Published:Updated:

ஆன்லைன் கல்வி... சிறப்புக் குழந்தைகள் சந்திக்கும் சவால்கள்!

சிறப்புக் குழந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறப்புக் குழந்தை

பெற்றோர், ஆசிரியர்கள் கவனத்துக்கு...

சாதாரண பிள்ளைகளுக்கே சவாலாக மாறியிருக்கும் ஆன்லைன் கல்வி, மாற்றுத் திறனுள்ள குழந்தைகள், கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்குப் பெரும் சிக்கலாக மாறி யிருக்கிறது. சிறப்புக் குழந்தைகள், ஆன்லைன் கல்வியில் எதிர்நோக்கும் சிக்கல்கள், இவர் களுக்கான ஆன்லைன் வகுப்பில் பெற்றோரின் பங்களிப்பு குறித்துப் பேசுகிறார், சென்னை, பழைய வண்ணாரப் பேட்டையிலுள்ள

‘த ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு’ சிறப்புப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்தான லட்சுமி.

“சிறப்புக் குழந்தைகளின் பாதிப்புகளுக்கு ஏற்ப தனித்தனி பாடத்திட்டம் உண்டு. இவர்களின் புரிந்துகொள்ளும் தன்மைக்கு ஏற்ப பாடங்களைச் சொல்லிக் கொடுப்போம். இதனுடன், பேசுவதற்கு, பழகுவதற்கு, தனக் கான தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு, தன்னைச் சுற்றி நடப்பதைப் புரிந்துகொள்வதற்கு என ஒவ்வொரு தேவைக்கும் பயிற்சிகளும் தெரபிகளும் கொடுக்கப்படுவது வழக்கம்.

 சந்தான லட்சுமி
சந்தான லட்சுமி

சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைக்கு பிறந்த மூன்றாவது மாதத்தில் இருந்தே பயிற்சிகள், தெரபிகள் கொடுக்கத் தொடங்குவோம். அந்தக் குழந்தை, ஓரிடத்தில் குறிப்பிட்ட நேரம் உட்கார்ந்து, எதிரிலுள்ள ஆசிரியர் சொல்வதைக் கவனிக்கவும், தன்னைச் சுற்றி நடப்பதை உணரும் பக்குவத்துக்கும்

வந்த பிறகே, பாடம் சொல்லிக் கொடுக்க ஆரம்பிப்போம். இதுபோன்ற சிறப்புக் குழந்தை களுக்கு ஆன்லைன் முறையில் கல்வி கற்பிப்பது சற்று சிரமமானது என்பதால், கூடுதல் கவனம் அவசியம்” என்பவர், இதற்கான பயனுள்ள ஆலோசனைகளையும் கூறுகிறார்.

சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் எல்லோரிடமும் ஆண்ட்ராய்டு போன் இருக்காது. அவர்கள், தங்களின் உறவினர்கள், நண்பர்களிடம் உரிய நேரத்தில் செல்போன் வாங்கியாவது வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும். போன் வைத்திருக்கும் பெற்றோர், பகல் நேரத்தில் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படலாம். இதுபோன்ற காரணங்களை ஆசிரியரிடம் முன்கூட்டியே தெரிவித்து, இருவருக்கும் பொதுவான நேரத்தில், வகுப்பு நடப்பதை உறுதிப்படுத்தலாம்.

ஓர் ஆசிரியர் ஒரு சிறப்புக் குழந்தைக்கு மட்டுமே தனிக்கவனம் கொடுத்து பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒருநாளில் சராசரியாக 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை, வாரத்துக்கு மூன்று நாள்களுக் காவது சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அந்த நேரத்தில் குழந்தைகள் பாடங்களைப் புரிந்துகொண்டதை உறுதி செய்யவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவர் உடன் இருந்து, எல்லா நிகழ்வுகளையும் கவனிக்க வேண்டும். அந்த வகுப்பு நேரம் முடிந்ததும், அன்றைய ஆன்லைன் வகுப்பு எப்படி அமைந்தது என ஆசிரியரிடம் பெற்றோர் விவாதிக்க வேண்டும்.

ஆன்லைன் கல்வி... சிறப்புக் குழந்தைகள் சந்திக்கும் சவால்கள்!
Phynart Studio

நேரடி வகுப்புமுறையைக் காட்டிலும், ஆன்லைன் வகுப்பில் சிறப்புக் குழந்தைகளுக்குப் பாடங்களைப் புரிந்துகொள்ளும் திறன் குறைவாக இருக்கக் கூடும். அதனால், ஒவ்வொரு பாடமும் குழந்தைக்குப் புரிந்ததா என்பதை அறிந்த பிறகு, அடுத்த பாடத்துக்குச் செல்வது நல்லது.

ஒரு வகுப்புக்கும், அடுத்த வகுப்புக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், முந்தைய வகுப்பில் கற்ற விஷயங்களைப் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. தொடர் பயிற்சி முறைகள்தாம் இதுபோன்ற குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு உதவும் என்பதால், கற்றல் இடைவெளி ஏற்படு வதைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.

சிறப்புப் பள்ளியில் இருப்பதுபோலவே, கல்வி பயிற்றுவிப்பதற்கான உபகரணங்கள் வீட்டில் இருக்காது. எனவே, கொண்டைக் கடலை, பழங்கள், சாக்லேட், டம்ளர் போன்ற ஏதாவதொரு பொருளைப் பயன்படுத்தி, எளிமையான முறையிலும்கூட கற்றல் திறனை ஊக்கப்படுத்தலாம்.

ஆன்லைன் வகுப்பில், வளர்ந்த ஆண் குழந்தைகளுக்கு ஆண் ஆசிரியரும், வளர்ந்த பெண் குழந்தைகளுக்கு பெண் ஆசிரியரும் பாடம் எடுப்பதை முடிந்தவரை உறுதி செய்ய லாம். எந்த ஆசிரியர் பாடம் எடுத்தாலும், குழந்தையிடம் ஆசிரியர் தவறான கண்ணோட்டத்திலோ, கண்டிப்புடனோ நடந்துகொள்கிறாரா என்பதையும் கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை.

ஆன்லைன் வகுப்பு முறை பிடிக்காத, இந்தக் கல்வி முறைக்கான சூழல் அமையாத பெற்றோர்களில் சிலர், ‘பள்ளிகள் திறக்கும் போது குழந்தையை சிறப்புப் பள்ளிக்கு அழைத்து வருகிறேன். தற்போதைக்கு ஆன்லைன் வகுப்பு வேண்டாம்’ என்று சொல்கிறார்கள். இதனால், குழந்தைகளின் கற்றல் திறன் பாதிக்கும். எனவே, எந்தச் சிக்கலாக இருந்தாலும், அதைச் சரிசெய்து ஆன்லைன் வகுப்பைத் தொடர்வதே சிறந்தது.

ஆன்லைன் வகுப்பு நேரத்திலும், மற்ற நேரத்திலும், செல்போன் பயன்பாடுகளைப் பெற்றோரேதான் மேற்கொள்ள வேண்டும். பிள்ளைகள் செல்போன் இயக்குவதை அனுமதிக்கக் கூடாது.

பெற்றோருடன் விவாதித்து, 4 - 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்தக் குழந்தை களுக்கு இலக்கை நிர்ணயித்து சிறப்புப் பள்ளியில் பயிற்சி கொடுப்போம். அதே முறையை, தற்போதைய ஆன்லைன் கல்விமுறை காலகட்டத்திலும் தொடர வேண்டும்.