
சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற மாறிவரும் ஊடகத்துறை தொடர்பான கருத்தரங்கத்தின் முதல்நாள் நிகழ்ச்சிகள்!
சென்னை லயோலா கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் துறை சார்பில் ``Changing screens & Emerging Media Paradigms” என்ற தலைப்பில், மாறிவரும் ஊடகத் துறை தொடர்பான கருத்தரங்கம் இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. MEDIA CON'19 என்ற பெயரில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கின் முதலாவது நாளில், ஊடகத்துறையின் பல்வேறு துறை சார்ந்த நட்சத்திரங்கள் கலந்துகொண்டு தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு மேடை ஏறி திரைத்துறையில் தனது விளம்பர யுக்திகள் குறித்துப் பேசினார். தொடக்கத்தில், போஸ்டரில் தொடங்கிய தனது விளம்பரப் பயணம், விமானம் வரை நீண்ட தனது கற்பனைகள் குறித்துப் பேசினார். நடிகர் ரஜினிகாந்த் படத்தை விநியோகம் செய்ததும், பின்னர் ரஜினி படத்தைத் தயாரித்த அனுபவம் குறித்தும் பேசுகையில்,``ரஜினி சூப்பர் ஸ்டார் என்னும் அந்தஸ்தைப் பெறும் முன்னரே அவரது 'பைரவி' படத்துக்கு 35 அடி கட்-அவுட் வைத்து விளம்பரம் செய்தேன். அதில்தான் முதல் முதலாக 'சூப்பர் ஸ்டார்' என அவரது பெயரைக் குறிப்பிட்டேன்.
அதன் பின்னர், 1985-ல் விரைவில் ரஜினி படத்தைத் தயாரிக்கப் போகிறேன் என அறிவித்தபோது, பலரும் ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். அப்போது ஒரு பத்திரிகையாளர் என்னிடம், ரஜினிக்கு அப்பவே பெரிய பெரிய கட்-அவுட் எல்லாம் வச்சிட்டீங்க. அவர வச்சி தயாரிக்கப்போற படத்துக்கு எப்படி விளம்பரம் செய்வீங்கன்னு கேன்டார். அப்போ நான் சொன்னேன், நான் ரஜினியை வச்சி பண்ணும் படத்துக்கு வானத்துல விளம்பரம் பண்ணுவேன்னு. ரஜினிக்காக 'கபாலி' பண்ற வாய்ப்பு கிடைச்சதும் அதை செய்துகாட்டினேன். படத்துக்கு விமானத்துல விளம்பரம் செய்தேன்” என்று தனது அனுபவங்களைப் பகிர்ந்தார்.

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பேசும்போது, ``ஒளிப்பதிவில் பின்பற்றப்பட்டுவரும் இலக்கணங்களை மீறி, நான் சில காட்சிகளை எடுப்பதாக என்னிடம் கேள்வி கேட்கிறார்கள். இலக்கணத்தை மீறி செயல்படலாம். அனால், அதற்கு முதலில் இலக்கணம் தெரிந்திருக்க வேண்டும். தெரிந்துவிட்டு மீறுங்கள். அது விதி மீறல் ஆகாது, புதிய இலக்கணங்கள் படைப்பதாகும். இப்படி முயற்சி பண்ணுபோது, வெற்றி தோல்வி என இரண்டும் நடக்கும். அதைப் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
அதன்பின்னர், புகைப்படக் கலை தொடர்பாகப் பேசிய திரைப்பட புகைப்படக் கலைஞர் ஜி. வெங்கட்ராம், ``புகைப்படம் என்பது அனைவராலும் எடுக்க முடியும். எடுக்கத் தெரியாது என யாரும் சொல்ல மாட்டார்கள். ஆனால், அதை விருப்பத்தோடு செய்ய வேண்டும். புகைப்படக் கலையும் சமையல் செய்வதும் ஒன்று. பக்குவமாகச் செய்ய வேண்டும். அம்மா சமைக்கும்போது உப்பு, காரம் முதலியவைற்றை அளந்து அளந்து போடமாட்டார்கள். ஆனால், எல்லாம் சரியான அளவில் இருக்கும். அப்பாவின் சர்க்கரை நோயும், குழந்தைக்குப் பிடித்த அளவும், முதிவர்களின் ரத்த அழுத்தம் என எல்லாம் அவர்கள் சமைக்கும் போது மனத்தில் இருக்கும். புகைப்படக் கலையும் அப்படித்தான். மகிழ்ச்சியாக உணர்ந்து செய்தால், லைட்டிங், மற்ற நம்பர்கள் எல்லாம் தேவையில்லை. புகைப்படம் எடுக்கும் சூழல் ஏதுவாக இருந்தால், தானாகவே எல்லாம் சரியாக நடக்கும்” என்றார்.
தொலைக்காட்சி ஊடகங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாற்றங்கள் தொடர்பாகப் பல்வேறு தொலைக்காட்சி ஊடகங்களைச் சேர்ந்த முக்கிய வல்லுநர்கள், தங்களின் கருத்துகளை முன்வைத்தனர்.

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன், பாலிவுட் இயக்குநர் பால்கி ஆகியோர் மாணவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்கள். அப்போது ஒரு மாணவர், 'ஷமிதாப்' படத்தில் தனுஷை தேர்ந்தெடுக்க என்ன காரணம்? எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த பால்கி, ``தனுஷ் சிறந்த நடிகர் என்பதுதான் காரணம். தனுஷ் தான் எனது முதலாவது சாய்ஸாகவும் இருந்தார். காரணம், அமிதாப்பின் குரலுக்கு ஏற்ற நடிப்பை வெளிபடுத்த வேண்டும். அது, தனுஷால் முடியும். மீண்டும் அவரின் திறமைக்கு தீனிபோடும் விதமாக ஸ்கிரிப்ட் அமைந்தால்,ப் நிச்சயம் படம் செய்வேன்” என்றார்.
தொடர்ந்து விகடனின் சில கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
தற்போது பயோபிக் காலம் என்று சொல்லும் அளவுக்கு தொடர்ச்சியாகப் பலரின் வாழ்க்கை படமாக வருகிறது. அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பயோபிக் எனக்குப் பிடிக்காது. இன்று எல்லோருடைய வாழ்க்கையும் பயோபிக்காக வருகிறது. எனினும், நான் ஒரு பயோபிக்கைத் தயாரித்தேன். அதற்குக் காரணம், அது ஒரு எளிய மனிதனின் கதை. மேலும், சானிட்டரி நாப்கின் குறித்த கதைகள் உலக அளவில் பெரிதாக வராத காரணத்தால், அதை நான் எடுத்தேன். என்னைப் பொறுத்தவரை திரையுலகம் தங்களின் ஒருஜினல் படைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டிய கட்டம் வந்துவிட்டது. தொடர்ந்து போர் அடித்துக்கொண்டிருக்க முடியாது. நாம் நமது சொந்தக் கதைகள்மூலம் என்டர்டெயின் பண்ண வேண்டும்.

பயோபிக் ஆக்கிரமிக்கத் தொடங்கிய பின்னர், ஒருவரின் வாழ்கையை டாக்குமெண்டரியாக எடுக்கும் முயற்சிகள் குறைந்துவிட்டதா?
பயோபிக் என்பது சினிமா. அதில் நிச்சயம் என்டர்டெயின் பண்ற விஷயம் இருக்க வேண்டும். அதற்காக, உண்மைகளுடன் சில கற்பனைக் காட்சிகளையும் சேர்க்க வேண்டும். ஆனால், டாக்குமெண்டரியாக எடுக்க வேண்டும் என்றால், அதில் உண்மை மட்டுமே இருக்க வேண்டும்.
ரசிகர்களின் ரசனை என்பது மாறிகொண்டேவருகிறது. அப்படி இருக்கும்போது, வரும் கால ரசிகர்களுக்காக எப்படி ஸ்கிரிப்ட் தயார் செய்கிறீர்கள்?
நம்முடைய ஸ்கிரிப்ட் ஒரிஜினலாக இருக்க வேண்டும். ரசிகர்களுக்கு ஆச்சர்யங்கள் தர வேண்டும். இதுதான் முக்கியம். இன்று எல்லோரும் உலக சினிமாக்களைப் பார்க்கிறார்கள். அதனால், அதுபோன்ற காட்சிகளை எடுத்து ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்ய முடியாது. அவர்களை சர்ப்ரைஸ் செய்ய வேண்டுமென்றால், ஒரிஜினல் ஸ்கிரிப்ட் ஆக இருக்க வேண்டும்.
எப்போது தமிழில் படம் செய்யப்போகிறீர்கள்?
நல்ல கதை அமைந்தால் விரைவில் நடக்கலாம். தமிழில் நல்ல படங்கள் வருகின்றன. நல்ல கதைகள் அமைந்தால் நிச்சயம் செய்வேன்.

தொடர்ந்து டிஜிட்டல் மார்க்கெட்டிங், யூ டியூப், ஊடகங்களில் இருக்கும் வாய்ப்புகள் குறித்து துறை சார்ந்த வல்லுநர்கள் தங்களின் கருத்துகளைத் தெரிவித்தனர். நாளை அக்டோபர் 1 -ம் தேதி நடக்கும் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.