Published:Updated:

``மனித நகலெடுக்கும் பள்ளிகள்!'' - கசப்பனுபவமும் ஆதங்கமும் #MyVikatan

படிப்பு
படிப்பு ( Pixabay )

சேர்ந்த நான்கே மாதங்களில் பதினொன்றாம் வகுப்பு பாடங்களை நடத்தி முடித்துவிட்டார்கள். பின் பன்னிரண்டாம் வகுப்பு பாடங்கள் தொடங்கிவிட்டன. 70 சதவிகித பன்னிரண்டாம் வகுப்பு பாடங்களை அடுத்த ஐந்து மாதங்களில் நடத்தி முடித்தார்கள்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

`என் பள்ளி'

பத்தாம் வகுப்பு முடித்த பின் நான் மேல்நிலைக் கல்வி கற்றது ஒரு 'பிராய்லர் கோழி' பள்ளியில். பத்தாம் வகுப்பில் எடுத்த மார்க்குக்கு ஏற்ப அங்கு டொனேஷன். 85 சதவிகிதம் எடுத்த எனக்கு பத்தாயிரம், 50 சதவிகிதம் எடுத்த என் சக மாணவனுக்கு ஒரு லட்சம். என்னவாகப் போகிறோம் என்ற எந்த முன்னேற்பாடுகளும் இல்லை எனக்கு. என் பெற்றோரும் கேட்கவில்லை. பள்ளியிலும் கேட்கவில்லை.

இரண்டு வழிகள்தான். பொறியியல் அல்லது மருத்துவம். அதாவது professional courses. ஏன் அந்த இரண்டு படிப்புகளுக்கு மட்டும் இந்தப் பெயர் என்று இன்னமும் விளங்கவில்லை. அந்த வார்த்தைக்கான அர்த்தமும் பிடிபடவில்லை.

School
School
``படிக்கிற புள்ள ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வந்தது எப்படி..?’’ - குட்டி சக்சஸ் ஸ்டோரி #MyVikatan

பல்வேறு ஊர்களில் இருந்து என் வயது மாணவர்கள் பலர் அங்கு வந்திருந்தனர். கொஞ்சம் சிறிய பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை படித்திருந்த எனக்கு அப்பள்ளி கொஞ்சம் அச்சமாகத்தான் இருந்தது.

பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்புகள் மட்டுமே. மொத்தம் 11 பிரிவு வகுப்புகள். வகுப்புக்கு 45 முதல் 50 மாணவர்கள்.

இன் பண்ண வேண்டாம், பெல்ட், டை, ஷூ இல்லை. காலை வணக்கம் இல்லை. பொறியியலும், மருத்துவம் மட்டும்தான் சிறந்த படிப்புகள் என்று அளந்துவிட்டார்கள். மருத்துவக்கல்லூரிகளில் பயிலும் முன்னாள் மாணவர்களெல்லாம் மிக சந்தோசமாய் இருப்பதாய் சொல்லி மூளைச் சலவை செய்தார்கள்.

எங்கள் பெற்றோர்கள் எங்களை கஷ்டப்பட்டு படிக்க வைப்பது ஏதோ ஒரு கலை அறிவியல் படிப்புகளில் சேர இல்லை என்பது அவர்கள் வாதம். இதைச் சொன்ன ஆசிரியர்களும், பள்ளியின் பணக்கார ஆசிரிய நிர்வாகிகளும் அதே கலை அறிவியல் படிப்புகளை படித்து வந்தவர்கள்தாம் என்பது நகை முரண்.

சேர்ந்த நான்கே மாதங்களில் பதினொன்றாம் வகுப்பு பாடங்களை நடத்தி முடித்துவிட்டார்கள். பின் பன்னிரண்டாம் வகுப்பு பாடங்கள் தொடங்கிவிட்டன. 70 சதவிகித பன்னிரண்டாம் வகுப்பு பாடங்களை அடுத்த ஐந்து மாதங்களில் நடத்தி முடித்தார்கள். பதினொன்றாம் வகுப்பு இறுதி தேர்வுகளுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு, மீண்டும் 11-ம் வகுப்பு பாடத்தைப் படித்து தேர்ச்சி பெற வேண்டும் என்றனர். `என்னய்யா பண்றீங்க' என்று தோன்றியது எனக்கு.

பாடம்
பாடம்

காலை 5 மணிக்கு எழுப்பிவிடுவார்கள். 6.30 மணி வரை புத்தகத்தின் பக்கங்களைக் கரைத்து மூளைக்குள் ஊற்றிக்கொள்ள வேண்டும். அதையே 7.30 முதல் 9.00 மணி வரை நோட்டு புத்தகத்தில் (பாட புத்தகத்தில் உள்ள சில பக்கங்களை) வார்த்தை மாறாமல் எழுத வேண்டும். காலை உணவுக்குப் பின் வகுப்புகள். பின் மாலை 5.00 மணி முதல் 6.30 மணி வரை மறுபடியும் வேறொரு பாடத்தை புத்தகத்தில் உள்ளதைப் போலவே எழுத வேண்டும். உணவுக்குப் பின்பு இரவு 8 முதல் 10.30 மணி வரை மறுபடியும் படிப்பு. பிடிக்கவில்லை என்றாலும் குறிப்பிட்ட நேரத்தில் படித்துதான் ஆக வேண்டும். சொல்லப்போனால் மனித நகலெடுக்கும் இயந்திரங்களாகத்தான் நாங்கள் இருந்தோம்.

