Published:Updated:

அபூர்வ கலைஞர்கள் இருவர் !

நினைவுகள்: எஸ்.ரஜத், சின்னராசு முத்தப்பா

அபூர்வ கலைஞர்கள் இருவர் !

நினைவுகள்: எஸ்.ரஜத், சின்னராசு முத்தப்பா

Published:Updated:
அபூர்வ கலைஞர்கள் இருவர் !

பல்சுவை நடிகர் டி.எஸ்.பாலையா, நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி இருவருக்கும் இது நூறாவது ஆண்டு. திரைப்பட உலகில் பல உச்சங்களைத் தொட்ட அந்த அபூர்வ கலைஞர்களைப் பற்றிய சில சுவையான தகவல்களை நாம் தெரிந்துகொள்வோமா?

அபூர்வ கலைஞர் டி.எஸ்.பாலையா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கதாநாயகன், வில்லன், நகைச்சுவை, குணச் சித்திர நடிப்பு என நடிப்பின் சகல பரிமாணங் களிலும் சிகரத்தைத் தொட்ட அபூர்வ கலைஞர் டி.எஸ்.பாலையா. தமிழ் சினிமாவின் பல சாதனையாளர்களுக்கு நடுவே, தமிழ் திரைத்துறை பெற்ற வைரமாக ஜொலித்தவர் அவர். பாலையாவுக்கு இது நூறாவது ஆண்டு! ஆம்... 1914-ம் ஆண்டு, ஆகஸ்ட் 23-ம் தேதியன்று பிறந்தவர் பாலையா. பாலையாவைப் பற்றிய பல சுவையான தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார், பிரபல நடிகரும், பாலையாவின் ஆறாவது மகனுமான ஜூனியர் பாலையா.

''இப்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் (அப்போதைய திருநெல்வேலி மாவட்டம்) உள்ள சுண்டன்கோட்டையில், நாடார் சமூகத் தைச் சேர்ந்த பெற்றோருக்கு மகனாகப்

பிறந்தவர் என் தந்தை பாலையா. திருநெல்வேலியைச் சேர்ந்த சுப்பிரமணியம்பிள்ளை என்பவரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டார். எனவேதான், திருநெல்வேலி சுப்பிரமணியம் பாலையா... அதாவது, டி.எஸ்.பாலையா!

அபூர்வ கலைஞர்கள் இருவர் !

படிப்பில் நாட்டமில்லாமல், நடிகனாக வேண்டும் என்ற ஆசையில் நண்பனுடன் வீட்டை விட்டு ஓடி, மானாமதுரையில் ஹோட்டல், கசாப்புக் கடை என சிலபல வேலைகள் பார்த்து, பின்னர் திருநெல்வேலி ஜெகன்னாத அய்யர் டிராமா கம்பெனியில் சேர்ந்து, நடிகரானார். அந்த கம்பெனியை மூடிவிடவே, பால மோஹன சங்கீத சபாவில், மாதம் 6 ரூபாய் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது அவருக்கு 15 வயது. பின்னர், கந்தசாமி முதலியாரின் நாடக கம் பெனியில் (ராஜாம்பாள் கம்பெனி) சேர்ந்தார். அந்த கம்பெனி 150 தடவைகளுக்கு மேல் மேடையேற்றிய 'பதிபக்தி’ என்ற நாடகத்தில் நடித்து, அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

பிரபல இயக்குநர் எல்லிஸ் ஆர்.டங்கன் இயக்கத்தில், 1936-ம் ஆண்டு ரிலீஸான படம் 'சதிலீலாவதி’. ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் எழுதிய கதை அது. அதில் ஹீரோவாக அறிமுகமானவர் எம்.கே.ராதா. அவரின் தந்தைதான் கந்தசாமி முதலியார். அவரின் சிபாரிசால், அந்தப் படத்தில் நடிக்க என்

தந்தைக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அப்போது அப்பாவுக்கு வயது 22. 'சதிலீலாவதி’ படத்தில் என் தந்தையோடு அறிமுகமான மற்றொரு இளம் நடிகர்தான், பிற்காலத்தில் தமிழகத்தின் சரித்திரத்தையே மாற்றி அமைத்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.

'சதிலீலாவதி’யைத் தொடர்ந்து, எல்லிஸ் ஆர்.டங்கன் அடுத்து இயக்கிய படங்களிலும் என் தந்தைக்கு வாய்ப்புகள் அளித்தார். 'அம்பிகாபதி’ படத்தில் என் தந்தை வில்லனாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து 'தூக்குத்தூக்கி’, 'மதுரை வீரன்’ போன்ற பல படங்களில் வில்லனாக நடித்தார். ஒரு கட்டத்துக் குப் பிறகு குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிப்புக்கு அவரை பிரபல இயக்குநர்கள் பாதை மாற்றினார்கள். 'காதலிக்க நேரமில்லை’, 'என்னதான் முடிவு?’, 'பாவ மன்னிப்பு’ 'பாகப்பிரி வினை’, 'திருவிளையாடல்’, 'ஊட்டி வரை உறவு’, 'தில்லானா மோகனாம்பாள்’, 'பாமா விஜயம்’ என்று அந்த லிஸ்ட் நீளமானது.

அபூர்வ கலைஞர்கள் இருவர் !

மூன்று தலைமுறை நடிகர்களோடு நடித்தவர் என் அப்பா. எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா போன்ற சீனியர்மோஸ்ட் நடிகர்களுக்கும் இவர் வில்லனாக நடித்திருக் கிறார். அதன்பின், எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி போன்றவர்களோடும் நடித்திருக்கிறார். ரவிச்சந்திரன் அறிமுகமான 'காதலிக்க நேரமில்லை’ படத்தில் அப்பாவின் நகைச்சுவை நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

அறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், வி.என்.ஜானகி, புரட்சித் தலைவி ஜெயலலிதா என தமிழ்நாட்டின் ஐந்து முதலமைச்சர்களுடன் அப்பா இணைந்து பணிபுரிந்திருக்கிறார். இது ஒரு சாதனை!

என் தாயாரின் பெயர் பத்மாவதி. எங்கள் குடும்பத்தில் ஆறு ஆண், ஒரு பெண் என ஏழு குழந்தைகள். என் பெற்றோருக்கு நான் ஆறாவது குழந்தை. தாயாரின் இளைய சகோதரி லீலாவதியையும் அப்பா திருமணம் செய்துகொண்டார். சின்னம்மாவுக்கு ஆறு குழந்தைகள். இரண்டு மகன்கள்; நான்கு மகள்கள். எல்லா குழந்தைகளிடமும் அப்பா சமமாக அன்பு காட்டுவார்.

தமிழக அரசு, பல துறைகளில் சிறந்த கலை ஞர்களுக்கு 'கலைமாமணி’ விருது கொடுத்து கௌரவிக்கிறது. இந்த விருது 1959-ல் ஆரம்பிக் கப்பட்டது. விருது ஆரம்பித்த முதல் ஆண்டே அதைப் பெற்றவர்கள் இருவர். ஒருவர், டி.கே. ஷண்முகம்; இன்னொருவர், என் அப்பா!

அபூர்வ கலைஞர்கள் இருவர் !

பெருந்தலைவர் காமராஜர் என்றால் அப்பாவுக்கு அத்தனை உயிர்! தேர்தல் நேரங் களில் காமராஜருக்காகப் பலமுறை பிரசாரம் செய்திருக்கிறார். 1967-ல் நடந்த சட்டசபைத் தேர்தலில் காமராஜர் தோற்றதை என் தந்தை யால் ஜீரணிக்கவே முடியவில்லை. குலுங்கிக் குலுங்கி அழுதார். பெருந்தலைவர் காமராஜர் தங்கியிருந்த வீடும் எங்கள் வீடும் சென்னை, தி.நகரில் அடுத்தடுத்த தெருக்களில் இருந்தன. காமராஜர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து, தோட்டத்தில் இருந்த கார் ஷெட்டில்

உட்கார்ந்து, இரவு 12, 1 மணி வரைகூட, நேரம் போவது தெரியாமல் அப்பாவுடன் பேசிக் கொண்டிருப்பார்.

நடிகவேள் எம்.ஆர்.ராதாவுக்கு அப்பாமீது மிகுந்த மரியாதை உண்டு. 'டிராமாவிலே நான் சீனியர். ஆனா, சினிமாவிலே உங்கப்பாதான் எனக்கு சீனியர்’ என்று எம்.ஆர்.ராதாவே என்னிடம் சொல்லியிருக்கிறார். 'யார்கூட வேணாலும் நடிக்கலாம். ஆனா, உங்க அப்பா கூட நடிக்கும்போது மட்டும் ஜாக்கிரதையா இருக்கணும். எந்த நேரம் என்ன பண்ணுவார்னு யாருக்குமே தெரியாது. அவருக்கு சீன்ல டயலாக் இல்லையேன்னு ஏமாந்துடக் கூடாது. சடக்குனு அந்த நேரத்துக்கு ஏதாவது ஆக்ஷன் பண்ணி பேர் வாங்கிடுவார்’ என்பார் எம்.ஆர்.ராதா. 'பாவ மன்னிப்பு’ படத்தில், சிவாஜி, எம்.ஆர்.ராதா, அப்பா மூவரும் நடிக்கிற காம்பினேஷன் காட்சியை இயக்குநர் பீம்சிங் படமாக்கிக்கொண்டிருந்தார். அப்போது எம்.ஆர்.ராதாவிடம், 'அண்ணே, நீங்களும் நானும் இருக்கிற சீன்லே விளையாடலாம். கணேசனுடைய காம்பினேஷன் வரும்போது மட்டும் நாம கொஞ்சம் அடக்கி வாசிக்கலாம். ஏன்னா, கணேசன் இன்னும் வளரவேண்டிய பிள்ளை!’ என்று கேட்டுக்கொண்டாராம் அப்பா. சிவாஜிமீது அப்பாவுக்கு அத்தனைப் பிரியம்! சிவாஜிக்கும் அப்பாமீது அளவு கடந்த பாசம், பக்தி, மரியாதை!

அபூர்வ கலைஞர்கள் இருவர் !

அப்பா சொந்தமாக ரேஸ் குதிரைகள் வைத்திருந்தார். ஞாயிற்றுக்கிழமைகளில் கிண்டி ரேஸ் கோர்ஸுக்குச் செல்வார்.

சினிமா தயாரிக்கும் ஆசையில், அப்பாவும் தன் பங்குக்குப் படங்கள் தயாரித்து, நிறையப் பணத்தை இழந்திருக்கிறார். 'ஸ்வீகாரம்’ என்றொரு படம்... அப்பா எழுதி, டைரக்ட் செய்த படம். 'சிகப்பு ரோஜாக்கள்’ பாணியில் த்ரில்லர் சப்ஜெக்ட். லலிதா, பத்மினி, ராகினி உள்பட மொத்தம் நான்கு ஹீரோயின்கள். 'அதுல உங்க அப்பா, முழு சூட் போட்டு இங்கிலீஷ்காரன் மாதிரி ஸ்டைலா வருவார். எவ்வளவு அழகாக இருப்பார் தெரியுமா?’ என்று எம்.ஆர்.ராதா புகழ்ந்திருக்கிறார். ஆனால், அந்தப் படம் வெளிவரவில்லை. அதன்பின் அப்பா எடுத்த 'ஓடி விளையாடு பாப்பா’, 'அலாவுதீனும் அற்புத விளக்கும்’ (ஏ.நாகேஸ்வரராவ் நடித்தது), 'நந்தனார்’ மூன்றுமே சுமாராகத்தான் ஓடின.

சென்னை மடிப்பாக்கத்தில், அப்பா 350 ஏக்கர் நிலம் வாங்கி, அங்கு ஒரு பண்ணை வீடு கட்டியிருந்தார். அவருக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் குடும்பதோடு அங்கு சென்று தங்குவோம். எங்களுக்குச் சொந்தமான மடிப்பாக்கம் நிலங்களை, பலர் என் தந்தையை ஏமாற்றி அபகரித்துவிட்டார்கள். 'பாலையா கார்டன்ஸ்’ என்று, எங்கள் சகோதரர்கள், சகோதரி பெயர்களில் அங்கு இன்றைக்கும் தெருக்கள் இருக்கின்றன.

அபூர்வ கலைஞர்கள் இருவர் !

'சுட்டான், சுட்டேன்’ என்ற படத்தில் அப்பாவோடு நானும் சேர்ந்து நடிப்பதாகத் திட்டம். எம்.ஆர்.ராதாவின் மகனாக நானும், அப்பாவின் மகனாக எம்.ஆர்.ஆர்.வாசுவும் நடிக்க காம்பினேஷன் போட்டார் அப்பா. ஆனால், அந்தப் படம் தொடங்கப்படவே இல்லை. காரணம், ஷூட்டிங் செல்ல பெங்களூருக்குக் கிளம்பும்போது, அப்பாவுக்குத் திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. சேத்துப்பட்டில் உள்ள மேத்தா மருத்துவமனையில் உடனடியாகச் சேர்த்து, சிகிச்சை அளித்தோம். அப்பாவின் உடல்நிலை தேறி வந்தது. அந்தச் சமயத்தில், 'சினிமாவுக்காக நீ என்ன பெயர் வெச்சுக்கப் போறே?’ என்று என்னைக் கேட்டார். உடல்நிலை சரியாக இல்லாத நிலையில் ஏன் இப்படி ஒரு கேள்வி கேட்டார் என்று என் மனதுக்குள் ஓர் எண்ணம் எழுந்தது. 'ஜூனியர் பாலையானு வெச்சுக்கப் போறேம்ப்பா!’ என்றேன். 'வெரிகுட்! நான் இறந்துபோன பிறகும் என் பெயர் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கணும்ப்பா!’ என்றார் என் கையைப் பிடித்துக் கொண்டு. அப்பாவுக்குதான் சினிமாமீது எவ்வளவு பற்று!

'கண்டிப்பாகச் செய்யறேன் அப்பா’ என்று உறுதிமொழி கொடுத்தேன். நான் மட்டுமல்ல, இன்று என் மகனும் படங்களில் நடிக்கிறான். அப்பா பெயரை அவனுக்கும் சேர்த்து வைத்து, 'ரோஹித் பாலையா என்றே அவனை அறிமுகப்படுத்தியுள்ளேன். அப்பாவுக்கு நான் கொடுத்த வாக்குறுதிக்காகவும், என்னுடைய ஆத்ம திருப்திக்காகவுமே இதைச் செய் தேன். ஆனால், அதையும் தாண்டி அப்பாவின் பேரும் புகழும் தமிழ் சினிமா உள்ளவரை நீடித்து நிலைத்திருக்கும்!''

நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி!

அந்தக் கால திரைப்படங்களில் நடிப்பு, வசனத்துடன் பாடவும் தெரிந்த நடிகர்களில் கே.ஆர்.ராமசாமி குறிப்பிடத்தக்கவர். அதனால் அவரை 'நடிப்பிசைப் புலவர்’ என்று அண்ணா அழைத்தார். அன்றைய கதாநாயகர்கள் அனைவருடனும் சேர்ந்து நடித்தவர் கே.ஆர்.ராமசாமி. தி.மு.கழகம் தொடங்கிய காலத் திலேயே அதில் இணைந்த முதல் கதாநாயக நடிகர் கே.ஆர்.ராமசாமிதான்.  

அன்று சகலகலா வல்லவராக விளங்கிய பி.யு.சின்னப்பாவுடன் 'கிருஷ்ண பக்தி’ படத் தில் கண்ணனாக நடித்தார். எம்.கே.தியாகராஜ பாகவதருடன் 'ராஜயோகி’ படத்தில் அவரு டைய சகோதரராக நடித்தார். முக்கால்வாசி படம் முடிவடைந்த நிலையில் பாகவதர் சிறை செல்ல நேர்ந்ததால், அந்தப் படம் நின்று போனது.

அபூர்வ கலைஞர்கள் இருவர் !

கே.ஆர்.ராமசாமி மீது அபிமானம் கொண்டவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். எனவே  அவர், ராமசாமிக்காகவே ஒரு நாடக கம்பெனி தொடங்கி, அதில் அவரை நடிக்க வைத்தார். அந்தச் சமயம் கலைவாணர் சிறை செல்ல நேர்ந்ததால், அவரது நாடகக் குழுவுக்கு நடிகர் சகஸ்ரநாமம் மேனேஜராக வந்து சேர்ந் தார். இந்த நிலையில் கே.ஆர்.ராமசாமியும் சகஸ்ரநாமமும் ஒருவரை ஒருவர் அனுசரித்துப் போகாததால், கே.ஆர்.ராமசாமி சொந்தமாக ஒரு நாடக கம்பெனி தொடங்கினார். அவரது குழுவில் சிவாஜி கணேசன் நடித்து வந்தார். இருவரும் நடித்த 'மனோகரா’ நாடகம் பிரசித்தி பெற்றது. மனோகரனாக கே.ஆர்.ராமசாமியும், மனோகரனின் தாயார் பத்மா வதியாக பெண் வேடத்தில் சிவாஜியும் சிறப் பாக நடித்திருந்தனர்.

அறிஞர் அண்ணா, கே.ஆர்.ராமசாமியின் நாடகக் குழுவுக்காக 'வேலைக்காரி’, 'ஓர் இரவு’ போன்ற நாடகங்களை எழுதிக் கொடுத்தார். அவற்றுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே, கோவை ஜூபிடர் பிக்சர்ஸ் சார்பாக 'வேலைக்காரி’ நாடகத்தைத் திரைப்படமாகத் தயாரிக்க அண்ணா முன்வந்தார். அந்தப் படத்தை ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்ட் செய்தார். அதில் ஆனந்தனாக வரும் கே.ஆர்.ராமசாமிக்கு நண்பனாக டி.எஸ்.பாலையா நடித்திருந்தார். படம் அமோக வெற்றி பெற்றது.

அபூர்வ கலைஞர்கள் இருவர் !

பின்னர் ஏவி.எம் நிறுவனம், அண்ணாவின் திரைக்கதை வசனத்தில் 'ஓர் இரவு’ நாடகத்தை அதே பெயரில் படமாகத் தயாரித்தது. இந்தப் படத்தை நீலகண்டன் இயக்கினார். இதில் கே.ஆர்.ராமசாமியுடன் நாகேஸ்வரராவ் நடித்திருந்தார்.

தியாகராஜ பாகவதர் மீது அறிஞர் அண்ணாவும், அண்ணா மீது பாகவதரும் பரஸ்பரம் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். 1947-ம் ஆண்டு, சிறையில் இருந்து பாகவதர் விடுதலையாகி வரும்போது, அவருக்காகவே எழுதி வைத்திருந்த 'சொர்க்க வாசல்’ படத்தில் நடிக்கும்படி பாகவதரைக் கேட்டுக்கொண்டார் அண்ணா. ஆனால், அவரது கதையில் கடவுள் மறுப்பு வசனங்களும் பகுத்தறிவு சிந்தனைகளும் இருக்கும் என்பதால், அந்தப் படத்தை நாசூக்காக மறுத்துவிட்டார் பாகவதர். பின்னர் அந்த வாய்ப்பு கே.ஆர்.ராமசாமிக்குக் கிடைத்தது.

கே.ஆர்.ராமசாமி- சாவித்திரி ஜோடியாக நடித்த 'சுகம் எங்கே?’ படத்துக்கு ஏ.கே.வேலனும் கண்ணதாசனும் கதை வசனம் எழுதியிருந்தனர். அதே நேரத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்த 'அம்மையப்பன்’ படத்துக்கு கருணாநிதி கதை வசனம் எழுதியிருந்தார். இரண்டு திரைப்படங்களின் கதையும் ஒரே மாதிரி இருப்பதாகப் பேசப்பட்டன. ஆனாலும், கதாசிரியர்களும் கதாநாயகர்களும் கருணாநிதிக்கு நண்பர்களாக இருந்ததால், பிரச்னை பெரிதாக வெடிக்க வில்லை. இறுதியில் 'சுகம் எங்கே?’ படமே ஜெயித்தது.

கே.ஆர்.ராமசாமியும் சிவாஜியும் தமிழை நன்றாக உச்சரித்து வசனம் பேசுபவர்கள் என்பதால், ஏ.எஸ்.ஏ.சாமி இயக்கிய 'துளி விஷம்’ படத்தில் இருவரும் நடித்திருந்தனர். இதில் கே.ஆர்.ராமசாமி கதாநாயகனாகவும், சிவாஜி இரண்டாம் கதாநாயகனாகவும் நடித்தார்கள். எம்.ஜி.ஆர் நடித்த 'அரச கட்டளை’ படத்திலும் கே.ஆர்.ராமசாமி சில காட்சிகளில் தோன்றினார்.

எம்.ஜி.ஆருக்கும் கே.ஆர்.ராமசாமிக்கும் கடைசி வரை நல்ல நட்பு இருந்தது. ஒரு சமயம், 'அன்பே வா’ படப்பிடிப்பில் அவர் எம்.ஜி.ஆரைச் சந்திக்க ஏவி.எம் ஸ்டுடியோ

வுக்கு வந்தார். அந்த நேரம் எம்.ஜி.ஆர் உறங்கிக் கொண்டிருப்பதாக ஓர் உதவியாளர் கே.ஆர்.ராமசாமியிடம் சொன்னார். இதற்கிடையில், அதுவரை எடுத்திருந்த 'அன்பே வா’ படத்தின் காட்சிகளை இயக்குநர் திருலோக்சந்தர் தி¬ரயிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரோடு சேர்ந்து கே.ஆர்.ராமசாமியும் படம் பார்த்தார். சிறிது நேரத்தில் எம்.ஜி.ஆர் தூங்கி எழுந்தவுடன், அவரிடம் கே.ஆர்.ராமசாமி வந்த தகவல் சொல்லப்பட்டது. உடனே எம்.ஜி.ஆர், ''என்னை ஏன் உடனே எழுப்பவில்லை? அவரை எப்படிக் காத்திருக்க வைக்கலாம்?'' என்று அந்தப் பணியாளரை கடுமையாக எச்சரித்தார். காத்திருக்க நேர்ந்ததற்கு கே.ஆர்.ராமசாமியிடம் தனது மனப்பூர்வமான வருத்தத்தையும் தெரிவித்தார் எம்.ஜி.ஆர்.

1949-ம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார் அண்ணா. அந்தக் காலகட்டத்தில் தி.மு.க தலைவர்களின் பிரசார பலத்தால்தான் அந்தக் கட்சியே வளர்ந்தது. பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்குத் தேவையான ஸ்பீக்கர், மைக் போன்ற கருவிகளை வாடகைக்கு எடுக்க பொருளாதாரரீதியாக தி.மு.க-வினர் சிரமப்பட்டனர். அப்போது கே.ஆர்.ராமசாமிதான் தன் சொந்தப் பணத்தில் ஸ்பீக்கர் செட், மைக் எல்லாம் விலைக்கு வாங்கிக் கொடுத்தார்.

1957-ம் ஆண்டு பொதுத்தேர்தலில், சென்னையில் நடந்த கூட்டத்துக்குக் கருணாநிதியுடன் கே.ஆர்.ராமசாமியும் வந்திருந்தபோது ஒரு சுவையான சம்பவம்...

அந்தப் பிரசார கூட்டத்தில் 'சொர்க்கவாசல்’ படத்தில் கே.ஆர்.ராமசாமி பாடிய பாடலைப் பாடும்படி அவரிடம் ரசிகர்கள் வற்புறுத்தி னார்கள். அப்போது அவரிடம் கருணாநிதி, ''அந்தப் பாடல் மட்டும் வேண்டாம். மற்ற பாடல்களைப் பாடுங்கள்'' என்று மெதுவாகச் சொன்னார். அவர் எதற்காக அப்படிச் சொல்கிறார் என்று கே.ஆர்.ராமசாமிக்குப் புரியவில்லை. இருந்தாலும், தனது ரசிகர்களுக்காக அந்தக் குறிப்பிட்ட பாடலைப் பாடிவிட்டார். உடனே கூட்டத்தினரிடம் கேலியும் கிண்டலும் எழுந்து, கை கொட்டிச் சிரித்தார் கள். 'ஏன் சிரிக்கிறார்கள்? நன்றாகத்தானே பாடினோம்..!’ என்று குழப்பமடைந்தார் கே.ஆர்.ராமசாமி. அவர் பாடிய பாடல்...

'சீறி வந்த புலி அதனை முறத்தினாலே
சிங்கார மறத்தி ஒருத்தி துரத்தினாளே...’

அந்தத் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளருக்கு புலி சின்னம் தரப்பட்டிருந்தது. இது கே.ஆர்.ராமசாமிக்குத் தெரியாததால், அந்தப் பாடலைப் பாடி விட்டார். பின்னே... சிரிக்க மாட்டார்களா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism