Published:Updated:

தீமையை அழிக்கும் தீபாவளி !

அருளுரை: சுவாமி கௌதமானந்தர்

தீமையை அழிக்கும் தீபாவளி !

அருளுரை: சுவாமி கௌதமானந்தர்

Published:Updated:

ந்திய மக்களிடையில் மிகவும் பிரபலமான பண்டிகை தீபாவளி.

மதம், மொழி, கலாசாரம் ஆகியவை காரணமாக மற்ற பண்டிகைகளுக்கு மக்கள் காட்டும் ஆர்வத்தில் வித்தியாசம் இருக்கலாம். ஆனால், ஏழை முதல் பணக்காரன் வரை, எல்லா இனத்தவராலும் ஒரே மாதிரியாக வரவேற்பு பெறும் பண்டிகையாக தீபாவளி விளங்குகிறது.

தீபாவளி என்றால், தீபங்களின் ஆவளி - அதாவது, 'தீபங்களின் வரிசை’ என்று பொருள். எனவே இதை 'ஒளித் திருநாள்’ என்று கூறுவதும் பொருந்தும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராவணனை அழித்து, சீதையை மீட்டுக்கொண்டு ஸ்ரீராமர் திரும்பிய வெற்றி தினத்தைக் கொண்டாடும் பண்டிகையாக வட மாநிலத்தவர்கள் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள்.

நரகாசுரன் என்ற கொடிய அரக்கனை ஸ்ரீகிருஷ்ணர் இந்த நாளில்தான் கொன்று மக்களுக்கு மகிழ்ச்சியளித்தார். உயிர் பிரியும்போது ஞானம் பெற்ற அந்த அரக்கன், ''என் மரண தினத்தை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும். என் கொடிய செயல்களால் இருண்டு கிடந்த இல்லங்கள் ஒளி பெற வேண்டும். மக்கள் மங்கள நீராடி, புத்தாடை உடுத்தி, விருந்துண்டு, வாண வேடிக்கைகள் செய்து களிக்கவேண்டும்'' என்று வரம் கேட்டான். அவன் விருப்பம் நிறைவேறும் என்று ஸ்ரீகிருஷ்ணர் வரமளித்தார்.

தீமையை அழிக்கும் தீபாவளி !

நரகாசுரன் மறைந்த இந்த நாள்தான் தீபாவளிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இதை 'நரக சதுர்த்தி’ என்றும் அழைக்கிறார்கள்.

இந்தத் தீபாவளித் திருநாளில்தான் பகவானுக்கு மூன்றடி மண் வழங்கிய மகாபலி சக்கரவர்த்தி முடிசூட்டிக்கொண்டார். 'கால்சா’ என்ற சீக்கிய மத அமைப்பை குரு கோவிந்தசிங் தோற்றுவித்ததும் இந்த நாளில்தான்.

மார்வாரிகள் தீபாவளி நாளில் ஸ்ரீலட்சுமி பூஜை செய்து லாபம் பெருக, புதுக்கணக்கு ஆரம்பித்துக் கொண்டாடுகின்றனர். அவர்களுக்கு அன்று வருடப் பிறப்பும்கூட!

தீபாவளி என்றதும், பலருக்கும் காசியின் நினைவு வரும். இதற்கு முக்கியக் காரணம், கங்கா ஸ்நானமும் தங்க அன்னபூரணியும்தான். காசியில் முக்கியத்துவம் வாய்ந்தது அன்னபூரணி கோயில். இங்கு தீபாவளி தருணத்தில் மூன்று நாட்களுக்கு, தங்கத்தினாலான அன்னபூரணி, விசேஷ அலங்காரங்களுடன் அருள்பாலிக்கிறாள். அந்த மூன்று நாட்களில் மட்டுமே தங்க அன்னபூரணியைத் தரிசிக்க முடியும் என்பதால், அதற்காகவே தீபாவளி நேரத்தில் காசிக்குச் செல்பவர்களும் உண்டு.

ராவணன் என்ற தீய சக்தியை ஸ்ரீராமர் அழித்து வெற்றி கொண்டதைத்தான் தீபாவளிப் பண்டிகைக்குக் காரணமாகக் கூறுகிறார்கள் வடக்கில். அதே தத்துவம்தான் தெற்கேயும்! இங்கு ராவணனுக்குப் பதில் நரகன் என்ற தீய சக்தி. ஸ்ரீராமருக்குப் பதில் ஸ்ரீகிருஷ்ணர். இரண்டிலும் குறிக்கோள் ஒன்றுதான். தீயவை அழிந்து சுபிட்சம் உண்டாவதற்காக மக்கள் கொண்டாடும் பண்டிகை இது.

தீயவை என்றால் என்ன? அவை எங்கே இருக்கின்றன? ஸ்ரீகிருஷ்ணர் கீதையில் கூறுகிறார்...

காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுண ஸமுத்பவ:

மஹாசனோ மஹாபாப்மா வித்த்யேனமிஹ வைரிணம்

'ரஜோ குணத்தில் இருந்து உதிப்பதும், எல்லாவற்றையும் விழுங்குவதும், பெரும் பாவம் நிறைந்ததுமான ஆசையும் கோபமும்தான் எதிரிகள் என்று அறிந்துகொள்!’

ஆக, காமமும் கோபமும்தான் எதிரிகள். நமது அறியாமையால் காமமும்- அதாவது பேராசையும், அந்த ஆசை நிறைவேறாதபோது கோபமும் உண்டாகின்றன. பேராசை அழிவைத் தருவது பற்றி ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு கதை சொல்வார்.

தீமையை அழிக்கும் தீபாவளி !

ஓர் ஊரில் ஒரு நாவிதன் வாழ்ந்து வந்தான். ஒரு நாள், அவன் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது, 'உனக்கு ஏழு ஜாடி தங்கம் வேண்டுமா?’ என்ற குரல் கேட்டது.

'ஆம், வேண்டும்’ என்று பதில் சொன்னான் நாவிதன். உடனே, 'நீ வீட்டுக்குப் போ! உன் வீட்டில் நான் தங்க ஜாடிகளைக் கொண்டுபோய் வைத்துவிட்டேன்’ என்று பதில் குரல் ஒலித்தது.

உடனே, தன் வீட்டை நோக்கித் தலைதெறிக்க ஓடினான் நாவிதன்.

அங்கே ஏழு ஜாடிகள் இருந்ததைக் கண்டான். அவற்றில் ஆறு ஜாடிகளிலும் தங்கம் நிறைந்திருந்தது. ஆனால், ஏழாவது ஜாடியில் மட்டும் பாதி அளவுக்குத்தான் தங்கம் இருந்தது.

கிடைத்த தங்கத்தை அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பதற்குப் பதிலாக, கொஞ்சம் குறைவாக இருந்த ஏழாவது ஜாடியையும் நிரப்பிவிட வேண்டும் என்ற தணியாத வெறி நாவிதனுக்கு உண்டாயிற்று.

எனவே, தன்னிடம் இருந்த விலையுயர்ந்த பொருள்களை எல்லாம் விற்று, அவற்றையும் தங்கமாக்கி, அந்த ஏழாவது ஜாடியில் போட்டான். என்றாலும், அந்த மாய ஜாடி அரைகுறையாகவே இருந்தது.

பிறகு, அவன் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் அந்த ஜாடியிலேயே கொண்டுபோய் போட்டுப் பார்த்தான். அதனால், அவனும் அவன் குடும்பத்தாரும் பட்டினி கிடக்க நேர்ந்தது. என்றாலும், அந்த ஜாடி மட்டும் நிரம்பியபாடில்லை.

நாவிதன் அரசனிடம் வேலை பார்த்து வந்தான். ஒரு நாள் அவன் அரசனிடம், 'மன்னவா, குடும்பத்தை நடத்தப் பணம் போதவில்லை. ஆகையால், என் சம்பளத்தை இரண்டு மடங்காகக் கூட்டித் தாருங்கள்’ என்று கேட்டுக்கொண்டான். அரசனும் அதன்படியே அவனது சம்பளத்தை இரண்டு மடங்கு ஆக்கினான். அதையும் அந்த ஜாடியிலேயே போட்டு வந்தான் நாவிதன். ஆனாலும், அந்த ஜாடி நிரம்பவில்லை!

பிறகு, ஓய்வு நேரங்களில் அவன் பிச்சை எடுக்கவும் ஆரம்பித்தான். அப்படிப் பிச்சை எடுத்து வந்த பொருளையும் ஜாடியில் போட்டான். என்ன மாயமோ, அப்படிச் செய்தும் அந்த ஜாடி நிரம்பவில்லை.

இப்படியே பல மாதங்கள் உருண்டு ஓடின. நாவிதனுடைய நிலைமை வர வர மோசமாகி, பரிதாபகரமான நிலையை அடைந்தது.

நாவிதனுடைய நிலைமையைப் பார்த்த அரசன், ''அடே, உனக்கு என்ன வந்தது? இப்போது உனக்குக் கிடைக்கிற சம்பளத்தில் பாதிச் சம்பளம் கிடைத்தபோதே நீ மகிழ்ச்சியுடனும் திருப்தியாகவும்தானே இருந்தாய்? இப்போதோ இரண்டு மடங்கு அதிகமாகச் சம்பளம் வாங்குகிறாய். அப்படி இருந்தும், நீ ஏன் வாடிய முகத்துடன் துன்பமும் கவலையும் கொண்டவனாக இருக்கிறாய்? யட்சனிடம் இருந்து ஏழு ஜாடி தங்கத்தை வாங்கிக்கொண்டாயா என்ன?'' என்று கேட்டான்.

நாவிதன் அதிர்ந்துபோனான். ''மகாராஜா! தங்களுக்கு இந்தச் செய்தியைச் சொன்னவர் யார்?'' என்று கேட்டான். அரசன் புன்னகையுடன், ''யாரிடம் யட்சனுடைய செல்வம் வந்திருக்கிறதோ, அவன் இப்படிப்பட்ட நிலைக்குதான் வருவான் என்பது எனக்குத் தெரியாதா, என்ன? யட்சன் ஒரு முறை இந்த ஏழு ஜாடிகளை எனக்குத் தருவதாகச் சொன்னான். அது 'வரவுப் பணமா, செலவுப் பணமா?’ என்பதை அறியும்பொருட்டு, 'அந்தப் பணம் செலவு செய்ய வேண்டியதா? அல்லது, புதைத்து வைக்க வேண்டியதா?’ என்று அவனைக் கேட்டேன். உடனே, அந்த யட்சன் பதில்கூடச் சொல்லாமல் ஓடியே போய்விட்டான்.

தெரிந்துகொள், அந்தப் பணத்தை யாராலும் செலவழிக்க முடியாது! மேலும் மேலும் பணம் சேர்க்கவேண்டும் என்ற வெறியைத்தான் அது தரும். உடனே போய் அந்த ஏழு ஜாடிகளையும் திருப்பிக் கொடுத்துவிட்டு வேறு வேலை பார்!’ என்று அறிவுரை சொன்னான்.

நாவிதனுக்குப் புத்தி வந்தது. அவன் யட்சன் வாழும் மரத்தடிக்குச் சென்று, 'உன் ஜாடிகளை நீயே எடுத்துக்கொள்’ என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தான். மாயமாய் வந்த ஜாடிகள் ஏழும் மாயமாகவே காணாமல் போய்விட்டிருந்தன. அது மட்டுமா, வாழ்நாள் முழுவதும் அவன் அரும்பாடுபட்டுத் தேடிச் சேர்த்து அதனுள் போட்டிருந்த செல்வமும் காணாமல் போய்விட்டது.

தீமையை அழிக்கும் தீபாவளி !

பேராசை பெருநஷ்டம்! நீங்களாக உழைத்துப் பெற்றாலன்றி எதுவும் உங்களுக்குச் சொந்தமாகாது. பணம் நமக்கு வேண்டும். ஆனால், அதை நியாயமான முறையில் சம்பாதிக்க வேண்டும் என்பது முக்கியம். அதைவிட முக்கியமானது இறையருள். இறையருள் மட்டும் நமக்கு இருந்துவிட்டால், நமக்கு வேறு எதற்குமே குறைவு இருக்காது.

''நம் ஆசைகள், உணர்ச்சிகள் எல்லாவற்றுக் கும் முடிவிடம் இறைவனே! உனக்குக் கோபம் வருமானால், இறைவனிடம் கோபித்துக்கொள். உன் தலைவனாகிய இறைவனை, உன் தோழனாகிய இறைவனைக் கடிந்துகொள். பயமின்றி உன்னால் இப்படி வேறு யாரைக் கண்டிக்க முடியும்? சக மனிதன் உன் கோபத்தைப் பொறுத்துக்கொள்ள மாட்டான்; பதிலுக்குக் கோபிப்பான். என்னிடம் நீ கோபம் கொண்டால், நானும் உடனே என் கோபத்தைக் காட்டுவேன். இது நிச்சயம். உன் கோபத்தை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. அதனால் உன் கோபத்தை இறைவனிடம் காட்டு! 'நீ ஏன் இன்னும் என்னிடம் வராமல் இருக்கிறாய்? என்னை ஏன் இவ்வாறு தனியாகத் தவிக்க விட்டாய்?’ என்று இறைவனிடம் உரிமையோடு கேள். அவனிடம் அல்லாமல் வேறு எங்கு இன்பம் இருக்க முடியும்? வெறும் மண்ணாங்கட்டிகளில் என்ன இன்பத்தைக் காண முடியும்? பேரானந்த ரசக்கட்டி அல்லவா நாம் நாட வேண்டிய இன்பம்! அது இறைவனே!'' என்கிறார் விவேகானந்தர்.

'தமஸோ மா ஜ்யோதிர் கமய’ என்கிறது வேதம். அறியாமையாகிய இருளில் இருந்து ஞான ஒளிக்கு நம்மை இறைவன் வழிநடத்தப் பிரார்த்திப்போம். நமது காமம், கோபம் முதலிய தீமைகளை அழித்து, ஞான ஒளியாகிய இறைவனை அடைய, நாமும் தீப ஒளி ஏற்றி வணங்குவோமாக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism