Published:Updated:

ஆஹா...ஹம்பி!

பாரதி மித்ரன் படங்கள்:

ஆஹா...ஹம்பி!

பாரதி மித்ரன் படங்கள்:

Published:Updated:

இன்று கர்நாடகம், ஆந்திரம், தமிழகம் ஆகிய மாநிலங்களில் கவின்மிகு கலைப் படைப்புகளைக் கொண்ட கோயில்கள் எஞ்சியிருப்பதற்கு முக்கியக் காரணம் கிருஷ்ண தேவராயர்.

நமக்குச் சுதந்திரம் கிடைக்கும் வரையிலும், இந்தியா தனித்தனி ராஜ்ஜியங்களாகவும், சமஸ்தானங்களாகவும், ஜமீன்களாகவும், குறுநில மன்னர்களின் ஆட்சிக்குட்பட்டும் இருந்தது. பின்னாளில் ஒன்றிணைக்கப்பட்டு, இன்றிருக்கும் நிலையை அடைந்தது.

ஒரு நாட்டின்மீது வேற்று நாட்டவர் படையெடுத்து வெற்றிகொண்டு, அந்த ராஜ்ஜியத்தைக் கைப்பற்றியவுடன், தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டி ஆட்சி செலுத்தும்  நடைமுறைதான் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்துள்ளது. பெரும்பாலும் இந்து மதத்தைச் சார்ந்த மன்னர்கள் இப்படிப் படையெடுத்து வெற்றிகொண்டபோது, கோயில்களை மட்டும் சிதைக்காமல் அப்படியே விட்டனர். பல மன்னர்கள் தங்களின் பங்குக்கு மேலும் சில பிராகாரங்கள் அமைத்து, சிற்பங்களை உருவாக்கி, அந்தக் கோயில்களை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். சிலர் புதிய ஆலயங்களை எழுப்பி, அவற்றில் தங்களது இஷ்ட தெய்வங்களை பிரதிஷ்டை செய்துள்ளனர். ஆலய நிர்வாகத்துக்கு நிலங்களைத் தானமாக அளித்தனர். நல்ல முறையில் குழுக்களை அமைத்து, அனைத்துக் கோயில்களையும் பராமரித்தனர்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆஹா...ஹம்பி!

கிருஷ்ணதேவராயரது ஆட்சிக்காலத்திலும் அவரது ராஜ்ஜியம் அந்நியர்களின் படையெடுப்புக்குப் பலமுறை உள்ளாகியிருக்கிறது.  அந்நியப் படையினர் 13 மற்றும் 14-ம் நூற்றாண்டுகளில் பாரத பூமிக்குள் நுழைந்து, வரிசையாகப் பல கொள்ளைகள் நடத்தி, மக்களை வதைத்து,  கோயில்களைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி, சிலைகளை மூளியாக்கி, கருவூலத்தில் பாதுகாத்து வைக்கப்பட்ட செல்வங்களையும் கொள்ளையடித்துச் சென்றனர். இப்படிப் படையெடுத்த அந்நியர்களுடன் போரிட்டு நமது பாரம்பரியத்தையும் ஆலயங்களையும் பாதுகாத்த பெருமை கிருஷ்ணதேவராயருக்கு உண்டு.

ஆஹா...ஹம்பி!

அந்நியப் படையெடுப்பில் முழுவதுமாகச் சிதைந்துபோன பின்னரும், தனது அழகையும் கம்பீரத்தையும் முற்றிலுமாக இழந்துவிடாமல் ஆங்காங்கே தனது எழில் முகத்தைக் காண்பித்து வரும் 'ஹம்பி’ என்று வழங்கப்படும் விஜயநகரம், 200 ஆண்டுக் கால வரலாற்றைக் கொண்டது. துங்கபத்திரை நதிக்கரையில் அமைந்துள்ள 'ஹம்பி’ உருவாவதற்குக் காரணமாக இருந்தவர்கள் ஹரிஹரர் மற்றும் புக்கர் என்ற இரு சகோதரர்கள். இவர்கள் அந்நாளில் சிறு படைத் தலைவர்களாக விளங்கியவர்கள். சிருங்கேரி மடத்தைச் சேர்ந்த வித்யாரண்யர் என்ற துறவியின் சக்தி மிகுந்த சொற்களே, இவ்விரு சகோதரர்களின் சாம்ராஜ்ய முயற்சிக்குக் காரணமாக அமைந்தன. அடுத்து வந்த அவர்களது வழித்தோன்றல்களின் ஆட்சிக்குப் பிறகு, ஒரு காலகட்டத்தில் மூன்றாவது குலமான துளுவ குலத்தின் பேரரசராகத் திகழ்ந்தவர்தான் கிருஷ்ணதேவராயர்.

மதுரை வரையிலும்கூட விரிந்து பரந்திருந்த சாம்ராஜ்யத்தைக் கொண்டிருந்த இவரது ஆட்சியின்போது, இந்த 'ஹம்பி’ என்ற எழில் மிகு நகரம்தான் தலைநகரமாக   விளங்கியிருக் கிறது. கண்கவர் கோபுரங்கள், எழில்மிகு சிற்பங்கள், பெரிய கோட்டைகள் ஆகியவற்றை அங்கமாகக் கொண்ட ஹம்பியின் ஒருபுறம் துங்கபத்திரை நதியும், மறுபுறம் விண்ணை முட்டும் மலைகளும் அரணாக அமைந்துள்ளன. இருப்பினும் 15-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தக்காணத்து சுல்தான்களின் படையெடுப்புக்குப் பிறகு கிருஷ்ண தேவராயரின் சாம்ராஜ்யம் வலுவிழந்தது. ஹம்பியும் வீழ்ந்துபோனது.

ஆஹா...ஹம்பி!

ஆனாலும், இன்றிருக்கும் ஹம்பியின் எஞ்சியிருக்கும் கோயில்களையும் பெரிய பெரிய கடைவீதிகளையும் அரசர்கள் கோலோச்சிய அரண்மனையின் மிச்சங்களையும் அரசிகள் வாழ்ந்த மாளிகைகளையும் யானைகள் கட்டப்பட்ட கொட்டடிகளையும், நீர்ப் போக்குவரத்து மேலாண்மைகளையும் பார்க்கும்போது மிகுந்த பிரமிப்பு உண்டாகிறது.  மின்சாரம் கண்டுபிடிக்கப்படாத அக்காலத்திலேயே இயற்கையின் சக்தியைக் கொண்டு, அதற்கேற்ப அவர்கள் உரு வாக்கியிருந்த வசதிகளையும் வாழ்வாதாரங் களையும் வைத்துப் பார்த்தால், நமது முன்னோர்களின் யோசிப்புத் திறனையும், திட்டமிடும் ஆற்றலையும் அவற்றைச் செயல்படுத்தியுள்ள பாங்கையும் வியக்காமல் இருக்க முடியவில்லை.

வாருங்கள், ஹம்பிக்குள் நுழைவோம்!  

வெற்றி நகரம் என்று புரிந்துகொள்ளப்பட வேண்டிய விஜயநகரத்தின் இன்னொரு பெயர் ஹம்பி. கர்நாடக மாநிலத்தில் பெல்லாரி மாவட்டத்தில் இருக்கும் இன்றைய ஹம்பி, பெங்களூரில் இருந்து 335 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. கல்விக்கும் கலைகளுக்கும் பிறப்பிடமாகத் திகழ்ந்த இந்நகரம் 'வித்யா நகரம்’ என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இந்த சாம்ராஜ்யம் உருவாவதற்குக் காரணமாக இருந்த 'வித்யாரண்யர்’ என்ற துறவியின் நினைவாகவே இப்பெயர் அமைந்தது.  

ஆஹா...ஹம்பி!

விரூபாக்ஷீஸ்வரர் ஆலயம்: ஹேம குண்ட மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்தின் மூல மூர்த்தி விரூபாக்ஷீஸ் வரர். பார்வதி தேவி இங்கு பம்பா தேவியாக வணங்கப்படுகிறார். பம்பா தேவி, பிரம்மனின் புதல்வி! இவர் தவம் இருந்து சிவபெருமானைத் திருமணம் செய்துகொண்ட வைபவத்தை ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். துங்கபத்ரா நதியும்கூட பம்பா தீர்த்தம் என்றே வழங்கப்படுகின்றது. பிரதான கோபுரம் 53 மீட்டர் உயரம் கொண்டது. ஒன்பது அடுக்குகளைக் கொண்ட இக்கோயில் இன்று தொல்பொருள் துறையின் வசம் இருந்தாலும், அன்றாடம் பூஜைகள் நடக்கின்றன.  

இங்கு உள்ளே வித்யாரண்யருக்கு சிறிய ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. அர்த்த மண்டபம்,  மகாமண்டபம், ரங்க மண்டபம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த ஆலயத்தில் விதானங்களில் ராமாயணத்தைச் சித்திரிக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. நூறாண்டுகள் பழைமையான இந்த ஓவியங்கள் இன்னமும் பொலிவை இழக்காமல் அழகுடன் மிளிர்வது ஆச்சர்யம் தரும் விஷயம்தான்!

ஆஹா...ஹம்பி!

விரூபாக்ஷர் லிங்க வடிவில் காட்சியளிக் கிறார். பிரதான மூல மூர்த்தியைத் தவிர சரஸ் வதி, லக்ஷ்மி நரசிம்மர் ஆகியோருக்கும் சந்நிதி கள் உண்டு. ராஜ குடும்பத்தினர் மட்டும் ஆலயத்துக்குள் நுழைய பிரத்யேக வாயிலும் உண்டு. நந்தி தேவரை சிலையாக பல இடங்க ளிலும் வடித்துள்ளனர். பிரமாண்டமான பிராகாரங்கள் வெளிநாட்டவர்களைக் கவர்ந்து, கோபுரங்களை அண்ணாந்து பார்த்து ரசிக்க வைக்கின்றன.  

கோயிலில் இருந்து வெளியே வந்தால், 3 மீட்டர் உயரமுள்ள சிவலிங்கத்துக்கென அமைக்கப்பட்ட மண்டபத்தின் மேல்புறம் திறந்தவெளியை நோக்கியிருக்கிறது. அதன் பீடம் எப்போதுமே நீரில் ஆழ்ந்திருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கம் 'படவிலிங்கம்’ என்றழைக்கப்படுகிறது.  

பிரமாண்டமான விநாயகருக்கென அமைந்த மண்டபம், லட்சுமி நரசிம்மர் சிலைகள் ஆகியவை பார்ப்பவர் கண்கவரும் வகையில் அமைந்துள்ளன. 6.7 மீட்டர் உயரமுள்ள லட்சுமி நரசிம்மர் சிலை சில இடங்களில் சிதைக்கப்பட்டிருந்தாலும், அவை மறுபடி சீர்செய்யப்பட்டு முழுமையாகக் காட்சியளிக்கிறது.

ஆஹா...ஹம்பி!

கிருஷ்ணன் கோயிலுக்கு எதிரில் அமைந் துள்ள கிருஷ்ணா பஜாரில் கிருஷ்ண தேவ ராயரது காலத்தில் தங்கம், வெள்ளி, வைரம், முத்து என விலையுயர்ந்த ஆபரணங்கள் விற்கப்பட்டுள்ளன. அவற்றை வாங்குவதற் காகவே வெளிநாட்டவர் இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளனர். எதிரில் அமைந்துள்ள கிருஷ்ணர் கோயிலின் சிற்பங்கள் கண்களுக்கு விருந்தளிப்பவை.  

ஹம்பியில் அமைந்துள்ள கல்லாலான ரதத்தின் பக்கவாட்டில் அமைந்துள்ள சிற்பங் கள், நமது புராணங்களில் வரும் சம்பவங்களைச் சித்திரிக்கின்றன. ஒற்றைக் கல்லை வட்ட வடிவில் செதுக்கி, அந்தச் சக்கரத்தின் நடுவில் அச்சையும் உள்செலுத்தியிருக்கும் நேர்த்தி அபாரம்!

ஆஹா...ஹம்பி!

அரசிகள் குளிக்கும் நீச்சல் குளத்தின் பக்கவாட்டில் அமைந்துள்ள மாடங்கள் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. வெளியே உள்ள சதுர வடிவக் குளத்தில் இருந்து கல்லால் அமைக்கப்பட்ட வாய்க்கால் வழியாக நீரைச் செலுத்தி, நீச்சல் குளம் நிறைக் கப்பட்டிருக்கிறது. அதன் வெளிப்புறத்தில் 'லோட்டஸ் மஹால்’ என்றழைக்கப்படும் அரசிகள் ஓய்வெடுக்கும் மண்டபம் உள்ளது. இன்று குளிரூட்டும் சாதனங்கள் உள்ளன. ஆனால், அன்றே எல்லா புறத்தில் இருந்தும் காற்று உள்ளே வரும்படியும், ஆனால் வெளிப் புறத்தில் இருந்து பார்த்தால் மண்டபத்தின் உள்ளிருக்கும் ராஜ குடும்பத்தினர் வெளியில் தெரியாத வகையிலும் அமைக்கப்பட்டிருக்கும் கட்டடக் கலை நுணுக்கம் கவனிக்கப்பட வேண்டியதாகும்.  

ராஜ வம்சத்தினர் பிரத்யேகமாக பவனி வந்த யானைகளை மட்டும் பராமரிப்பதற்கு பதினோரு கொட்டடிகள் உள்ளன.  

ஆஹா...ஹம்பி!

ராஜ தர்பார் அமைக்கப்பட்டிருந்த உயரமான மேடை மட்டுமே இன்று மிஞ்சியிருக்கிறது. அக்காலத்தில் முற்றிலும் சந்தனத்தாலான தூண்கள் அமைக்கப்பட்டு அலங்காரமாகக் காட்சியளித்த தர்பார், இன்று வெற்று மேடையாகத் தோற்றமளிக்கிறது. இந்த மேடையின் பக்கவாட்டுக் கற்சுவர்களில் போர்க்காலக் காட்சிகள், யானை, குதிரை, ஒட்டகப் படைகள் சிற்பங்களாகச் செதுக்கப் பட்டுள்ளன. சற்றே தொலைவில் பிரமாண்ட மான கல்கதவு பாதி முடிக்கப்பட்ட நிலையில் கிடக்கிறது.

ஆஹா...ஹம்பி!

தொல்பொருள் இலாகாவினர் ஹம்பி நகரம் முழுவதையும் தங்களது பாதுகாப்பில் கொண்டுவந்துவிட்டிருப்பதால், சிதைவுகளா வது மிஞ்சியிருக்கின்றன.  கட்டுப்பாட்டையும் மீறி உள்ளே நுழைந்து கடைகள் அமைத்த ஆக்கிரமிப்பாளர்கள் அகற்றப்பட்டுள்ளனர். கர்நாடக அரசின் சுற்றுலா விடுதிகளும், தனியார் ஹோட்டல்களும் சற்றே தள்ளியிருப் பதன் காரணமாக, இந்த நகரத்தின் சுற்றுப்புறம் தூய்மை கெடாமல் இருக்கிறது.

ஒருமுறை ஹம்பிக்குச் சென்று இரண்டு நாட்களாவது அங்கே தங்கி, ஒவ்வொரு இடத்தையும் சுற்றிப் பார்த்தால், ஆயுளுக்கும்  நினைவு கூர்ந்து ரசிக்கலாம்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism