Published:Updated:

உழவில்லா விவசாயம் டு சுவரில்லா கல்வி - குழந்தைகளுக்காக ஓடும் காக்கா கார்த்திக், இசைப்பிரகாஷ்!

இசைப்பிரகாஷ்

"ஆதிதிராவிடர் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்குப் பயிற்சி வகுப்பு எடுக்கும்போது குழந்தைகள், ‘அண்ணா நீங்க எங்களைத் தொடுவீங்களா’ என்ற வார்த்தைகள் என் மனதை பாதித்தது." - கார்த்திக்

உழவில்லா விவசாயம் டு சுவரில்லா கல்வி - குழந்தைகளுக்காக ஓடும் காக்கா கார்த்திக், இசைப்பிரகாஷ்!

"ஆதிதிராவிடர் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்குப் பயிற்சி வகுப்பு எடுக்கும்போது குழந்தைகள், ‘அண்ணா நீங்க எங்களைத் தொடுவீங்களா’ என்ற வார்த்தைகள் என் மனதை பாதித்தது." - கார்த்திக்

Published:Updated:
இசைப்பிரகாஷ்

இன்றைய காலங்களில் பெரும்பாலான குழந்தைகள் ஒரு முழு நாளை தொலைபேசியிலும், தொலைக்காட்சியிலுமே செலவிடுகின்றனர். வெயிலிலும் மழையிலும் விளையாடிய பொன்னான நேரங்களை இந்தத் தலைமுறை இழந்துவிட்டது. அலைபேசியிலேயே விளையாடி, படம் பார்த்து பல சுவாரஸ்யமான அனுபவங்களை நம் குழந்தைகள் இழந்துவிட்டனர். அவர்களை அலைபேசியில்லாமல் விளையாடுவதற்கு, சிரிப்பதற்கு, கூச்சலிடுவதற்கு ஒருங்கிணைக்க வேண்டிய தேவை அதிகமாகவே உள்ளது. குழந்தைகளுக்கான உலகத்தில் அவர்களுடன் பல தன்னார்வலர்கள் அமைப்பாகவும், தனியாகவும் செயல்பட்டு வருகின்றனர். குழந்தைகளுடன் குழந்தைகளாக வேலை செய்பவர்கள் காக்கா கார்த்திக், இசைப்பிரகாஷ். இவர்கள் இருவரும் குழந்தைகளுக்கான பொம்மலாட்டம், விரல் பொம்மைகள் செய்யும் பயிற்சி, கதைக்களம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

குழந்தைகளுடன் காக்கா கார்த்திக், இசைப்பிரகாஷ்
குழந்தைகளுடன் காக்கா கார்த்திக், இசைப்பிரகாஷ்

குறிப்பாக அரசுப் பள்ளிகள், ஆதிதிராவிடர் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர். இந்தப் பயணத்தின் அனுபவங்கள் குறித்து கார்த்திக் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“எனக்குச் சொந்த ஊர் தூத்துக்குடி. நான் 2012-ம் ஆண்டுவரை தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனைப் பிரிவில் வேலை பார்த்துவந்தேன். அப்போது நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து மரம் நடுவது, ஏரிகளைச் சுத்தம் செய்வது போன்ற வேலைகளைச் செய்துவந்தோம். நம்மாழ்வாரின் பேட்டி ஒன்றைத் தற்செயலாக தொலைக்காட்சியில் காண நேர்ந்தது. அவரது செயல்களால் ஈர்க்கப்பட்டு நம்மாழ்வாரின் உரைகளை ஆவணப்படுத்த வேண்டும் என்று நண்பர்களுடன் திட்டமிட்டிருந்தோம். ஆனால் அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் முன் அவர் இறந்துவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன் பிறகு அவருடன் பயணித்த நண்பர்களுடன் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்” என்ற கார்த்திக், தன் கல்வி முன்னெடுப்புகள் குறித்து பேசத் தொடங்கினார்.

“நம்மாழ்வாரின் செயல்பாடுகள், உழவில்லா உணவு, சுவரில்லா கல்வி, மருந்தில்லா உணவு நோக்கியே இருந்தன. உழவில்லா விவசாயம் செய்யலாம் என்ற எண்ணம் தோன்றும் போதுதான் அதை நிலத்திற்கு அருகிலேயே வாழ்ந்தால் மட்டுமே செழிப்புடன் செய்ய முடியுமென்று உணர்ந்தேன். ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் என் வாழ்வில் இல்லை. அதனால் சுவரில்லா கல்வி சார்ந்து வேலை செய்யலாம் என்று பயணத்தைத் தொடங்கினேன். முதன்முதலில் பெருங்குடியில் உள்ள தொடக்கப் பள்ளியில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தேன். அப்போதுதான் தோழன் இசைப்பிரகாஷை சந்தித்தேன். இசைப்பிரகாஷ் லயோலா கல்லூரிகளில் சிறப்பு வகுப்புகள் எடுத்துவந்தார். சமூகம் சார்ந்து இயங்குவதில் விருப்பம் ஏற்பட்டதால் அந்த வேலையை விட்டுவிட்டு பள்ளி, பள்ளியாக அவரது பயணம் தொடங்கியது" என்று தன் நண்பரைச் சந்தித்த கதையைப் பகிர்ந்தார்.

காக்கா கார்த்திக்
காக்கா கார்த்திக்

“நாங்கள் வாடகை வீடு எடுத்து அங்கு குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள் ஒருங்கிணைத்தோம். அதற்கு ‘ஓப்பன் ஹவுஸ்’ என்று பெயர் வைத்தோம். ஓப்பன் ஹவுஸ் நிகழ்ச்சிகள் மட்டுமில்லாமல் ஆங்காங்கே பள்ளி, கல்லூரிகளில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தோம். பயணம் தொடங்கிய காலத்தில் பெட்ரொலுக்குக் கூட யாரையாவது எதிர்பார்க்க வேண்டியிருந்தது. வேலைக்குச் செல்லும் நண்பர்களிடம் பெட்ரோலுக்கு மட்டும் தினமும் காசு வாங்கி பள்ளிகளுக்குச் செல்வோம். தற்போதைய நிலை பரவாயில்லை. மாதச் செலவுக்கு தேவையான வருமானத்தைப் பள்ளி நிகழ்ச்சிகள் மூலம் ஈட்ட முடிகிறது" என்கிறார் இசைப்பிரகாஷ்.

“குழந்தைகளுடன் பயணிப்பது பல அனுபவங்களைத் தந்தது. குறிப்பாக ஆதிதிராவிடர் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்குப் பயிற்சி வகுப்பு எடுக்கும்போது குழந்தைகள், ‘அண்ணா நீங்க எங்களைத் தொடுவீங்களா’ என்ற வார்த்தைகள் என் மனதை பாதித்தது. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்குக் கிடைக்கும் வசதிகள் கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் கிடைப்பதில்லை. தனியார் பள்ளியில் உள்ள மாணவர்களிடம் விதவிதமான கிரயான்ஸ், கலர் பென்சில், எழுதுப்பொருள்கள் எல்லாம் இருக்கும். ஆனால் அரசுப் பள்ளியில் படிக்கும் கூலித் தொழிலாளர்கள் வீட்டுக் குழந்தைகள் எல்லாவற்றிற்கும் ஏங்கும் நிலைமையே இங்கு உள்ளது. அதனால்தான் நானும் இசையும் அரசுப் பள்ளிகளில் அதிக கவனம் செலுத்துகிறோம்” என்றார் கார்த்திக்.

கார்த்திக், இசைப்பிரகாஷின் பயணம் இன்னமும் நீண்டு பெருவெற்றிகளைப் பெறட்டும்!