பன்னிரண்டாம் வகுப்பு நுழைந்தவுடன் இரண்டே மாதங்களில் மீதம் இருக்கும் 12-ம் வகுப்பு பாடங்களையும் நடத்தி முடித்து விடுவார்கள். பின்பு என்னவென்று கேட்கிறீர்களா? தேர்வுகள்தான். இரண்டு அரைத் தேர்வுகள், அடுத்தது முழுத் தேர்வுகள். பொதுத்தேர்வுக்கு தயார் செய்கிறார்களாம். இரண்டு நாள்களுக்கு ஒரு தேர்வு. அதாவது இரண்டு நாள்கள் படித்து மூன்றாம் நாள் தேர்வெழுத வேண்டும். பின்பு, அன்று மாலை முதல் அடுத்த தேர்வுக்கு படிக்க வேண்டும். புத்தகத்தில் உள்ள பத்திகளை வார்த்தை மாறாமல் எழுத வேண்டும். சுய சிந்தனைக்கெல்லாம் அங்கு வேலையில்லை. முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை முழுவதும் படித்திருக்க வேண்டும்.

பாடம்
பாடம்
Pixabay

குறுகிய அறை கொண்ட விடுதிகள். படிப்பைத் தவிர பொழுதுபோக்கெல்லாம் இல்லை. வெளியுலகம் என்ன செய்கிறது? என்று தெரியாது. வெள்ளிக்கிழமை வெளியான ஆங்கில நாளிதழ் சனிக்கிழமை மாலை கிடைக்கும். அதற்கு அடித்துக்கொள்வோம். மெஸ்ஸில் உள்ள தொலைக்காட்சி சிலை போல் இருக்கும். சீப்பு, சோப்பு போன்ற இத்யாதிகள் உள்ளேயே கிடைக்கும். மாதம் இரு முறை பெற்றோர் வந்து பார்க்கலாம். அலைபேசி இல்லா காலம். தலைமை ஆசிரியர் அனுமதி தந்தால் ஞாயிறுகளில் பெற்றோர் உடன் பேசலாம். விடுமுறைக்கு வீடு சென்று திரும்புகையில் மனம் கணத்திருக்கும்.

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பள்ளி வாழ்வும், பாடத்திட்டமும் ஒருவருடைய வாழ்வின் அடித்தளம்.

4 மாதங்களில் பதினொன்றாம் வகுப்பு பாடங்களையும், ஏழு மாதங்களில் பன்னிரண்டாம் வகுப்பு பாடங்களையும் நடத்தி முடித்திருந்தார்கள். ஒரு பாடத்தைப் புரிந்து கொள்வதற்குள் இன்னொன்று வந்து நிற்கும். அந்த வேகம் குழம்பிய மன நிலைக்கு தள்ளியது. படிப்பில் சற்று மந்தமாக இருக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பெடுப்பதைப் பார்த்திருக்கிறேன். இங்கு நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பெடுத்தார்கள்.

நன்றாகப் படிக்கும் மாணவர்கள் ஆசிரியர்களின் செல்லப் பிள்ளைகள். சுமாராகப் படிக்கும் மாணவர்களின் பெயர்கூட ஆசிரியர்களுக்குத் தெரியாது.

Schools
Schools
Representational Image

இவ்வாறான அரவை படிப்பின் மூலம் இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து மாநில அல்லது மாவட்ட அளவில் முதலிடங்கள் எடுத்து மருத்துவமும் பொறியியலையும் நோக்கி ஓடினால் அவர் சிறந்த மாணவர்.

ஆண்டுக்கு சுமார் 500 மாணவர்கள் (20 ஆண்டுகளுக்கு முன்பு) மேல்நிலை படிப்பை முடித்து வெளி வரும் அந்தப் பள்ளியாகட்டும், இதே மாதிரியான பிற பள்ளிகளாகட்டும் குறிப்பிட்ட இரண்டு துறைகளை மாணவர்களின் எதிர்காலமாக முன்நிறுத்தியது ஆகப் பெரும் வன்முறை. கல்வி ஊழல். இதில் பெற்றோருக்கும் பங்குண்டு.

திறந்த வெளி சிறைச்சாலைகள் இவை. நெருப்புக்கோழி தலையை மண்ணிற்குள் விட்டுக்கொண்டது போலத்தான் மாணவர்களின் நிலையும். மதிப்பெண்ணும் மனப்பாடக் கல்வியும் நோக்கங்கள். ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பள்ளி வாழ்வும், பாடத்திட்டமும் ஒருவருடைய வாழ்வின் அடித்தளம். நாம் நம்மை உணர்வதும் சமூகத்தை உணர்வதும் இங்குதான்.

Studies
Studies
Pixabay

பாடக் கல்வி மட்டுமல்லாது விளையாட்டு, இசை, சமூக பங்களிப்பு, சமூகப் பொறுப்பு, சுகாதாரம், சுயசிந்தனை, ஆளுமைத்திறன், அரசியல், சாலை விதிகள் என்று பல விஷயங்களைக் கற்றுக்கொண்டு ஒரு சிறந்த மனிதராக நாம் உருவாக வேண்டிய இடம் பள்ளிகள். அவற்றை வெறும் மதிப்பெண் எடுக்க வைக்கும் எந்திரங்களாக பிராய்லர் கோழி பள்ளிகளாக மாற்றியது மன்னிக்க முடியாத `நம்முடைய' வரலாற்றுப் பிழை.

- ராம்குமார்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு