழும் பூ எல்லாமே பாறாங்கல் சைசில் இருக்கும்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

இன்று தேர்வுகள் இயல்பாகி விட்டன. சைக்கிள் டெஸ்ட், ஆன்லைன் தேர்வு என பல புதுமைகள் வந்துவிட்டன. எல்லா புத்தக பக்கங்களைப் படித்துவிட்டு இணையத்தில் எக்ஸ்ட்ரா தகவல்கள் தேடிப் படிக்கின்றனர். ``இதெல்லாம் பார்க்கும்போது பாவமா இருக்கு’’ என்ற ரேஞ்சிலயே 90 கிட்ஸ் இருக்கின்றனர். நாங்கெல்லாம் அப்பவே அப்படி- என்று சொல்லும் அவர்களின் அந்த தேர்வு நாள்களைச் சென்று பார்ப்போம்..

#துவக்கப்பள்ளித் தேர்வு

அப்போதெல்லாம் முதல் இரு வகுப்புக்கு பரிட்சை கிடையாது. அப்படியே இருந்தாலும் வாய்மொழித் தேர்வுதான். வாழ்க்கைக் கல்வி மற்றும் கலைக்கல்விக்கு மட்டும் பல்வாள் தேவனை பார்த்த பாகுபலி மாதிரி ஒரு குரூர சந்தோஷம்.. ஏன் என்றால் அப்போதுதான் படம் வரையச் சொல்வார்கள்.

Representational Image
Representational Image

சொல்லி வைத்த மாதிரி முதலில் எல்லோரும் தேசியக்கொடியும் கம்பமும் வரைவார்கள். ஆனால், அதிலிருந்து விழும் பூ எல்லாமே பாறாங்கல் சைசில் இருக்கும்.

மூணாப்பில இருந்துதான் பரீட்சை. எல்லாப் பரீட்சைக்கும் கோடுபோட்ட பேப்பர். கணக்குக்கு மட்டும் பால் பேப்பர். இதை டீச்சர்தான் கொடுப்பார்கள். அதை எழுத ஆரம்பிக்கும்போது மரணபீதி ஏற்படுத்துவார்கள். முதல் பக்கத்துக்குப் பதிலாக மூணாவது பக்கத்தில் எழுதினவனை தூக்குத்தண்டனை விதித்த கைதி மாதிரி பார்ப்பார்கள். தன் தவற்றுக்குப் பயந்து தலையில் அடித்து அழுதகொடுமையெல்லாம் இருக்கிறது. அந்தப் பேப்பரை அழுக்காகாமல் பார்த்துக்கொள்வது பரீட்சை சொல்லிதந்த ஆதிபாடம். எக்காரணம் கொண்டும் கடைசிவரை பேப்பரில் பேர் எழுதக் கூடாது. திஸ் ஈஸ் ட்ரங்கன் மங்கி ஸ்டைல். யார்ரா சிவானு கத்து கத்துனு கத்தின பிறகு கடைசி ஸ்ட்ரோக்கில் வேற வழி இல்லாமல் உண்மையை ஒத்துக்கொள்வோம்.

#உயர்நிலைப்பள்ளியில்

கிராமத்து வானில் சிறகடித்த சிட்டுக்குருவி இப்போது நகரத்து வானில் நீந்திப்பறக்கிறது என்று அசரீரி பாரதிராஜா வாய்ஸில் ஒலிக்கும். டைம் டேபிள் வந்தவுடன் ஏதோ வீட்டுக்கு புதுசா டைனிங் டேபிள் வந்த மாதிரி ஊரில் எல்லாருக்கும் சொல்லித் திரிவோம்.

டைம் டேபிளை ஜாமென்ட்ரி பாக்சின் மேல் மூடியில் ஒட்டிவைப்பது, பாக்ஸில் விரித்து வைத்து அதன் பேனாக்களை வைத்துக்கொள்வது.

திறக்கும்போதெல்லாம் பார்த்து திட்டமிடும் வியூகம். ஆனால், பரீட்சையில் குறிச்சுக் கொடுக்காத கேள்வியெல்லாம் வரும்போது`` நம்ம சார் இப்பிடி நம்மை ஏமாத்திட்டாரே’’- என்று ஒரு அறச்சீற்றம் வரும். கொஸ்டின் பேப்பரை கொடுத்தால் கல்வெட்டு ஆராய்ச்சியாளன் மாதிரி ஒவ்வொரு எழுத்தாய் கவனிப்பது. எல்லாரும் எழுதுவதைப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்து தேர்வுத்தாளில் கேள்விகளையே எழுதி வைப்பது. அதற்கு நெளிவு ஸ்கேலில் வளைய வளையமாக கோடுபோட்டு அழகுபடுத்துவோம்.

பரீட்சை என்றால் என்ன என்பது அப்போதுதான் கொஞ்சம் விளங்கும் கொஸ்டின் பேப்பரை அப்படியே எழுதி வைப்போம். அதைப் பார்த்து எழுதின பத்தாவது நிமிஷத்திலிருந்து சும்மாவே உக்காந்து வேடிக்கை பார்ப்பது. குறைஞ்சது இருபது கொட்டாவியாவது வரும்.

Representational Image
Representational Image

#தேர்வு அறை

தேர்வு அறையில் கத்துக்கிட்ட முக்கியமான விஷயம் வேடிக்கை பார்ப்பது.. டீச்சரின் ஹேர்ஸ்டைல், வாட்ச், எத்தனை பேர் தலைக்கு குளிச்சிருக்காங்க, ஜாமென்ட்ரி பாக்ஸை கீழ போடுவது, ஒரு சிறுசத்தம் கேட்டாலும் திரும்பிப் பார்ப்பது, தாவர செல், விலங்கு செல் வரைய `டொக்கு டொக்குனு'" நெல்லு குத்துவது.. அந்தச் சமயத்தில் யாராவது பிட்டு அடித்து மாட்டிக் கொண்டார்கள் என்றால் செம என்டர்டெயின்மெண்டாக இருக்கும். மாட்டிக்கிட்டவன் கெஞ்சுவான், காலில் விழுவான். நமக்குச் சிரிப்பாக இருக்கும். இதில் என்ன விஷேசம் என்றால் அவன் கொண்டுவந்த பிட்டு பரீட்சைக்கே வந்திருக்காது.

செருப்பில ஓ காட் பியூட்டிஃபுல், சாலிடரி ரீபர் மெமரி போயம் எழுதினது, டெஸ்க்கில கணித சூத்திரம், சூப்பர்வைசரை எப்போதும் முறைத்தபடியே பார்ப்பது, என்னவோ பதில் மறந்து போன மாதிரி உச் கொட்டுவது, இதற்கும் மேல விட்டத்தைப் பார்த்து வாயில் முணகுவது (ஆழ்மனதில் இருக்கும் பதிலை அகப்பை எடுத்து கிண்டி எடுப்பதுபோல) ஆனால், பாருங்க கடைசி வரை நினைவுக்கு வராது. ``என்னடா எழுதிறீங்க’’ -என்று மற்றவரைப் பார்த்து நமக்குள் ஆற்றாமை பொங்கும்.

அப்புறம் பரீட்சை பேப்பரை கட்ட நூல் தரமாட்டார்கள். அரிசி மூட்டையில் பிரிச்ச டொயின், சிமென்ட் சாக்கு நூல், பரோட்டா சால்னா கட்டுன நூலை பத்திரப்படுத்தி பரிட்சைக்கு வைத்து கட்டிக்கொடுப்பது மிடில் க்ளாஸ் தகப்பன் பெண்ணை கட்டிக்கொடுப்பதுபோல பாரம் நீங்கிய நிமிடங்கள் அவை.

Representational Image
Representational Image

#பப்ளிக்.. பப்ளிக்

ஆதார் கார்டுக்கு போட்டோ எடுப்பதுபோல எல்லாரையும் முதல்முறையாக ஹால் டிக்கெட்டுக்கு போட்டோ எடுக்க கூப்பிட்டாங்க. அம்பி விக்ரம் மாதிரி காலர் பட்டன் போட்டுக்கிட்டு பவ்யமாக போட்டோ எடுத்தோம். மயிலிறகு இருக்கும் பக்கத்தில் இதை வைத்து அடிக்கடி பார்த்துக்கொள்வது ஹார்ட்டுக்கு நல்லது.

தேர்வு அறை அமைதியாக இருக்கும். அப்போதுதான் கர்சீப் யூஸ் பண்ணுவோம், ஆறுதடவையாவது தலை சீவியிருப்போம். திருநீறு, சந்தனம், குங்குமம் சரியான கலவையில் இருக்கும். தேர்வில் யார் முதலில் அடிசனல் சீட் வாங்குவது என்ற போட்டி நடக்கும்.

கணக்கு பரீட்சையில் அந்த ஜாமென்ட்ரியை சரியாகச் செய்வது.. மாட்டிக்காமல் கொலை செய்வதற்கு சமம். பாகைமானியில் டிகிரி எடுத்து புள்ளி வைத்து, கவராயத்தின் உதவியுடன் வெட்டினேன் என்று எழுதும் வரைக்கும் த்ரில் அனுபவம். ஏன் என்றால் அதுதான் அப்போது சோறு போடுகிற தெய்வம்.

#தேர்வுக்கு படிப்பது

*பரீட்சை வந்தால் வரும் முதல் அறிகுறி P.T பீரியட் கட் ஆகும். அது ஒரு ரண வலி. எல்லோரும் விளையாடும்போது நாம் மட்டும் படிப்பது காதலி கல்யாணத்தில அர்ச்சனை போடுவதுபோல் இருக்கும்.

*கண்ணைத் தொறந்து பாருய்யா என்று காந்திமதி அவர்கள் படத்தில சொல்வது மாதிரி வீட்டில் இருக்கிறவர்கள் புஸ்தகத்தை எடுத்து படிய்யா ராசானு உருகுவார்கள்

*எப்படியும் அத்தை மகளோ, மாமன் மகளோ நம்ம செட்டாக இருப்பார்கள். அவளைவிட அதிக மார்க் எடுத்து குடும்ப மானத்தை காப்பாற்ற வேண்டி சூடம் காட்டுவார்கள்.. ஆனால் முடியாது.

*படிக்கவிட்ட நாள்களில் இங்க் பேனாவை ரிப்பேர் செய்வது அலாதி இன்பம். பல்லால் நிப்பை கடிக்க வாயெல்லாம் இங்க் ஆக ஒரே டைம்பாஸ்தான்.

Representational Image
Representational Image

*படிக்கச் சொன்னால் முதலில் வரவேண்டியது தண்ணி தாகம். போய் வாட்டர் கேனை எடுத்து வாயில் வைத்து சிக்கல் சண்முகசுந்தரம் மாதிரி ஒரு 20 நிமிஷம் எடுக்கவே கூடாது.

*யாருக்காவது பல்லு விழுந்தா செம என் ஜாய். அவனை ஒரு தத்து பிள்ளை மாதிரி தாவிக்கிட்டு போய் அந்தப் பல்லை ஆராய்ச்சி பன்னி அதை பத்திரமாக ஒரு பேப்பரில் கட்டிக் கொடுத்தால்தான் மனசு ஆறும்

*கொஞ்சம் போர் அடித்தால் தலைவலி, வயித்துவலி என்று படுத்து கொள்ள வேண்டும்..

மனசு பரீட்சை எழுதும்போது அமைதியாய் இருந்துவிட்டு, ரிசல்ட் வரும்போது இன்னும் நல்லா படிச்சிருக்கலாம் என்று மாபெரும் ஞானத்தை தருவது தேர்வு. அது பின்னாளில் மதிப்பெண் குறித்து பேசும்போதெல்லாம் நினைவுக்கு வரும்.

தேர்வு குறித்த அச்சம் காலந்தோறும் மரபு வழியாய் கடந்து வருபவை.

புதுமைப்பித்தனின் நிகும்பலையில் கூட தேர்வு அறையை போர்க்களம் போல உருவகித்து இன்று போய் நாளை வா எனச் சொல்லியிருப்பார்.

தேர்வுகள் இன்னமும் நம்மை புறமுதுகிட்டு ஓடச் செய்து கொண்டுதான் இருக்கிறது.

தேர்வுகள் ஒன்றும் இறுதி அத்தியாயமல்ல அது ஒரு முன்னுரை தான். ஆகவே தைரியமாய் எதிர்கொள்வதே தேர்வு கற்றுக்கொடுக்கும் பாடம்.

-மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு