Published:Updated:

`எல்லாரையும் நல்லா கொண்டு வரணும்!' பழங்குடி பிள்ளைகளுக்கு கலாவதி டீச்சரின் சேவை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மாணவர்களுடன் 
கலாவதி டீச்சர்
மாணவர்களுடன் கலாவதி டீச்சர்

``பழங்குடி கிராமங்களுக்கு நேர்ல போய், படிப்பை பாதியிலேயே விட்ட பசங்களக் கணக்கெடுத்து, அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்துல சேர்த்துவிடுறேன். இந்த வருஷம்‌ மட்டும் 30 பேரை சேர்த்துவிட்டிருக்கேன்.''

மலையுச்சியில் இருந்தாலும் கூடலூர் மீது கல்வி வெளிச்சம் தற்போதுதான் மெல்ல படர்கிறது. இங்கு வாழும் பெரும்பாலான பழங்குடிகளுக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கும் உயர் கல்வி என்பது இன்றளவும் எட்டாக்கனியாகவே உள்ளது. அதிலும் குறிப்பாகப் பணியர், இருளர், குறும்பர், காட்டு நாயக்கர் உள்ளிட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளிக்கல்வியை முழுவதுமாக நிறைவு செய்வதே பெரும் சவாலாக உள்ளது.

நாடு சுதந்திரம் பெற்றது முதல் இன்றுவரை அரசு கோடிக்கணக்கான ரூபாயை நிதியாக ஒதுக்கி பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. இருந்தும் இவர்களின் எழுத்தறிவின்மையை இன்றளவும் போக்க முடியாததற்குக் காரணம், அரசின் திட்டங்களில் சரியான புரிந்துணர்வு இல்லாததும், அவற்றை இவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் உள்ள சிக்கல்களைக் களையாததுமே எனக் கல்வியாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

மாணவர்களுடன் 
கலாவதி டீச்சர்
மாணவர்களுடன் கலாவதி டீச்சர்

கடைக்கோடியில் இருக்கும் இந்த மலைவாழ் மக்களை கல்வியில் கரையேற்ற எப்போதாவது அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில நல்லாசிரியர்கள் வந்து சேர்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்படி வந்த ஆசிரியர்களில் ஒருவர்தான் கலாவதி டீச்சர். கூலித்தொழிலாளியின் மகளான இவர், இன்று முதுமலையில் உள்ள கார்குடி அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை. பழங்குடி மற்றும் ஆதிதிராவிட குழந்தைகளின் வாழ்வை உயர்த்த தன் ஆசிரியப் பணியை அர்ப்பணித்துள்ளார்.

மாணவர்களுடன் 
கலாவதி டீச்சர்
மாணவர்களுடன் கலாவதி டீச்சர்

தேசிய மற்றும் மாநில நல்லாசிரியர் விருதுகளைப் பெற்று மலைவாழ் மக்களால் போற்றப்படும் கலாவதி ஆசிரியையிடம் பேசினோம்.

``நான் கொழந்தையா இருக்கும்போதே டீச்சர் விளையாட்டுதான் விளையாடுவேன்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. என்னோட எலிமென்ட்ரி ஸ்கூல் ஆசிரியை ஜெயா டீச்சரை எனக்கு அவ்ளோ பிடிக்கும். அப்பவே என்கிட்ட நீ என்னவாகணும்னு யார் கேட்டாலும் டீச்சர்னுதான் சொல்லுவேன். அதுக்குக் காரணம் ஜெயா டீச்சர்தான்.

அம்மாவோட கடின உழைப்பால குன்னூர் ஸ்கூல்ல ப்ளஸ் டூ வரை படிச்சிட்டு ஊட்டியில டீச்சர் டிரெயினிங் முடிச்சேன். 1990... அப்போ எனக்கு 24 வயசு. நடுவட்டம் பக்கத்துல இருக்கிற ஆதிதிராவிடர் ஸ்கூல்ல டீச்சரா ஃபர்ஸ்ட் அப்பாய்ன்மென்ட். காட்டு வழியா தினமும் 3 கிலோமீட்டர் நடந்துதான் ஸ்கூலுக்குப் போகணும். சந்தோஷமா ஏத்துக்கிட்டேன்.

மாணவர்களுடன் 
கலாவதி டீச்சர்
மாணவர்களுடன் கலாவதி டீச்சர்

அங்க இருந்த பசங்கள பார்த்தப்போ ரொம்ப வருத்தமா இருந்தது. டெய்லி ஸ்கூலுக்கு வரவே அவங்களுக்கு பல சவால்கள் இருந்தன. அவங்களைப் பாத்து வருத்தப்படுறதுக்குப் பதிலா, நம்மளால முடிஞ்ச உதவியைச் செய்யலாம்னு முடிவு பண்ணினேன்.

அவங்களுக்காகவே நிறைய நேரத்தை செலவிட்டேன். தனி கவனம் கொடுத்து பாடம் சொல்லிக் கொடுத்தேன். இதுக்கு இடையில வேற ஸ்கூலுக்கு டிரான்ஸ்ஃபர் வந்தது. ஆனா, போக மனசு இல்லாம இங்கேயே இருந்தேன்.

மாணவர்களுடன் 
கலாவதி டீச்சர்
மாணவர்களுடன் கலாவதி டீச்சர்

பள்ளிப் படிப்பை முடிக்காம பாதியிலேயே நிக்கிற பசங்கதான் இங்க நிறைய. எந்தக் குழந்தையும்‌ பாதியில படிப்பை நிறுத்தக் கூடாதுன்னு வீட்டுக்கே போய் கூட்டிட்டு வருவேன். அவங்கிட்ட‌ ரொம்ப கனிவா நடந்துக்கிட்டேன். அவங்களுக்கும்‌ என் மேல நம்பிக்கை ஏற்பட்டுச்சு.

அப்படியே கல்யாணம், குழந்தைங்க, குடும்பம்னு அடுத்தடுத்து வாழ்க்கை நகர்ந்துச்சு. கணவரோட‌ ஊக்கத்தால தொலைதூரக் கல்வி மூலமா தமிழ், வரலாறு, யோகா மூன்றிலும் முதுகலை பட்டத்தை முடிச்சேன். அப்படியே எம்.பில் பட்டத்தையும் முடிச்சிட்டேன். அர்ப்பணிப்பான என் ஆசிரியர் பணிக்காக பிரமோஷன், விருதுகள் என எல்லாமே தானா வந்தன.

மாணவர்களுடன் 
கலாவதி டீச்சர்.
மாணவர்களுடன் கலாவதி டீச்சர்.

இப்போ கார்குடி அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிட உயர்நிலைப் பள்ளியில தலைமை ஆசிரியையா இருக்கேன். இங்க வந்ததும் டல் ஸ்டூடன்ட், ஆவரேஜ் ஸ்டூடன்ட் கேட்டகிரியைப் பிரிச்சு, அவங்களுக்கு ஏற்ற கல்வியைக் கொடுக்க நடவடிக்கை எடுத்தேன்.

முதுமலையைச் சுத்தி இருக்குற பழங்குடி கிராமங்களுக்கு நேர்ல போய், படிப்பை பாதியிலேயே விட்ட பசங்கள கணக்கெடுத்து, அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்துல சேர்த்துவிடுறேன். இந்த வருஷம்‌ மட்டும் 30 பேரை சேர்த்து விட்டுருக்கேன்.

மாணவர்களுடன் 
கலாவதி டீச்சர்
மாணவர்களுடன் கலாவதி டீச்சர்

என்னைப் பொறுத்தவரைக்கும் ஆசிரியர் பணி என்பது ஒரு வரம். நான் வேற எந்த வேலைக்குப் போயிருந்தாலும் மக்களுடன் இவ்வளவு நெருக்கமா இருந்திருக்க முடியுமான்னு தெரியலை. பழங்குடி குழந்தைங்க படிப்புல முன்னேறி பெரிய பதவிக்கு வரணும். அதுதான்‌ என்னோட ஆசை. நம்ம ஸ்கூல்ல இப்போ 126 குழந்தைங்க படிக்கிறாங்க. இவங்க எல்லாரையும் நல்லா கொண்டு வரணும்" - அம்மாவின் அக்கறையுடன் சொல்லும் கலாவதி டீச்சர்,

``ஸ்கூலுக்கு பசங்க வந்தே அஞ்சு மாசமாகுது. ஆனா, ஆசிரியர் தினத்துக்கு, பல குழந்தைங்க எங்களை மறக்காம காலையிலயிருந்தே அடுத்தடுத்து ஒவ்வொருவரா போன் பண்ணி டீச்சர்ஸ் டே வாழ்த்து சொல்லிக்கிட்டே இருந்தாங்க. இந்தக் கொரோனா காலம் கொடுத்துக்கிட்டு வர்ற சோர்வுக்கு நடுவுல, என் பசங்க குரலைக் கேட்டது அவ்ளோ புத்துணர்வா, சந்தோஷமா இருக்கு!" - நெகிழ்கிறார் டீச்சர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு