Published:Updated:

உங்களுக்குள் ஒரு போதி தர்மா!

கட்டுரை: பொன்.செந்தில்குமார்

உங்களுக்குள் ஒரு போதி தர்மா!

கட்டுரை: பொன்.செந்தில்குமார்

Published:Updated:

கட்டுரை: பொன்.செந்தில்குமார்

படங்கள்: பா.காளிமுத்து, ஆ.முத்துக்குமார்

ந்த அதிகாலை நேரத்தில்... கொடைக்கானல், பெருமாள் மலைக்கு அருகில் இருந்த 'போதி ஜென்டோ’ நோக்கி நடந்தோம். இந்தியாவில் ஜென் பற்றிக் கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கப்பட்ட ஒரே ஜென் மையம், போதி ஜென்டோதான். கூகுளில் 'போதி ஜென்டோ, கொடைக்கானல்’ என்று தட்டினால் தரை வழி, ரயில் வழி, ஆகாய வழி... என அத்தனை வழித்தடங்களையும் காட்டிவிடுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெருமாள் மலையில் இருந்து உப்புப்பாறை செல்லும் வழியில், 20 நிமிட நடை தூரத்தில்தான் போதி ஜென்டோ இருக்கிறது. இதமான குளிரும், இருள் சூழ்ந்த பாதையும் விரிந்து கிடந்தன. கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். அதிகாலை 4 மணி. மெள்ள அந்தக் காட்டு வழியில் ஜென், போதி தர்மா பற்றிய விஷயங்களை அசைபோட்டபடியே நடந்தேன்.

உங்களுக்குள் ஒரு போதி தர்மா!

'7-ஆம் அறிவு’ திரைப்படம் வந்த பிறகு, தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிபுரத்தில் பல்லவ இளவரசராகப் பிறந்தவர் போதி தர்மா என்ற செய்தி பட்டிதெட்டியெல்லாம் பரவி விட்டது. ஆனால், போதி தர்மா உருவாக்கிய ஜென் என்ற உன்னதமான விஷயம் பற்றிய விவரம் அவ்வளவாகப் பரவவில்லை. அதுமட்டுமல்ல, போதிதர்மா கற்றுக்கொடுத்த களரிக் கலையும், சிலம்ப ஆட்டமும்தான் குங்ஃபூ, கராத்தே என்று உருமாறி, சீனர்களும் ஜப்பானியர்களும் தங்க மெடல் வாங்கிக் குவிக்கக் காரணம். உலகில் முதன்முதலாக தேயிலைச் செடியை அறிமுகப்படுத்தி, முதல் கிரீன் டீ குடித்த பெருமையும் பச்சைத் தமிழன் போதி தர்மாவையே சேரும். அதனால்தான், இன்றளவும் ஜென் மடால யங்களில் தேநீர் விருந்து (ஜிமீணீ நீமீக்ஷீமீனீஷீஸீஹ்) என்பது முக்கியமான ஒன்றாக நடந்து வருகிறது. போதி தர்மாவுக்கு முன்பே பல புத்த துறவிகள் சீனாவுக்குச் சென்றுள்ளார்கள். ஆனால், போதி தர்மா அவர்களைக் காட்டிலும் தனிச் சிறப்பு மிக்கவராக இருந்தார். அதனால்தான், அவர் உருவாக்கிய வாழ்வியல் தியான முறைக்கு 'ஜென்’ என்று பெயர் ஏற்பட்டு, உலகம் முழுக்கப் பரவியுள்ளது. தியான் (தியானம்) என்ற சமஸ்கிருதச் சொல்தான், சீனா, ஜப்பான் நாடுகளுக்குச் சென்று, ஜென் ஆக உருமாறியுள்ளது.

ஜென் பற்றியும் போதி தர்மா பற்றியும் அதிகமாகப் பேசிச் சென்ற ஒரே ஜீவன் ஓஷோ ஒருவர்தான். ''போதி தர்மாவுக்கு நான் என் இதயத்தில் ஆழமான இடத்தைக் கொடுத்துள் ளேன். அது அவரைப் பற்றிப் பேசுவதை மிக முக்கியமான தருணமாக்குகிறது. ஒருவேளை அவர் ஒருவர்தான் நான் மிகவும் ஆழமாக அன்பு செலுத்துபவராக இருக்கலாம். அவரைப் பற்றி பேசுவது, நான் என்னைப் பற்றியே பேசுவதைப் போன்றது. அவர் கௌதம புத்தரைப் பின்பற்றுபவர். சில விஷயங்களில் அவர் புத்தரையும் மிஞ்சிச் செல்கிறார். கடவுள் இறந்துவிட்டார். ஜென் மட்டுமே இருக்கிறது...'' என்று அறைகூவல் விடுத்துச் சென்றுள்ளார் ஆன்மிக கலகக்காரர் ஓஷோ.

உங்களுக்குள் ஒரு போதி தர்மா!

உலக அரங்கில் சீனாவும் ஜப்பானும் கொடிகட்டிப் பறப்பதற்கு, அவர்கள் பின்பற்றி வரும் ஜென் வாழ்வியலும் ஒரு காரணம் என்று சொல்கிறார்கள். ஆனால், அந்த ஜென் என்ற வாழ்வியல் வைரத்தைக் கொடுத்த போதி தர்மாவின் தாய்நாட்டில் டீக்கடைகள் மட்டுமே பரவியுள்ளன.

இதோ... காலம் கனிந்துவிட்டது. ஜென் பற்றிய தேடலுடன் வருபவர் களுக்கு வேடந்தாங்கலாக இருக்கும் போதி ஜென்டோ வாசலுக்கு வந்துவிட்டோம். கிழக்கில் இருந்து புத்தொளியை வீசிக்கொண்டு சூரியன் கிளம்பியிருந்தான். அந்தக் காலை நேரத்தில், ஜென் கார்டனில் உள்ள பூச்செடிகளில் வண்ண வண்ணப் பூக்கள் பூத்துக் குலுங்கி வரவேற்பு கொடுத்தன. எங்கும் பூரண அமைதி. சில்வர் ஓக் மரத்தில் இருந்த பறவைகள்கூட 'கீச்... கீச்...’ என்று மெதுவாகவே குரல் கொடுத்துக் கொண்டிருந்தன. நாம் சென்றிந்த அந்த அதிகாலை நேரத்திலும்கூட ஸாஜென் என்ற தியானப் பயிற்சி நடந்துகொண்டிருந்தது. போதி தர்மா மூலம் தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஜென், அருள் மரிய ஆரோக்கியசாமி (கி.வி.கி. ஷிகிவிசீ) என்ற ஜென் மாஸ்டர் மூலம் மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளது. எல்லோரும் அவரை ஆ.மா.சாமி என்றே அன்புடன் அழைக்கிறார்கள். இதோ ஜென் பற்றி நம்முடன் பேசுகிறார் ஆ.மா.சாமி.

உங்களுக்குள் ஒரு போதி தர்மா!

''எனக்குச் சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமம். தாய், தந்தையர் வெகு காலத்துக்கு முன்பே பர்மாவில் குடியேறி இருந்தார்கள். அதனால், 1936-ம் ஆண்டு பர்மாவில்தான் பிறந்தேன். அங்கு நடந்த கலவரத்தால், சொந்த ஊரான ராமநாதபுரத்துக்குக் குடிபெயர்ந்தோம். சொத்துக்களை முழுக்க பர்மாவில் விட்டுவிட்டு வெறும் கையுடன்தான் வந்தோம். குடும்பத்தில் சொல்லமுடியாத வறுமை. எப்படியோ பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, சென்னை லயோலா கல்லூரியில் சேர்ந்தேன். கல்லூரிக்கு வந்த பிறகுதான், ஆங்கிலத்தை நன்றாகக் கற்றுக்கொண்டேன். பட்டம் பெற்ற பிறகு, ஆன்மிகத்தின்மீது நாட்டம் போனது. அதனால், பாதிரியாருக்குப் படித்தேன். பாதிரியார் பணி, முழு நிறைவைத் தரவில்லை. திருவண்ணாமலை, பழநி என கோயில் கோயிலாகச் சுற்றினேன். ரமண மகரிஷி முதல் குட்டிச் சாமியார்கள் வரை தேடித் தேடி தரிசனம் செய்தேன். ஒரு கட்டத்தில், திண்டுக்கல் அருகில் உள்ள யாகப்பன்பட்டி கிராமத்தில், பாட்டுப் பாடிக்கொண்டு தினமும் பிச்சை எடுத்து உண்டேன்.

அப்படியும் என் ஞானத் தாகம் தீரவில்லை. 1978-ம் வருடம் கிறிஸ்துவ பாதிரியார் லசால் ஜெர்மனியில் இருந்து வந்திருந்தார். என் கோலத்தைப் பார்த்துவிட்டு, மனம்விட்டுப் பேசினார். 'எனக்கும் உங்களைப்போலவே ஞானத் தேடல் இருந்தது. அதை ஜென் மூலமே அடைந்தேன். உங்களின் ஞான தாகம், ஜப்பான் நாட்டுக்குச் சென்றால்தான் தீரும். எனது ஜென் மாஸ்டர் அங்கு உள்ளார். வாருங்கள்... அறிமுகப் படுத்துகிறேன்’ என்று அழைப்பு விடுத்தார்.

உங்களுக்குள் ஒரு போதி தர்மா!

கஷ்டப்பட்டுப் பணத்தைத் திரட்டிக்கொண்டு, நான் சார்ந்திருந்த இயேசு சபையில் அனுமதி பெற்றுக்கொண்டு ஜப்பான் சென்றேன். ரின்சாய், சோட்டோ என்று ஜப்பானில் ஜென் பள்ளிகள் நிறைய இருந்தன. இதில், இரண்டையும் கலந்து எளிய மனிதர்களுக்கான ஜென் பள்ளியை யமதா கொ-வூன் (சீணீனீணீபீணீ ரிஷீஹிஸீ) என்ற ஜென் மாஸ்டர் நடத்தி வந்தார். இந்த ஜென் பள்ளியில் நுழைந்தவுடன் என்னைக் கட்டித் தழுவி வரவேற்றவர், 'தமிழ்நாட்டில் இருந்து மீண்டும் போதி தர்மா வந்துவிட்டார்’ என்று எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினார்.

ஜென் பற்றிய வாழ்வியல் நுட்பங்களை அங்கு கசடறக் கற்றேன். 1982-ம் ஆண்டு அதிகாலை நேரத்தில் ஜென் மாஸ்டர் என்னை அழைப்பதாகச் சொன்னார்கள்.  'உனக்கு ஜென் மாஸ்டருக்கு உண்டான தகுதி கள் வந்துவிட்டன. புத்தொளி அடைந்து விட்டாய். இனி நீ இந்தியா சென்று, ஜென் பற்றி வகுப்பு எடுக்கலாம்...’ என்று சொல்லி, ஜென் -வூன் கேன் (நிமீஸீ ஹிஸீ ரிணிழி- மாஸ்டரிடம் இருந்து கிளம்பிய உண்மையான மேகம் என்று பொருள்) பட்டம் வழங்கி, அனுப்பினார். இந்தப் பட்டம் பெற்ற பிறகும், 1989-ம் ஆண்டு வரை அவ்வப்போது ஜப்பான் சென்று, ஜென் மாஸ்டரிடம் வாழ்வியலைக் கற்றேன். 1989-ம் ஆண்டு அவர் ஒரு விபத்தில் இறந்த பின்னர் நான் படித்த ஜென் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டேன்.

உங்களுக்குள் ஒரு போதி தர்மா!

ஜப்பானிலிருந்து தருமமிகு சென்னைக்கு வந்து சேர்ந்தேன். ஏசு சபையில் எனக்கு மேலே இருந்தவர்கள், ஜென் பற்றி அறிந்திருந்தனர். அதனால், கிறிஸ்துவ பாதிரியாராக இருந்தாலும் ஜென் பற்றி மக்களுக்குப் போதிக்க அனுமதித்தார்கள். ஆனால், ஒரு சில பழைமைவாத கிறிஸ்துவ அமைப்பைச் சார்ந்தவர்கள், 'இவன் புத்தரை வைத்துக் கொண்டு வணங்குகிறான். இவன் கிறிஸ்துவன் அல்ல’ என்று எனக்கு எதிராகப் போராட்டம் நடத்தினார்கள். ஒரு கட்டத்தில், ஜென் பற்றிப் போதிக்க சென்னை சரியான இடம் இல்லை என்று தோன்றியது. கிறிஸ்துவ மிஷனரிக்குச் சொந்தமான நிலம், கொடைக்கானலில் இருப்பதாகச் சொன்னார்கள். அங்கு எனக்கு இடம் ஒதுக்கித்தாருங்கள் என்று கேட்டேன். எனது நிலையைப் புரிந்து கொண்டு, ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்கிக் கொடுத்தார்கள்...'' என்ற ஜென் மாஸ்டர், சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்...

''அங்குதான் போதி ஜென்டோ தொடங்கி னோம். இந்த இடத்துக்குதான் உலகின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்து போகிறார்கள். ஜென் பற்றி வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு நிறையத் தெரிந்துள்ளது. இதனால், 80 சதவிகித மக்கள் ஜெர்மனி, ஆஸ்திரியா, அமெரிக்கா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வருகிறார்கள். மீதி 20 சதவிகித மக்கள் வட இந்தியாவில் இருந்தும், கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்தும் வருகிறார்கள்.

உங்களுக்குள் ஒரு போதி தர்மா!

உலகுக்கு ஜென் என்ற அற்புதத்தைக் கொடுத்த தமிழ்நாட்டில் இருந்து ஜென் பற்றி அறிந்துகொள்ள வருபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். நீங்கள் இந்து, கிறிஸ்துவர், முஸ்லிம் என எந்த மதத்தைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்; ஜென் என்பதை ஒருமுறை ருசித்துவிட்டால், எல்லா மதத்தின்மீது மதிப்பும், வாழ்க்கைமீது மரியாதையும் மாண்பும் கூடும். முதலில் உங்களை உணர்ந்துகொள்ள, தன்னுணர்வுடன் வாழும் கலையை நீங்களே கற்றுக் கொள்வதுதான் ஜென்.

இன்று பெரும்பாலானவர்கள் ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்படும் பொருளைப்போல ஓடிக் கொண்டே இருக்கிறார்கள். நாம் எல்லாவற்றையும் ரசித்து, ருசித்து வாழ்வதற்கான காலமும் நேரமும் உள்ளன. ஒவ்வொரு கல்லிலும் ஓர் அழகான சிலை இருப்பதுபோல, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புத்தர் இருக்கிறார். ஆனால், நாம்தான் அந்த புத்தரை செதுக்கி மலர வைக்க வேண்டும். நாம் எங்கு, எந்தச் சூழ்நிலையில் பிறந்திருந்தாலும், இந்த வாழ்வை ஒரு பரிசுபோல மகிழ்ச்சியாக, மன நிறைவாக வாழ, ஜென் வழிகாட்டியாக நிற்கிறது. ஜென் என்றால் என்னவோ ஏதோ என்று நினைக்க வேண்டாம். நம்முடன் வாழ்ந்து சென்ற ரமண மகரிஷியும் ஜென் மாஸ்டர்தான். இயற்கையைப் போற்றி வணங்கிய சித்தர்களும் ஜென் மாஸ்டர்கள்தான்.

உங்களுக்குள் ஒரு போதி தர்மா!

ஜென் தியானம் செய்யச் செய்ய, தன்னுணர்வு ஏற்படும். நம்மீது முதலில் நமக்குக் கருணை பிறக்கும். பிறகு, நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு பொருளின் மீதும் நமக்குக் கருணை உருவாகும். காய்தல் உவத்தல் இன்றி, இது நல்லது, இது கெட்டது என்று பிரித்துப் பார்க்காமல் வாழும் விதமே ஜென் நிலை. ஜென் ஒரு கொள்கையோ கோட்பாடோ அல்ல; அது ஒரு தத்துவம்கூட அல்ல! ஜென் முறையில் வாழ்வது என்றுகூடச் சொல்லக்கூடாது. 'ஜென்’னாக இருப்பது என்பதுதான் சரியான விளக்கம். எல்லோருமே ஜென் மாஸ்டர் (குரு) நிலைக்கு உயர முடியும். நீங்கள் ஜென் மாஸ்டராக உருவாகிவிட்டால், உடனடியாக மக்கள் நெருக்கம் உள்ள மார்க்கெட் பகுதிக்குச் சென்று, 'நான் பெரிய ஜென் மாஸ்டர். என்னை எல்லோரும் காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும்; சிறப்புச் செய்ய வேண்டும்’ என்று நினைத்தீர்களானால், உங்க ளுக்குள் இன்னும் புத்தனைக் கண்டு உணர்ந்த புத்தொளி நிலை வரவில்லை என்று அர்த்தம். புத்தொளி அடைந்த பிறகும் தனித்திராமல் மக்களுடன் மக்களாகக் கலந்து வாழும் வாழ்க்கை யைத்தான் ஜென் சொல்கிறது. ஜென் மாஸ்டர் என்பவர், ஜென் பற்றிச் சொல்லிக்கொடுக்கும் போது மட்டுமே மாஸ்டர். மற்ற நேரங்களில் அவரும் சாதாரண மனிதர்தான். சாதாரண மனிதர்களால்தான் புத்தர் நிலையிலும் இருக்க முடியும்'' என்று சொல்லிவிட்டு, வணங்கி நின்றார் ஜென் மாஸ்டர் ஏ.எம்.ஏ.சாமி.

உங்களுக்குள் ஒரு போதி தர்மா!

போதி ஜென்டோவைச் சுற்றி வந்தோம். ஜென் கார்டனில் உள்ள டேரிப் பூவும், புல்வெளியும் மட்டுமல்ல... புத்தர் சிலைக்குக் கீழே ஒளிரும் நந்தா விளக்கு முதல் சமையல் அறையில் எரியும் அடுப்பு வரை அத்தனையும் அழகுடனும் ஒருவித ஒழுங்குடனும் இருந்தன. ஒருவேளை, அவையும் ஜென் நிலை அடைந்து விட்டனவோ என்று எண்ணத் தோன்றியது.

உங்களுக்குள் ஒரு போதி தர்மா!

மணல்களும் மலர்ந்துள்ள... ஜென் கார்டன்!

''தியானத்தில் இருக்கும்போது மட்டுமல்ல... சாப்பிடும்போதும், பாத்திரத்தைக் கழுவி வைக்கும்போதும் விழிப்பு உணர்வுடன் இருக்கும் வகையில் இங்குள்ள சூழ்நிலை உருவாக்கப் பட்டுள்ளது. இங்குள்ள ஜென் கார்டனில் நீங்கள் பூக்களை ரசிக்கலாம். விரும்பினால், பூச் செடிகளைச் சுற்றி வளர்ந்துள்ள களைகளை நீக்கி, இயற்கை உரம் வைக்கலாம். மலர்களைப் போல மலர்ந்துள்ள ராக் கார்டன் உங்களைக் குழந்தைப் பருவத்துக்கு அழைத்துச் செல்லும். பெரும்பாலும், இங்கு இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்படும் சத்தான காய்கறிகளே உணவுக்குப் பயன்படுத்தப்படு கின்றன'' என்கிறார் ஜென் பயிற்றுநர்களில் ஒருவரான சாம்பசிவ ராவ்.

 "ஜென் மாஸ்டர் தவறு செய்வாரா?"

ஜென் பயிற்றுநராக இருக்கும் கன்னியாகுமரியைச் சேர்ந்த மேத்யூ சிரீல் என்பவரும் அடிப்படையில் கிறிஸ்துவப் பாதிரியார்தான். ஆனால், இப்போது முழு நேர ஜென்னாக இருக்கிறார். ''ஜென் பற்றிய புரிந்துணர்வு ஏற்படுத்த, ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை மாலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை ஸாஜென் என்ற தியானப் பயிற்சி (விவீஸீவீ  sமீssலீவீஸீ) வழங்கப்படுகிறது. இதில் யார் வேண்டுமானலும் கலந்துகொள்ளலாம். வியாழக்கிழமை தொடங்கி ஞாயிறு மதியம் வரை மௌனமாக இருக்க வேண்டும். தியானங்களில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். முடிந்தால், ஓய்வு நேரத்தில் ஜென் தோட்டத்தில் வேலை செய்யலாம். காய்கறிகளை நறுக்கிக் கொடுக்கலாம். இதுவும் ஒரு தியானம்தான்'' என்றவரிடம் ''ஒருவர் ஜென் மாஸ்டராக உயர்ந்த நிலையை அடைந்துவிட்டால், மறதியில் தவறு செய்வாரா?'' என்று கேட்டோம்.

உங்களுக்குள் ஒரு போதி தர்மா!

இங்கு தியானத்துக்கு வருபவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்வி இது... ஜென் மாஸ்டர் என்பவர் நம்மைப் போலவேதான் வாழ்வார்; சாப்பிடுவார்; தூங்குவார்; வேலை செய்வார். சமயத்தில் நம்மைப்போலவே, வண்டி சாவியை மறந்துவிட்டுத் தேடுவார். தவறுவது, மறதி ஏற்படுவது என்பது நாம் உயிருடன் இருக்கிறோம் என்று உணர்த்தும் செயல்களில் ஒன்று. 24 மணி நேரமும் ஜென் மாஸ்டராக இருக்கிறேன் என்று யாராவது சொன்னால், நிச்சயம் அது இயந்திரமாகத்தான் இருக்கும். ஜென் மாஸ்டர் என்பவர், யாராவது அழுதால் அழுவார்; சிரித்தால் சிரிப்பார்; விறகு வெட்டுவார்; தோட்டத்தில் வேலை செய்வார். ஒருவர் ஜென் மாஸ்டராக உருவாகிவிட்டால், பாத்திரமும் கழுவலாம்; பத்திரிகை நிருபராகவும் இருக்கலாம். இன்னும் சொல்லப்போனால், சாதாரண மனிதர்களைவிட, மிக எளிமையாக வாழ்வதே புத்தர் நிலையை அடைந்த மாஸ்டர்களின் ஜென் இயல்பு. இதைத்தான் புத்தரும் போதி தர்மாவும் செய்தார்கள்'' என்று கண்களை விரித்துச் சொல்லி முடித்தார் மேத்யூ சிரீல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism