Published:Updated:

ஆடுவோம்... பாடுவோம்... கொண்டாடுவோம்!

வி.ராம்ஜி

ஆடுவோம்... பாடுவோம்... கொண்டாடுவோம்!

வி.ராம்ஜி

Published:Updated:

''மக்கள் ஒன்றாகக் கூடுவது, இல்லங்களை அலங்கரிப்பது, ஒவ்வொரு வீட்டையும் ஒவ்வொரு தெருவையும் வண்ண மயமாக மாற்றுவது, இனிப்புகளும் பரிசுகளும் பரிமாறிக்கொள்வது என நம் கலாசாரத்தில் திருவிழாக்கள் அங்கம் வகித்தபடியே இருக் கின்றன, அமர்க்களப்பட்டுக்கொண்டே இருக்கின்றன'' என்று வெடிச்சிரிப்புடன் பேசுகிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ்.

'பண்டிகை’ என்றதும் மெல்லிய உற்சாகம் பூக்கிறது உதட்டில். 'விழாக்கள் குறித்துச் சொல்லுங்கள்’ என்றதும் கண்கள் மூடி, சிறிது நேரம் பழைய நினைவலைகளில் நீந்துகிறார். 'தீபாவளி, உங்கள் பால்யம் என்றெல்லாம் பேசலாம்’ என்றதும், சட்டென்று கண்களைத் திறந்து, குழந்தைபோல் குதூகலிக்கிறார். முகம் முழுக்க மத்தாப்புச் சிரிப்பு!

''இந்தத் தேசத்தில், தீபாவளி பெரும் முக்கியத்துவம் பெறுகிறது. தீபாவளி என்பது தீபங்களின் திருவிழா. நகரங்களிலும் கிராமங்களிலும் மக்கள் ஆயிரக்கணக்கான தீபங்களை ஏற்றிக் கொண்டாடுவதைப் பார்த்திருப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆடுவோம்... பாடுவோம்... கொண்டாடுவோம்!

என் பால்ய நாட்களில், தீபாவளிப் பண்டிகை எனக்குக் குதூகலம் அளிப்பதாகவும் கொண்டாட்டம் நிறைந்ததாகவும் இருந்தது. அன்றைக்குப் பள்ளிக்குப் போக வேண்டாம், விடுமுறை என்பது முக்கியக் காரணம். அப்போதெல்லாம் டிவி இல்லை. எனவே, வீட்டில் அடைந்து கிடக்க வேண்டிய நிலை கிடையாது. விடுமுறையில் கிடைத்த அனைத்து நேரத்தையும் கிரிக்கெட் விளையாடிக் கழித்தது இன்னொரு காரணம். தவிர, தேசிய அணிகளின் பெருமைகளைச் சொல்ல மீடியா வசதிகள் கிடையாது. தேசிய அணியின் மீது அந்தக் காலகட்டத்தில் எங்களுக்கு மோகமும் இல்லை. எங்கள் மனதில் எங்கள் அணியே மிகப் பெரிய அணி என்பதாக பிரமாண்டமாய் ஒரு நினைப்பு ஓடிய காலம் அது. சொல்லப்போனால், இப்படியான நினைப்புக் கொண்ட காலம்கூட பொற்காலம்தான்.

அப்போது எனக்கு ஆறு அல்லது ஏழு வயது. ஏரோப்ளேன் என்றொரு பட்டாசு ரகம். அதில் ஒரு டப்பாவும், ஒற்றைத் திரியும் இருக்கும். வாசல் படிக்கட்டில் நின்றபடி பட்டாசுக்கு நெருப்பு வைத்தேன். லூசாக இருந்த என் சட்டைக்குள் அது நுழைந்து, சட்டென்று வெளியேறி, கழுத்தைப் பதம் பார்த்துவிட்டுப் பறந்தது. ஏரோப்ளேன் வெடி, அப்படிக் கிழித்துக்கொண்டு பறக்கும்!

என் தந்தையோ மருத்துவர். காயம்பட்ட மகனைக் கண்டதும் மொத்த வீடும் பரபரப்பானது. பதறித் துடித்தது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை கொடுக்க வேண்டும் என்ற படபடப்பு அவர்களுக்கு. எனக்கோ அடுத்த பட்டாசு, அடுத்த ஏரோப்ளேனை இயக்க வேண்டுமே என்கிற துடிதுடிப்பு! 'சட்டை கிழிஞ்சு, கழுத்துல காயம் வந்தாலும் இவன் மொத்தத்தையும் வெடிச்சிட்டுதான் அழுவான்போல’ என்று கேலி பேசினார்கள். வலியில் இருந்து பறக்கிற, வலியையே மறக்கிற வித்தை எனக்கு அப்போதே வந்துவிட்டதோ என்னவோ!'' என்கிறார் ஜக்கி வாசுதேவ்.

ஆடுவோம்... பாடுவோம்... கொண்டாடுவோம்!

''எனக்கு 15 வயது இருக்கும்போது நடந்த சம்பவம் ஒன்று. ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்களின் இயக்கம், 'தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்குப் பதிலாக யாருக்காவது உதவுங்கள்’ என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்த வேளை அது. அவரது அறைகூவல் என் மனதைத் தொட்டது; அசைத்துப் பார்த்தது. சட்டென்று அசைவற்றுப் போனது மனது. நான் பட்டாசு வெடித்த கடைசி வருடம் அதுதான். பட்டாசுக்கும் எனக்குமான பந்தம் அறுந்து போனது அந்த வருடத்தில்தான். இதில் எனக்குச் சந்தோஷமும் இல்லை; வருத் தமும் கிடையாது'' என்று சொல்லும்போதே புன்னகைக்கிறார் சத்குரு.

''பின்னாளில், நான் நகரத்தை விட்டு கிராமத்துக்கு விவசாயம் செய்யச் சென்றபோதுதான், விழாக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் ஒன்றாகக் கூடி, வீதியெல்லாம் அலங்கரித்து, கோலமிட்டு, தெரு வெல்லாம் தோரணம் கட்டி, ஆடல்பாடல் எனக் களைகட்டியது கிராமம். பாரதத்தின் விழாக்கள் எத்தனை வண்ணமயமானவை, எவ்வளவு சுவாரஸ்யங்கள் கொண்டவை என எனக்குப் புரிந்தது அப்போதுதான்.

8,000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தத் தேசத்தில் அறிவியல் இருந்தது; கலாசாரம் இருந்தது; மருத்துவ- சுகாதாரத்தைப் பற்றி மக்கள் அறிந்திருந்தனர். முறையான கழிவறைகள் மற்றும் தூய்மையாக வாழும் முறை என்பதெல்லாம் இருந்தது. இதனால், மக்கள் நோயின்றி ஆரோக்கியமாக அமைதியாக வாழ முடிந்தது. மக்கள் அமைதியாக ஆரோக்கியமாக நிறைவுடன் வாழ்ந்தால்தானே, கொண்டாட்டத்தைப் பற்றி நினைக்க முடியும்? அதனால், இயல்பாகவே பாரத கலாசாரத்தில் ஆன்மிகம் வளர்ந்தது. கோயில்கள் எழுப்பப்பட்டன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செயலும் இங்கே கொண்டாட்டமாய் ஆனது.

வருடத்தின் 365 நாட்களும் 365 திருவிழாக்கள் இங்கே! மனித வாழ்க்கை மொத்தமும் கொண் டாட்டமாக மாறிப்போக வேண்டும் என

இதுபோல் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால், இப்போது எஞ்சியுள்ளதோ 30, 40 விழாக்கள் மட்டுமே! அலுவலகமும் தொலைக்காட்சியும் நம் திருவிழாக்களை விழுங்கிவிட்டன. அதிலும், நடைமுறையில் தீவிரமாக இருப்பவை 8 முதல் 10 விழாக்கள்தான். இதை அப்படியே விட்டுவிட்டால், அடுத்த தலைமுறைக்குக் கொண்டாட்டங்களே இல்லாது போகும்.

பொருள் ஈட்டுவதும் உணவு உண்பதும் என வாழ்க்கை வெறுமையாய் கடந்து போய்விடும். பலரும் அப்படித்தானே வாழ்ந்து வருகிறார்கள்? விழா நாளன்று விடுமுறை, நீண்ட நேரத் தூக்கம், திரைப்படம், தொலைக்காட்சிப் பெட்டி என்றாகிவிட்ட வாழ்க்கை அல்ல நம் கலாசாரம். அது அல்ல சந்தோஷம்!

ஆடுவோம்... பாடுவோம்... கொண்டாடுவோம்!

நம் தேசத்தில் விழாக்கள் என்றால், அதிகாலை நான்கு மணிக்கு விழித்து, பெரும் உற்சாகத்துடன் மக்கள் தம்மைத் தயார் செய்துகொண்ட காலம் உண்டு. வீடு முழுக்க பல வேலைகள் நடந்திருக்கும். ஊர் மக்கள் ஓரிடத்தில் கூடி, அங்கு பெரும் கொண்டாட்டம் நிகழும். அங்கே ஒற்றுமை குடிகொண்டிருக்கும்.

ஆனால், இன்றைய நிலைமையோ தலைகீழ். இந்தக் கலாசாரத்தை மீண்டும் புதுப்பிக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். இதற்காகவே அனைவரும் ஒன்றாகக் கூடி, ஓரிடத்தில் விழாக்களை எடுக்கும் விதமாக ஈஷாவில் கொண்டாட்டங்கள் உருவாக்கப்பட் டிருக்கின்றன. பொங்கல், மகாசிவராத்திரி, தீபாவளி மற்றும் தசரா என நான்கு பண்டிகைகளை ஈஷா யோக மையத்தில் கோலாகலமாகக் கொண்டாடுகிறோம்.

தீபாவளித் திருநாள், மிகுந்த மங்கலங்களை நமக்குச் சேர்க்கிற நாளாக அமைந்திருப்பதைக் காணலாம். இந்த நாளில் ஒருவர் லக்ஷ்மியைத் தேடினால் அவருக்கு லக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும்; ஆரோக்கியம் வேண்டுமென்றால், அன்னை சக்தி, ஆரோக்கியத்தையும் நோயற்ற நிலையையும் தருவாள்; கல்வி வேண்டுபவருக்கு சரஸ்வதி தேவி ஞான பலம் தருவாள் என்கிற நம்பிக்கை உண்டு. இந்த நாள் ஒருவருக்கு நல்வாழ்வு வழங்கும் என்பதை மரபுவழியாக நாம் பேசி வந்திருக்கிறோம்.

தீபாவளி, ஒளியின் திருநாள். இந்த நாள் வெளியில் விளக்கேற்றுவதைப் பற்றி அல்ல; நம் அகத்தை ஒளியேற்றச் செய்வதற்கான ஒரு நாள் இது. வெளிச்சம் என்றால் தெளிவு. தெளிவு இல்லாமல் நீங்கள் எதைச் செய்ய முற்பட்டாலும், அது அழிவை நோக்கியே அழைத்துச் செல்லும். வெளிச்சம் வாழ்க்கைக்கு ஒளியூட்டும் என்று நாம் சொல்வது, வெறுமனே நம் கண்ணால் காண்பதைப் பற்றி மட்டுமே சொல்லவில்லை. பலவிதங்களில் நமக்குள் அது தெளிவை உண்டாக்கும் என்பதால்தான், விளக்கேற்றி வழிபடுவது... வணங்குவது எல்லாமே!

நமக்கு நன்மை விளைவிக்கும் அற்புத நாட்களில், தீபாவளித் திருநாளும் உண்டு. அதைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறோம். பட்டாசு வெடிப்பது, புத்தாடை அணிவது மட்டுமல்ல; நம் நாட்டில் இனிப்புப் பலகாரங்கள் இல்லாமல் பண்டிகைகள் நிறைவுறாது. அத்தையும் மாமியும் மாவு எடுத்துக் கொடுக்க, பாட்டியின் கைப்பதம் சுவையை எடுத்துக் கொடுக்கும். பாரதத்தில் செய்யப்படும் பலகாரங்களைச் சமைப்பதற்கு ஆழ்ந்த ஈடுபாடு அவசியம். மக்கள் தங்கள் வாழ்க்கையை நேசித்தால் மட்டுமே இதுபோன்ற ஈடுபாட்டுடன் வாழ முடியும். எங்கள் வீட்டில் உணவு தயாரிக்கும்போது என் அத்தைகளும் பாட்டிகளும் பாட்டுப் பாடிக்கொண்டே சமைப்பார்கள். என் அம்மாவும் அப்படித்தான். அவர்களின் உணவுத் தயாரிப்பில் ஓர் ஈடுபாடு இருக்கும்; கைப்பக்குவம் இருக்கும். அன்பும் அக்கறையும் கலந்திருக்கும். அந்த உணவை உண்பவர்களின் உடலும் அதுபோலவே உருவாகும்.  

வாழ்வை விளையாட்டைப்போல அணுகுவதற்காகவே நம் கலாசாரத்தில் கொண்டாட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன. உங்கள் வாழ்வில் கொண்டாட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதே தீபாவளித் திருநாளின் நோக்கம். பட்டாசுகளும் மத்தாப்புகளும் உங்களுக்குள் இருக்கும் உற்சாக நெருப்பை மூட்டிவிடட்டும். ஏதோ ஒரு நாள் மட்டும் கொண்டாடி, மறந்து போவதற்கான நாள் அல்ல தீபாவளி. தினம் தினம் தீபாவளியாகத்தான் இருக்க வேண்டும். ஆகவே ஆடுவோம்; பாடுவோம்; கொண்டாடுவோம்! எல்லோர்க்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!''

வாழ்த்தி அருள்கிறார் சத்குரு. அந்த வாழ்த்தில் நிறைந்திருக்கிறது மனிதர்கள் மீதான, மானுடத்தின் மீதான நேசம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism