Published:Updated:

`தர்ம காரியங்களை நிறுத்திடாதப்பா!' - சித்தியின் கனவை நிறைவேற்றும் டாக்டர்

கு.ஆனந்தராஜ்

``நாம செய்ற தர்ம காரியங்கள், என் மறைவுக்குப் பிறகும் தொடரணும்.''

ponmani devi
ponmani devi

ஈரோடு மாவட்டம், சித்தோடு நல்லகவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர், பொன்மணி தேவி. பூர்வீக சொத்து மற்றும் தன் உழைப்பில் சேர்த்த செல்வங்களை, உதவி கேட்டு வருபவர்களுக்கும், கல்வித் தேவைகளுக்கும் அள்ளிக்கொடுத்து மகிழ்ந்தவர். கடந்த ஆண்டு, சித்தோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நான்கு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புமிக்க நிலத்தைத் தானமாகக் கொடுத்தார். 

ponmani devi with family
ponmani devi with family

பொன்மணி தேவி, கடந்த ஆண்டு இறுதியில் காலமானார். அவர் விருப்பப்படியே அவருடைய கணிசமான தொகை, வங்கியில் நிரந்தர வைப்புநிதியாக (Fixed Deposit) வரவு வைக்கப்பட்டது. அதன்மூலம் கிடைக்கும் வட்டிப்பணத்தில், பொன்மணி தேவியின் நினைவாக கல்விக்கான உதவிகள் செய்யப்படுகின்றன. அந்தப் பணிகளுக்கு ஒருங்கிணைப்பாளராக இருக்கும் பொன்மணி தேவியின் அக்கா மகன் டாக்டர் பார்த்திபனிடம் பேசினோம்.

``தன் மகனின் நினைவாக என் சித்தி, கல்வித் தேவைகளுக்கு நிறைய தானங்களைச் செய்துவந்தார். அவர் மறைவுக்குப் பிறகு, சித்தியின் விருப்பப்படி கல்விச் சேவைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. சித்தியின் நினைவாகத் தொடங்கப்பட்ட நிரந்தர வைப்பு நிதியிலிருந்து கிடைக்கும் வட்டிப்பணத்தில், சில கல்விப் பணிகளைச் செய்திருக்கிறோம். சில பணிகள் நடைபெறுகின்றன.

`நாம செய்ற தர்ம காரியங்கள், என் மறைவுக்குப் பிறகும் தொடரணும். இந்தப் பணிகளை நிறுத்திடாதப்பா' என என்னிடம் உருக்கமாகக் கூறியிருந்தார்.
டாக்டர் பார்த்திபன்

எங்கள் ஊரிலுள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு, 9 ஸ்மார்ட் டி.வி வழங்கியிருக்கிறோம். கணினி வகுப்பைத் தொடங்கி, அதற்கு ஓர் ஆசிரியரையும் நியமித்திருக்கிறோம். துப்புரவுப் பணியாளர் ஒருவரையும் நியமித்திருக்கிறோம். அனைத்து வகுப்புகளிலும் கண்கவர் ஓவியங்கள் வரையும் பணிகளும், ஒன்றாம் வகுப்புக்கு மேஜை நாற்காலிகளைப் பொருத்தும் பணிகளும் நடைபெறுகின்றன.

ஆங்கிலப் பயிற்சி வகுப்பைத் தொடங்கும் திட்டமிருக்கிறது. இந்தப் பணிகளுக்கெல்லாம் பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. இந்தப் பணிகள் நிறைவுபெற்றால், மேற்கொண்டு இந்தப் பள்ளிக்கு இப்போதைக்கு வேறு பணிகள் எதுவும் செய்யத் தேவையிருக்காது. பிறகு, வேறு பள்ளிகளுக்கு உதவிசெய்ய ஆரம்பித்துவிடுவோம்" என்கிற பார்த்திபன், தன் சித்தியின் நினைவுகுறித்துப் பேசினார்.

ponmani devi
ponmani devi

``தன் கணவர் மற்றும் ஒரே மகனின் மறைவுக்குப் பிறகு, தன் சொத்துகளைத் தர்மம் செய்துவந்தார், என் சித்தி. கடந்த ஆண்டு இறுதியில், உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். `நாம செய்ற தர்ம காரியங்கள், என் மறைவுக்குப் பிறகும் தொடரணும். இந்தப் பணிகளை நிறுத்திடாதப்பா' என என்னிடம் உருக்கமாகக் கூறியிருந்தார். என் மருத்துவப் பணி நேரத்துக்கு இடையே, என் சித்தியின் கனவையும் தொடர்ந்து சாத்தியமாக்கிக் கொண்டிருக்கிறேன். சித்தியின் நினைவாக, தொடந்து கல்விப் பணிகளை எங்கள் குடும்பத்தின் சார்பில் செய்துவருவோம்" என்கிறார் பார்த்திபன், நெகிழ்ச்சியாக.