Published:Updated:

வானொலி அண்ணா!

கட்டுரை: எஸ்.ரஜத்

வானொலி அண்ணா!

கட்டுரை: எஸ்.ரஜத்

Published:Updated:

கட்டுரை: எஸ்.ரஜத்

 படங்கள்: சு.குமரேசன்

மூன்று தலைமுறைகளாக லட்சக்கணக்கான வானொலி ரசிகர்கள் மிகவும் ஆவலாகக் கேட்டு ரசித்த பெயர் கூத்த பிரான். 30 ஆண்டுகளுக்குமேல் அகில இந்திய வானொலி யில் பணிபுரிந்து, 20 ஆண்டுகளுக்கு மேல் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளைத் தயாரித்து அளித்து, அனைவராலும் 'வானொலி அண்ணா’ என்று அன்பாக அழைக்கப்பட்டவர். முதல் வானொலி அண்ணா, ரா.அய்யாசாமி இவருக்கு ஆசான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வானொலி அண்ணா!

கிரிக்கெட் கமென்ட்ரியை தமிழில் நேரடி வர்ணனையாக ரேடியோவில் முதலில் கொடுத்தவர்; 5000 முறைகளுக்கு மேல் நாடக மேடை ஏறியவர்; 60 ஆண்டுகளாக மேடை நாடகங்களை எழுதி, நடித்து, இயக்கி, தயாரித்து, நாடக உலகின் ஜாம்பவனாக விளங்குபவர் எனப் பன்முகம் கொண்டவர் கூத்தபிரான். ஆயிரம் பிறை கண்ட தமிழர்; தன் இரு மகன்கள் என்.ரத்தினம், என்.கணேசன் மற்றும் பேரன் ஷங்கர் விக்னேஷ், பேத்தி ஸஞ்சனாவோடு சென்னை நவ் பாரத் என்ற மேடை நாடகக் குழுவின் சார்பில், இன்றைக்கும் அர்த்தமுள்ள நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்து வருகிறார். மூன்று தலைமுறையினர் சேர்ந்து நாடகத்தில் நடிப்பது, தமிழ்நாட்டில் கூத்தபிரானின் குடும்பமாகத்தான் இருக்கும். புதிதாகக் கலைத்துறையில் நுழைந்திருக்கும் இளைஞரைப்போல, உற்சாகமும் கலகலப்புமாகப் பேசுகிறார் கூத்தபிரான்.

ரேடியோவில் அந்த நாளில் 'கதை நேரம்’ என்றொரு நிகழ்ச்சி உண்டு. பல குழந்தைகளைத் தன்னைச் சுற்றிலும் உட்கார வைத்துக்கொண்டு, அவர்களுக்குக் கதைகள் சொல்லுவார் கூத்தபிரான். நன்மை பயக்கும் கருத்துக்களை அறிவுரையாக இல்லாமல் கதையாகச் சொல்லும்போது, அவை பிஞ்சு உள்ளங்களில் நன்கு பதிந்துவிடும். அதேபோல், 'இதைக் கேளுங்கள், இதையும் கேளுங்கள்’ என்று ஒரு நிகழ்ச்சி. இரண்டே நிமிடங்கள்தான். ரொம்பப் பாப்புலராகி, இரண்டு வருடங்களுக்கு மேல் தொடர்ந்து ஒலிபரப்பான நிகழ்ச்சி இது.

''பரீட்சையிலே நீ காப்பி அடிக்கப் போறியாமே... உன் ஃப்ரெண்ட்ஸ் சொன்னாங்க!'' - 'இதைக் கேளுங்கள்’ என்று இது ஒலிபரப்பாகும். சில விநாடிகள் கழித்து, 'இதையும் கேளுங்கள்’ என்று இன்னொரு வசனம் ஒலிபரப்பப்படும். ''இல்லை அக்கா! நான் காப்பி அடிக்க மாட்டேன். பதில் தெரியலைன்னாலும் பரவாயில்லை... காப்பி அடிக்க மாட்டேன்!'' என்று அந்தச் சிறுவன் சொன்ன பதிலாக அது ஒலிபரப்பாகும். அடுத்து 'இவர்களில் நீங்கள் யார்?’ என்ற கேள்வி கேட்கப்படும். நூற்றுக்கணக்கான குழந்தைகள், 'நாங்கள் பரீட்சையில் காப்பி அடிக்க மாட்டோம்’ என்று ரேடியோ நிலையத்துக்கு கார்டு எழுதிப் போடுவார்கள்.

வானொலி அண்ணா!

'பாதி சொல்லுவோம்; மீதி என்ன?'' என்று இன்னொரு பிரபல நிகழ்ச்சி! ஒரு கதையின் ஆரம் பத்தைச் சொல்லிவிட்டு மீதியை குழந்தைகள் யோசித்து, எழுதி அனுப்ப வேண்டும். அவற்றில் இருந்து சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து, வானொலி அண்ணா படிப்பார். இப்படிப் பலப் பல புதுமையான நிகழ்ச்சி களைக் குழந்தைகளுக்காக தயாரித்துக் கொடுத்திருக் கிறார் கூத்தபிரான்.

''நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினத்தை மிக விமரிசையாகக் கொண் டாடுவோம். மியூஸிக் அகாடமி, நாரத கான சபா, வள்ளுவர் கோட்டம் என ஒவ்வோர் ஆண்டும் ஒரு இடத்தில் பல்வேறு பள்ளிகளிலிருந்து குழந்தைகளை அழைத்துவந்து, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், இந்தி என பல மொழி நிகழ்ச்சிகளை நடத்துவோம். பாட்டு, டான்ஸ், டிராமா, பேச்சு என்று பலவகை நிகழ்ச்சிகளை, அது நடக்கும் அரங்கில் இருந்தே நேரடி ஒலிபரப்பு செய்வோம். அதற்குத் தேவையான உபகரணங்கள், டெக்னிஷியன்கள் உதவியுடன் ஐந்நூறு குழந்தைகள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சி, ஒவ்வொரு முறையும் சூப்பர் ஹிட் ஆகும்'' என்கிறார் கூத்தபிரான்.

அறிஞர்கள், பிரமுகர்கள் எனப் பலரையும் ரேடியோ நிலையத்து அழைத்து வந்து, குழந்தைகளுக்குப் புரியும்படி கதைகள் சொல்ல ஏற்பாடு செய்திருக்கிறார் இவர். ஒருமுறை, கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள் அறுபடை வீடுகள் பற்றிப் பேசினார்.

சுதா ரகுநாதன், உன்னி கிருஷ்ணன், காயத்ரி கிரிஷ், எம்பார் கண்ணன்... என இன்றைய பிரபலங்கள் பலரை, அவர்கள் சிறுவர்களாக இருந்தபோதே ரேடியோ நிலையத்துக்கு அழைத்து இசைக் கச்சேரிகள் நடத்தி, வெளியுலகத்துக்கு அவர்களின் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டிய பெருமை கூத்தபிரானுக்கு உண்டு.

குழந்தைகளுக்காக, நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதிச் சாதனை படைத்திருப் பவர் கூத்தபிரான். பல நூறு பள்ளிகளுக்கு நேரில் சென்று, குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லி, அவர்களை ஊக்குவித்திருக்கிறார்.

பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய மனோகரா நாடகத்தை ஒரு மணி நேர ரேடியோ நாடகமாக கூத்தபிரான் தயாரித் தார். எஸ்.வி.சஹஸ்ரநாமம், டி.கே.ஷண்முகம், டி.கே.பகவதி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், எம்.என்.ராஜம், எஸ்.ஆர்.சிவகாமி ஆகியோர் நடித்த இந்த நாடகம் மிகப்பெரிய பாராட்டுதலைப் பெற்றது.

வானொலி அண்ணா!

கூத்தபிரானின் இயற்பெயர் என்.வி.நட ராஜன். அப்போது அதே பெயரில் ஒரு பிரபல அரசியல் தலைவர் இருந்ததால், கடிதங்கள்கூட முகவரி மாறி, மற்றவருக்குப் போய்விடுவதுண்டு. வானொலியில் அப்போது பணியாற்றி வந்த எழுத்தாளர் அகிலன், 'நீங்கள் ஏன் ஒரு புனை பெயர் வைத்துக் கொள்ளக் கூடாது?’ என்று ஒருமுறை கேட்டாராம். அதையடுத்து, மனைவி லலிதாவோடு வைத்தீஸ்வரன்கோவிலுக்குச் சென்றுள்ளார் நடராஜன். அங்கே சுவாமி சந்நிதியில் 'கூத்தபிரான் சந்நிதி’ என்று எழுதப் பட்டிருக்க, அதே பெயரையே தனது புனை பெயராக வைத்துக்கொண்டுவிட்டார் கூத்தபிரான்.

''இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலகட்டத்தில், அதாவது வெள்ளைக்காரன் காலத்தில் நடக்கும் கதையை, 'மூவண்ணக் கொடி உயர்த்துவோம்’ என்ற தலைப்பில்  நாடகமாகப் போட்டேன். அதில், பள்ளிச் சிறுவர்கள் சிலர் சேர்ந்து யூனியன் ஜாக் கொடியை இறக்கி, நமது கொடியை ஏற்று வார்கள். கோபமடைந்த ஆங்கில அதிகாரிகள் விசாரிக்கும்போது, அனைவரும் ஒற்றுமையாக 'தெரியாது’ என்று சொல்வார்கள். இந்த நாட கத்தைப் பற்றி மகாபெரியவர் சங்கராச்சார்ய ஸ்வாமிகள் கேள்விப்பட்டிருந்தார் போலும்! மடத்தில், அவரின் முன்னால் இந்த நாடகத்தை நடத்த வேண்டும் என்று அழைப்பு வந்தது. 16 குழந்தைகளை அழைத்துக்கொண்டு அப்போது அவர் தங்கியிருந்த 'ஓரிக்கை’ என்ற கிராமத்துக்குச் சென்று, அவர் முன் நாடகத்தை நடித்தோம். மகா பெரியவா குழந்தைகள் அனைவரையும் பாராட்டி, ஆசீர்வாதம் செய்து, 'சன்மார்க்க பிரகாசமணி’ என்ற விருதை எனக்கு அளித்தார். என் பணி பற்றி அவர் விசாரிக்க, ''ரேடியோவில் குழந்தைகள் பிரிவில் வேலை செய்கிறேன்'' என்றேன். ''பவித்திரமான இடத்திலே இருக்கே'' என்று ஆசீர்வதித்தார். இது நடந்தது 1987-ம் ஆண்டு'' என்று நெகிழ்ந்து கூறுகிறார் கூத்தபிரான்.

பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, ஸ்ரீலங்கா, மேற்கு இந்தியத் தீவுகள் எனப் பல நாடுகளின் குழுக்களுடன், இந்திய அணி சென்னையில் டெஸ்ட் மேட்ச்சுகள் ஆடியபோது, அவற்றுக்குத் தமிழில் நேர்முக வர்ணனை செய்திருக்கிறார் கூத்தபிரான்.

தவிர, வடபழனி முருகன் கோயில், திருக் கடையூர் அபிராமி கோயில், சென்னை அடையாறு அனந்த பத்மநாம ஸ்வாமி கோயில், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் போன்ற கோயில் களின் குடமுழுக்கு விழாக்கள் நடைபெறும்போதெல்லாம் சிறப்பாக நேர்முக வர்ணனை செய்து, வானொலி நேயர் களுக்கு கும்பாபிஷேகத்தை நேரில் காணும் ஆனந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறார் இவர்.

வானொலி அண்ணா!

பெருந்தலைவர் காமராஜ் மறைந்தபோது லட்சக்கணக்கான மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். சென்னை, ராஜாஜி ஹாலில் இருந்து புறப்பட்ட இறுதி ஊர்வலம், கிண்டி கவர்னர் மாளிகை வழியாக, காமராஜர் நினைவாலயத்தை அடைந்தது. காமராஜரின் பூத உடல் வைக்கப்பட்டிருந்த அமரர் ஊர்திக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த வேனின் மேலே நின்றுகொண்டு கூத்தபிரானும் இன்னும் சிலரும் நேர்முக வர்ணனை கொடுத்தார்கள். மாபெரும் தலைவரின் குணாதிசயங்களை, அவருக்குப் பெருமை சேர்த்த நிகழ்வுகளை, அவர் செய்த தியாகங்களை வர்ணனையின் இடையிடையே எடுத்துச் சொன்னார் கூத்தபிரான். காமராஜருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி சென்னைக்கு வந்தார். இறுதி ஊர்வலம் கவர்னர் மாளிகை அருகே வந்தபோது அவரும் ஊர்வலத்தில் சேர்ந்து, காமராஜர் நினைவாலயம் வரை நடந்தே வந்தார். பாரத ரத்னா மூதறிஞர் ராஜாஜி, பாரத ரத்னா தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் ஆகியோரின் இறுதி ஊர்வலத்தின்போதும் நேர்முக வர்ணனை செய்துள்ளார் கூத்தபிரான்.

கூத்தபிரானின் பெற்றோர் விட்டல் அய்யர்- நாகலட்சுமி. விட்டல் அய்யர் பிரபல மிருதங்க வித்வான். கலாக்ஷேத்ரா ருக்மிணி தேவியின் பரத நாட்டியத்துக்கு மிருதங்கம் வாசித்தவர். எப்போது நாடக மேடை ஏறினாலும், தன் பெற்றோரின் புகைப்படத்தை சட்டைப் பையிலோ, சாஸ்திரி போன்ற வேஷம் போடும் போது கைப்பை யிலோ வைத்திருப்பார் கூத்தபிரான். வீட்டுக்குச் சென்றதும் பூஜை அறையில் அந்தப் படத்தை வைத்துவிடுவது வழக்கம்.

பூர்ணம் விசுவநாதன் குழுவினர், சாவியின் 'வாஷிங்டனில் திருமணம்’ நாடகத்தை டெல்லியில் நடத்தி னார்கள்.  இந்த நாடகத்தில், கூத்த பிரான், சாம்பு சாஸ்திரிகளாக நடித்தார். அதில் நடித்த  நாடக கலைஞர்கள் அனைவரையும் பிரதமர் இந்திரா காந்தியின் இல்லத்துக்கு அழைத்துச் சென்று, அவருக்கு அறிமுகப்படுத் தினார் பூர்ணம் விசுவநாதன். அப்போது, பிரதமரோடு அவர்கள் எடுத்துக் கொண்ட குரூப் போட்டோ அபூர்வமானது.

கல்கியின் கதைகளை நாடகமாக்கி 1961-ம் ஆண்டு டெல்லியில் மேடை யேற்றிய பெருமை கூத்தபிரானையே சேரும். கல்கி எழுதிய 'தேவகியின் கணவன்’, 'அமர தாரா’, 'என் தெய்வம்’ மற்றும் கூத்தபிரான் எழுதிய 'அவள் நினைவு’, 'களங்கம் தீர்த்தவள்’ ஆகிய ஐந்து நாடகங்களை டெல்லியில் கூத்தபிரானின் கல்கி ஃபைன் ஆர்ட்ஸ் குழுவினர் நாடக விழாவாக நடத்தி, மாபெரும் வெற்றி கண்டனர். அந்த நாடகங்களில் அப்போது ஹீரோவாக நடித்த எஸ்.சங்கர் பி.ஏ., என்ற இளைஞர் தான் சில ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்த் திரை உலகில் 'தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட்’ என்று பெயரெடுத்து சகாப்தம் படைத்த ஜெய்சங்கர்.

வானொலி அண்ணா!

பிரபல நாடக ஆசிரியர் 'மெரீனா’ எழுதிய 'ஊர் வம்பு’, 'கால்கட்டு’ ஆகிய இரு நாடகங்களும் ஒவ்வொன் றும் 200 தடவைகளுக்கு மேல் மேடையேற்றப்பட்டன. இந்த இரு நாடகங்களிலும் கூத்தபிரானின் நடிப்பு பெரிய அளவில் பாராட்டு பெற்றது. ஊர் வம்பு நாடகத்தை 30 நாட்களில் 33 தடவை மேடையேற்றியது, அன்றைய காலகட்டத்தில் பெரிய சாதனையாகக் கருதப்பட்டது.

நாடகத் துறைக்கு கூத்தபிரான் ஆற்றியுள்ள அரும்பணிக்காக, 2003-ம் ஆண்டு அவருக்குக் கலை மாமணி விருது வழங்கி கௌரவித்தது தமிழக அரசு. சென்னை நகரில் உள்ள பல்வேறு சபாக்கள் இவருக்கு 'வாழ்நாள் சாதனையாளர்’ விருதுகள் வழங்கியுள்ளன.

'காசிக்குப் போன கணபதி’, 'சுபஸ்ய சீக்கிரம்’, 'பேரனுக்கு பிரம்மோபதேசம்’, 'ஜேஷ்ட குமாரா’ (ரத்தினம் எழுதியது) ஆகியவை கூத்தபிரானின் வெற்றி நாடகங்கள். இவரது லேட்டஸ்ட் நாடகம் 'ரோபோவின் டைரி’. இது ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் கதை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism