Published:Updated:

திருச்சி - ஊறும் வரலாறு - 14: கற்றவர்கள் தலைவணங்கும் கோயில்... காலத்தால் மூத்த திருச்சி கல்லூரிகள்!

திருச்சி கல்லூரிகள்

திரும்பும் திசையெல்லாம் கல்லூரிகளால் நிறைந்த ஊர் திருச்சி. இன்று பல தனியார் சுயநிதிக் கல்லூரிகளும் சிறப்பாக இயங்குகின்றன. பழைய கல்லூரிகள் திருச்சிக்கு வந்த கதை சுவையானது.

திருச்சி - ஊறும் வரலாறு - 14: கற்றவர்கள் தலைவணங்கும் கோயில்... காலத்தால் மூத்த திருச்சி கல்லூரிகள்!

திரும்பும் திசையெல்லாம் கல்லூரிகளால் நிறைந்த ஊர் திருச்சி. இன்று பல தனியார் சுயநிதிக் கல்லூரிகளும் சிறப்பாக இயங்குகின்றன. பழைய கல்லூரிகள் திருச்சிக்கு வந்த கதை சுவையானது.

Published:Updated:
திருச்சி கல்லூரிகள்
கண்ணதாசனின் தமிழ் விரலில் சொட்டிய பாடல்வரி இது. மருமகளான மணமகளை வரவேற்ற சாரதா படப் பாடலில், “கல்வி மகள் வாசம் செய்யும் கோயில் எங்கள் வாசல்” என்று ஒரு வரி வரும். இது கல்வி மகள் வாசம் செய்யும் திருச்சிக்கும் பொருந்தும். ஒருகாலத்தில் கல்வியின் கூடாரமாக (HUB) திருச்சி இருந்தது. டாக்டர் ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமன், அப்துல் கலாம் மூவரும் இந்தியாவின் குடியரசுத்தலைவர்கள். இவர்களைப் பெற்ற ஊர் அல்ல திருச்சி. ஆனால் இவர்களை தந்த ஊர் திருச்சிதான். கல்லூரிகளால் திருச்சி அடைந்த பெருமை இது. இந்தக் கல்வி வளர்ச்சி ஒருநாளில் வந்ததல்ல. திருச்சியின் வரலாற்றில் கல்லூரிகளின் வரவை நவீன உலகோடு இளம் இந்தியாவை இணைத்த பெருமையாக பார்க்க வேண்டும்.

காலத்தால் மூத்த திருச்சி கல்லூரிகளை கால வரிசைப்படி பார்க்கலாம்...

  1. பிஷப் ஹீபர் கல்லூரி - 1873

  2. தூய வளனார் கல்லூரி - 1883

  3. தேசியக்கல்லூரி - 1919-20

  4. புனித சிலுவைக்கல்லூரி - 1923-24

  5. ஜமால் முகமது கல்லூரி - 1951-52

  6. சீதாலெட்சுமி ராமசாமி கல்லூரி - 1951-52

  7. பெரியார் ஈ.வே,ரா. கல்லூரி - 1965-66

  8. உருமு தனலெட்சுமி கல்லூரி - 1970-71

திரும்பும் திசையெல்லாம் கல்லூரிகளால் நிறைந்த ஊர் திருச்சி. இன்று பல தனியார் சுயநிதிக் கல்லூரிகளும் சிறப்பாக இயங்குகின்றன. பழைய கல்லூரிகள் திருச்சிக்கு வந்த கதை சுவையானது. இன்று பலரும் தாங்கள் படித்த கல்லூரிகளோடு தங்களை அடையாளப்படுத்திக்கொள்வதை பார்க்க முடிகிறது. எல்லா கல்லூரிகளிலும் முன்னாள் மாணவர் சங்கங்கள் (ALUMNI) களைகட்டுகின்றன. நட்பு புதுப்பிக்கப்படுகிறது. எல்லார் வாழ்விலும் ஒரு '96' உண்டுபோலும்.

திருச்சிக்கு வந்த முதல் கல்லூரி - பிஷப் ஹீபர் கல்லூரி

இன்று 13500 மாணவர்கள் படிக்கும் கல்லூரியாக வளர்ந்துள்ள பிஷப் கல்லூரி, சுவார்ட்ஸ் பாதிரியாரால் 1762 ல் எஸ்.பி.சி.கே மிஷன் மூலம் ஒரு பள்ளியாகவே தொடங்கப்பட்டது. நாகப்பட்டினத்தில் இயங்கிய இப்பள்ளி, அடிக்கடிவந்த புயலால் திருச்சிக்கு மாற்றப்பட்டது. இதுவே பிறகு எஸ்.பி.ஜி பள்ளியாக மாறியது. 1826 ஆம் ஆண்டு வந்த பேராயர் ரெஜினால்டு ஹீபர் பள்ளியை வளர்த்தார். எதிர்பாராதவிதமாக நீதிமன்ற வளாகத்திலுள்ள குளத்தில் குளிக்கும்போது இறந்தார். இவரின் நினைவாய் பெரும் நிதி திரட்டப்பட்டு பள்ளி வளர்ந்து, 1864-ல் தெப்பக்குளத்துக்கு அருகில் இன்றுள்ள இடத்துக்கு மாறியது.

இதேபோன்று எஸ்.பி.ஜி பள்ளி புத்தூரில் 1870ல் தொடங்கியது. இதன் தொடர்ச்சியே 1873-ல் ஆரம்பித்த எஸ்.பி.ஜி கல்லூரி. பிறகு 1882-ல் முதல் நிலைக்கல்லூரியாக உயர்ந்தது. 1925-ல் பிஷப் ஹீபர் மறைந்த நூற்றாண்டின் நினைவாய் இக்கல்லூரி 'பிஷப் ஹீபர் கல்லூரி' ஆனது. புகழ்பெற்ற CSI இதை நடத்துகிறது. இந்தத் திருச்சி கல்லூரி 1934-ல் சென்னை கிறித்தவ கல்லூரியோடு சேர்க்கப்பட்டது. கி.ஆ.பெ.விஸ்வநாதம் போன்றோரின் துணையோடு ஆயர் சாலமன் துரைசாமி அவர்களின் பெருமுயற்சியால் 1966-ல் மீண்டும் திருச்சிக்கு வந்தது.

வயலூர் சாலையில் இன்றுள்ள இடத்துக்கு 1968-ல் கல்லூரி வந்தது. புதிய கட்டடங்களின் எழில் மிகுந்த தோற்றத்தால் BEAUTY BISHOP ஆனது. 2001-ல் 5 STARS தகுதியை NAAC வழங்கியது. 2007ல் A+ தரத்துக்கு உயர்ந்தது. 2011ல் EXCELLENCE நிலையை UGC வழங்கியது. இக்கல்லூரியின் 'Library and Information Science' தனித்துவமானது. பேராயர் த.சந்திரசேகரன் தலைவராகவும் பேரா.த.பால் தயாபரன் முதல்வராகவும் கல்லூரியை வழி நடத்துகிறார்கள்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, திரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற பலரை உருவாக்கிய கல்லூரி இது. தமிழ் அறிஞர் பாவாணர், நா.மு.வேங்கடசாமி நாட்டார், சமஸ்கிருத பண்டிதர் பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி, மொழிபெயர்ப்புக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற பூரணசந்திரன் போன்ற பலரும் பணி செய்த கல்லூரி இது.

புகழ் பூத்த புனித வளனார் கல்லூரி

நாகையில் பிறந்து திருச்சியில் குடிபுகுந்த கல்லூரிதான் இதுவும். உலகின் எந்த மூலையில் தமிழர்களைச் சந்தித்தாலும் அதில் ஒருவராவது ஜோஸப்பில் படித்தவராக இருப்பார். கோனார் படிக்காமல் யாரும் தமிழைத் தாண்டியிருக்க முடியாது. அந்த ஐயம்பெருமாள் கோனார் இங்குதான் பணி செய்தார். அய்யா கலாம் படித்தது எல்லோருக்கும் தெரியும். தினத்தந்தியின் ஸ்தாபகர் சி.பா.ஆதித்தனார், எழுத்தாளர் சுஜாதா, Frontline விஜயசங்கர், தேர்தல் ஆணையர் கோபால்சாமி போன்ற பலரும் இங்குதான் படித்தார்கள். சரித்திர நாவல்களின் வரலாற்றை யார் எழுதினாலும் சாண்டில்யன் பெயர் நிச்சயம் வரும். அவரும் இங்குதான் படித்தார். பேச்சில் உச்சம்தொட்ட அண்ணா பேசவிரும்பிய லாலி ஹால் இங்குதான் உள்ளது. 1905-ல் இது கட்டப்பட்டது. இப்படி நிறைய சொல்லலாம்.

புகழ் பூத்த புனித வளனார் கல்லூரி | St. Joseph's College
புகழ் பூத்த புனித வளனார் கல்லூரி | St. Joseph's College
DIXITH

ஜோசப் பள்ளி - கல்லூரி இரண்டும் 1883 ஜனவரி 18-ல் திருச்சியின் கிளைவ் இல்லத்தில் இயங்க ஆரம்பித்தன. அப்போதே தென்னிந்தியாவின் முதல் விடுதியான கிளைவ் ஹாஸ்டலும் செயல்பட்டது. 1887-ல் பள்ளியும் கல்லூரியும் தனித்தனி தலைமையில் இயங்கத்தொடங்கின. அருட்தந்தை ஸ்வெல் கடின முயற்சியால் இப்போதுள்ள இடத்துக்குப் பள்ளியும் கல்லூரியும் வந்துசேர்ந்தன.

இக்கல்லூரியின் சிறப்புகளில் ஒன்றான 'டிஜிட்டல் நூலகத்தில்' 1,72,002 புத்தகங்கள் உள்ளன. அதுபோலவே, இங்குள்ள 'நியூட்டன் மியூசியம்' 1885 ஆம் ஆண்டே தொடங்கப்பட்ட ஒன்றாகும். 2.5 லட்சம் பதப்படுத்தப்பட்ட தாவரங்களைக்கொண்ட ராபினாட் ஹெர்பேரியம் முக்கியமானது. 5 நட்சத்திர தகுதியை பெற்ற கல்லூரி இது. 2019 ஆம் ஆண்டு இக்கல்லூரி தனது 175வது பிறந்தநாளைக் கொண்டாடியது. இப்போது 7000 மாணவர்கள் படித்துவருகிறார்கள்.

அதிபர் அருள்திரு முனைவர் லியோனார்டு, செயலர் அருள்திரு முனைவர் எஸ்.பீட்டர், முதல்வர் அருள்திரு முனைவர் எம்.ஆரோக்கியசாமி சேவியர் ஆகியோர் தலைமையில் கல்லூரி வளர்கிறது.

புகழ் பூத்த புனித வளனார் கல்லூரி | St. Joseph's College
புகழ் பூத்த புனித வளனார் கல்லூரி | St. Joseph's College
DIXITH

இக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள புனித லூர்து அன்னை பேராலயம் பேரழகானது. 1890-ல் தொடங்கிய ஆலயப்பணி 1895-ல் நிறைவடைந்தது. இதன் கோபுரம் 205 அடி உயரமுடையது. இதன் உச்சியில் 78 கிலோ எடையில் 8 அடி உயரமுடைய சிலுவை உயர்ந்து நிற்கிறது. கோத்திக் கட்டடக்கலையின் சிறந்த உதாரணமாக இந்த ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் முழுமுதல் சிற்பி தனம் சவரிமுத்து மேஸ்திரி என்னும் கன்னியாகுமரித் தமிழர்தான். இவரின் பணிக்கு நன்றி செலுத்தும் விதமாக, துறவியர் மட்டுமே அடக்கம் செய்யப்படும் கோயிலின் கீழுள்ள கல்லறையில் மேஸ்திரியும் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தேசப்பிதா வந்த தேசியக் கல்லூரி

சுதந்திரப் போராட்ட காலத்தில் 'தேசியம்' என்ற சொல்லோடு இரண்டு கல்வி நிறுவனங்களே இந்தியாவில் இயங்கின. அவற்றில் ஒன்று திருச்சியில் உள்ள தேசியக் கல்லூரி-தேசியப் பள்ளியாகும். தேசப்பிதா காந்தி 1927,1934 ஆம் ஆண்டுகளில் இக்கல்லூரியின் ஒரு மரத்தடியில் அமர்ந்து பேசியதும், பேரா.சாரநாதன் மாணவர்கள் சார்பாக நிதியளித்ததும் மறக்க முடியாதவை. அந்த காந்தி நிழல்தான் இன்றும் ஒற்றுமையை வளர்க்கிறது.

சேஷ ஐயங்கார், சுந்தரேச சாஸ்திரிகள், வேங்கடரமண சர்மா ஆகியோர் 1886-ல் ஆரம்பித்த தேசிய உயர்நிலைப் பள்ளியே பின்னாட்களில் தேசியக் கல்லூரி வரவும் காரணமானது. பெத்தாச்சி செட்டியார், நீதிபதி சேஷகிரி ஐயர், தேசிகாச்சாரியார் போன்றோரால் ஜூன் 1919-ல் தேசியக் கல்லூரி தொடங்கப்பட்டது. 1924-ல் முதல்நிலைக் கல்லூரியாக அங்கீகாரம் பெற்றது. 1921 முதல் 1947 வரையான 26 ஆண்டுகள் கல்லூரியின் முதல்வராக பேரா.சாரநாதனின் பணி முக்கியமானது. திண்டுக்கல் சாலையிலுள்ள கருமண்டபம் பகுதியில் 1959, ஜூலை 8 முதல் தேசியக் கல்லூரி இயங்கத் தொடங்கியது. மொத்தம் 4600 மாணவர்கள் படித்துவருகிறார்கள். 2016 ல் A+ தகுதியை பெற்ற இக்கல்லூரி 2011-ல் Excellence தகுதியையும் அடைந்தது. கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள சற்குணேஷ்வரர் வேதபாடசாலையில் 15 சிறுவர்கள் சுக்ல யஜூர் வேதம் படிக்கிறார்கள்.

தேசியக் கல்லூரி
தேசியக் கல்லூரி
DIXITH

குடியரசுத் தலைவராகவிருந்த ஆர்.வெங்கட்ராமன், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுதர் சி.ரெங்கராஜன், சென்னைத் தொலைக்காட்சியின் இயக்குநராக இருந்த ஏ.நடராஜன் போன்ற பலர் இக்கல்லூரியில் உருவானவர்களே. இக்கல்லூரியின் மண்ணியல் துறை தனித்துவமானது. அதுபோலவே இங்குள்ள வேதியியல் துறை குறிப்பிடத்தக்கது. தமிழ் அறிஞர்களான ராதாகிருஷ்ணன் கு.திருமேனி, ஆ.ஜெகந்நாதன் ஆகியோர் பணி செய்தது இங்குதான். நான் இயற்பியல் படித்ததும் இக்கல்லூரியில்தான். திரு சபேசன் எனது பேராசிரியர்.

தலைவர் டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் வழக்கறிஞர் ரகுநாதன், முதல்வர் ஆர்.சுந்தரராமன் தலைமையில் கல்லூரி செயல்படுகிறது. நூற்றாண்டு விழாவைக் கல்லூரி சிறப்பாகக் கொண்டாடியது.

புனித சிலுவைக் கல்லூரி

பெண்ணுக்குள் ஞானம் வைத்த கல்லூரி இது. தென்னிந்தியாவில் தொடங்கிய மிகப்பழமையான பெண்கள் கல்லூரிகளில் ஹோலிகிராஸ் கல்லூரி முக்கியமானது. “மலைவாழை அல்லவோ கல்வி” என திருச்சிப் பெண்களைச் சொல்லவைத்த பெருமை இதற்குண்டு.
புனித சிலுவைக் கல்லூரி | Holy Cross College
புனித சிலுவைக் கல்லூரி | Holy Cross College
DIXITH

பிரான்ஸில், சாவனாட் சகோதரிகள் புனித சிலுவை அமைப்பை 1833-ல் ஆரம்பித்தார்கள். பெண் கல்வி இவர்களின் நோக்கம். திருச்சிக்கு வந்த இவர்கள், மேரிஸ் தோப்பில் 1901ல் சிறிய பள்ளியை தொடங்க, அதுவே உயர்நிலைப்பள்ளியாக வளர்ந்து 1905-ல் பெரியகடைவீதிக்கு வந்தது. பின்னர் இப்போதுள்ள இடத்தை வந்தடைந்தது. இதன் தொடர் வளர்ச்சியே கல்லூரியாக 1932-ல் பரிணமித்து, ஹோலிகிராஸ் கல்லூரி உருவானது. அன்னை சோபி முதல் முதல்வரானார்.

6000 பெண்கள் படிக்கும் இக்கல்லூரிக்கு A++ தகுதியை NAAC வழங்கியுள்ளது. இங்குள்ள Community Radio 90.4 MHz ஒவ்வொருநாளும் 8 மணிநேரம் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகிறது. இங்குள்ள The Holy Cross IAS Academy கிராமப்புர பெண்களுக்கு ஒரு வரம். அருட்சகோதரி முனைவர் கிறிஸ்டின பிரிஜிட் முதல்வராக கல்லூரியை வழிநடத்துகிறார்.

திருச்சியின் அலிகார் ஜமால் முகம்மது கல்லூரி

ஹாஜி M.ஜமால் முகம்மது சாஹிப், ஜனாப் N M காஜாமியான் ராவுத்தர்- இந்த இருவர் சேர்ந்து கண்ட ஒற்றைக்கனவுதான் ஜமால் முகம்மது கல்லூரி. இன்று அக்கல்லூரியில் 4,600 பெண்களையும் சேர்த்து 12,000 பேர் படிக்கிறார்கள்.

இந்த ஜீவநதியின் ஊற்று சென்னை 'ஜமால் தங்கும் விடுதி'யில் உள்ளது. உயர்கல்வி படிக்க ஆசைப்பட்ட ஏழைகள் தங்கவும் சாப்பிடவும் ஜமால் செய்த ஏற்பாடே அந்த விடுதி. கைசெலவுக்கு மாதம் 7 ரூபாயும் கொடுத்துள்ளார். (அப்போது பவுன் 2 ரூபாயாம்) அவரின் பாரி மனசுக்கு அவர் காந்திக்கு வாரிக் கொடுத்ததே சான்று. விடுதலைப்போருக்கு நிதி கேட்ட காந்தியிடம் நிரப்பப்படாத காசோலை கொடுத்து நிரப்பிக்கொள்ளுங்கள் என இவர் சொல்ல, காந்தியோ என் மனசில் நீங்கள் நிறைந்துவிட்டீர்கள் என்றார்.

காஜாமியான் ராவுத்தருக்குச் சொந்தமான 120 ஏக்கர் நிலம் திருச்சியில் இருந்தது. அந்த இடத்தில் கல்லூரி கட்ட முடிவானது. 1947-ல் ஜமால் முகம்மது காலமான நிலையில் அவரது மகன் ஜமால் முகையதீன் தந்தையின் விருப்பப்படி கட்டடங்கள் கட்ட ரூ.2,75,000 கொடுத்தார். இவர்களின் கல்விக் கனவுதான் 1951 ஆம் ஆண்டு ஜமால் முகம்மது கல்லூரியாகப் பிறந்தது.

ஜமால் முகம்மது கல்லூரி | Jamal Mohamed College
ஜமால் முகம்மது கல்லூரி | Jamal Mohamed College

அமெரிக்காவின் டான்ஃபோர்த் பவுண்டேஷன் இந்தியக்கல்லூரிகளை தரவரிசைப்படுத்தியது. அது வெளியிட்ட 30 கல்லூரிகளில் 11வது இடத்தை ஜமால் கல்லூரி தொடங்கிய ஐந்தே ஆண்டுகளில் 1957-ல் பெற்று சாதனை படைத்தது. அதுபோலவே UGC ஜமால் கல்லூரிக்கு Excellence தகுதியை 2016-ல் வழங்கியது.

பாரிவேந்தர், சிற்பி பாலசுப்ரமணியன், ஜேம்ஸ் வசந்தன், ஆயிஷா நடராஜன், எல்.கணேசன், அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் என்று பலர் இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்.

தாளாளர் முனைவர் ஏ.கே.காஜா நஜுமுதீன், முதல்வர் முனைவர் எஸ். இஸ்மாயில் மொஹிதின் தலைமையில் கல்லூரி வளர்கிறது.

சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி

பெண் கல்வியையும் இந்துப்பண்பாட்டையும் முன்வைத்து, சங்கரன் பிள்ளைத் தெருவில் 'வரிப்புலி' என்.ராமசாமி ஐயர் 1938-ல் ஆரம்பித்த சாவித்திரி வித்யாசாலாதான் இக்கல்லூரியின் தொடக்கம். 1951 ஆம் ஆண்டு 30 ஏக்கர் பரப்பளவில் SRC என்று அழைக்கப்படும் இக்கல்லூரி இயங்கத்தொடங்கியது. இன்று 4,000 மாணவிகளுக்கு உயர்கல்வி வழங்குகிறது. இசை ஒரு பட்டப்படிப்பாக கற்பிக்கப்படுகிறது.

இங்குள்ள சரஸ்வதி நூலகத்தில் 60,000 புத்தகங்கள் உள்ளன. A தரம் பெற்ற இக்கல்லூரியில் சங்க காலம் தொடங்கி இன்று வரையிலான நாணயங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கல்லூரியின் வரலாற்றுத்துறை தலைவர் எம்.நளினி கல்வெட்டு மற்றும் கோயில் கட்டடக்கலை ஆய்வில் குறிப்பிடத்தகுந்தவர்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். உச்சநீதிமன்ற நீதிபதி விமலா, தடகள ஒலிம்பிக் வீராங்கனை தனலட்சுமி ஆகியோர் இக்கல்லூரியில் உருவானவர்கள்தான். செயலாளர் ஆர்.பஞ்சாபகேசன், முதல்வர் முனைவர் எம். வாசுகி தலைமையில் கல்லூரி செயல்படுகிறது.

பெரியார் ஈ.வே.ரா கல்லூரி

திருச்சியில் உள்ள பழைமையான அரசுக்கல்லூரி இது. எந்தப் பின்புலமும் இல்லாத எளியவர்களுக்கு உயர்கல்வி கிடைக்கவேண்டும் என்ற பெரியாரின் சிந்தனையின் விளைச்சலே இக்கல்லூரி. 1965 ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. தானே ஒரு கல்லூரி துவங்க விரும்பிய பெரியார், நெ.து.சுந்தரவடிவேலுவின் ஆலோசனையை ஏற்று, தமிழக அரசுக்கு 5.5 லட்சம் பணமும், ஒரு பங்களா உள்ளடக்கிய 10 ஏக்கர் நிலத்தையும் கொடுத்து, எளியவர்கள் படிக்க ஒரு கல்லூரியை கொண்டு வந்தார். 24-8-1965 அன்று அதை முதல்வர் பக்தவசலம் திறந்துவைத்தார். கல்லூரி திறப்புவிழாவில் பெரியார் மேடையில் இருந்தும் அவரைப் பேச அனுமதிக்கவில்லை என்ற செய்தியை நெ.து.சு தன் நினைவு அலைகள் நூலில் பதிந்துள்ளார்.

பெரியார் ஈ.வே.ரா கல்லூரி
பெரியார் ஈ.வே.ரா கல்லூரி
DIXITH

இன்று இக்கல்லூரி 53 ஏக்கரில் விரிந்துள்ளது. முதல் முதல்வராக பேரா.க.பெருமாள் பணி ஏற்றார். 5,000 மாணவர்கள் உயர்கல்வி கற்கிறார்கள். முனைவர் சுகந்தி முதல்வராக வழிகாட்டுகிறார்.

பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, சாகித்ய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர் இமயம், அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் இராமசாமி போன்றவர்களைத் தந்த கல்லூரி இது.

உருமு தனலெட்சுமி கல்லூரி

திருச்சி - தஞ்சை சாலையில் காட்டூரில் அமைந்துள்ள கல்லூரி இது. 1970 ஆம் ஆண்டு இக்கல்லூரியை உருமு சேஷாசலம் செட்டியார் தொடங்கினார். இதில் 3,000 மாணவருக்கு உயர்கல்வி கிடைக்கிறது. இக்கல்லூரி A தரச்சான்று பெற்றுள்ளது. பொன்விழா கண்ட கல்லூரி இது. பேராசிரியர்கள் கமலபதி, சத்தியசீலன், சேகர் போன்ற கல்வியாளர்கள் இங்கு பணி செய்தார்கள். செயலாளர் கல்கி இராமகிருஷ்ணன், முதல்வர் முனைவர் இரவிச்சந்திரன் வழிகாட்டலில் கல்லூரி பயணிக்கிறது.

உருமு தனலெட்சுமி கல்லூரி
உருமு தனலெட்சுமி கல்லூரி
DIXITH

திருச்சியை சுற்றி அமைந்துள்ள சற்று பழைமையான எட்டு கலை அறிவியல் கல்லூரிகளை ட்ரோன் கேமராவால் பார்த்ததைப்போல் பார்த்தோம். திருச்சியை The Cambridge of the East எனச் சொல்லவைத்த கல்லூரிகள் இவை. இந்தக் கல்லூரிகளில் மட்டும் 55,100 மாணவ/மாணவிகள் இன்று உயர்கல்வி கற்கிறார்கள். இந்தக் கல்லூரிகளின் பல ஆய்வுகள் 'காப்புரிமை' பெறும் தகுதியை பெற்றுள்ளன. திருச்சி கல்லூரிகளில் உள்ள ஆய்வுக்கூடம், நூலகம், இணைய வசதிகளை மாணவர்கள் முழுமையாகவும் சரியாகவும் பயன்படுத்தினால் நம் தரமும் உயரமும் இன்னும் அதிகமாகும் என்று தோன்றுவதைத் தடுக்கமுடியவில்லை.

பள்ளிகல்வி முடித்து உயர்கல்வி செல்வதில் இந்திய சராசரியைவிட தமிழ்நாடு இரண்டுமடங்கு மேலே இருப்பதன் ரகசியம் புரிகிறதா? கல்விதான் சமூக இழிவை துடைத்து, தனிமனிதனுக்கு அறிவுச்சுதந்திரம் தரும் என்று புரிந்துகொண்ட இந்தியாவின் முதல் மாநிலமும் தமிழ்நாடுதான். கல்வியின் சிறப்பை தமிழ்நாடு இலக்கியங்களில் மட்டும் பேசாமல் வாழ்க்கையாகவும் மாற்றியது என்பதன் துல்லியமான சான்றுதான் திருச்சி. ஒருவகையில் 'சரஸ்வதி வணக்கத்தை' சரியான புரிதலோடு செய்தவர்கள் நம் திருச்சி மக்கள்.

(இன்னும் ஊறும்)