Published:Updated:

கருணைகூர் கந்தன் திருமுகங்கள்!

கருணைகூர் கந்தன் திருமுகங்கள்!

கருணைகூர் கந்தன் திருமுகங்கள்!

கருணைகூர் கந்தன் திருமுகங்கள்!

Published:Updated:

கட்டுரை: ரா.கிருஷ்ணன்

ஓவியம்: பத்மவாசன்  

"அருவமும் உருவுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரமமாய் நின்றசோதிப் பிழம்பதோர் மேனியாக

கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டும்கொண்டே

ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உகலம் உய்ய!"

- கந்தபுராணம்

ந்த உலகுக்கு எந்நாளும் அருள் புரியப் புறப்பட்ட ஒரு மின்னல் சக்தியே முருகன். 'ஸ்கந்த’ எனும் வடமொழிச் சொல் லுக்கு 'வெளிப்படுதல்’ என்று பொருள். மேகத்தில் இருந்து மின்னல் வெளிப்படுவது போன்று, சிவஜோதியில் இருந்து வெளிப்பட்ட ஆறு பொறிகள் ஆறுமுக ஸ்வாமியாகி 'ஸ்கந்தன்’ எனப் பெயர் கொண்டது.

சிவபெருமானின் கண்களில் இருந்து தீப்பொறிகளாகத் தோன்றி, வானில் இருந்து வாயுவால் சுமந்து வரப்பெற்று, கங்கையில் விடப்பட்டு, சரவணப் பொய்கையில் வளர்ந்த முருகன்... தீ, வான், வாயு, நீர், பூமி எனும் ஐம்பூதத் தொடர்பு உடையவனாகத் திகழ்கிறான். நெருப்பையும் எரிக்கும் ஞானாக்னியாக முருகன் விளங்குகிறான்.

தந்தை - நெருப்பு; தாய் - நீர் (கங்கை); மகனாகிய முருகப் பெருமானோ ஜோதி வடிவினன். இறையுணர்வு எனும் அன்பு நெறி விளக்கத்துக்கு நிலைக்கலனாக இருப்பது மனிதனின் ஆறாவது அறிவு. 'அறிவை அறிவது பொருள் என அருளிய பெருமாள்’ என்பார் அருணகிரிநாதர். ஆமாம்! ஆறறி வுடைய மக்களால் வழிபடப்படும் ஆறுமுக னின் தத்துவம், பல்வாறாகப் பெருகி விளங்கு கின்றது.

கருணைகூர் கந்தன் திருமுகங்கள்!

காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாத்சரியம் எனும் ஆறு பகைவர்களையும் கொன்று, ஞானம் அருள்பவன் ஆறுமுகன். தெய்வத் தன்மை, இனிமை, இளமை, மணம், மகிழ்ச்சி, அழகு எனும் ஆறு தன்மைகளை உடையவனும் ஆறுமுகன்தான். அருள், கல்வி, கொடை, புகழ், வீரம், அன்பு ஆகியவையே ஆறுமுகம் என்றும் கூறுவார்கள். காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைஷ்ணவம், சௌரம் எனும் ஆறு வகை சமயங்களாக விளங்குபவன் தான் ஒருவனே எனக் காட்டுவ தற்காக அவன் ஆறுமுகம் கொண்டிருக்கிறான் என்றும் சிறப்பிப்பார்கள். நான்கு திசைகள் மற்றும் மேலுலகம், கீழுலகம் எனும் ஆறு பக்கங்களிலும் சிதாகாசமாக (சித் ஆகாசம்) கருணை பொலிவதால், அவன் ஆறுமுகன் எனப் போற்றப்படுகின்றான் எனவும் சொல்ல லாம்.

'நமசிவாய’ எனும் திருவைந்தெழுத்துடன் பிரணவமும் சேர்ந்து ஆறு திருமுகமாகக் கொண்டு திருமுருகன் திகழ்கிறான். உல்லாசம், நிராகுலம், யோகம், இதம், சல்லாபம், விநோதம் எனும் ஆறு நிலைகளில்... ஒளி, அருள், தவம், மந்திரம், எளிமை, வியாபகம் ஆகிய வடிவங்களாக அவன் காட்சியளிக்கிறான்.

ஆறுமுகத்தின் விளக்கமாக, 'சிவபெருமானின் ஐந்து முகங்களோடு அதோ முகமும்’ என்ற குமரகுருபர சுவாமிகளின் 'கந்தர் கலிவெண்பா’ வரிகள் வருகின்றன. சிவபெருமானுடைய ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்னும் ஐந்து முகங்களுடன் அதோ முகமும் (கீழ் நோக்கிய முகமும்) சேர்ந்து ஆறுமுகமாக குமரவேள் தோன்றினார். சக்தியின் முகம் ஆறாவது முகமாகும். ஐம்புலனும் ஒன்றப்பெறும் சான்றோர்பால் விளங்கும் சிவசக்தியாகிய ஆறாவது அறிவுக்குப் பொருளாவது அதோ முகம்!

தமிழ்க்கடவுள் என்று போற்றப்பெறும் முருகன், ஒரு காலத்தில் இந்தியா மற்றும் கிழக்காசிய நாடுகளில் முக்கியமாக வணங் கப்பட்ட கடவுள். வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள் மற்றும் இலக்கியங்களிலும் துதிக்கப்பெற்றவன். குப்தர்கள், குஷானர்கள், மௌரியர்கள், யெவதேயர்கள் போன்ற பல பேரரசுகளின் காலத்தில் வணங்கப்பெற்றவன். வட மாநிலங்களில் முருகன் எனும் கார்த்திகேய வழிபாடு மிகச்சிறந்த முறையில் இருந்தமைக்குக் கல்வெட்டுகளும், (அருங்காட்சியங்களில் காணப்பெறும்) சிற்ப வடிவங்களும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

முருகப் பெருமானின் பல்வகை வடிவ நிலைகளைப் பற்றிக் கூறவந்த குமரகுருபரர் 'உருவும் அருவும் உருவருவுமாகிப் பருவ வடிவம் பலவாய்...’ என்று போற்றுவார். இவ்வாறு பல வடிவங்களில் அமைந்த முருகக் கடவுள், ஒருமுகம் முதல் ஆறுமுகம் வரை கொண்டு திருக்கோயில்களில் அருள்பாலிக் கிறான்.

குப்தர் காலத்திய ப்ருஹத்சம்ஹிதை, அக்னி புராணம், விஷ்ணு தருமோத்திரம், சமரங்கள சூத்ரதாரம், மத்ஸ்ய புராணம், சிவ புராணம், தியான ரத்னாவளி, சனத்குமார பிரச்ன குமார தந்திரம், குமார தந்திரம், ஸ்ரீதத்வ நிதி போன்ற புராணம் மற்றும் சிற்ப நூல்களிலும், கந்த புராணம், தணிகைப் புராணம் போன்ற இலக் கியங்களிலும் கந்தனின் கவின்மிகு கோலங் களின் வடிவ அமைப்புகள் பலவாறாகக் கூறப் பட்டுள்ளன. மேலும், யாழ்ப்பாணப் புலவர் நா.கதிரைவேற்பிள்ளை இயற்றிய 'சுப்பிரமணிய பராக்ரமம்’ என்ற நூலில், 88 வகை மூர்த்தி பேதங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் நோக்குமிடத்து, 'முருகன் வடிவங்கள்’ எனும் தலைப்பே கந்த புராணம் போன்று மிக அரிய செய்திகளை உள்ளடக்கி யதாகக் காணப்படுகிறது.

வழிபாட்டுக்கு உரிய முதல் அங்கமாகத் திகழ்வது இறைவனின் திருவுருவம். அவன் தமது பெருங்கருணையினால் வேண்டுவோருக்கு வேண்டும் வடிவங்களில் திருக்காட்சி தந்தருள்கிறான். இறைவனின் திருவடிவங்களில் ஆறுமுகம் கொண்ட ஒரே கடவுள் முருகப் பெருமான் மட்டுமே! ஒரு முகம் முதல் ஆறுமுகம் வரை அமைந்த சிறப்பும் கந்தன் ஒருவனுக்குதான். அதைப் பற்றி விரிவாக அறியும்போது நமக்கு ஆச்சரியமும் பிரமிப்பும் ஏற்படுகின்றன.

ஒரு முகம் கொண்ட ஒப்பற்ற முருகன்!

ஒரு முகம், இரண்டு கரங்களுடன்கூடிய முருகனது வடிவங்களை பல திருத்தலங்களில் காண இயலும். எனினும், குறிப்பாகச் சிலவற்றைப் பார்ப்போம்.

