நம்மில் பலரும் கணிதம் என்றாலே ஒருவித பயம் இருக்கத்தான் செய்கிறது. அதை போக்கும் விதமாக புதிய முன்னெடுப்பை எடுத்துள்ளது சென்னை ஐ.ஐ.டி. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கணிதத் திறனை மேம்படுத்தவும், அவர்கள் எந்தவொரு விஷயத்தையும் பரந்து சிந்தித்து அணுக ( அவுட் ஆப் பாக்ஸ் ) உதவும் வகையிலும் இணையதள வழியாக புதிய பயிற்சித் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறது.
இந்த பயிற்சித் திட்டத்தில் சேர விரும்புவோர் ஜூன் 6 -ம் தேதியிலிருந்து 24-ம் தேதி வரை https://www.pravartak.org.in/out-of-box-thinking.html என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். ஜூலை 1-ம் தேதியில் இருந்து ஆன்லைன் வகுப்புகள் ஆரம்பித்துவிடும். இதற்கு விண்ணப்பிக்கக் கட்டணம் எதுவும் கிடையாது. பயிற்சி முடிந்து தேர்வின்போது மட்டும் ஒரு சிறு தொகை சான்றிதழுக்காக வசூலிக்கப்படும். இறுதித் தேர்வு குறிப்பிட்ட தேர்வு மையங்களில் மட்டும் நடத்தப்படும். வெளிநாடுகளில் வாழும் இந்திய மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து ஐஐடி இயக்குநர் காமகோடி கூறுகையில் "இந்தியாவிலேயே இது போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது இதுவே முதல்முறை. இதன் பயன்கள் பின்வரும் காலங்களில் நிச்சயம் தெரியவரும். ஒரு பிரச்னையை அறிவியல் பூர்வமாக அணுகி அதற்குத் தீர்வு காண வைப்பதுதான் இந்தப் பாடத்திட்டத்தின் நோக்கம்.
அனைவருக்கும் 'அவுட் ஆப் பாக்ஸ் திங்கிங்' என்பது வேண்டும்.
இந்தப் பாடத்திட்டத்தில் அதை கணிதம் வாயிலாகச் சொல்லித் தரவிருக்கிறோம் என்றார்.
மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க ஆரியபட்டா கணித அறிவியல் நிறுவனரும் இயக்குநருமான பேராசிரியர் சடகோபன் ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த முப்பது வருடங்களாக இந்தத் துறையில் பணியாற்றி வருபவர் இவர். இது குறித்து அவர் கூறுகையில் " கணிதத்தை வெறும் பாடமாக இல்லாமல், ஆர்வத்துடன் அணுகினால் நிச்சயம் அது மேஜிக் அல்ல லாஜிக்தான் என்பது தெரியவரும். நம் அறிவும் அதற்கேற்றாற்போல் மேம்படும். இன்று டெக்னாலஜிக்கு ஏற்றார்போல் நம் திறனை வளர்த்துக்கொள்ளவதற்குக் கணிதம் அவசியமாகிறது. அதை இப்பாடத்தில் சேர்த்துள்ளார்கள்" என்றார்.