Published:Updated:

இருட்டு உலகில் ஒரு மணி நேரம் !

என்.மல்லிகார்ஜுனா

இருட்டு உலகில் ஒரு மணி நேரம் !

என்.மல்லிகார்ஜுனா

Published:Updated:

கரன்ட் போனதுமே சட்டென்று மெழுகுவத்தியைத் தேடுபவர்கள் நாம். இருட்டில் ஒரு நிமிஷம்... ஒரே ஒரு நிமிஷம்கூட இருக்க விரும்பாதவர்கள் நாம். நம்மில் பலர் இருட்டைக் கண்டு பயப்படவும் செய்வார்கள். ஆனால், பிறந் ததிலிருந்து வெளிச்சத்தையே பார்க்காதவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும்? நம்மால் யோசிக்க வாவது முடியுமா?

அந்த இருண்ட உலகை, பார்வை உள்ளவர்களுக்குக் காட்டுகிறது 'டயலாக் சோஷியல் என்டர்பிரைசஸ்’ (Dialogue Social Enterprises). .

ஐம்புலன்களில் மிக முக்கியமானது கண். அதன் மூலமே இந்த உலகை நாம் காண இயலும். எனில், பார்வை அற்றவர்கள் இந்த உலகத்தை எப்படி உணர்கிறார்கள்? தொடுதல், ஒலி, வாசனை, ருசிகளின் மூலம்தான் அவர்களால் உலகை அறிய முடியும் அல்லவா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இருட்டு உலகில் ஒரு மணி நேரம் !

ஜெர்மனியைச் சேர்ந்தவர் ஆண்ட்ரஸ் ஹெய்னெக் (Andreas Heinecke). பார்வை இழந்த சக ஊழியர், தன் வேலைகளை எப்படிச் செய்துகொள்கிறார் என்று இவர் ஒருமுறை கவனமாகக் கண்காணித்தார். அவர் என்னென்ன சவால்களை எதிர்கொள்கிறார், எப்படி அவற்றைச் சமாளிக்கிறார் என்று உன்னிப்பாகப் பார்த்து வியந்தார். தாம் கண்டு வியந்த அந்த அனுபவத்தை எல்லோருக்கும் தெரிவிக்க எண்ணினார். ஆனால், வெறுமே வாய்மொழியாகச் சொன்னால் 100 சதவிகிதம் புரியவைக்க இயலாது; அவரவரின் சொந்த அனுபவம் மூலமே இது சாத்தியப்படும் என்று நினைத்தார். எனவே, அதற்காகவே 1988-ல், 'டயலாக் சோஷியல் என்டர்பிரைசஸ்’ என்னும் நிறுவனத்தைத் தொடங்கினார் ஆண்ட்ரஸ் ஹெய்னெக்.

பார்வையற்றவர்களின் இருள் உலகம் எப்படி இருக்கும் என்பதை பார்வை உள்ளோர் அனுபவபூர்வமாகத் தெரிந்துகொள்ள இந்த நிறுவனம் வழிவகை செய்கிறது. இது, பார்வை யற்றோர் மீது இரக்கம் காட்டுவதற்காக மட்டு மல்ல; அவர்களின் கஷ்டங்களைப் புரிந்து கொண்டு அவர்களுக்கேற்ற வேலைவாய்ப்பு களை ஏற்படுத்தித் தர வேண்டும், அவர்களுக்கு உகந்த முறையில் நமது நடைமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே!

டயலாக் சோஷியல் என்டர்பிரைசஸ் அமைத்துள்ள 'டயலாக் இன் தி டார்க்’ (Dialogue in the Dark) பகுதிக்குள் நுழைந்து, எப்படி இருக்கும் என்று பார்க்கலாமா..?

இருட்டு உலகில் ஒரு மணி நேரம் !

நம்மிடம் ஒரே ஒரு கைத்தடி மட்டுமே தரப்படும். ஒளி உலகத்தில் இருந்து கும்மிருட்டான இந்தச் செயற்கை உலகுக்குள் நுழைந்ததும், பார்வையற்ற ஒருவர்தான் நம்மை வரவேற்று, கைடாக இருந்து நம்மை வழிநடத்துகிறார். முதலில், நமது கையில் இருக்கும் கைத்தடி உதவியால், மெதுவாக தரையிலும் பக்கவாட்டிலும் தட்டித் தட்டிச் செல்ல வேண்டும். சற்று தூரம் சென்றதும், காட்டுக்குள் செல்வதுபோல் பறவைகளின் சத்தமும், தண்ணீர் சலசலத்து ஓடும் சத்தமும் கேட்கும். அதற்கேற்ப பக்கத்தில் இருக்கும் செடி கொடிகளைத் தடவிக்கொண்டே செல்ல வேண்டும். பிறகு, ஒரு சிறிய பாலம் வரும். அந்தப் பாலத்தின் மீது ஏறி, மெதுவாக நடந்து செல்ல வேண்டும். ஏனென்றால், அது நடக்கும்போது ஆடும். பாலத்தைத் தாண்டியதும், ஒரு அலமாரியில் சோப், பிரஷ், டூத் பேஸ்ட், ஷாம்பு போன்ற பொருட்களை வைத்திருப்பார்கள். ஒவ்வொன்றையும் நாம் தொட்டு உணர்ந்து, என்ன பொருளென்று கண்டுபிடிக்க வேண்டும். அங்கிருந்து அடுத்த அறைக்குச் சென்றால், அங்கு வரிசையாக  பட்டாணி, உருளை, கீரை, இஞ்சி, பூண்டு என கிழங்குகள், காய்கறி, பயறு வகைகள் யாவும் வைக்கப்பட்டிருக்கும். அவற்றையும் தொட்டுப் பார்த்தே தெரிந்துகொள்ள வேண்டும். அடுத்து, மற்றோர் அறையில் மசாலா பொருட்கள் வரிசை யாக வைக்கப்பட்டிருக்கும். அவற்றை அதனதன் வாசனையை வைத்தே கண்டுபிடிக்க வேண்டும்.

அப்படியே 'டயலாக் இன் தி ஹால்’ பகுதிக்குச் சென்றால், அங்கு சில குளிர்பானங்கள் இருக்கும்.  பணத்தைக் கொடுத்து அதனை வாங்க வேண்டும். இருட்டில் எவ்வளவு பணத்தைக் கொடுத்து வாங்குகிறோம் என்பது ஒரு வித்தியாசமான அனு பவம்தான். குளிர்பானங்களை கலர் பார்க்காமல், வாசனையாலும் சுவையாலும் மட்டுமே தெரிந்து கொள்ள வேண்டும். இதுவும் ஒரு விசித்திரமான அனுபவம்.

கடைசியாக ஓர் அறையில், காந்தி, அமிதாப் பச்சன், டெண்டுல்கர் போன்றோரின் குரல்களை ஒலிபரப்பச் செய்வார்கள். நம்முடன் இருக்கும் கைடு, ''இது யாருடைய குரல்?'' என்று கேட்பார். பிரபலங்களின் குரல்களை அடையாளம் கண்டு, யார் என்று சொல்ல வேண்டும்.

இப்படியாக சுமார் ஒரு மணி நேரம் இருட்டி லேயே இருந்து, பிறகு வெளிச்சத்தில் அடி எடுத்து வைப்போம்.

இந்த சுவாரஸ்யமான அனுபவத்தை நீங்களும் அனுபவித்துப் பார்க்க வேண்டும் என்று ஆவலாக உள்ளதா? எனில், நீங்கள் உடனே ஹைதராபாத்துக்குச் செல்ல வேண்டும். இங்கு 'ஆர்பிட்’ ஷாப்பிங் மாலில், 'எஸ் என்டர்டெய்ன்மென்ட்’ என்னும் நிறுவனம் 2011-ல் தொடங்கப்பட்டது. இந்தியாவில் இங்கே மட்டும்தான் 'டயலாக் இன் தி டார்க்’ இருக்கிறது. இதுவரை 36 ஆயிரம் பேர், இங்கு வந்து வித்தியாச அனுபவத்தைப் பெற்றிருக்கிறார்கள். இந்த அனுபவத்தைப் பெற 8 வயது நிரம்பியிருக்க வேண்டும். இதில் பார்வையற்றோர் 18 பேர் கைடுகளாகப் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு மூன்று மொழிகள் சரள மாகப் பேசத் தெரிந்திருக்கிறது.

இருட்டு உலகில் ஒரு மணி நேரம் !

'டயலாக் இன் தி டார்க்’-ல் இன்னும் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்று 'டெஸ்ட் இன் தி டார்க்’. இதில் வெளிச் சம் எதுவும் இல்லாமல், இருட்டிலேயே உணவு அருந்த வேண்டும். வழக்கமாக ஹோட்டல்களில் வெயிட்டர்கள் நாம் ஆர்டர் செய்த உணவை எடுத்து வருவார்கள். ஆனால், இங்கு அவர்கள் என்ன கொண்டுவருகிறார்களோ அதைத் தான் சாப்பிட வேண்டும். நமக்கு என்ன உணவு என்று சொல்லாமலே நம் மேஜை மீது வைத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். நாம் அந்த உணவைத் தொட்டு, வாசனை ருசி மூலம் தெரிந்துகொண்டு சாப்பிட வேண்டும்.

இன்னொன்று, கார்ப்பரேட் ஊழியர் களுக்காக அமைந்திருக்கும் பிரிவு. சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை இங்கே அழைத்து வந்து, இருட்டு அறையில் சில பயிற்சிகள் தருவார்கள். ஊழியர்களை தனித் தனி குரூப்புகளாகப் பிரித்து, பலூன்களை ஊதி, பக்கத்தில் இருப்பவர்களுக்குக் கொடுத்தனுப்புவது, ஒருவர் தோளின் மீது மற்றவர் கைகளை வைத்து வட்டமாகச் சுற்றுவது எனப் பல்வேறுவிதமான பயிற்சிகள் கொடுப் பார்கள். ''இதன் மூலம் ஊழியர்களின் தைரியம் வளரும்; தன்னம்பிக்கை வளரும். கொடுத்து வாங்குவதிலும் உஷாராக இருப்பார்கள். அது மட்டுமல்ல, சக ஊழியர்களோடு கலந்து ஒற்றுமை யோடு வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை அவர்களுக்குள் இந்தப் பயிற்சிகள் வளர்த்தெடுக்கும்'' என்கிறார்கள் 'டயலாக் இன் தி டார்க்’ அதிகாரிகள்.

தற்போது 40 நாடுகளில், 170 நகரங்களில் 'டயலாக் இன் தி டார்க்’கின் கிளைகள் இருக்கின்றன. இதில்  பார்வையற்றோர் சுமார் 6 ஆயிரம் பேர் வேலை செய்கிறார்கள்.

'டயலாக் இன் தி டார்க்’கின் உள்ளே சென்றால், பார்வையற்றோரால் 'பார்க்க’ முடியும்; அவர்கள் தடுமாற மாட்டார்கள். பார்வை உள்ளவர்களே பார்வையற் றோராக மாறித் தடுமாறுவார்கள்.

நிச்சயமாக இது ஒரு வித்தியாசமான அனுபவம்தான்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism