Published:Updated:

சென்னையின் பெருமை தி மெட்ராஸ் பிளேயர்ஸ்!

நாடகம்: சாருகேசி,படம்: ப.சரவணகுமார்

சென்னையின் பெருமை தி மெட்ராஸ் பிளேயர்ஸ்!

நாடகம்: சாருகேசி,படம்: ப.சரவணகுமார்

Published:Updated:
சென்னையின் பெருமை தி மெட்ராஸ் பிளேயர்ஸ்!

'தி  மெட்ராஸ் பிளேயர்ஸ்’ - இந்தியாவிலேயே மிகப் பழைமை யான ஆங்கில நாடகக் குழு இது. அறுபதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது இந்தக் குழு. சென்னையில் இது உருவான காலந்தொட்டு இன்று வரை, மேடை நாடக ரசிகர்களை ஆயிரக்கணக்கில் ஈர்த்து வருகிறது என்பதுதான் இதன் பலம்.ஷேக்ஸ்பியர், பெர்னார்ட்ஷா, இப்சன், டென்னஸ் வில்லியம்ஸ், ஆன்டன் செகாவ், ஆர்தர் மில்லர், ஹெரால்ட் பின்டர், சாத்ரே, பீட்டர் ஷாஃபர், ஆஸ்கார் வைல்ட், நீல் சைமன், இங்மார் பெர்க்மன், பீட்டர் உஸ்தினாவ் முதலிய ஆங்கில ஆசிரியர்களின் நாடகங்களை மேடையேற்றி வந்தவர்கள், காலப்போக்கில் இந்திய நாடக ஆசிரியர்களான விஜய் டெண்டுல்கர், கிரீஷ் கர்னாட், பாதல் சர்க்கார், உத்பல் தத், சாய் பராஞ்சபே, பக்வான் கித்வானி, விக்ரம் சேத், சேதன் பகத், ஆர்.கே.நாராயண் என இன்னும் பலரின் படைப்புகளையும் மேடைக்குத் தந்தார்கள். பின்னர் கல்கி, இந்திரா பார்த்தசாரதி, கோமல் சுவாமிநாதன், சிவசங்கரி போன்ற தமிழ் எழுத்தாளர்களின் நாடகங்களையும் ஆங்கிலத்துக்குக் கொண்டுசென்றது ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

இந்த அமைப்பின் பின்னணியில் இருப்பவர்களின் பட்டி யலைப் பார்த்தால், ஒரு குட்டி இந்தியாவே இருப்பது புரியும். இந்த நாடகக் குழுவோடு வளர்ந்தவர் பி.சி.ராமகிருஷ்ணா. பல திரைப்படங்களிலும் நடித்திருப்பவர். விளம்பரங்கள், டாக்குமென் டரிகள், மெட்ராஸ் யூத் காயர் இசைக்குழு என அத்தனையிலும் தன் குரல் வளத்தால் பெயரைச் சம்பாதித்துக்கொண்டவர்.  அமால்கமேஷன்ஸ் அதிபர் அனந்த ராமகிருஷ்ணனின் குடும்பத்தைச் சேர்ந்தவர் சங்கர் சுந்தரம். இவருக்குத் தமிழ் பேசத் தெரியும்; ஆனால், எழுதப் படிக்கத் தெரியாது! இவரும் பல திரைப்படங்களிலும் நடித்து வருபவர். சமீபத்தில் 'அரிமா நம்பி’யில் இவருடைய நடிப்பைப் பார்த்திருக்கலாம்.  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னையின் பெருமை தி மெட்ராஸ் பிளேயர்ஸ்!

''மெட்ராஸ் பிளேயர்ஸின் தோற்றம் 1955. அப்போதிருந்த ஐரோப்பிய டிரமாடிக் சொசைட்டியில் சில இந்தியர்களும் இருந் தார்கள். பிரிட்டிஷ் இயக்குநர்கள் நாடகங்களை இயக்கினார்கள்.  ஒதெல்லோ, ட்வெல்த் நைட் என்று நாடகங்கள் நடந்துகொண்டிருந்தன.  இவை பிரிட்டிஷ் கவுன்ஸிலின் கலாசார அமைப்பின் சார்பில் நடந்தன. பிறகு, மெட்ராஸ் பிளேயர்ஸிடம் நாடகக் குழுவைத் தந்துவிட்டுப் போய்விட்டார்கள். புதிதாக எதற்கு ஒரு நாடகக் குழு ஆரம்பிக்க வேண்டும் என்றுதான் 'மெட்ராஸ் பிளேயர்ஸ்’ என்ற பெயரிலேயே அப்போதிருந்த உறுப்பினர்களு டன் மீண்டும் நாடகங்கள் போடத் தொடங்கி னோம். நாடகங்கள் தொடர்ந்தன.  நாங்களும் வளர்ந்தோம்!'' என்று பிள்ளையார் சுழி போட்ட கதையைப் பகிர்ந்துகொண்டார் பி.சி. ராமகிருஷ்ணா.  

''அப்போது உங்களுடன் பிரிட்டிஷ்காரர் களும் நடித்தார்களா?''

''ஆமாம். ஆரம்பத்தில் அவர்களும் இந்தக் குழுவில் இருந்தார்கள். அப்புறம் அவர்கள் இங்கிலாந்துக்குச் சென்றுவிட்டார்கள்!''

சென்னையின் பெருமை தி மெட்ராஸ் பிளேயர்ஸ்!

மெட்ராஸ் பிளேயர்ஸைத் தொடங்கிய வர்கள் முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸின் நெருங்கிய நண்பர்களான பட்டாபிராம ரெட்டியும் அவர் மனைவி சினேகலதா ரெட்டியும்தான். யு.ஆர்.அனந்த மூர்த்தியின் 'சம்ஸ்காரா’ என்ற சர்ச்சைக்குரிய திரைப்படத்தைத் தயாரித்தவர்கள். எமர் ஜென்சியின்போது சிறையில் அடைக்கப்பட் டார்கள் அவர்கள். சினேகலதா ரெட்டி அப்போது மரணம் அடைந்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. அமெரிக்க கான்சல் அலுவலகத் தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த, கோபி என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட நடிகர் வி.கோபாலகிருஷ்ணனும் இந்த மெட்ராஸ் பிளேயர்ஸ் ஆரம்பிக்கப்பட்ட கால கட்டத்தில் இணைந்த முக்கியமான நபர்.  

''1950 முதல் 60 வரை ரஷ்யன், செக்கோஸ் லோவேக்கியன், ஃபிரெஞ்ச், ஜெர்மன், இங்கி லீஷ் எனப் பல நாடகங்களைப் போட்டுக் கொண்டிருந்தோம். இந்த நாடகங்கள் எல்லாம் ஆங்கில மொழியில் எங்களுக்குக் கிடைத்தன. எழுபதுகளில் புகழ்பெற்ற நடிகர், நாடகாசிரியர் கிரிஷ் கர்னாட் 'ரோட்ஸ் ஸ்காலர்ஷிப்’ பெற்று இங்கிலாந்தில் படித்து, பின்பு இங்கே சென்னையில் ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி பிரஸ்ஸில் அதிகாரியாகப் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு எங்கள் கோணம் சற்று மாறியது. ஆங்கில நாடகாசிரியர்களை விட்டுவிட்டு, பாதல் சர்க்காரின் 'ஏவம் இந்திரஜித்’ நாடகம் போட்டோம். பிறகு கிரிஷ், கன்னடத்தில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து, இயக்கவும் செய்தார். அப்புறம் யயாதி, ஹயவதனா, நாகமண்டலா என்று அவருடைய நாடகங்கள் சக்கைப்போடு போட்டன. மெட்ராஸ் பிளேயர்ஸுக்கு இது ஒரு மைல் கல் என்றே சொல்ல வேண்டும்!'' என்றார் பி.சி.ஆர்.

''விஜய் டெண்டுல்கரின் 'அமைதி, கோர்ட் ஆரம்பமாகிவிட்டது!’, 'கமலா’, 'சகாராம் பைண்டர்’, 'காஷிராம் கொத்வால்’ எல்லாம் எழுபதுகளில் மேடை ஏற்றப்பட்டவை. ஆங்கிலப் பேராசிரியை அம்மு மாத்யூ எங்க ளுக்கு நிறைய ஆதரவு தந்தார். நாடகங்களை இயக்கவும் செய்தார். இந்தியப் பின்னணியில் ஆங்கில நாடகங்களை அளிப்பது என்ற ஒரு குறிக்கோளும், கண்ணோட்டமும் அப்போது நிலைபெற்றன.

சென்னையின் பெருமை தி மெட்ராஸ் பிளேயர்ஸ்!

சபீதா ராதாகிருஷ்ணாவின் 'சாங் ஆஃப் த லூம்’ (தறியின் பாடல்) மிகச் சிறப்பாக மேடையேற்றப்பட்டது. அதில் சங்கர் சுந்தரத்தின் நெசவாளி பாத்திரத்தை மறக்கவே முடியாது! அதை கிராஃப்ட்ஸ் கவுன்சிலுடன் இணைந்து தயாரித்தோம். ஜனதா துணி வந்தபோது நெசவாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை வைத்து சபீதா எழுதிய உணர்ச்சிகரமான நாடகம் அது!'' என்றார் பி.சி.ஆர்.

90-களின் ஆரம்பத்தில் 'தி ஹிந்து’ பத்திரிகை மெட்ராஸ் பிளேயர்ஸுடன் கை கோத்துக்கொண்டு, ஆங்கிலத்தில் எழுதும் இந்திய நாடகாசிரியர்களுக்குப் போட்டி அறிவித்தது. இந்தியா முழுவதி லும் இருந்து 170 ஸ்க்ரிப்டுகள் வந்தன. ஸ்ரீகுமார்வர்மாவின் 'போ ஆஃப் ராமா’ (ராமரின் வில்), ராம் ராமனாதனின் 'சாந்தி, சாந்தி, இட் ஈஸ் எ வார்’ (அமைதி, அமைதி, இது ஒரு போர்), விஜய் படாகியின் 'கிரெடிட் டைட் டில்ஸ்’ எல்லாம் மியூசிக் அகாடமியில் 'தி ஹிந்து’ தியேட்டர் திருவிழாவில் மேடையேற்றப்பட்டு, பரிசுகள் வழங்கப் பட்டன. 'தி ஹிந்து’வின் மிகப் பெரிய நாடக காணிக்கையாக இது இருந்தது.

இந்திரா பார்த்தசாரதியின் 'தந்திர பூமி’ நாடகத்தை கௌரி ராம் நாராயண் தயாரித்து இயக்கினார். அதில் பி.சி.ராம கிருஷ்ணா உத்தரப்பிரதேச அரசியல் வாதியாக, தமது அசத்தலான நடிப்பின் மூலம் நாடகத்துக்கு உயிரூட்டினார். அதில் ஒரு தமிழ் அரசியல்வாதியும் வந்து, அரங்கத்தைக் கலகலக்க வைப்பார்.

மிகப்பெரிய நிறுவனம் ஒன்றில் அதி காரியாக இருந்தவர் மோகன் நாரா யணன். அவருடைய நாடகங்கள் பல மெட்ராஸ் பிளேயர்ஸால் மேடை ஏறி யுள்ளன. அவரின் மனைவி பாகீரதி நாராயணன் மிகச்சிறந்த நாடக இயக்கு நர்; நடிகை. நடித்துக்கொண்டிருந்தபோதே மேடையில் மரணம் அடைந்தவர் அவர்.      

''கோமல் சுவாமிநாதனின் 'தண்ணீர் தண்ணீர்’ நாடகத்தை எப்படி ஆங்கிலத் தில் அதே அச்சு அசலாக மேடைக்குக் கொண்டு வந்தீர்கள்?'

''அமெரிக்கா சென்றிருந்தபோது, அந்த நாடகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை அங்கே ஒரு புத்தகக் கடையில் வாங்கினேன். அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றில் பணி புரியும் எஸ்.சங்கர் என்பவர்தான் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருந்தார். அதைக் கொண்டுதான் நாடகத்தை உருவாக்கினோம். இந்த நாடகம் எழுதி 36 வருடங்களுக்குப் பிறகும், தண்ணீர் பிரச்னையில் எந்த மாற்றமும் இல்லை என்பதுதான் வேதனை அளிக்கும் வியப்பு!'' என்றார் பி.சி.ஆர்.

''மெட்ராஸ் பிளேயர்ஸ் 'தண்ணீர் தண்ணீர்’ நாடகத்தை ஆங்கிலத்தில் மேடையேற்றிய பின்பு, 'கோமல் அவர் களின் இதர நாடகங்களை ஒவ்வொன்றாக மீண்டும் மேடை ஏற்றும் வாய்ப்பையும் எங்களுக்குத் தந்தது!’ என்று மனம் திறந்து சொன்னார் கோமலின் மகள் லலிதா தாரிணி.  

'வாட்டர்’ நாடகத்தைப் பார்த்துவிட்டு, 'தமிழ்நாட்டில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் நடக்கும் நிகழ்ச்சிதான் மையக் கருத்து. அதில் அவர்கள் பேசும் வட்டார மொழிதான் நாடகத்துக்கே உயிர் நாடி. அதை எப்படி ஆங்கிலத்தில் அதே உயிர்த்துடிப்புடன் கொண்டுவந்தீர்கள் என்பது எனக்கு வியப்பைத் தந்தது. மொழி 'பேரியர்’ (தடை) ஆக இருந்தது போய், அதுவே கதையை எடுத்துச் செல்லும் 'கேரியராக’ (சாதனம்) உங்களிடம் மாறியது ஒரு விந்தை!’ என்றார் இந்திரா பார்த்தசாரதி.

கல்கியின் 'கணையாழியின் கனவு’, 'சிவகாமியின் சபதம்’ இரண்டுமே வெற்றிப் படைப்புகள்.  கௌரி ராம் நாராயண்தான் அவற்றை இயக்கியிருந் தார். முதல் நாடகத்தில், பிரபல பாட கர் டி.எம்.கிருஷ்ணா மேடையிலேயே மூன்று நாளும் அமர்ந்து பாடியது புதுமையான முயற்சி!

இப்போது மிகப் பிரபலமான நாவலாசிரியராக இருப்பவர் சேத்தன் பகத். அவருடைய முதல் நாவல் ஐ.ஐ.டி பின்னணியைக் கொண்டது. பெங்களூரு முதலிய இடங்களில் இது நாடகமாக நடைபெற்றபோது, பலத்த வரவேற்பு! சென்னையில் இந்த நாடகம் நடந்த இடத்தில் 300 பேர்தான் அமர முடியும். அதனால், வெளியே திரை வைத்து, ஒளிபரப்பி, 1400 பேர் பார்த்தனர். 'ஃபைவ் பாயின்ட் சம் ஒன்’ என்னும் தலைப்பில், இந்த நாவலை நாடகமாக்கி சேத்தனுக்கு அனுப்பி வைத்து, அதை நடத்த அனுமதி கேட்டார் நிகிலா கேசவன். அனுமதி தந்ததோடு, நாடகத் துக்கு ராயல்டி எதுவும் வேண்டாம் என்று ஏற்க மறுத்துவிட்டார் சேத்தன் பகத். 'நான் படைத்த பாத்திரங்களை இப்படி ரத்தமும் சதையுமாக மேடை யில் பார்த்தபோது என்னால் என் னையே கட்டுப்படுத்திக்கொள்ள முடிய வில்லை. என் கண்களில் நீர் தேங்கி விட்டது!’ என்று உணர்ச்சிவசப்பட்டு அழுதுகொண்டே சொன்னார் நாடகத்தைப் பார்த்த சேத்தன் பகத்.  

'ஆர்.கே. நாராயணின் 'ஸ்வாமி அண்டு ஃபிரெண்ட்ஸ்’ நாடகத்தை அருணா கணேஷ் ராம் இயக்கியிருந்தார். பள்ளிகளில் இது நடிக்கப்பட்டபோது பலத்த வரவேற்பு. அசாத்திய வெற்றி!' என்றார் பி.சி.ராமகிருஷ்ணா. சிவசங்கரி யின் 'கருணைக் கொலை’ நாடகத்தில் தனிமனிதனாக எல்லா பாத்திரங்களையும் ஏற்று, உணர்ச்சி பொங்க நடித்துள்ளார் அவர்.

இந்தக் குழுவில் உள்ளவர்களில் ஒருவர்கூட தொழில்முறை நடிகர் அல்ல என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அப்படியிருந்தும், மெட்ராஸ் பிளேயர் ஸின் வெற்றிக்கு என்ன காரணம்?  

''அர்ப்பணிப்பு உணர்வும் உற்சாகமும் தான்! தினமும் மாலையில் எல்லோரும் கூடுவோம். எந்த நாடகத்தை மேடை ஏற்றுகிறோமோ, அதைப்பற்றி விவாதிப் போம். ரிகர்சல் இருக்கிற நாட்களில் படு சீரியஸாக அதில் ஈடுபடுவோம். மொத் தத்தில், பணத்தை எதிர்பார்த்து எங்களில் யாரும் நாடக மேடைக்கு வரவே இல்லை!' என்றார் பி.சி.ராமகிருஷ்ணா.

தொடர்ந்து, ''கோபி நாயர் இல்லாவிட் டால் எங்களுக்கு இரண்டு கைகளும் ஒடிந்த மாதிரி!'' என்று புன்னகை செய்கிறார் அவர். ''ஆமாம். நாடக பர்மிஷன் வாங்குவது முதல், பப்ளிசிட்டி, டிக்கெட் விற்பனை, ரிகர்சல் சமயத்தில் உணவு ஏற்பாடு என்று சகலத்தையும் தன் தலை மேல் போட்டுக்கொண்டு மாங்கு மாங்கு என்று உழைப்பவர் கோபி நாயர்தான்!''

ஆங்கில மேடை நாடகங்களில் ஒளி யமைப்பு மிக முக்கியப் பங்கு வகிக்கும். விக்டர் பால்ராஜ் செட்டும் போட்டு, ஒளியமைப்பும் செய்வார். 'வாட்டர்’ நாடகத்துக்கு அவர் போட்ட செட் அத்தனை பேரையும் அசர வைத்தது.

சென்ற ஆண்டு மேடை ஏறிய 'சீ¢ரியஸ் மேன்’, மனு ஜோசப் எழுதி, 'தி ஹிந்து’ நாளிதழின் பரிசு பெற்ற நாவல். 59 ஆண்டுகளைப் பின்னோக்கிப் பார்த்து அசை போட்டாலும், அடுத்த ஆண்டு 60-ம் ஆண்டு வைர விழாவை மெட்ராஸ் பிளேயர்ஸ் எப்படி நடத்தப்போகிறார்கள்?  

''பொறுத்திருந்து பாருங்கள்!'' என்று சஸ்பென்ஸ் புன்னகையோடு விடை கொடுக்கிறார் பி.சி.ராமகிருஷ்ணா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism