தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் அறிவுதிறனை வளர்க்கும் வகையில் சென்னையில் உள்ள 5 பள்ளிகளில் மெய்நிகர் காணொளி (Meta -Verse) வகுப்பைத் திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்.
வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்களை பள்ளி மாணவர்களிடையே அறிமுகப்படுத்தும் விதமாக ‘மெய்நிகரா’ எனும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தோடு இணைந்து இத்திட்டத்தை பள்ளிக்கல்வி துறை அறிமுகப்படுத்தியிருக்கிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதன் முதற்கட்டமாக சென்னையில் உள்ள சேப்பாக்கத்தில் இரண்டு கார்ப்பரேஷன் பள்ளிகளிலும், மூன்று அரசு பள்ளிகளிலும் 'மெட்டா லேப்' என்று சொல்லப்படும் மெய்நிகர் காணொளி வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மெய்நிகரா நிறுவனத்தின் இயக்குநர் கணேஷ் ராமிடம் பேசுகையில் "மாணவர்களின் கற்பனைத் திறனும், கற்றல் ஆற்றலும் இதன்மூலம் மேம்படும். மேலும் கற்றலும் எளிமையாவதால், மாணவர்களுக்கு கற்றலின்மீது ஆர்வம் அதிகரிக்க இந்த மெட்டா கல்வி வழிவகை செய்யும்” என்று கூறினார்.
மேலும் ‘மெய்நிகரா’வின் நிறுவனர் ரகுமான் கூறுகையில் "தற்போது இந்தக் காணொளியில் கணிதம், அறிவியல் பாடங்கள் ஆங்கிலம், தமிழ் என இருமொழிகளில் சேர்க்கப்பட்டுள்ளன. இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு இரண்டு மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். பின்வரும் காலங்களில் மெய்நிகர் நூலகம் ஒன்றையும் உருவாக்க திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்தார். மேலும் " மாணவர்களுக்கென தனி யூசர் ஐடி, பாஸ்வேர்ட் வழங்கப்பட்டு அதன்மூலம் மாணவர்கள் தங்களின் செயல்திறனை அறிந்துகொள்ள முடியும். அதேபோல ஆசிரியர்களும் மாணவர்களுக்குத் தேர்வு நடத்தவும், அவர்களின் திறனை ஆய்வு செய்யவும் இதில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன " என்றார் அவர்.

இந்த ஆய்வகங்களின் துவக்க விழா 3D காணொளியில் ஆன்லைன் மூலம் மெட்டாவெர்சில் நடந்தது. அவ்விழாவில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் கலந்துகொண்டனர்.