Published:Updated:

UPSC : சரியான விருப்பப் பாடங்களை தேர்வு செய்வது எப்படி ? |Explainer

UPSC - optional subjects

தங்களுக்கு விருப்பமான பாடத்தைத் தேர்வு செய்வதா அல்லது பெரும்பான்மை மாணவர்கள் எடுக்கும் விருப்பப் பாடத்தைத் தேர்வு செய்வதா, அதில் எது சுலபம், எதில் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்ற யோசனை எழலாம்.

UPSC : சரியான விருப்பப் பாடங்களை தேர்வு செய்வது எப்படி ? |Explainer

தங்களுக்கு விருப்பமான பாடத்தைத் தேர்வு செய்வதா அல்லது பெரும்பான்மை மாணவர்கள் எடுக்கும் விருப்பப் பாடத்தைத் தேர்வு செய்வதா, அதில் எது சுலபம், எதில் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்ற யோசனை எழலாம்.

Published:Updated:
UPSC - optional subjects

கல்வி விகடன் யூடியூப் சேனலுக்காக EASY UPSC என்ற நிகழ்ச்சி மூலம் UPSC தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை வழங்குகிறார் டாக்டர். வைஷ்ணவி சங்கர். இதன் ஒரு பகுதியாக UPSC தேர்வுக்கான விருப்ப பாடங்களை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பகிர்ந்துள்ளார். 

“ UPSC தேர்வில் சுமார் 42 விருப்ப பாடங்கள் மாணவர்களுக்குத் தேர்வு செய்ய  வழங்கப்படுகிறது. இதில் 16 இந்திய மொழி இலக்கியப் பாடங்களும் அடங்கும். இதைத் தவிர்த்து மீதி விருப்ப பாடங்களை கலை & சமூக அறிவியல் (Humanities),  அறிவியல் (Science), மருத்துவம் (Medical Science) மற்றும் பொறியியல் (Engineering) பாடங்கள் என்று வகைப்படுத்தலாம். பொதுவாக UPSC தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு விருப்பப் பாடத்தைத் தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்படும். தான் பட்டப்படிப்பு பெற்ற பாடம் குறித்தான மிகுந்த குழப்பம் இருக்கும். தங்களுக்கு விருப்பமான பாடத்தைத் தேர்வு செய்வதா அல்லது பெரும்பான்மை மாணவர்கள் எடுக்கும் விருப்பப் பாடத்தைத் தேர்வு செய்வதா, அதில் எது சுலபம், எதில் அதிக மதிப்பெண் கிடைக்கும் என்று பல்வேறு வகை குழப்பங்கள் இதில் அடக்கம்.  விருப்பப் பாடம் இரண்டு தாள்களாக எழுதவேண்டி இருப்பதாலும், ஒவ்வொரு தாளும் 250 மதிப்பெண்களைக் கொண்டவையாக இருப்பதாலும், இறுதி மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியலில் இது அதிக முக்கியத்துவம் பெறுகிறது. 

பெரும்பாலான மாணவர்கள் Humanities பாடங்களையே விருப்ப பாடமாகத் தேர்வு செய்கிறார்கள். வரலாறு (History), புவியியல் (Geography), சமூகவியல் (Sociology), அரசியல் அறிவியல் (Political Science), பொது நிர்வாகம் (Public Administration) போன்ற பாடங்கள் ஆகியவை இந்த பிரிவின் கீழ் வரும்.

வேதியியல் (Chemistry) , இயற்பியல் (Physics), கணிதம் (Mathematics), தாவரவியல் (Botany), விலங்கியல் (Zoology) போன்ற பாடங்கள் அறிவியல் விருப்ப பாட பரிவின் கீழ் வரும். இவற்றைத் தவிர்த்து சட்டம் (Law), வர்த்தகம் (Commerce), மேலாண்மை (Management), பொருளாதாரம் (Economics) ஆகிய பாடங்களையும் பெரும்பாலானோர் விருப்ப பாடமாகத் தேர்வு செய்கிறார்கள். ஆனால் பொறியியல் மாணவர்கள் பெரும்பாலானோர் பொறியியல் பாடங்களை விருப்பப் பாடமாகத் தேர்வு செய்வதில்லை. காரணம் பொறியியல் விருப்பப் பாடத்திற்குத் தேவையான பாடக்குறிப்புகளும் அதற்கு தயாராவதற்கான வழிகாட்டுதல்களும் மாணவர்களுக்கு எளிதாகக் கிடைப்பதில்லை. 

வைஷ்ணவி
வைஷ்ணவி

'பட்டப்படிப்பிற்குச் சம்பந்தமற்ற பாடத்தை விருப்பப் பாடமாகத் தேர்வு செய்யலாமா? அப்படிச் செய்தால் வெற்றி பெற முடியுமா?' என்ற கேள்வியும் மாணவர்களிடத்தில் இருக்கும். விருப்ப பாடத்திற்குத் தயாராவதற்கு நான்கிலிருந்து ஆறு மாத கால அவகாசம் தேவைப்படும். அந்த காலத்திற்குள் எந்தப் பாடத்தையும் படித்து விருப்பப் பாடத்திற்கான இரண்டு தாள்களை எழுதும் திறன் பெற்றிடலாம். அதே போல் 'முதுநிலை பட்டப்படிப்பு படித்திருந்தால் தான் தேர்வை அணுகுவது எளிதாக இருக்குமா?' என்ற குழப்பமும் வேண்டாம். எந்த பட்டப்படிப்பைப் படித்திருந்தாலும் விருப்ப பாடத்திற்கு ஆறு மாத காலம் ஆழமான புரிதலோடு படித்தால் எளிதாக எழுதலாம். 

பொது நிர்வாகம், சமூகவியல், சமூக அறிவியல் போன்ற பாடங்களுக்கு நல்ல எழுதும் திறன் இருப்பது அவசியம். கூற வரும் கருத்தைத் தெளிவாக எடுத்துரைப்பது (Communication), சிறப்பாக அதை விடைத் தாளில் விளக்குவது (Presentation) மற்றும் மொழியைக் கையாளுதலில் (Language) சிறந்து விளங்குவதற்கான ஆற்றல் படைத்தவர்கள் இந்தப் பாடங்களை விருப்பப் பாடமாகத் தேர்வு செய்யலாம். கருத்தியல் தெளிவு (Conceptual Clarity) கொண்டவர்கள் அல்லது படிக்கும் விஷயத்தைத் தெளிவாக உள்வாங்குபவர்களாக இருந்தால் புவியியல் போன்ற பாடங்களைத் தேர்வு செய்யலாம். நடந்த நிகழ்வுகளை காலவரிசைப்படிச் சரியாக விளக்க முடியும், ஒப்பிட முடியும் என்பவர்கள் வரலாறு போன்ற பாடங்களை விருப்ப பாடமாகத் தேர்வு செய்யலாம். அறிவியல் பின்னணியிலிருந்து வந்தவர்கள் அல்லது அறிவியல் விருப்ப பாடம் மீது ஆர்வம் கொண்டவர்கள் அதையே தங்கள் விருப்பப் பாடமாகத் தேர்வு செய்யலாம். கணிதம் மீது ஆர்வம் கொண்டவர்கள் கணிதம், பொருளாதாரம், வர்த்தகம் போன்றவற்றைத் தேர்வு செய்யலாம். வெவ்வேறு பாடங்களைப் பட்டப்படிப்பில் பயின்று தமிழ் இலக்கியத்தை விருப்ப படமாக எடுத்து வென்றவர்களும் இருக்கிறார்கள். தமிழ் மீது ஆர்வம் கொண்டவர்கள் தமிழ் இலக்கியத்தையும் தேர்வு செய்யலாம். 

வரலாறு, புவியியல் போன்ற விருப்ப பாடங்கள் ஜெனரல் ஸ்டடீஸ் (General Studies) பாடங்களுடன் ஒத்துப்போவதால் பல சமயங்களில் ஜெனரல் ஸ்டடீஸ் தாள்களைச் சிறப்பாக எழுதவும் இந்த விருப்ப பாடங்கள் உதவும். மானுடவியல் (Anthropology) போன்ற சில விருப்ப பாடங்கள் ஜெனரல் ஸ்டடீஸ் பாடங்களுடன் பெரிதாக ஒத்துப்போகவில்லை என்றாலும், அதை விருப்ப பாடமாகத் தேர்வு செய்த பல மாணவர்கள் ஜெனரல் ஸ்டடீஸ் தாள்களிலும் நிறைய மதிப்பெண்கள் பெற்று நல்ல தரவரிசை பெற்றிருக்கிறார்கள். அதனால் ஜெனரல் ஸ்டடீஸ் பாடங்களுடன் ஒத்துப்போகும் பாடத்தைத் தான்  விருப்ப பாடமாகத் தேர்வு செய்ய வேண்டும் என்று இல்லை. எந்த பாடத்தை விருப்ப பாடமாகத் தேர்வு செய்தாலும் அதற்குத் தயாராவதற்கான கால அளவையும் நல்ல புரிதலுடன் படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். புதிய சட்டத்திருத்தம், பண மதிப்பு போன்ற அன்றாட நிகழ்வுகளைக் கொண்ட அரசியல் அறிவியல், பொருளாதாரம், பொது நிர்வாகம் போன்ற பாடங்கள் தினமும் நடக்கும் புதுப்புது நிகழ்வுகளுடன் தொடர்புப்படுத்திப் படிக்கவேண்டும். அதனால் செய்தித் தாள் வாசிப்புடன் இணைத்து தொடர்புப்படுத்தி இந்த விருப்ப பாடங்களைப் படிக்க வேண்டும். 

கணிதம் போன்ற பாடங்களைத் தேர்வு செய்து எல்லா வினாக்களுக்கும் சரியாக விடையளித்தால் முழு மதிப்பெண்கள் கிடைக்குமா அல்லது இலக்கியம் போன்ற பாடங்களைத் தேர்வு செய்தால் முழு மதிப்பெண்கள் கிடைக்குமா போன்ற சந்தேகங்களும் மாணவர்கள் மத்தியில் இருக்கிறது. UPSC தேர்வில் 15 மதிப்பெண்கள் கொண்ட வினாக்களின் விடைகளுக்கு அதிகபட்சமாக 9 அல்லது 10 மதிப்பெண், அதேபோல் 10 மதிப்பெண்கள் கொண்ட வினாக்களின் விடைகளுக்கு 4 அல்லது 5 மதிப்பெண் என்று வகையில் வழங்கப்படுகிறது. மதிப்பெண்கள் வழங்கும் முறை எல்லா பாடங்களுக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். 

ஒரு பாடத்தை விருப்ப பாடமாகத் தேர்வு செய்வதற்கு முன்பு, UPSC வலைத்தளத்தில் அந்த விருப்ப பாடத்திற்கென கொடுக்கப்பட்டுள்ள பாடத்திட்டத்தை (Syllabus) படித்துப் பார்ப்பது மிக அவசியம். அதைப் படித்து பார்த்தால் மட்டுமே அப்பாடத்தைப் பற்றித் தெரிந்துகொண்டு அதைக்  கையாள முடியுமா என்று முடிவுசெய்யலாம். அந்த குறிப்பிட்ட விருப்ப பாடத்திற்கான கடந்த ஆண்டுகளின் வினாத் தாள்களையும் பார்க்க வேண்டும். அதில் இருக்கும் வினாக்களுக்கு விடை எழுதி நம்மை சுயமதிப்பீடு செய்யலாம் அல்லது ஆசிரியர்களிடம் சரிபார்க்கச் சொல்லலாம். இதனால் அந்த பாடம் நமக்கு எவ்வளவு தூரம் பரிட்சியமாகியிருக்கிறது, இன்னும் எவ்வளவு படிக்க வேண்டும், குறிப்பிட்ட பாடம் எடுத்தால் படிக்க முடியுமா என்று நம்மை நாமே மதிப்பீடு செய்து கொள்ளமுடியும்.”  இவ்வாறு கூறினார் அவர்.