Published:Updated:

விவசாயத்தை விரும்பி செய்கிறோம் !

ஆர்.குமரேசன் படம்: எஸ். சாய் தர்மராஜ்

விவசாயத்தை விரும்பி செய்கிறோம் !

ஆர்.குமரேசன் படம்: எஸ். சாய் தர்மராஜ்

Published:Updated:

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் - திருவள்ளுவர்

''மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளையும் பக்குவப்படுத்த வேண்டும். ஆனால், அதைச் செய்யாமல் விடுவதால்தான் எண்ணற்ற துயரங்களில் சிக்கித் தவிக்கிறது மானுடம். பக்குவப்படுத்துவதற்குப் பதிலாகப் பதப்படுத்துதலே சரி என நினைக்கிறோம். குளிர்சாதனப் பெட்டிக்குள் ஒரு காயை வைத்தால், காய் காயாகவே இருக்கும். குளிர்சாதனப் பெட்டிக்கு வெளியே அந்தக் காயை வைத்தால், அது ஐம்பூதங்களில் கலந்து கனியாக மாறும். காய் காயாகவே இருக்கும் நிகழ்வு பதப்படுத்துதல்; காய் கனியாக மாறும் நிகழ்வு பக்குவப்படுத்துதல். இதில், நாம் பதப்படுத்துதலைச் செய்கிறோமே தவிர, பக்குவப்படுத்தும் பணியைச் செய்யவே இல்லை'' என மனித மனங்களை தன் வார்த்தைகளால் செம்மைப்படுத்தும் பொன்னம்பல அடிகளார், வேதாந்தம் மட்டுமின்றி வேளாண்மையிலும் தடம் பதித்து ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.

குன்றக்குடிக்கு அருகேயுள்ள மேலப்பட்டியில், ஆதீன மடத்துக்குச் சொந்தமான தென்னந்தோப்பு இருக்கிறது. அந்தத் தோப்பில் அதிகாலை வேளையில் தென்னை மரங்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த அடிகளாரைச் சந்தித்தோம். விவசாயம் குறித்துப் பேசும்போது, அடிகளாரின் முகத்தில் உற்சாகம் பொங்குகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விவசாயத்தை விரும்பி செய்கிறோம் !

''மனித மனங்களின் துயர் துடைத்து, மகிழ்ச்சி ஏற்படுத்துவது மட்டுமல்ல ஆன்மிகம். உள்ள சுத்தியோடு எந்தப் பணியைச் செய்தாலும், ஆன்மிகத்தில் கிடைக்கும் ஆனந்த நிலையை அடையலாம். அதிலும், இயற்கையோடு இணைந்து செய்யும் விவசாயத்தில் கிடைக்கும் மனநிறைவுக்கு ஈடு இணையே இல்லை. ஒற்றை வித்து நூற்றுக்கணக்கான கனிகளையும், ஆயிரம் ஆயிரமாய் விதைகளையும் கொடுக்கும் அற்புதம் வேறு எந்தத் தொழிலில் நிகழும்? அறிவியல் உலகம் வான்வெளியைத் தாண்டி தனது தேடலை விரிவுபடுத்திக்கொண்டே இருக்கிறது. ஆனாலும், உணவுக்கான தானியங்கள் இன்னமும் மண்ணில்தான் விளைய வேண்டி இருக்கின்றன. உழவுத் தொழில்தான் நம் ஆதித் தொழில். அதனால்தான், விவசாயத்தை விரும்பிச் செய்து வருகிறோம்'' என்றவர், சிறிது தண்ணீர் பருகிவிட்டுத் தொடர்ந்தார்...

''நமக்குத் தேவையான உணவை நாமே உற்பத்தி செய்யலாமே என்ற எண்ணம் ஏற்பட்டவுடன், ஆதீன மடத்துக்குப் பின்புறம் இருந்த காலி இடத்தைத் தேர்ந்தெடுத்து தோட்டம் அமைத்தோம். குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய        விஞ்ஞானிகளின் ஆலோசனைப்படி, மண்ணைக் கொத்தித் தொழுவுரம், மண்புழு உரம், காளான் கழிவுகளைக் கொட்டி, மீண்டும் மண்ணைக் கொத்தி வளமாக்கினோம். பிறகு, காய்கறிகளை விதைத்தோம். மண்ணுக்குத் தேவையான ஊட்டம் கொடுத்திருந்ததால் காய்களும் கீரைகளும் அற்புதமாக விளைந்தன. தொடர்ந்து, பீன்ஸ் விதைத்தோம். அதுவும் நல்லபடியாக விளையவும், மலைப் பிரதேசங்களில் விளையும் நூக்கல், பீட்ரூட், கேரட் போன்ற காய்கறிகளையும் இங்கு உற்பத்தி செய்யத் தொடங்கினோம். அவையும் சிறப்பாக விளைந்து, மகசூலைக் கொடுக்கின்றன. வெளியூர் போகாமல் மடத்தில் இருக்கும் நாட்களில் காலையில் தோட்டத்துக்கு வந்துவிடுவோம். ராமசாமி என்ற அன்பர் உதவியுடன் இந்தத் தோட்டத்தைப் பராமரித்து வருகிறோம். நமக்கு மட்டுமல்ல, மடத்துக்கு வரும் அன்பர்களுக்கும் அந்தக் காய்கறிகள் உணவாகும் என்பதால், ரசாயனம் சிறிதும் கலக்காமல் முழுக்க முழுக்க இயற்கை வழி விவசாயத்தின் மூலமாகவே காய்கறிகளை உற்பத்தி செய்கிறோம். மனிதருக்கு ஓய்வு தேவைப்படுவதுபோல, மண்ணுக்கும் ஓய்வு தேவை. அதனால், ஆண்டில் மூன்று மாதங்கள் தோட்டத்தில் காய்கறிகள் விதைப்பதை நிறுத்திவிடுவோம். இன்றைக்கு நிலவும் கடும் விலையேற்றத்தைச் சமாளிக்கவும், உடலுக்குக் கொஞ்சம் உழைப்பு கொடுக்கவும், வீடுகளில் காய்கறித் தோட்டங்கள் அமைத்துக் கொண்டால் பணச் சேமிப்புடன், நஞ்சில்லா காய்கறிகளை உண்ணும் வாய்ப்பும் கிடைக்கும்'' என்றார் அடிகளார்.

கேரள மாநிலம் காசர்கோட்டிலுள்ள 'தேசிய தென்னைசார் ஆராய்ச்சி நிலையத்தினர் ஓர் ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர். வறட்சிக்கு இலக்கான பல்வேறு நாடுகளில் வறட்சியைத் தாங்கி வளரும் தென்னை ரகங்களைப் பற்றிய ஆய்வை மேற்கொண்ட அந்தக் குழுவினர், இந்தியாவில் கர்நாடக மாநிலம், தும்கூர் பகுதியில் ஒரு ரகத்தையும், தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் ஆதீன மடத்துக்குச் சொந்தமான இந்தத் தோப்பில் இருக்கும் ஒரு ரகத்தையும் வறட்சியைத் தாங்கி வளரும் ரகமாகத் தேர்ந்தெடுத்தார்கள்.

''இந்த இரண்டு ரகத்தின் மகரந்தங்களைக் கொண்டு, கடும் வறட்சியைத் தாங்கி வளரும் புதிய ரகம் ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள். அப்படி உருவாக்கிய கன்றுகளில் 200 கன்று களை மேலப்பட்டி தோப்பில் நடவு செய்துள் ளோம். 10 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்தாலும், இந்தக் கன்றுகள் வாடாமல் செழுமையாக வளர்ந்து வருகின்றன. சுற்றியுள்ள மரங்கள் நீரில்லாமல் காய்ந்த நிலையிலும் இந்தக் கன்றுகள் பசுமையாகவே உள்ளன. தற்போது இரண்டு வயதான இந்தக் கன்றுகள் இன்னும் சில ஆண்டுகளில் மகசூலுக்கு வரும். இந்த ஆய்வு வெற்றிபெற்றுப் பயன்பாட்டுக்கு வரும்போது, தென்னை விவசாயத்தில் பெரிய மாற்றம் ஏற்படும்'' என்று மகிழ்ச்சியோடு சொன்னவர்,

''படித்த இளைஞர்களின் பார்வை சமீப காலமாக விவசாயத்தின் பக்கம் திரும்பியுள்ளது வரவேற்கத்தக்க மாற்றம். விவசாயிகள் விளை விக்கும் பொருட்களை நச்சு இல்லாமல் விளை விக்க வேண்டும். நுகர்வோர்களும் இயற்கைவழி விவசாயம் மூலம் விளையும் பொருட்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். அரசாங்கம் விளைபொருட்களுக்குக் கட்டுப் படியான விலையை நிர்ணயிக்க வேண்டும். இவை மூன்றும் நடந்தால், விவசாயத்தில் நட்டம் என்ற பதர் குறைந்து, மகிழ்ச்சி என்ற நெல்மணிகள் விளையும்'' என்றபடி ஆசி கூறி விடைகொடுத்தார் பொன்னம்பல அடிகளார்.

இந்தியாவின் தலைசிறந்த விவசாயி!

வறட்சி மாவட்டமான சிவகங்கைக்கு, 'கே.வி.கே’ எனப்படும் வேளாண் அறிவியல் நிலையத்தைக் கொண்டுவந்ததில் அடிகளாரின் பணி மகத்தானது. இதைப் பற்றிப் பேசிய வேளாண் அறிவியல் நிலையத்தின் இணைப் பேராசிரியர் செந்தூர்குமரன், ''விவசாயத்துல எந்தத் தொழில்நுட்பம் புதுசா வந்தாலும், உடனே அதைச் செயல்படுத்திப் பார்க்க ஆசைப்படுவாங்க, சாமி. இந்த மாவட்டத்துக்குன்னு தனியா கே.வி.கே இல்லாம இருந்த நிலையை மாத்தறதுக்காக 50 ஏக்கர் நிலத்தைக் கொடுத்து, அதையும் சாமிதான் கொண்டுவந்தாங்க.

1996-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வர்ற இந்த நிலையத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, மீன்வளம், மனையியல், மண்ணியல் ஆகிய துறைகள்ல இந்தியா முழுக்க அறிமுகப்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்குகிறோம். தண்ணீர்த் தட்டுப்பாடு இருந்த நேரத்துல, மடத்துக்குச் சொந்தமான தோப்புகள்ல சொட்டுநீர்ப் பாசனத்தை சாமி முதன்முதலா அமைச்சாங்க. அதைப் பார்த்துட்டுதான் நிறைய விவசாயிங்க திரும்பவும் தென்னை விவசாயத்துக்கு வந்தாங்க.

புறக்கடைக் காய்கறித் தோட்டத்தை இயற்கை வழி விவசாய முறையில் சிறப்பாகச் செய்தமைக்காக, 2004-05-ம் ஆண்டுக்கான 'இந்தியாவின் தலைசிறந்த விவசாயி’ (க்ருஷி சிரோக் சம்மன்) எனும் விருதை அடிகளாருக்கு வழங்கிக் கௌரவித்திருக்கிறது, மத்திய அரசு!'' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism