Published:Updated:

''எழுத்தாளனாக இருப்பதே சமூகப் பொறுப்பின் அடையாளம்தான்!''

நேர்காணல்: தமிழ்மகன் , படங்கள்: கே.ராஜசேகரன்

''எழுத்தாளனாக இருப்பதே சமூகப் பொறுப்பின் அடையாளம்தான்!''

நேர்காணல்: தமிழ்மகன் , படங்கள்: கே.ராஜசேகரன்

Published:Updated:

லகம் முழுதும் படைக்கப்படும் இலக்கியங்களுக்கு ஒரு பொதுத் தன்மை இருக்கிறது. பழி பாவத்துக்கு அஞ்சுகிற, நீதிக்காகப் போராடுகிற, அன்பை வலியுறுத்துகிற... இப்படியான பொது இழையில் பின்னப்பட்டவைதான் அத்தனை இலக்கியங்களும். கதைக்குப் பொதுத்தன்மை இருக்கும்போது கதை மாந்தர்களுக்கு அது பொருந்தாதா என்ன? எழுத்தாளர் மா.அரங்கநாதனின் அத்தனைக் கதைகளிலுமே முத்துக்கருப்பன் என்ற கதாபாத்திரம் முக்கியமாக இடம்பெறும். பணக்காரனாக, ஏழையாக, இளைஞனாக, முதியவராக, முரடனாக, கோழையாக... பல்வேறுவிதமாக முத்துக்கருப்பன் வருவான். கதைக்களம், சொல்லும் விதம் எல்லாவற்றிலும் தனக்கென தனிப்பாங்கை உருவாக்கிக்கொண்டவர் மா.அரங்கநாதன். கடந்த 60 ஆண்டுகளாக எழுதிவரும் அவருக்கு இப்போது வயது 81. அவரைச் சந்தித்தோம். 

''உங்கள் இளமைப் பருவம் பற்றிக் கூறுங்கள்?''

''நாகர்கோவில் பக்கத்தில் திருப்பதிசாரம் என்று ஒரு கிராமம். அதுதான் நான் பிறந்த ஊர். நம்மாழ்வாரும் அங்குதான் பிறந்ததாகச் சொல்வார்கள். ஊரில் இருந்து நான்கு ஐந்து மைல்கள் தூரத்தில் பள்ளிக்கூடம். பாடப் புத்தகங்களைவிட நூலகத்தில் இருந்த புத்தகங்கள் எனக்கு அதிகம் பிடித்திருந்தன. சங்க இலக்கியங்களைப் படித்தேன். எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பி என் வகுப்புத் தோழன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'மகுடபதி’, 'பார்த்திபன் கனவு’, 'கோமதியின் காதலன்’, 'துப்பறியும் சாம்பு’ போன்றவை பற்றித்தான் எங்கள் ஆரம்பகாலப் பேச்சு இருக்கும். அவனுக்கு எஸ்.வி.வி., நாடோடி போன்றோரின் எழுத்து பிடிக்கும். அவன் உறவினர் பி.ஸ்ரீ. ஆனந்தவிகடனில் இருந்தார். அதனால் கிட்டத்தட்ட எல்லா எழுத்தாளர்கள் பற்றியும் உற்சாகமாகப் பேசுவான். அவர்களது படைப்புகள் பற்றி மட்டுமல்லாது, அவர்களை நேரில் தெரிந்தவன்போல் அவனது பேச்சு இருக்கும். கலைமகளில் வந்த 'கொனஷ்டை’யின் நாடகம் பற்றிப் பேச ஆரம்பித்தால், அவர் குமுதினியின் உறவினர் என்ற விவரம் தருவான். மாயாவியின் கதைகள் அபாரம் எனப் புகழ்வான். அவையெல்லாம் கேட்பதற்கு ஈர்ப்பாக இருந்தன.

''எழுத்தாளனாக இருப்பதே சமூகப் பொறுப்பின் அடையாளம்தான்!''

பள்ளிப் படிப்பு முடிந்து, ஓராண்டுக் காலம் தகப்பனாரின் உரக்கடையைப் பார்த்துக்கொண்டிருந்தவன், திடீரென ஒருநாள், 'நான் நாளைக்கு காலேஜ் போகப் போகிறேன்’ என்று சந்தோஷமில்லாமல் தெரிவித்தான்.

நானும் 1952-ம் ஆண்டு ஏப்ரல் மாத வெயிலில் நெல்லை வந்து, ரயிலில் ஏறி, மறுநாள் காலை சென்னை வந்தேன். வேலை கிடைக்க அத்தனை கஷ்டப்படவில்லை. சென்னை மாநகராட்சியில் வேலை கிடைத்தது. அப்போது அரசு அலுவலகங்களில் வேலை நேரம் காலை 11 மணி முதல் மாலை 5 வரை. படிப்பதற்கு நிறைய நேரம் கிடைத்தது. கன்னிமாரா நூலகத் தொடர்பு சென்னை வந்ததுமே ஏற்பட்டுவிட்டது. ஊரில் மாட்டுவண்டி தவிர, எதிலும் பயணம் செய்தது இல்லை. ரயில் பயணம், ட்ராம் பயணம் என்று சென்னை என்னைப் பரவசத்தில் ஆழ்த்தியது. பத்து மைல் நடந்து என்றோ ஓர் ஆங்கிலப் படம் பார்த்த எனக்கு, ஓர் ஆங்கிலப் படம் விடாமல் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வேலையிலிருந்து 1990-ல் ஓய்வுபெற்றேன்.''

''காலம்தோறும் இலக்கியப் படைப்புகள் பல்வேறு மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகின்றன. புவியியல், கலாசார பேதங்களைக் கடந்து படைப்புக்குப் பொதுவான நோக்கம் என ஒன்று எப்படி உருவாகிறது?''

''பசி, காதல், ஏக்கம் போல எல்லா மனிதனுக்குமான அடிப்படையான விஷயங்கள் இருக்கின்றன. அதனால்தான், அதை ஒட்டிய சிந்தனைகளும் ஒன்றுபோலவே இருக்கின்றன.

பொதுவாக, எல்லா மொழியிலேயும் மக்களை அன்பாக இருக்கச் சொல்லி எழுதி வருகிறார்கள். பார்க்க சாதாரண விஷயம்போல இருந்தாலும் இதைத்தான் எல்லா அறிஞர் களும் வேறுவேறுவிதமாகச் சொல்கிறார்கள். புத்தர் சொல்கிறார்... 'கதவைத் திறந்து வை... காற்று வரும்’ என்று. அதாவது, மனதைத் திறந்து வை. அன்பு மலரட்டும் என்கிறார். சரியா? யேசு வருகிறார். 'தட்டுங்கள், திறக்கப்படும்’ என்கிறார். யாரும் மனதைத் திறந்து வைக்கவில்லை என்றாலும், நீங்களாக நாடிச் சென்று அன்பைப் பெறுங்கள் என்பது அதன் பொருள். நம் வள்ளுவனோ, 'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?’ என்கிறார். 'அட, அதற்குத் தாழ்ப்பாளே கிடையாதே!’ என்கிறார் அவர்.

திறக்கச் சொன்னார் ஒருவர்; தட்டச் சொன்னார் ஒருவர்; தாழ்ப்பாளே இல்லை என்கிறார் ஒருவர். பீகாரில் சொன்னவரும், இஸ்ரேலில் சொன்னவரும், தமிழ்நாட்டில் சொன்னவரும் சொன்னது அன்பைத்தான். மூன்றிலும் கதவு என்ற படிமம் கையாளப்பட்டிருக்கிறது. உண்மை பேச வேண்டும், பெற்றோரை மதிக்க வேண்டும், உழைப்பைப் போற்றவேண்டும் என, படைப்பின் நோக்கத்தைப் பொதுமைப் படுத்தலாம். ஆனால், சொல்லும் விதம் வித்தியாசப்படுகிறது. அதை வித்தியாசப்படுத்தத்தான் எழுத்தாளர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள்.''

''தமிழ் படைப்புகளில் அந்தப் போராட்டம் எந்த அளவுக்கு இருப்பதாக நினைக்கிறீர்கள்?''

''அதுதான் சொன்னேனே... தாழ்ப் பாளே தேவை இல்லை என்றதுதான் தமிழின் சிறப்பு! மற்றவர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருங்கள் என்றுதான் சொன்னார்கள். 'யாதும் ஊரே... யாவரும் கேளிர்’ என்றான் தமிழ்ப் புலவன். எல்லோரும் அண்ணன் தம்பியாகப் பழகுங்கள் என்று சொல்வது வேறு. நாம் எல்லோரும் அண்ணன்- தம்பிகள் என்பது வேறு! நான் உங்களிடம் வருகிறேன் என்கிறான். அது கிட்டத்தட்ட கடவுள் நிலைக்குச் சமம். சங்க இலக்கியத்துக்கு முன்பே நமக்கு ஒரு தத்துவம் இருந்ததை அது காட்டுகிறது. இதுதான் வித்தியாசம். சங்க இலக்கியங்கள் உலகத் தரத்தோடு போற்றப்படுவதற்கு இதுதான் காரணம்.''

''அது தற்கால தமிழ் இலக்கியத்துக்கும் பொருந்துமா?''

''நிச்சயமாக. அதில் சந்தேகமே வேண்டாம். 'நவ யுகம்’ என்றால் பாரதி, புதுமைப்பித்தனில் இருந்து பார்ப்போம்.

தி.ஜ.ர., தி.ஜா., மௌனி, லா.ச.ரா., கி.ரா., சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் என்ற பெரும் பட்டியல் இருக்கிறது. இப்போது புதிய உத்திகளில் பலர் எழுதுகிறார்கள். பிரமிப்பாக இருக்கிறது.''

''நீங்கள் சொன்ன பட்டியலில் இருப்பவர்கள் உங்கள் சமகாலத்தவர்கள். இதில் நீங்கள் யாரிடமெல்லாம் நெருங்கிப் பழகியுள்ளீர்கள்?''

''சுந்தர ராமசாமியை நான் சென்னை வருவதற்கு நாலைந்து மாதங்களுக்கு முன்பு சந்தித்தேன். ஜனதா புத்தக நிலை யம் என்றொரு கடை, நாகர்கோவிலில் திறக்கப்பட்டிருந்தது. அங்கே புத்தகங் களைப் புரட்டிக்கொண்டிருந்தபோது, புதுமைப்பித்தன் நினைவு மலர் ஒன்று தயாரிக்கப்போவதாக யாரிடமோ பேசிக்கொண்டிருந்தார். 'புதுமைப்பித்தன்’ என்ற வார்த்தை காதில் விழுந்ததால் நானும் அவர்கள் பேச்சில் கலந்துகொண் டேன். அப்போது அவரை நா.சு.ராமசாமி என்பார்கள்.

அப்புறம் அவரை ஒருதரம் நாகர்கோவில் சென்றிருந்தபோது, கிருஷ்ணன் நம்பியைச் சந்திக்க அவருடைய கடைக்குச் சென்றேன். நம்பி அப்போது, 'சுந்தர ராமசாமிக்குத் திருமணம் நடந்துவிட்டதாகச் சொன்னார். இருவரும் அவரைச் சந்திக்க விரும்புவதைத் தொலைபேசியில் தெரிவித்தோம். அவரே காரில் வந்து அவருடைய கடைக்கு  அழைத்துச் சென்றார். அவருடைய கடையில் சென்று சந்தித்தேன். அவர் என்னைத் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று, குடும்ப உறுப்பினர் களை அறிமுகம் செய்து வைத்தார். எழுதுவதைவிடப் படிப்பதில் அதிக ஆர்வம் காட்டியதால், நிறைய பேரை நான் நேரில் சந்திக்கவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சந்தித்தாலும், நெருங்கிப் பழகிக்கொள்ளவில்லை. எழுதத் தொடங்கி 30 ஆண்டுகளுக்குப் பிற்பாடுதான் க.நா.சு-வைச் சந்தித்தேன். 'இவ்வளவு நாளா எங்கய்யா இருந்தீர்?’ என்றார். 'முன்றில்’ இதழை சிறப்பாசிரியராக இருந்து நடத்திக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டேன். ஆர்வமாக இருந்தார். மூன்றாவது இதழ் வந்தபோது அவர் காலமாகிவிட்டார்.''

'' 'முன்றில்’, கவிதைக்குக் களம் அமைத்துக்கொடுத்த இதழ். அதை நடத்தியபோது ஏற்பட்ட அனுபவங்கள்..?''

''க.நா.சு. இறந்த பின்பு இதழை நானே ஏற்று நடத்த ஆரம்பித்தேன். தமிழின் புதிய எழுத்தாளர்கள் பலர் அதில் எழுதினார்கள். சுகுமாரன், ஜெயமோகன், பாவண்ணன், யூமா.வாசுகி எனப் பல புதிய எழுத் தாளர்கள் பங்களித்தார்கள். பிரபஞ்சன், சா.கந்தசாமி போன்ற பலர் தொடர்ந்து எழுதினார்கள். ஆதிமூலம் அவர்களின் கோட்டோவியங்களை நாங்கள் முழுவதுமாகப் பயன்படுத்தினோம். அவர் மிகுந்த இலக்கிய ஆர்வம் கொண்டவர். 'முன்றில்’ என்ற தலைப்பை எழுதித்தந்தவர் அவர்தான். அவருடன் மருதுவும் எங்களுக்கு ஓவியங்கள் வரைந்தார். அது மாத இதழாக, காலாண்டிதழாக, அரையாண்டிதழாக மாறி மாறி வந்துகொண்டிருந்தது. ஆறு ஆண்டுகளில் 20 இதழ்கள் வெளியாகின. அது 80-களின் இலக்கிய அடையாளமாக இருந்தது. என்னுடைய அடையாளமாகவும் மாறிவிட்டது.

இதழ்கள் கிட்டத்தட்ட புத்தக விமர்சன கட்டுரைகளாலேயே நிறைந்திருந்தன.

''எழுத்தாளனாக இருப்பதே சமூகப் பொறுப்பின் அடையாளம்தான்!''

ஏ.எஸ்.பன்னீர்செல்வம், தமிழவன், நகுலன், வல்லிக்கண்ணன், எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா, டாக்டர் கி.நாச்சிமுத்து, நாகார்ஜுனன், சாரு நிவேதிதா, மோனிகா, லதா ராமகிருஷ்ணன் ஆகியோர் எழுதியிருந்தனர். சரித்திர நாவல் பற்றிய சிந்தனைகளை வல்லிக்கண்ணன் தொகுத்திருந்தார்.

முன்றிலில் கவிதை எழுதியவர்களாக க.நா.சு., நகுலன், பிரமிள், ஞானக்கூத்தன், பழமலய், ஜெயமோகன், பாவண்ணன், பிரம்மராஜன், நீல.பத்மநாபன், நா.விஸ்வநாதன், தேவதேவன், சமயவேல், நீலமணி, கலாப்பிரியா, பா.வெங்கடேசன், ஆர்.ராசகோபால், பொதிகை வெற்பன், நந்தலாலா, ஷங்கன்னா (எஸ்.ராமகிருஷ்ணன்), காசியபன், நஞ்சுண்டேசுவரன், திலகவதி, வசந்தி சுப்ரமணியன், யூமா வாசுகி, பாரதிராமன், ரிஷி ஆகியோரைக் குறிப்பிட வேண்டும்.''

''அறுபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழில் எழுதி வருகிறீர்கள். இந்தக் காலகட்டத்தில் தேசிய, முற்போக்கு, இடதுசாரி, திராவிட இயக்க எழுத்தாளர்கள் வீச்சுடன் எழுதினார்கள். அதில் எந்த முகாமிலும் இணைந்துகொள்ளாமல் விலகியிருந்தீர்கள்... ஏன்?''

''அரசுத் துறையில் பணியில் இருந்தேன். என்னுடைய நாட்டம் எல்லாம் தேடித் தேடிப் படிப்பதாக இருந்தது. சனி, ஞாயிறு தினங்களில் முழுதுமே கன்னிமாரா நூலகத்தில்தான் கிடப்பேன். தினம் ஒரு நூலாவது படித்துவிட வேண்டும் எனக்கு. அதேபோல் ஆங்கிலப் படங்களைத் தேடிச் சென்று பார்ப்பதிலும் ஆர்வம் இருந்தது. எழுத்தாளர்களைத் தேடிச் சென்று சந்திக்காமல் போனதற்கு இதுதான் காரணமாக இருக்கக்கூடும்.''

''கதைகளின் ஆயுள் என்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

'' 'வீடு பேறு’ என்ற கதையில் சான்பிரான்ஸிஸ்கோ நகரில் இருந்து சென்னை திருவல்லிக்கேணிக்கு ஒருவர் வருகிறார். 40 வருடங்களுக்கு முன்னர் தன் தாயார் காலமான அந்த மாடி அறையைப் பார்த்துவிட்டுப் போக வருகிறார். வந்தவர் அந்த வீட்டுக்காரப் பெரியவரிடம் நாள் பூராவும் பேசிக்கொண்டிருந்துவிட்டு, அந்த அறையைப் பார்க்காமலேயே போகிறார்; அந்த வீட்டுக்காரர் ஞாபகப்படுத்தியும்கூட.

அந்தக் கதை பற்றி க.நா.சு-வும், பின்னர் நகுலனும் கேட்ட கேள்வி ஒன்றுதான். 'அந்த அறையை ஏன் பார்க்காமல் போனார்?’ - இதுதான் அவர்கள் இருவரும் கேட்ட கேள்வி. கேட்டுவிட்டு, 'இதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை’ என்றும் சொன்னார்கள். வியப்பான சங்கதி என்னவென்றால், இருவர் கேட்டதும் வெவ்வேறு காலகட்டங்களில்; ஒருவர் கேட்டது மற்றவருக்குத் தெரியாது.

ஒரு கதை வாசகனின் மனதில் சில அலை களை ஏற்படுத்தும். கேள்விகளை ஏற்படுத்தும். அப்படி ஏற்படுத்தும் வரை அந்தக் கதைக்கு உயிர் இருக்கிறது என்று அர்த்தம்.''

''நிறைய ஆங்கிலப் படங்கள் பார்த்ததாகச் சொன்னீர்கள். என்ன மாதிரியான படங்களைப் பார்ப்பீர்கள்?''

'டேல் ஆஃப் டூ சிட்டீஸ்’, 'குட் எர்த்’, 'லே மிர்ரபிள்’, 'சாம்ஸன் அண்ட் டிலைலா’... இப்படித்தான் ஆரம்பித்தேன். நாவலைத் தழுவி எடுத்த படம் என்றால், படத்தைப் பார்த்துவிட்டு வந்து நாவலையும் வாங்கிப் படித்துவிடுவது என் வழக்கம்.

படங்களைப் பற்றி நிறைய எழுதியும் உள்ளேன். 'சினிமா கதிர்’ என்று ஒரு பத்திரிகை வந்துகொண்டிருந்தது. அதில் எலியா கஸான், ஹிட்ச்காக், வில்லியம் ஃபாக்னர், வில்லியம் வைலர் என்று பலரைப் பற்றித் தொடர்ச்சியாக எழுதிவந்தேன். மியூசிக்கல், காமெடி, வெஸ்டர்ன், ஹிஸ்டாரிக்கல், பைபிளிக்கல் எனப் பல பிரிவுகளில் தலைப்புகள் இட்டு எழுதியிருக்கிறேன்.''

''அன்றைய இதழ்கள் சிறுகதை வளர்ச்சிக்கு எப்படி உதவின? நீங்கள் எந்த இதழில் எழுத ஆரம்பித்தீர்கள்?''

''புதுமைப்பித்தன், லா.ச.ராமமிருதம் போன்றவர்கள் கலைமகளில் நிறைய எழுதினார்கள். சக்தி இதழில் நிறைய பேர் எழுதினார்கள். அப்போது வந்த வார, மாத இதழ்கள் அனைத்தையும் எங்கள் ஊர் நூலகத்தில் படிப்பேன். பள்ளிக்கூடம் விட்டால் கதை படிப்பதுதான் வேலை.

பள்ளியில் படிக்கும்போது என் முதல் கதை, கல்கண்டு இதழில் வெளியானது. தமிழ்வாணன் என்னை வாழ்த்தி இரண்டு ரூபாய் சன்மானம் அனுப்பினார். பிறகு பிரசண்ட விகடனில் ஒரு சிறுகதை வந்தது. ஏழு, எட்டு கதைகள் நான் நாகர்கோவிலில் இருந்தபோது எழுதி வெளியானது.''

''உங்கள் கதைகளில் அப்போதே 'முத்துக்கருப்பன்’ இடம்பெற்றுவிட்டனா?''

''இல்லை. 1952-ல் சென்னை வந்தபோதுதான் என் கதைகளில் முத்துக்கருப்பன் இடம்பெற்றான். தென்பகுதியில் முத்துக்கருப்பன் என்ற பெயர் அதிகமாக இருக்கும். பல பகுதியில் அந்தப் பெயரை வைத்திருப்பார்கள். நான் என் கதைகளில் முத்துக்கருப்பன் என்ற பெயரை அதிகம் பயன்படுத்தியதற்குப் பிரத்தியேக காரணம் இல்லை. தமிழகத்தில் எல்லா பகுதியிலும்  

எல்லா சமுதாய மக்களிடமும் அந்தப் பெயர் உண்டு என்பதும் காரணம்.!''

''எழுத்தாளனாக இருப்பதே சமூகப் பொறுப்பின் அடையாளம்தான்!''

''படைப்பாளிகளுக்குச் சமூகப் பொறுப்பு இருக்க வேண்டுமா?''

''சமூகத்தில் எந்தத் தொழில் செய்பவருக்கும்  பொறுப்பு இருக்கத்தான் செய்கிறது. அறிவாளிகள் மட்டும்தான் சமூக பொறுப்பாளர்கள் என்பது இல்லை. எழுத்தாளர்கள் அறிவாளிகளாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. எலியட், எஸ்ரா பவுண்ட் போன்றவர்கள் அறிவாளிகளாகவும் எழுத்தாளர்களாகவும் இருந்தனர். ஓர் இலக்கியவாதியிடம் பெற்ற அனுபவத்தின் மூலமாக ஓர் அறிவாளி தோன்ற முடியும். வள்ளுவர்கூட, 'ஒருவன் பிச்சையெடுத்துதான் உயிர் வாழ வேண்டும் எனில்  இறைவன் இறந்துபோகட்டும்' என்று சொன்னாரே தவிர, எப்படி அந்த வறுமையைத் தீர்க்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால், கார்ல் மார்க்ஸ் அதற்கு வழி சொல்லியிருக்கிறார்.  ஒருவர் சுட்டிக்காட்டுகிறார். ஒருவர் வழி சொல்கிறார். ஓர் எழுத்தாளன் எழுத்தாளனாக இருப்பதே ஒரு சமூகப் பொறுப்புதான்.

ஒரு விதவை மறு கல்யாணம் பண்ணிக்கொண்டு நல்லபடியாக இருந்தாள் என்று ஒரு கதை இருக்கிறது. ஒரு விதவை தன் விதிப்படி தனித்தே வாழ்ந்தாள் என்றும் ஒரு கதை இருக்கிறது. பதிபக்தி என்று சொல்லிவிட்டால், குஷ்டரோகிப் புருஷனுக்கும் அடிபணிய வேண்டும். அதுதான் வைதீகம். நளாயினி கதையைப் படித்தால் தெரியும். இறுதியில், 'இத்தனை நாளாக உன்னிடம் நான் சுகப்படவில்லை. அதனால், நீ இப்போதே ஐந்து மிருக உருவம் கொண்டு வா!’ என்கிறாள். அதனால்தான் நளாயினி அடுத்த பிறவியில் திரௌபதியாகப் பிறந்தாள் என்று மகாபாரதம் சொல்கிறது. அப்படிப் பார்த்தால் நளாயினி கதை பதிபக்தி கதையா, புரட்சிக் கதையா?''

''கவிதையைப் பற்றி உங்கள் கருத்து?''

''ராமனும் சீதையும் காட்டுக்குப் போகிறார்கள். அந்த வரிகள் கம்பனில் இப்படி வரும்...

'வெய்யோன்ஒளி தன்மேனியின் விரிசோதியின் மறைய

பொய்யோவெனும் இடையாளோடும் இளையானோடும்  போனான்

மையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ

ஐயோ இவன்அழகு என்பதோர் அழியா அழகுடையான்!’

அவனுடைய கறுப்பு நிறத்தைப் பார்த்து சூரிய ஒளியே மங்கிப் போனது என்கிறார்.

மை, மரகதம், மறிகடல், மழை முகில்... என ராமனின் நிறத்தை ஒப்புமைப்படுத்துகிறார். ஐயோ என்பதில் கவிஞன் வெளிப்படுகிறான்.''

''பெரியாரைப் பற்றியும், அவர் காலம் பற்றியும் உங்கள் கருத்து?''

''பெரியார் இலக்கியங்களை முற்றிலுமாக எதிர்த்தார். அவர் பேச்சே பல சமயங்களில் இலக்கியமாகத் திகழ்ந்தது.  பெரியார் சமூக சீர்திருத்தக்காரர். பெரியார்போல சமூகக் கருத்துக்களை அழுத்தமாக வேறு யாருமே சொல்லவில்லை. ஆனால், அவர் சொன்னது எல்லாவற்றையும் நாம் பின்பற்ற முடியாது. காந்தியடிகள், 'தினமும் ராம நாமம் சொல்ல வேண்டும்; ராட்டையில் நூற்க வேண்டும்’ என்றார். அது என்னால் முடியாது. அதனால், நான் காந்தியை மதிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. இதெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலத்தின் தேவைகள்!'' 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism