Published:Updated:

ஆண்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டதே குடும்பம்

விஷ்ணுபுரம் சரவணன் படங்கள்: தே.சிலம்பரசன்

ஆண்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டதே குடும்பம்

விஷ்ணுபுரம் சரவணன் படங்கள்: தே.சிலம்பரசன்

Published:Updated:

சு.தமிழ்ச்செல்வி... தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் கதைகளில் புழங்கிக்கொண்டிருந்த மொழிநடை களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு புதிய தடத்தை உருவாக்கிய எழுத்துக்களுக்குச் சொந்தக் காரர். இவர் வாழும் மண்ணின் நெடியை, இவரின் கதைகளை வாசிக்கும்போது நாம் உணர முடியும். வட்டார மொழியை அதன் ஜீவன் குறையாமல் தம் படைப்புகளில் கொண்டுவருபவர். 'மாணிக்கம்’, 'அளம்’, 'கீதாரி’, 'ஆறுகாட்டுத்துறை’, 'கற்றாழை’, 'கண்ணகி’, 'பொன்னாச்சரம்’ ஆகிய ஏழு நாவல்களை யும், 'சாமுண்டி’, 'சு.தமிழ்ச்செல்வி சிறுகதைகள்’ எனும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டிருக்கிறார். தமிழ் வளர்ச்சித் துறை, தமுஎகச, கலைஞர் பொற்கிழி, புதிய தலைமுறை நம்பிக்கை நட்சத்திரம் ஆகிய விருதுகளைப் பெற்ற சிறப்புக்கு உரியவர்.

ஆண்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டதே குடும்பம்

''எழுத்தின்மீது ஆர்வம் வந்தது எப்படி?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எங்கள் ஊர், திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள கற்பகநாதர்குளம் எனும் சிற்றூர். கடலோர கிராமம். காவிரியின் கடைமடைப் பகுதி. மருதமும் நெய்தலும் கலந்து மயங்கும் தோற்றம்கொண்ட கிராமம். தென்னந்தோப்புகளும், இடையிடையே வீடுகளும், அல்லிப்பூக்கள் நிறைந்த குளங்களும், நெல் வயல்களும் நிறைந்த செழிப்பான கிராமம். எங்கள் ஊரின் அமைப்பே, என் இளம் வயதில் கற்பனையைப் பெருக்குவதாக அமைந்திருந்தது.

எங்கள் தந்தை, திராவிட இயக்கத்தின் அனுதாபி. திராவிட இயக்கக் கூட்டங்கள் எங்கு நடந்தாலும் சென்றுவிடுவார். திரும்பும்போது அண்ணா, கலைஞர், பாரதிதாசன் புத்தகங்களையெல்லாம் வாங்கி வருவார். பக்கத்து வீட்டு சித்தப்பா ஒருவர் இடும்பா வனம் நூலகத்தில் இருந்து தி.ஜானகிராமன், லஷ்மி, சுஜாதா, அகிலன் போன்றோரின் புத்தகங்களை எடுத்துவந்து தருவார். எனது பதின்பருவம் வயல்களில் மாடு மேய்ப்பது, புத்தகம் படிப்பது என்றே கழிந்தது. இந்த வாசிப்பு தாகம் வளர்ந்துகொண்டே இருந்தது. பின்னர் நான் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில், கவிஞர் கரிகாலனோடு நட்பு ஏற்பட்டது. பின்பு அது காதலாக வளர்ந்தது. அந்தக் காலங்களில் சிறிய அளவில் கவிதைகள் எழுதி, தோழர்களிடம் காட்டுவேன். மணமான பிறகு, எங்கள் வீட்டுச் சூழல் பெரும்பாலும் இலக்கியம் சார்ந்தே இருந்தது. அப்போதுதான் இலக்கியம் குறித்த எனது பார்வையில் மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக மலையாள மொழிபெயர்ப்பு நாவல்களைப் படித்த போது அவை பெரும்பாலும் நான் சிறு வயதில் கழித்த எனது மண்ணையும் உறவு களையும் நினைவுபடுத்தியது.

எங்கள் ஊர் கடலோர கிராமம் என்ப தால், காவிரி பொய்த்தபோது விவசாயம் செய்து வந்தவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். என் அப்பாவும் அண்ணனும் அவ்வாறே சென்றனர். அவர்களது அனு பவங்களைக் கொண்டு 'களம் புதிது’ இதழுக்கு ஒரு சிறுகதை எழுதத் தொடங்கினேன். ஆனால், அது முடியாமல் நீண்டுகொண்டே சென்றது. குறிப்பிட்ட அளவு எழுதிய பிறகு, எழுத் தாளர் சபாநாயகத்திடம் காட்டினேன். அவர், 'தேர்ந்த எழுத்தாளர்போல எழுது கிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள்’ என்றார். அதுதான் எனது முதல் புதினம் 'மாணிக்கம்’.''

''உங்கள் முதல் நாவலின் நாயகனான உங்கள் தந்தை அந்த நாவலைப் படித்து என்ன சொன்னார்?''

''அவர் நேரடியாக என்னிடம் எதையும் சொல்லவில்லை. எனினும், என்னை மகளாகப் பெற்றதன் பலனை அவரின் கண்களில் தெரிந்த பெருமிதத்தில் உணர முடிந்தது. என்னைப் பற்றி பத்திரிகைகளில் எந்தச் செய்தி வந்தாலும், அதைப் பாதுகாப் பாக எடுத்து வைப்பார். நான் எழுத வந்த குறுகிய காலத்திலேயே அவர் மறைந்தது எனக்கு நீங்காத துயரத்தைக் கொடுத்தது.''

''உங்கள் எழுத்துக்கு பால்ய காலம் எப்படி உதவுகிறது? கிராமத்தில் பெண் பிள்ளைகளை அதிகம் வெளியில் விடமாட்டார்களே?''

''பால்யகால நினைவுகளும் பதின்பருவ நினைவுகளுமே எனது பெரும்பாலான படைப்புகளில் வெளிப்பட்டிருக்கின்றன. கதைகள் கொட்டிக்கிடக்கின்ற தெருக்களும் வயல்களும் நிறைந்த ஒரு கிராமத்தில்தான் எனது சிறு பருவம் கழிந்தது. என் சகோ தரிகள், அம்மா, பெரியம்மா, சின்னம்மாக் கள், அத்தைகள் இவர்களது பாடுகளை எழுதினாலே வாழ்நாள் முழுவதும் எழுத லாம். பெண் என்பது எனக்கு எப்போதும் தடையாக இருந்தது இல்லை. என்னை வீட்டில் உள்ளவர்கள் கட்டுப்படுத்தியதும் இல்லை. ஊர்ச் சண்டைகளையெல்லாம் ஆர்வத்தோடு வேடிக்கை பார்த்த சிறுமி நான். இந்த மனநிலைதான் எழுத்தை நோக்கி என்னை அழைத்துச் சென்றிருக்க வேண்டும். என் சிறு வயதில் பெரும்பாலும் பிரசவங்கள் வீடுகளில்தான் நடக்கும். அதை யெல்லாம் பார்க்கக் கூடாது என்று பெரியவர் கள் விரட்டுவார்கள். ஆனாலும், விடாப்பிடி யாக சின்னச் சின்ன பொருட்களை கொடுக்கச் செல்வதைப்போல அந்தக் காட்சிகளை ஆர்வத்தோடு கவனிப்பேன். இந்த அனுபவங்கள் ஆண் பிள்ளைகளுக்குக் கிடைக்காதல்லவா?''

''உங்கள் கதைகளில் இயல்பான மனிதர்களையே உலவவிடுகிறீர்கள். நீங்கள் யதார்த்தத்தைக் கடந்துசெல்ல விரும்பவில்லையா?''

''நான் எழுதத் தேர்ந்தெடுக்கிற விஷயங் களுக்கு யதார்த்தவாத வடிவமே பொருத்தமான தாக இருக்கிறது. தமிழக சூழலில் கல்வியறிவு, விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய பல்வேறு சமூகங்களுக்கு தாமதமாகத்தான் கிடைத்தது. பெண்களுக்கும் அப்படித்தான். இந்த நிலையில் எங்கள் ஊரைப் பற்றியும், எங்கள் மனிதர் களைப் பற்றியும், எங்கள் தெய்வங்களைப் பற்றியும், எங்கள் சடங்குகளைப் பற்றியும் இலக்கியத்தின் பக்கங்களுக்குக் கொண்டுவர வேண்டிய அவசியம் இருக்கிறது.

ஆண்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டதே குடும்பம்

தவிர, எனது புதினங்களில் வரக்கூடிய யதார்த்தம் என்பது, நாம் வாழும் காலத்தில் புலப்படுகிற யதார்த்தம் அல்ல. சமகாலத்துக்கு உகந்த மதிப்பீடுகளுடன் கூடிய புதிய யதார்த் தங்களை எனது படைப்புகள் வழியாக உருவாக்குகிறேன். உதாரணத்துக்கு 'கற்றாழை’ யில் பெண்கள் ஒரு கம்யூனாக வாழ்வதுபோல் காட்டியிருப்பேன். இவையெல்லாம் பரிசோ தனை முயற்சிகள்தானே?''

''நீங்கள் ஒரு புதினத்தை எழுதத் தேர்ந்தெடுக்கும்போது எதை மையமாகக் கொள்கிறீர்கள்? பிரச்னைகளையா, தனி மனிதர்களையா?''

'' 'மாணிக்கம்’ புதினத்தில் விவசாய வாழ்வா தாரத்தை இழந்த மனிதர்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வதை எழுதியிருந்தேன். 'அளம்’ புதினத்தில் உப்பளத்தில் உழைக்கக்கூடிய மக்களின் பாடுகளைச் சொல்லியிருந்தேன். 'கீதாரி’யில் ஆடு மேய்ப்பவர்களுடைய துயரங் களை வெளிப்படுத்தியிருந்தேன். இந்தப் படைப்புகளின் மைய இழை இவை மட்டுமே அன்று. இத்தகைய பின்னணியில் தனி மனிதர்கள் உறவுசார்ந்து எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்களை யும் நெருக்கடிகளையும் பேசியிருக்கிறேன். என் படைப்புகள் ஒரே மையத்தை மட்டும் கொண்டவை அல்ல. அது மனித வாழ்வின் பலதரப்பட்ட இழைகளைத் தன்னுள்ளே கொண்டு செயல்படுபவை.''

''உங்கள் படைப்புகளின் பலம் அதன் மொழி. இன்று வட்டார வழக்கில் எழுதுவது குறித்து பல்வேறு விவாதங்கள் நிகழும் சூழலில், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு இனக்குழுவின் வழக்கை வேறொரு வட்டாரக் குழுவினால் புரிந்துகொள்ள முடியுமா?''

''உலகின் முக்கியப் படைப்புகள் பெரும்பாலும் வட்டார இலக்கியங்களே! இதில் புரிந்துகொள்வது பெரிய பிரச்னை இல்லை. அப்படியென்றால், ஓர் இஸ்லாமியப்  பின்னணி உள்ள படைப்பை வேறு மதத்தினர் படிப்பதில்லையா? அவர்களது பழக்கங்கள், புழங்கும் வார்த்தைகளை விளங்கிக் கொள்வதில்லையா? லத்தீன் அமெரிக்க எழுத்தை தமிழ் மொழிபெயர்ப்பில் சாதாரண வாசகனும் புரிந்துகொள்வதில்லையா? மைய நீரோட்ட வழக்கில், விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை எழுதுவது சிரமம் என்றே கருதுகிறேன். அப்படி எழுதினால் அதன் ஆதார உணர்ச்சியை வெளிப்படுத்தமுடியாமல் போய்விடும். மேலும், வட்டார வழக்கின் அழிவில் ஒரு மொழியின் அழிவும் கலந்தே இருக்கிறது. இப்போது பண்பாட்டு மூலதனம் பற்றி நாம் பேசுகிறோம். வட்டார வழக்கும் ஒரு வகையில் நமது பண்பாட்டு மூலதனம்தான்!''

''உங்கள் படைப்புகளில் நிலம் சார்ந்த காட்சிகள் பிரதானமாகத் தோன்றுவது ஏன்?''

''அகன்ற கடற்கரைப் பரப்புகள், வெள்ளை வெளேரென விரிந்து கிடக்கும் உப்பளங்கள், பல்வேறு வளங்களை வைத்திருக்கும் பசுமை யான காடுகள், மேய்ச்சல் நிலங்கள், தானியங்கள் நிறைந்த விவசாய நிலங்கள், தென்னந்தோப்புகள் என நிலத்தின் தோற்றங்கள் சிறுவயது தொடர்ந்தே என்னை வசீகரித்திருக்கின்றன. என்னைப் பொறுத்த அளவில் நிலமும் பெண்ணும் ஒன்றுதான். இரண்டும் படைக்கும் தன்மை படைத்தவை; கருணை நிறைந்தவை; தன்னலமற்றவை. இதனாலும்கூட எனக்கு நிலத்தின் மீது கவர்ச்சி ஏற்பட்டிருக்கலாம்.''

''உங்கள் கதைகளில் பெண்கள் பற்றிய சித்திரிப்பு மிக முக்கியமானது. பண்பாடு எனும் போர்வையில் பொத்திவைக்கப்படும் பல விஷயங்களை உங்கள் கதைப் பெண்கள் எளிதாகக் கடந்துவிடுகிறார்கள். 'அளம்’ நாவலில் வரும் ராசாம்பாள் தாலியைக் கழற்றி கோயில் உண்டியலில் போட்டுவிடுகிறார். இந்திய / தமிழ்ச் சூழலில் பெண்களுக்கு உகந்த மாற்று மதிப்பீடுகள் உருவாக வேண்டும் என நினைக்கிறீர்களா?''

ஆண்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டதே குடும்பம்

''நிச்சயமாக. இன்னும் விளம்பரங்களில் நமது பெண்கள் ஆண்களை எப்படி கவர்வது என்றே யோசிப்பதாகக் காட்டப்படுகிறது. நமது திரைப்படங்களில் தாலி, குடும்ப அமைப்பைக் கட்டிக் காப்பாற்றும் தாம்புக் கயிறாகச் சித்திரிக்கப்படுகிறது. நாம் பெரியார் நூற்றாண்டைக் கடந்து வந்திருக்கிறோம். பெண் குறித்து முற்போக்கான பெரியாரின் கருத்துக்களைத்தான் நான் எனது படைப்புகளின் வழியாக முன்வைக்கிறேன். பெண்கள் பெரிதளவில் படிக்கத் தொடங்கி யிருக்கிறார்கள். சம்பாதிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். இருந்தாலும், பெண் மீதான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணமே இருக்கிறது. ஆண்களின் விருப்பத்துக்கு இணங்காத பெண்களின் முகம் திராவகத்தால் அழிக்கப்படுகிறது. பாலியல் வன்புணர்வு போன்ற வன்முறைகளுக்கு தொலைக்காட்சிகளின் வழியே விவாதித்து மட்டும் தீர்வு காண முடியாது. இது ஒட்டுமொத்த சமூகத்தின் நோய்க்கூறான மனநிலையின் வெளிப்பாடு. கல்வி தொடங்கி இன்னும் பல்வேறு பண்பாட்டுச் சாதனங்களின் வழியே பெண்ணுக்கு உகந்த புதிய மதிப்பீடுகளை உருவாக்குவதன் மூலமே ஆண்- பெண் சமத்துவத்தை எட்ட முடியும். இன்னும் நமது மொழி, ஒற்றைப் பாலியல் தன்மையிலேயே செயல்படுகிறது. இதை இருபால் தன்மை கொண்டதாக மாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. இவ்வாறே நவீன பெண்ணுக்கான மாற்று மதிப்பீடுகளை, மாற்று அறங்களை 'கண்ணகி’, 'கற்றாழை’, 'ஆறுகாட்டுத்துறை’ வழியாக உருவாக்க முனைந்திருக்கிறேன்.''

''பண்பாட்டு நிறுவனங்கள் பற்றிப் பேசும்போது குடும்பம் பற்றியும் பேசியாக வேண்டும். நமது குடும்பங்கள் பெண்ணுக்கு உரிய பாதுகாப்பை அளிக்கின்றனவா?''

''குடும்பம் என்பதே ஆணின் நலனைப் பாதுகாக்க உருவான ஓர் அமைப்பு. தாய்வழி சமூகத்தின் கல்லறையில் இருந்து முளைத்தது தான் குடும்பம். தந்தை என்கிற உறவும், கணவன் என்கிற உறவும் பெண்ணை இரண்டாம் நிலைக்குத் தள்ளியவை. இதில் இருந்து இன்று வரை பெண் விடுபட முடியவில்லை. மேலைநாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது குடும்ப அமைப்பு பாதுகாப்பானது எனக் கூறுகின்றனர். இந்த வாதம் எந்த அளவு உகந்தது என நாம் ஆராயவேண்டும். அதே வேளையில் குடும்பத்தை உடைப்பது போன்றவை வெறும் கனவு வாதமாகவே அமையும். இன்றைய உலகமயமாக்கல் சூழலில் நமது இளைஞர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலைசெய்யும் பெண்களோடு வாழ்வதற்கான மனப்பயிற்சியை எடுத்து வருகிறார்கள். இது இன்னும் விரிவடைய வேண்டும். ஆண்-பெண் உறவு என்பது பிரிந்துபோவதுடன் கூடிய சுதந்திரமான நிலையில் அமைய வேண்டும். நமது குடும்பங்களில் பெண்களின் பேச்சு மதிக்கப்பட வேண்டும். இன்னும் நமது குடும்பம் ஜனநாயகமடைய வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.''

''உங்கள் கதைகளில் பல இடங்களில் குடி பற்றி வருகிறதே? உழைக்கும் மக்களுக்கு குடி தேவையானதாக இருக்கிறதா? மதுவிலக்கு பற்றிய பரவலான சமூக உரையாடல்கள் நடந்துவரும் நிலையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?''

''குடியை நான் ஓர் ஒழுக்க விஷயமாகக் கருதவில்லை. உடம்பு வலிக்கு குடிப்பது என்றால், பெண்கள் கூட்டம்தான் மதுக்கடை களில் அதிகமாக இருக்க வேண்டும். குடி என்பது கேளிக்கை சார்ந்த விஷயம் என்பது போய், அது சமூகத்தின் நோயாக மாறிவருகிறது. மதுவிலக்கு என்பது நமது காலத்தின் தேவை. அதுவே பெண்களுக்கும் பாதுகாப்பானது.''

''பல தமிழ் எழுத்தாளர்கள் ராமாயணம், மகாபாரதம் போன்று பெருங்கதையாடல்களுக்குள் பயணிக்க, நீங்களோ நாட்டார் மரபின் பின்னணியில் கதை புனைகிறீர்களே?''

''பெருங்கதையாடலில் நம்பிக்கை இல்லாத வர்கள் நாட்டார் மரபில் கதை சொல்வது ஆச்சர்யம் ஒன்றும் இல்லையே! நான் பெருங் கதையாடல்களின் வெளிச்சத்தில் வராத சிறிய மனிதர்களைப் பற்றிப் பேசவே ஆசைப்படு கிறேன். இருந்தபோதும் காரைக்கால் அம்மை யார் பற்றிப் புதிய கண்ணோட்டத்தில் ஒரு புனைவை எழுதும் எண்ணம் இருக்கிறது.''

''2000-க்குப் பிறகு இலக்கியப் போக்கில் பெண் எழுத்து ஒரு புதிய அலையை தோற்றுவித்தது. அதில் பெரும்பாலானோர் கவிதையைத் தேர்ந்தெடுத்தனர். அவர்களது கவிதைகள் உடல் அரசியலை விவாதித்தன. உங்கள் கதைகளோ உடல் உழைப்பைப் பேசுகின்றன. ஒரே காலகட்டத்தில் இருவிதமான போக்குகள் எப்படி?''

''கவிதை மிகவும் நுட்பமான ஓர் இலக்கிய வடிவம். பெண் உடல் வரையறுக்கப்பட்ட அத்துகளுக்குள் வைத்துப் பார்க்கப்பட்ட நிலையில், பெண் கவிகள் அத்துமீறுகின்ற நிலைப்பாட்டை எடுத்தனர். இது இயல்பானது. பெண் உடலின் ஆற்றலை, பெண் உடலின் பல்வேறு பாலியல் மையங்களை பெண்கள் கொண்டாடுவது என்பது, ஏன் பதற்றத்துக்கு உரியதாகப் பார்க்கப்படுகிறது என்று எனக்குப் புரியவில்லை. ஆண்கள், பரந்த மார்புகள் குறித்தும், அவர்களின் சாகசங்கள் குறித்தும் எழுதிய தீராத பக்கங்கள் நம்முன் இருக்கத்தானே செய்கின்றன! பெண் எழுதினால் மட்டும் அதை ஏன் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டும்? நான் புனைகதைகள் எழுதுவதால் பெண் படும் பாடுகளையும் சேர்த்து எழுதுகிறேன். எனது பெண் உடல் குறித்த பார்வை, மூன்றாம் உலக படைப்பாளிக்குரிய பார்வையில் இருந்து தோற்றம் கொள்கிறது.''

''கவிதை எழுத வந்ததுபோல் அதிக அளவில் பெண்கள் உரைநடை தளத்தில் வரவில்லையே..?''

''இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின் றன. நமது பெண்களுக்கு இன்னும் முழுமை யான வெளிப்பாட்டுச் சுதந்திரம் கிடைக்க வில்லை. கவிதை பெரும்பாலும் குறியீடு களாலும் உத்திகளாலும் ஆனவை. நேரடித் தன்மை அற்றவை. இது பெண்களின் விழைவை வெளிப்படுத்த வசதியாக இருக் கிறது. உரைநடையோ தர்க்கம் நிறைந்தது. எளிதில் புரியக்கூடியது. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மேலும், கவிதையைவிட புனைவிலக்கியம் அதிக நேரத்தையும் அதிக உடல் உழைப்பையும் கோருபவை. ஞாயிற்றுக்கிழமையும் பெண் களுக்கு இல்லை என்பார்கள். இத்தகைய சூழலில் இருந்துதான் இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.''

''உங்கள் கணவரும் ஓர் எழுத்தாளர். இந்தத் தாக்கம் பிள்ளைகளிடம் தென்படுகிறதா?''

''என் பிள்ளைகள் சிந்து, சுடர் இருவரும் மருத்துவம் படித்து வருகின்றனர். இரு வருமே தீவிரமாக வாசித்தும் வருகின்றனர். கூடுதலாக, அவர்கள் ஆங்கிலத்திலும் வாசிக்கின்றனர். எழுதும் ஆர்வம் அவர் களுக்கு இருந்தாலும் படிப்புக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டியிருப்பதால், எழுதத் தயக்கம் காட்டுகிறார்கள். அவர்கள் எங்க ளோடு விவாதிப்பதைப் பார்த்தால், எதிர் காலத்தில் எழுதுவார்கள் என்றே தோன்று கிறது. ப்ளஸ்-ஒன் படிக்கும் மகன் கார்க்கிக்கு புகைப்படத் துறையில் நாட்டம் உள்ளது.''

''தமிழ் இலக்கிய சூழல், பெண் எழுத்தை அங்கீகரிக்கிறதா?''

''பெண் எழுத்து என்பது மைய நீரோட்ட இலக்கியத்திலிருந்து விலகிய தன்று. அதைப் பிரித்துப் பார்க்க முடியாது. பெண் எழுத்துக்கு முன் எப்போதைவிடவும் வரவேற்பு இருப்பதாகவே தோன்றுகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில முனகல்கள் கேட்டாலும், முற்போக்கான வாசிப்பாளர்களின் வரவேற்பில் அவை அடங்கிவிடும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism