Published:Updated:

’இன்ஜினீயரிங் படிக்கலாமா?’ -மாணவர்களின் பல கேள்விகளுக்கு விடைதந்த விகடன் கல்வி வெபினார்! 2-ம் நாள்

விகடன் மெகா டிஜிட்டல் கல்வி எக்ஸ்போ
விகடன் மெகா டிஜிட்டல் கல்வி எக்ஸ்போ

நேற்றைப் போலவே இன்றும், காலை பத்து மணிக்கு வெபினார் தொடங்கியது. மாணவர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்தோடு zoom தளத்தில் குழுமியிருந்தனர்.

கல்லூரிப் படிப்பில் சேரும் ஆர்வத்தோடும், வளமான எதிர்காலம் குறித்த கனவோடும் கடுமையாகப் படித்துத் தேர்வெழுதிய, பிளஸ் 2 மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகள் வரும் சூழலில், கொரோனா வந்து ஒட்டுமொத்த உலகத்தையும் முடக்கிப் போட்டிருக்கிறது. '' இனி எதிர்காலம் என்னாகும்...அடுத்த என்ன படிக்கலாம்...எங்கு படிக்கலாம்'' என்கிற கேள்விகளை, சந்தேகங்களை ஊரடங்கு நேரத்தில் யாரிடம் கேட்பது எனத் தெரியாமல் பரிதவித்துப் போயிருந்த மாணவச் செல்வங்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும், நாங்கள் இருக்கிறோம் என கைகொடுத்து உதவத் திட்டமிட்டது விகடன் குழுமம். அதன்படி, `மெகா டிஜிட்டல் எஜுகேஷன் எக்ஸ்போ’வை ஏற்பாடு செய்து, மே 9, 10 ஆகிய இரண்டு நாள்கள் கல்வியாளர்கள், தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள் பங்கேற்ற வெபினாரையும் நடத்தியது.

விகடன் கல்வி எக்ஸ்போ
விகடன் கல்வி எக்ஸ்போ

இந்த வெபினாரில் பங்கேற்க ஆன்லைனில் முன்பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தோம். ஆயிரக்கணக்கான மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த ஆர்வத்தோடு முன்பதிவு செய்திருந்தனர். zoom தளத்திலும், விகடனின் ஃபேஸ்புக் தளத்திலும் மாணவர்கள் இந்த வெபினாரில் பங்கேற்றார்கள்.

நேற்று(மே 9) நடந்த வெபினாரில், பல்துறை ஆளுமைகள் பகிர்ந்துகொண்ட விஷயங்களை கீழே உள்ள லிங்கில் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

உயர்கல்வி சார்ந்த பல கேள்விகளுக்கு பதில்தந்த `ஆனந்த விகடன் மெகா டிஜிட்டல் கல்வி எக்ஸ்போ வெபினார்!’

இன்று (மே 10), காலை பத்து மணிக்கு வெபினார் தொடங்கியது. முதலில் பிரபல கல்வி ஆலோசகரும் கேலக்ஸி மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் தலைவருமான எம்.ரமேஷ் பிரபா, "என்ன படிக்கலாம்... எங்கு படிக்கலாம்!" என்ற தலைப்பில் மாணவர்களுடன் உரையாடினார்.

மருத்துவம், பொறியியல், சட்டம், ஃபேஷன் டிசைனிங், மீடியா, கேட்டரிங், அறிவியல் மற்றும் கலை என எத்தனை வகையான படிப்புகள் இருக்கின்றன; அதைப் படிப்பதற்கான கல்லூரிகள் எங்கெல்லாம் இருக்கின்றன; அதில் சேர்வதற்கான தகுதிகள் என்னென்ன; அதற்கான நுழைவுத் தேர்வுகள் எப்போது நடக்கின்றன என்றெல்லாம் மிக விரிவாக விளக்கினார். உதாரணமாக, பி.காமில் மட்டுமே 21 பிரிவுகள் இருக்கின்றன என்பன போன்ற பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். பொறியியல் துறையில் மாணவர்கள் வழக்கமாகத் தேர்ந்தெடுக்கும் ஆறு பிரிவுகளைத் தவிர்த்து, கெமிக்கல், பெட்ரோ கெமிக்கல், பிரிண்டிங் டெக்னாலஜி போன்ற பலவகையான பிரிவுகள் இருப்பது குறித்தும் மாணவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.

எம். ரமேஷ் பிரபா
எம். ரமேஷ் பிரபா

இதுவரையில் நெகடிவ் மார்க் என்ற ஒரு வார்த்தையையே கேள்விப்படாத மாணவர்களுக்கு, நுழைவுத்தேர்வுகளில் அந்த விஷயத்தை எப்படிக் கையாள்வது என்பது குறித்த ஆலோசனைகளை வழங்கினார். மருத்துவம் படிக்கும் விருப்பத்தோடு இருக்கும் மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை, மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து, மருத்துவம் படிக்கமுடியவில்லையே என வருத்தப்படத் தேவையில்லை. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்தே மருத்துவம் சார்ந்த படிப்புகளை படிக்கலாம் என, அதற்காக கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் குறித்து மிகவும் அக்கறையோடு விளக்கினார். நீட் நுழைவுத்தேர்வு இல்லாத, கால்நடை மருத்துவம் போன்ற மருத்துவப் படிப்புகள் குறித்தும் விளக்கினார். பயோ மெடிக்கல் துறை சார்ந்து மாணவர்கள் கேட்ட, கேள்விகளுக்கும் மிக விரிவாகப் பதிலளித்தார்.

அடுத்ததாக, என்ஜினீயரிங் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து, PSNA கல்லூரி முதல்வர், முனைவர் D.வாசுதேவன் உரையாடினார்.’

இன்ஜினியரிங் படித்தால் நிச்சயமாக வேலை கிடைக்கும்’ என்கிற நம்பிக்கை வார்த்தைகளோடு தொடங்கிய வாசுதேவன், ''பொறியியல் படிப்பில் சேரும் முன்பாக, முக்கியமாக இரண்டு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒன்று எந்தக் கல்லூரியில் சேர்கிறோம், அடுத்ததாக எந்தப் பிரிவைத் தேர்தெடுக்கிறோம் என்பதுதான் அது'' என பொறியியல் படிக்க விரும்புபவர்கள் அடிப்படையாகத் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார். கல்லூரியைத் தேர்தெடுக்கும்போது, ''அந்தக் கல்லூரிக்கான தரச் சான்று, அங்கு பணிபுரியும் ஆசிரியர்களின் கல்வித் தகுதி, வேலைவாய்ப்புக்கள் ஏற்படுத்தித் தருவது ஆகியவற்றை முதலில் கவனிக்க வேண்டும்'' என்றார்.

முனைவர் D.வாசுதேவன்
முனைவர் D.வாசுதேவன்

’உங்களுக்கான விருப்பமான துறை எதுவோ அதைக் கண்டறிந்து அதில் சேருங்கள்’ எனும் அறிவுறையையும் வழங்கினார். பொறியியல் கல்வியில் உள்ள ஒவ்வொரு பிரிவுகள் குறித்தும் மிக விரிவாக விளக்கினார். கல்லூரிக் காலமான நான்கு வருடங்களில், ஒவ்வொரு வருடமும், மாணவர்கள் தங்களை எந்தெந்த விஷயங்களில் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் வேலை வாய்ப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். தவிர, ரோபோடிக், ஜெனடிக் போன்ற நவீன பொறியியல் படிப்புகள் குறித்தும் விளக்கினார்.

பொறியியலில் முதுகலை படிப்பதற்கான அவசியம் எந்தளவுக்கு இருக்கிறது என மாணவர்கள் கேட்ட கேள்விக்கு, ''ஆய்வாளராக, ஆசிரியராக விருப்பம் இருந்தால் கண்டிப்பாக முதுகலையும் படியுங்கள்'' என மிகத் தெளிவாகப் பதிலளித்தார்.

அவரைத் தொடர்ந்து,”உயர்கல்வியைத் தேர்வு செய்வது எப்படி?” என்ற தலைப்பில் மஹிந்திரா & மஹிந்திரா டெக்னாலஜி இன்னோவேஷன் பிரிவின் துணைத் தலைவர், டாக்டர் சங்கர் வேணுகோபால் உரையாடினார்.

''எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தாலும், மாணவர்களுக்கு இருக்கவேண்டிய, Design thinking, exponential thinking, Sustainable thinking,Innovative thinking, Rational thinking ஆகிய ஐந்து அடிப்படைத் திறமைகள் (Desirable skills) குறித்து பல உதாரணங்களுடன் விளக்கினார். மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு உரையாக இருந்தது.

சங்கர் வேணுகோபால்
சங்கர் வேணுகோபால்

தொடர்ச்சியாக, ”வாய்ப்புகளை அள்ளித்தரும் நுழைவுத்தேர்வுகள்” என்ற தலைப்பில் ’ஸ்டூடண்ட்ஸ் விஷன் அகாடமி’ இயக்குநரும் கல்வி ஆலோசகருமான டாக்டர். ஆர்.ராஜராஜன் மாணவர்களுடன் உரையாடினார். நுழைவுத் தேர்வுள் என்றாலே மாணவர்களுக்கு ஏன் அச்சம் உண்டாகிறது என்பதற்கான காரணம் குறித்தும், அந்த எண்ணத்தில் இருந்து விடுபட்டு எப்படி நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெறுவது என்பது குறித்தும் மிக விரிவாக விளக்கினார். என்னென்ன நுழைவுத் தேர்வுகள் இருக்கின்றன, அது எந்தெந்த தேதியில் நடைபெறுகின்றன, அதற்கு எப்படித் தயாராக வேண்டும் என்பது குறித்தும் மிக விரிவாக விளக்கமளித்தார். பொதுத்தேர்வுகளுக்கு படிப்பதில் இருந்து நுழைவுத் தேர்வுகளுக்கு எப்படி வேறுபட்டு படிக்கவேண்டும் என்பது குறித்தும் விளக்கினார். இந்திய பாதுகாப்புத் துறையில் உள்ள படிப்புகள் அதற்குரிய நுழைவுத் தேர்வுகள் குறித்து விளக்கியது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது

அவரைத் தொடர்ந்து, ”கலை / அறிவியல் கல்விமுறை மற்றும் அதன் வேலை வாய்ப்புகள்” என்ற தலைப்பில் அமெரிக்கன் கல்லூரி முதல்வர் M.தவமணி கிறிஸ்டோபர் உரையாடினார். எதிர்காலத்தில் அதிக வேலை வாய்ப்புகளை கொடுக்கப் போகிற, டேட்டா சயின்ஸ் துறை குறித்து தெளிவாக விளக்கினார். ''இன்றைய தேதியில் கிட்டத்தட்ட ஆறு லட்சம் வேலைவாய்ப்புகளை கொண்டிருக்கிறது அந்தத்துறை. ஆனால், அதற்கான ஆள்கள் இல்லை. அதனால் மாணவர்கள் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' என்றார். அடுத்ததாக, மைக்ரோ பயலாஜி துறை, ஃபுட் சயின்ஸ் போன்ற துறைகளுக்கு இருக்கும் எதிர்காலம் குறித்தும் விளக்கினார். பொறியியல், மருத்துவம் தவிர்த்து வேலை வாய்ப்புகள் உள்ள கலை, அறிவியல் பாடப்பிரிவுகள் குறித்தும் மிக விரிவாக விளக்கினார். தவிர, அமெரிக்கன் கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகள், வசதிகள் குறித்தும் மாணவர்களுக்கு விரிவாக விளக்கினார்.

M.தவமணி கிறிஸ்டோபர்
M.தவமணி கிறிஸ்டோபர்

அவரைத் தொடர்ந்து, கலை மற்றும் அறிவியல் படிப்புகள் மற்றும் அதற்கான வேலை வாய்ப்புகள் குறித்து, வேல்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் டெக்னாலஜி மற்றும் அட்வான்ஸ் ஸ்டெடீஸ் நிறுவனத்தின் டீன் டாக்டர் E.N.கணேஷ் விரிவாக விளக்கினார். ”மாணவர்கள் எவ்வாறு படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.” என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார். தொடர்ந்து, வேல்ஸ் யுனிவர்சிட்டியில் பாடப்பிரிவுகள், வேலைவாய்ப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார்.

ஸ்பான்சர்ஸ்
ஸ்பான்சர்ஸ்

இறுதியாக, ’பெற்ற தாயும் பிறந்த பொன்நாடும்’ என்ற தலைப்பில் ’பட்டிமன்றம்’ எஸ்.ராஜா, தன் வழக்கமான நகைச்சுவை இழையோட மாணவர்களிடம் உரையாடினார். "தேர்வுகளில் நீங்கள் வெற்றியடையலாம், தோல்வியடையலாம். ஆனால், வாழ்க்கையில் வெற்றி பெற நல்ல குணங்களை உங்களுக்கானதாக மாற்றிக் கொள்ளுங்கள்'' என கல்வியைத் தாண்டி, மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய நற்பண்புகள் குறித்தும் சமூக வலைதளங்களை எப்படித் திறமையாக கையாள்வது என்பது குறித்தும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். நடைமுறை வாழ்வில் இருந்து பல உதாரணங்கள் தந்து, மாணவர்களுக்கு நம்பிக்கை ஒளியூட்டும் விதமாக ராஜாவின் கருத்துகள் இருந்தன.

டாக்டர் E.N.கணேஷ்
டாக்டர் E.N.கணேஷ்

மிகவும் பயனுள்ள ஒரு அரங்காக, இந்த வெபினார் அமைந்தது. வெபினாரில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, ஆளுமைகள் பதில் வழங்கினார்கள். நேரமின்மையால் நிறைய கேள்விகளுக்குப் அங்கு பதிலளிக்க இயலவில்லை. அங்கு கேட்கப்பட்ட முக்கியமான கேள்விகளுக்கான பதில்களை இந்த லிங்கை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம். கொரோனா வைரஸ் தாக்கத்தால் மாணவர்கள் இழந்துவிட்ட வகுப்பறை அனுபவத்தை, கல்வி சார்ந்த உரையாடல்களை அறிவுப் பகிர்வை அளித்ததற்கு உண்மையாகவே விகடன் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. தொடர்ந்து விகடனோடு இணைந்திருங்கள். இன்னொரு அரங்கில் சந்திப்போம் மாணவர்களே!

அடுத்த கட்டுரைக்கு