சுப்பிரமண்யர்: முருகன் எந்த வடிவில் அமைந்தாலும் சுப்ரமணியர் என்ற பொதுப் பெயரில் அழைப்பது வழக்கம். ஒரு முகம், இரண்டு கரங்களுடன் (அபயம் மற்றும் இடுப் பில் வைத்த கரங்களுடன்) உள்ள திருவடிவை குமார தந்திரமும், தணிகைப் புராணமும் சுப்பிரமணியர் என்றே கூறுகின்றன. இன்பத் தையே இயல்பாக உடைய சிவப்பரம்பொருளில் இருந்து தோன்றி, அதனின் வேறல்லதாய் விளங்குபவன் முருகன். சு பிரம்ம ந்யம் (ணியம்). அதாவது சு - சுகம், ஆனந்தம்; பிரம்ம - சிவப் பரம்பொருள்; ந்யம் (ணியம்)- அதனின்றும் தோன்றி ஒளிர்வது. சிவபிரானும் முருகனும் தம்முள் ஒருவரேயன்றித் தமக்குள் பேதம் இல்லாதவர் என்று பொருள் பெறப் படும். திருக்கடவூரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்த தலம் திருவிடைக்கழி. இங்கு முருகப் பெருமான் ஒரு முகம், இரண்டு கரங்களுடன் காட்சியளிக்கிறார். இந்த மூர்த்திக்குப் பின்புறம் (கருவறைக்குள் அமைந்த மற்றொரு கருவறையில்) ஸ்ரீபாபநாச பெருமான் சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். இது சிவனும் முருகனும் ஒருவரே எனும் குமாரசிவம்- சிவகுமார தத்துவக் குறிப்பை உணர்த்துகிறது.

ஞான சக்திதரர்: ஞானசக்தி வேலைத் தரித்தவன் என்ற பொருளில் விளங்கும் இந்தத் திருவடிவில், ஞானசக்தி வேலைத் தமது வலக்கையில் ஏந்தி, இடக்கையை இடுப்பில் வைத்திருப்பார். குமார தந்திரம் மற்றும் தணிகைப் புராணம் இவ்வடிவம் பற்றிக் குறிப் பிடுகின்றன. திருத்தணிகை (மூல மூர்த்தி), திருச்சி மாவட்டம் பழுவூர் ஆகிய தலங்களில் இந்தத் திருவடிவைக் காணலாம். திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூரில் வலக்கையில் ஜப மாலையும், இடக்கரத்தில் வஜ்ரசக்தியுமாக விளங்குகிறார் முருகன்.

கந்த சுவாமி: ஸ்கந்தன் என்று வடமொழியிலும், கந்தன் என்று தமிழிலும் முருகன் அழைக்கப் படுகிறான். 'கந்து’ என்றால் நடுதறி; அதாவது, யாவர்க்கும் பற்றுக்கோடாகத் திகழ்பவன். ஐம்புலவயப்பட்ட ஆன்மாவைக் கட்டும் நடுதறியாக கந்தன் விளங்குகிறான். தோள் வலிமை மிக்கவன்; பகைவர் வலிமையை வற்றச் செய்பவன்; தண்டாயுதம் தரித்தவன் என்றெல்லாம் பொருள் கூறுவர். புகழ்பெற்ற பழநி திருக்கோயிலில் விளங்கும் கந்தசுவாமி வலக்கரத்தில் தண்டம் ஏந்தி, இடக்கரத்தை இடுப்பில் அமைத்துக் காட்சி தருகிறார். சுவாமிமலை ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமியின் திருவடிவமும் இத்தகையதே! பிரம்மசாரி என்ற பெயரிலும் இதே அமைப்பில் திகழ்வார். குமார தந்திரம், தணிகைப் புராணம் ஆகியன இவ்வடிவைக் காட்டுகின்றன. கொங்கு நாட்டில் பல கோயில்களில் கந்த சுவாமியின் திருவுருவ அமைப்பே காணப்படுகிறது.

பால சுவாமி: 'என்றும் இளையாய் அழகியாய்’ என்று சங்கத் தமிழ்ப் பாடல் போற்றும் அழகு முருகன், இந்தத் திருவடிவில் ஒரு முகமும் இரண்டு கரங்களும் கொண்டு, வலக்கரத்தில் தாமரையை ஏந்தியபடியும், இடக்கரத்தை இடுப்பில் வைத்தும்... திருவடிகளில் தண்டையணிந்து, கிண்கிணி சதங்கை ஒலிக்கக் காட்சி அளிக் கிறார். இந்தத் திருவடிவம் குறித்தும் குமார தந்திரமும் தணிகைப் புராணமும் விவரிக் கின்றன. சென்னை- பூந்தமல்லி அருகில் உள்ள போரூர் பாலமுருகன் திருக்கோயிலில், வலக்கையில் சக்தி ஆயுதமும், இடக்கையில் நீலோத்பல மலரும் கொண்டு அழகாக விளங்குகிறார். இவரை ஞான சக்தி பாலன் என்றழைக்கலாம்.

திருவள்ளுர் மாவட்டம், பொன்னேரி அருகில் உள்ள ஆண்டார்குப்பம் தலத்தில் பாலமுருகன் இரு கரங்களையும் இடுப்பில் வைத்துக் காட்சி தரு கிறார். இந்தத் திருக் கோலத்தை வேறெங்கும் காண்பது அரிது. நாகர்கோயில் அருகில் தக்கலை செல்லும் வழியில் உள்ள வேளிர்மலை குமாரக் கோயிலில், சுமார் 9 அடி உயரத்தில் இரு கரங்களுடன் குமரன் காட்சி அளிக்கிறார். இடதுபுறம் சுமார் 6 அடி உயரத்தில் வள்ளி நாச்சியார் அழகாக அருள் பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் இத்தகைய வடிவத்தை இங்கு மட்டுமே காண இயலும்.

நடன மூர்த்தி: 'குடை’, 'துடி’, 'பவுரி’ எனும் பலவகைக் கூத்துக்களை ஆடிய குழந்தைக் குமரன், நடன மூர்த்தியாக பஞ்சலோக வடிவில் காட்சி யளிக்கும் எழிற்கோலத்தை, சென்னை அரசினர் அருங் காட்சியகத்தில் கண்டு இன்புற லாம்.

முருக வேடன்: வேட ரூபனாக ஒரு முகம், இரு கரங்களுடன் திகழும் முருகனின் ஐம்பொன் விக்கிரகத்தை சுவாமிமலை திருக்கோயிலில் தரிசிக்கலாம். வள்ளி தினைப்புனத்தில் ஆயலோட்டும்போது முருகன் இப்படி வேடனாகவும் விருத்தனாகவும் வேங்கை மரமாகவும் அரிய காட்சியளிப்பார்.

ஒரு முகமும், நான்கு கரங்களும் கொண்ட முருகன் வடிவங்கள் பல உள்ளன. பொதுவாக, நான்கு கரங்களுடன் விளங்கும் சுப்ரமண்யர் திருக்கோலத்தை பல கோயில்களில் தரிசிக்கலாம். ஸ்ரீதத்வநிதி சிற்ப நூலில் குறிப்பிடும் கந்த ஸ்வாமி கோலமும், தேவசேனாபதி வடிவமும் (சென்னி மலையில் உள்ளது), ஞானசக்தி சுப்ரமண்யர் மற்றும் கிரௌஞ்ச பேதனர் வடிவமும் ஒரு முகம், நான்கு கரங்களுடன் காட்டப்படுகின்றன.

கஜ வாகனர்: அருள் செய்வதற்கும், போர் புரிவதற்கும் முருகவேள் எழுந்தருளும்போது, 'பிணிமுகம்’ என்னும் யானை மேல் வருவார். திருத்தணிகை, சுவாமிமலை, உத்தரமேரூர் போன்ற பழைய தலங்களில் முருகன் சந்நிதியின் முன்புறம் யானை வாகனமே இருக்கக் காணலாம். சிதம்பரம் கீழ்க்கோபுர வாயில் அருகில் உள்ள கஜ வாகனர் வடிவம் அற்புதமானது. திருமருகல் (திருவாரூர் மாவட்டம்), திருமாகறல் (காஞ்சிபுரம் மாவட்டம்) மற்றும் வள்ளிமலை அருகில் உள்ள மேல்பாடி ஆகிய திருக்கோயில்களிலும் கஜ வாகனர் வடிவங்களைத் தரிசிக்கலாம்.

குமார சுவாமி: குமாரன் என்ற சொல் லுக்கு மலப்பிணியை அழிப்பவன் என்று பொருள். கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் காணப்பெறும் குமார சுவாமி சக்தி ஆயுதம், வாள், கோழிக் கொடி, கேடயம் ஆகியவற்றை நான்கு திருக்கரங்களில் ஏந்திக் காட்சி தருகிறார்.

பிரம்மசாஸ்தா: படைப்புத் தொழி லைச் செய்யும் பிரம்மனது செருக்கை அடக்கி, தானே அந்தத் தொழிலை மேற்கொண்ட கோலமே பிரம்ம சாஸ்தா என்றழைக்கப்படுகிறது. சாத்தன் என்றால் தண்டிப்பவன். இக்கோலத்தில் ஒரு முகமும், நான்கு கரங்களும் கொண்டு திகழ்வார். பின் இரு கரங்களில் ஜபமாலை, கமண்ட லம் திகழ, முன் இரு கரங்களில் ஒன்றில் அபய முத்திரை காட்டியும், மற்றொன்றை இடுப்பில் வைத்தும் திகழ்கிறார். தொண்டை மண்டலத்தில் பல்லவர்கள் வழிபட்ட இவ்வடிவை பல கோயில்களிலும் (குமரக்கோட்டம், பாகசாலை, சிறுவாபுரி) பிரதிஷ்டை செய்துள்ளார்கள். வள்ளி கல்யாண சுந்தரர் வடிவிலும் முருகன் பிரம்ம சாஸ்தாவாகவே திகழ்வார். வலது புறம் வள்ளி காட்சியளிப்பாள். இந்த அற்புதமான விக்கிரகத்தை சிறுவாபுரி முருகன் கோயிலில் காணலாம்.

காங்கேயன்: கங்கையின் மைந்தனான காங்கேயன் எனும் கோலத்தில் கோழிக்கொடி, அரணிக்கட்டை, பரசு (கோடரி) பூரண கும்பம் ஆகியவற்றை ஏந்தி, மகர (மீன்) வாகனத்தில் காட்சி அளிப்பார் முருகன். ஸ்ரீதத்வநிதி குறிப் பிடும் இவ்வடிவத்தை கோயில்களில் காண்பது அரிது.

அஜாரூடர்: நாரதர் செய்த வேள்வியில் எழுந்த ஆடு, வடவாக்னிபோலக் கொதித்து எழுந்தது. முருகன் வீரபாகுத் தேவரை அனுப்பி அதனைப் பிடித்துவரச் செய்து, அதன் மேல் அமர்ந்து பவனி வந்தார். ஒரு முகம், நான்கு கரங்களுடன் திகழும் அஜாரூடர் (ஆட்டு வாகனர்) எனும் இந்த அரிய வடிவை, திருப்போரூர் ஸ்ரீகந்தசாமி கோயிலில் கண்டு வணங்கலாம்.

சிகிவாகனர்: மயில் ஊர்திப் பெருமானின் இந்த வடிவம் ஒரு முகமும், நான்கு கரங்களும் கொண்டு திகழும்; இவ்வடிவை, உற்ஸவ மூர்த்தியாகப் பல திருக்கோயில்களில் காணமுடிகிறது.

சரவணபவன்: சரவணப் பொய்கையில் தவழ்ந்ததால் இந்தப் பெயர். ஒரு முகம், ஆறு கரங்கள் கொண்ட இந்தத் திருவடிவம் குறித்து ஸ்ரீதத்வநிதி குறிப்பிடுகிறது. சென்னிமலைக் கோயில் கோஷ்டத்தில் சிம்ம வாக னத்துடன் சரவணன் காட்சி அளிக்கிறார். தலையில் கொண்டையும், இடக் கரம் ஒன்றில் வில் ஏந்தியும், வலக் கரத்தில் ஒன்றை சிம்மத்தின் தலை மீது வைத்தும் அருளும் இந்த அற்புத வடிவம் அபூர்வமான!

வில்லேந்திய வேலன்: திருவண்ணாமலை- ஸ்ரீஅருணாச லேஸ்வரர் திருக்கோயிலில் ஒரு முகம்- ஆறு கரங்களுடன் கூடிய அற்புதமான வில்லேந்திய வேலன் வடிவத்தைக் காணும்போது, 'இவன் கோதண்டராமனோ’ என ஐயம் எழும். வலது காலை மயிலின் முதுகில் வைத்துள்ள இவ்வடிவத்தை 'ஆதி ரகுராம ஜய மாலின் மருகா பெரிய ஆதி அருணாபுரியில் உறைவோனே’ என்று வியந்து பாடுகிறார் அருணகிரிநாதர்.

அமிர்த கர சுப்ரமண்யர்: அற்புதமான இந்தத் திருவடிவை வேதாரண்யம் அருகில் உள்ள கோடிக்கரை குழகர் கோயிலில் தரிசிக்கலாம். ஒரு முகம், ஆறு கரங்களுடன் முருகன் மயில் மேல் அமர்ந்திருக்கும் இந்தத் திருக் கோலத்தில்... முருகப்பெருமானின் இடக்கரம் ஒன்று அமிர்த கலசத்தை ஏந்தியிருக்கும். மற்ற கரங்களில் சக்திவேல், நீலோத்பலம், வஜ்ரசக்தி, தாமரை மலர் ஆகியவை ஏந்தியும், அபய முத்திரை காட்டியும் அருள் கிறார். கழுகுமலையில் அழகுமயிலில் அருள்பாலிக்கும் எழிற்குமரனும் ஒரு முகம் ஆறு கரங்கள் கொண்டு திகழ்கிறான்.

கருணைகூர் கந்தன் திருமுகங்கள்!

இருமுகம் கொண்ட இணையற்ற முருகன்!

சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றி, அக்னி வடிவமாக முருகன் வெளிவந்ததால், இவருக்கு அக்னிஜாதர் என்று பெயர். அக்னியை உடலாக உடைய முருகனை பாவகி என்பர் ('பாவகிகூர் வேல் காக்க’ - சண்முக கவசம்). அக்னிக்கு இரண்டு முகங்கள் உள்ளது போல், இவ்வடிவில் முருகன் இரண்டு முகங்களும் எட்டுக் கரங்களும் கொண்டு திகழ் கிறார்.

தமது திருக்கரங்களில் வஜ்ர சக்தி, கோழிக் கொடி, கேடயம், ஆஞ்ய (நெய்) பாத்திரம் (யாகத் தீயில் நெய்யிடுவதற்குப் பயன் படும்), சுருவம், அட்சமாலை, கத்தி, ஸ்வஸ்திகம் எனும் ஆயுதம் ஆகியவற்றைக் கொண்டவராக இவரை ஸ்ரீதத்வ நிதி விளக்குகிறது. இத்தகைய அற்புதமான வடிவமைப்பை, நின்ற திருக் கோலத்தில் சென்னிமலை ஆண்டவர் கோயிலில் மூலஸ்தான கோஷ் டத்தில் தரிசிக்கலாம். இந்த வடிவில் ஸ்வஸ்திகம், குக்குடம் ஆகியவற்றுக்குப் பதிலாக சக்தி, வஜ்ரம் கொண்டுள்ளது. வேறெங்கும் காண்பதற்கரிய வடிவம் இது.

கருணைகூர் கந்தன் திருமுகங்கள்!

மூன்று முகம் கொண்ட முத்தமிழ் முருகன்!

மூன்று முகங்கள் கொண்ட முருகனைக் காண கர்நாடக மாநிலம், சிக்க பலப்பூர் மாவட் டம், நந்தி ஹில்ஸ் அருகில், நந்தி என்ற ஊருக்குச் செல்ல வேண்டும்.

இங்கு அமைந்திருக்கும் ஸ்ரீபோக நந்தீஸ்வரர் திருக் கோயில் 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்தக் கோயிலில், மகாமண்டபத்தின் வடக்கு தேவ கோஷ்டத்தில், மூன்று முகங்கள், நான்கு திருக்கரங் களுடன் பத்மாசனத்தில் வீற்றி ருக்கிறார் முருகப் பெருமான். இடது காலை மடித்து, வலது காலைத் தொங்கவிட்ட அமைப் பில்... முன் இடது கரம் தொடை மீது இருக்க, வலக்கரம் ஒன்று அபய முத்திரை காட்டுகிறது. பின் இரு கரங்களில் ஒன்று வஜ்ர சக்தியுடனும், மேல் இடக்கரம் கடக ஹஸ்த முத்திரையுடனும் காணப்படுகிறது. பீடத்தின் கீழ்ப்புறம் மயில் உள்ளது. நுளம்ப அரச வம்சத்தின் கலைப் படைப்பாக ஆய்வாளர்கள் கருதும் இவ்வடிவம், மிக மிக அரிதானது. தமிழகத்தில் ஈரோடு அருகில் உள்ள காசிபாளையத்தில் மூன்று முகம் கொண்ட முருகன் வடிவம் உள்ளது.

கருணைகூர் கந்தன் திருமுகங்கள்!

நான்கு முகம் கொண்ட ஞான பண்டிதன்!

நான்கு முகங்களும் எட்டு திருக்கரங்களும் கொண்ட எழில் முருகனின் திருவடிவத்தை ஸ்ரீதத்வநிதி விவரிக்கிறது. இவ்வடிவில் முருகனது வலது கால் பூமியிலும், இடதுகால் சிறிது வளைந்தும் காட்சியளிக்கும். வலது கரம் ஒன்றில் அபய முத்திரையும், ஏனைய கரங்களில் சக்தி ஆயுதம், தாமரை, மலரம்பு ஆகியவையும் திகழும். இடது கரங்களில் ஒன்று வரத முத்திரையுடனும், ஏனையவை வஜ்ர சக்தி, கரும்பு, வில், சூலம் ஆகியவற்றுடனும் திகழும்.

இந்தத் திருவடிவை சௌரபேயர் என்கிறது ஸ்ரீதத்வநிதி. அற்புதமான இந்தக் கோலத்தை சென்னிமலை ஆண்டவர் கோயில் கோஷ்டத்தில் மட்டுமே தரிசிக்கலாம். நான்கு முகங்கள் கொண்ட மற்றுமொரு அரிய முருகன் திருவுருவ அமைப்பை சின்னாளப்பட்டி சதுர்முக முருகன் கோயிலில் தரிசித்து இன்புறலாம்

கருணைகூர் கந்தன் திருமுகங்கள்!

ஐம்முகம் கொண்ட அரன் மகன்!

ஆறுமுகப் பரமன் அரனைப்போல ஐந்து முகங்களுடன் அற்புதக் காட்சித் தரும் தலம் ஓதிமலை. கோவை மாவட்டம், அவினாசியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் புன்செய் புளியம்பட்டிக்கு அருகில் உள்ளது இரும்பறை. இதன் அருகிலேயே ஓதிமலை அமைந்துள்ளது. சுமார் 1,800 படிகள் ஏறி, மலையில் அமைந்துள்ள கோயிலைத் தரிசிக் கலாம். இங்கே நின்ற கோலத்தில் ஐந்து முகங் கள்- எட்டு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார் சிவகுமாரன். இவ்வடிவின் பின்புறம் மயில் உள்ளது. சிவபிரானுக்கு பிரணவப் பொருளை ஓதியவன் முருகன். எனவே, இம்மலைக் கோயிலுக்கு ஓதிமலை என்று பெயர் வந்துள்ளது என்று கூறலாம்.

கருணைகூர் கந்தன் திருமுகங்கள்!

ஆறுமுகம் கொண்ட பேரருளாளன்!

'அஞ்சுமுகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்’ என்பார்கள் பெரியோர்கள். அடியார்களுக்கு அஞ்சுமுகம் (இடுக்கண்) தோன்றும்போது, தனது ஆறுமுகம் கொண்டு ஆறுதல் தந்து அருள் புரிகின்றான் முருகன். ஞானம், ஐஸ்வரியம், திரு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு இறைமைக் குணங்களைத் தமது முகங்களாகக் கொண்டவன் ஆறுமுகம் எனும் சண்முகப் பெருமான். இவ்வடிவில் மயில் மீது அமர்ந்தும், சில தலங்களில் நின்ற கோலத்திலும் அருள் பாலிக்கிறான். பொதுவாக ஆறுமுக வடிவங்கள் பன்னிரு கரங்களுடன் திகழ்ந்தாலும், சில இடங்களில் மாறுபட்டும் திகழும்.

கார்த்திகேயன்: குமார தந்திரமும் தணிகைப் புராணமும் ஆறு முகங்கள், ஆறு கரங்கள் கொண்ட வடிவத்தை கார்த்திகேயன் என்று காட்டுகின்றன. கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள கார்த்திகேயன் நின்ற கோலத்தில் திகழ்கிறார். ஜப மாலை, கட்கம் (கத்தி), வஜ்ரம், கேடயம் ஆகியவற்றையும், மற்றும் இரு கரங்களில் அபயம் - கடக முத்திரை காட்டியும் அருள்கிறான். கும்பகோணம் அருகில் இரண்டாம் ராஜராஜன் கட்டிய ஐராவதேஸ்வரர் கோயிலில் ஆறு முகங்கள், ஆறு கரங்களுடன் கார்த்திகேய வடிவம் திகழ்கிறது.

கிரௌஞ்ச பேதனர்: ஆறு முகங்கள் எட்டு கரங்களையுடைய இவ்வடிவை குமார தந்திரமும் தணிகைப் புராணமும் காட்டுகின்றன. கிரௌஞ்சம் என்பது அன்றில் பறவை. அதன் வடிவாகிய மாய மலையாகத் திகழ்ந்த தார காசுரனை அழித்த வடிவம் இது. ஆறுமுகம், பத்து கரங்களுடன், போர்க்களத்தில் ஒரு கரம் வேலை ஏவிய கோபாவேசத்துடன் காட்சி அளிக்கும் 'சூர்மா தடிந்த சுடர் வேலன் கோலம்’ காண, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் செல்ல வேண்டும். இங்குள்ள மேலைக் கோபுரத்தின் வாயிலின் உட்புறம் இவ்வரிய வடிவத்தைப் பார்க்கலாம்.

தேவசேனாபதி: ஆறு முகங்கள், பன்னிரு கரங்களுடன்... மடியில் தேவயானை அம்மையை அமர்த்தியபடி காட்சியளிக்கும் அருட்கோலம் தேவசேனாபதி. சரவணபவன் என்ற வடிவிலும் ஆறுமுகங்கள்- பன்னிரு கரங்களுடன் திகழ்வார்.

தாரகாரி: சூரபத்மனின் இளைய தம்பி தாரகாசுரனை அழிக்க முருகன் எடுத்த கோலமே தாரகாந்தகன் எனும் தாரகாரி வடிவம். குமார தந்திரமும், தணிகைப் புராணமும் இதனை விவரிக்கின்றன. அருணகிரியாரின் திருப்புகழ்ப் பாடல் பெற்ற விராலிமலையில் விளங்கும் சண்முகர், தாரகாரி வடிவினன் ஆவார். இதேபோல, காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் கந்தப்பெருமான் ஆலயத்தில் மயில்மேல் அமர்ந்த கோலத்தில் திகழும் தாரகாரி வடிவமும் கண்டு இன்புறத்தக்கது.

சேனானி: சூரபதுமனை வெற்றிகொள்ள வேண்டி தேவர்களின் படைகளுக்குத் தலைமையேற்ற முருகன் வடிவமே சேனாதிபதி எனும் சேனானி வடிவம். மௌரியப் பேரரசில், கோட்டையில் சேனானியின் வடிவம் அமைந்த செய்தியை சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் குறிப்பிடுகிறது. ஆறுமுகம், பன்னிரு கரங்கள் கொண்ட இவ்வடிவை சிற்ப நூல்கள் விவரிக்கின்றன. திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் ஸ்ரீபெரியநாயகி அம்மன் ஆலயத்தில் இந்த வடிவைக் கண்டு வணங்கலாம். திருவாசியுடன் மயில்மீது அமர்ந்த அருட்கோலம் நம் கண்ணை விட்டு அகலாது.

கருணையே வடிவாகிய கந்தப் பெருமான் போர்க்களத்தில் சூரபதுமனுக்குத் தமது விசுவரூபத்தைக் காட்டியருளிய செய்தியை கந்தபுராணம் விவரிக்கிறது. முடிவில்லா இத்திருவடிவை நம்மால் கற்பனை செய்ய இயலாது என்றாலும், மதுரை மீனாட்சி யம்மன் கோயிலில் சுவர் ஓவியம் இதனை அழகுறச் சித்திரிக்கின்றது.

கந்தப் பெருமானின் கவின்மிகு கோலங் களை இதுவரை பல கோயில்களில் கண்டு தரிசித்து இன்புற்றோம். முருகப் பெருமான் ஒருவனுக்கே ஒரு முகம் முதல் ஓராறு முகம் வரை பல அற்புத வடிவங்கள் உள்ளன என்பது, அவனது அளவற்ற பேரருளுக்குச் சான்று!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism