Published:Updated:

அரிய சுவடிகள்...அற்புதமான ஓவியங்கள் !

சரித்திர பொக்கிஷம் சரஸ்வதி மகால் நூலகம்கு.ராமகிருஷ்ணன் படங்கள்: கே.குணசீலன்

அரிய சுவடிகள்...அற்புதமான ஓவியங்கள் !

சரித்திர பொக்கிஷம் சரஸ்வதி மகால் நூலகம்கு.ராமகிருஷ்ணன் படங்கள்: கே.குணசீலன்

Published:Updated:
அரிய சுவடிகள்...அற்புதமான ஓவியங்கள் !

கடந்த நூற்றாண்டுகளுக்குள் பயணிக்கிறது நம் மனசு. பிரமாண்டமான மரப் பேழைகளுக்குள் குவிந்து கிடக்கிறது, நம் முன்னோர்கள் நமக்காகச் சேர்த்து வைத்த அறிவுச் சொத்து. மின்சாரம் கண்டுபிடிப்பதற்கு முன்பு இருந்தே, உலகின் பெரும்பகுதி மக்களின் வாழ்க்கையை ஓலைச்சுவடிகள், காகிதச்சுவடிகள், ஓவியங்கள் மூலம் படம் பிடித்து காட்டத்தொடங்கிவிட்டது தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் ஆராய்ச்சியாளர்களும் அறிஞர்களும் ஆய்வு மாணவர்களும் இந்த நூலகத்தைக் கண்டு பிரமிக்கிறார்கள்.

காலத்தை வென்ற கலைப்பெட்டகமாகத் திகழும் இந்நூலகம் சோழ, நாயக்க, மராட்டிய மன்னர்களின் ஒருமித்த கண்காணிப்பில் உருவானது என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். சோழர்களின் காலத்தில் 'சரஸ்வதி பண்டாரம்’ என்ற பெயரில் இயங்கிய இந்த நூலகம்... 16-ம் நூற்றாண்டில் வளர்ச்சி பெற்று, இப்போது சர்வதேச ஆராய்ச்சி மையமாக உயர்ந்து நிற்கிறது. உலகின் தலைசிறந்த மேதைகள் பலர், இந்த நூலகத்துக்குச் சூட்டியிருக்கும் புகழாரங்கள் ஏராளம். அறிவுக்கோயில், அறிவுக்களஞ்சியம், கல்விக்கருவூலம், சுவடிகள் காப்பகம், பன்மொழி ஆய்வு மையம்... இப்படியாக நீள்கிறது பாராட்டுப் பட்டியல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரிய சுவடிகள்...அற்புதமான ஓவியங்கள் !

ஏன் இத்தனை பிரமிப்புகள்? அப்படி என்னதான் இங்கு இருக்கிறது? ''23 ஆயிரத்து 347 ஓலைச்சுவடிக் கட்டுகளும், 25 ஆயிரத்து 527 காகிதச்சுவடிக் கட்டுகளும் இங்கு உள்ளன. பழங்காலத்தைச் சேர்ந்த மிகவும் அரிதான 65 ஆயிரம் புத்த கங்களும் உள்ளன'' என நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார் சரஸ்வதி மகால் நூலகத்தின் இயக்குநரும் தஞ்சை மாவட்ட ஆட்சியருமான டாக்டர் என்.சுப்பையன். ''இதெல்லாம்  பழங்கால பொக்கிஷங்கள் மட்டுமல்ல... இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மக்களுக்கு வழிகாட்டக்கூடிய கலங்கரை விளக்கம். பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் பயன்படக்கூடிய  அடிப்படை ஆதாரங்களும் அற்புதங்களும் இங்கு குவிந்து கிடக்கின்றன.

மருத்துவம், தத்துவம், ஜோதிடம், சமயம், கட்டடக் கலை, இலக்கணம், இலக்கியம், மந்திர சாஸ்திரம், சிற்ப சாஸ்திரம், நாட்டியம், நாடகம்,  இசை, அரசியல், இதிகாசம், கணிதம், வானியல், பண்பாடு என அனைத்துத் துறைகள் சார்ந்த பதிவுகளும் இங்குள்ளன. இதில் பெரும்பாலானவை, வேறு எங்கும் இல்லாத விரிவான, அரிதான தகவல்களை உள்ளடக்கியவை.      

அரிய சுவடிகள்...அற்புதமான ஓவியங்கள் !

ஓலைச்சுவடிகளும், காகிதச்சுவடிகளும் தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், மராட்டி, இந்தி மொழிகளில் எழுதப்பட்டவை. தேவநாகரி, கிரந்தம், பர்மிய எழுத்துக்களில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளும் இங்குள்ளன. பழைமையான அச்சுப் புத்தகங்கள் இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், ஜெர்மன், ரஷ்யன், பெர்சியன், இத்தாலி உள்ளிட்ட அயல்நாட்டு மொழிகளிலும் எழுதப்பட்டவை. கைக்கு அடக்கமான சிறிய ஓலைச்சுவடியில் ஐந்து பறவைகள் ஜோதிடங்கள் சொல்வது போல் எழுதப்பட்ட பஞ்சபட்சி சாஸ்திரம், கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்ட வால்மீகி ராமாயணம், காகிதச்சுவடியில் தேவநாகரி எழுத்துக்களில் எழுதப்பட்ட பகவத் கீதை, பௌத் தம் பற்றி பர்மிய எழுத்துகளில் எழுதப்பட்ட ஓலைச்சுவடி, பெரிய அளவிலான பனை ஓலைச்சுவடியில் தமிழில் எழுதப்பட்ட கம்ப ராமாயணம்... இப்படி இன்னும் பல அரிய பொக்கிஷங்கள் இங்குள்ளன. சித்தா, யுனானி, ஆயுர்வேதம், அலோபதி மருத்துவம் தொடர் பான அற்புதப் பதிவுகளும் இங்குள்ளன. தமிழில் எழுதப்பட்ட மருத்துவமுறைகள் அனைத்தும் பாடல் வடிவத்தில் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு கோமாரி நோயால் கால்நடைகள் பாதிக்கப்பட்டபோது, இங்குள்ள ஓலைச்சுவடியில் சொல்லப்பட்டிருந்த வைத்திய முறையை குறிப்பெடுத்துச் சென்றார் மூலிகை மருத்துவர் ஒருவர். அதுதான் பெரும் அழிவில் இருந்து கால்நடைகளைக் காப்பாற்றியது.  

18-ம் நூற்றாண்டில் லண்டனில் அச்சடிக்கப்பட்ட, மனிதனின் உடல்கூறு பற்றிய நூலும், பிரெஞ்சு தேச 14-ம் லூயியின் அரசவையில் இருந்த சார்லஸ் லீ புருன் என்பவர், மனித முகத்தோற்றத்தைப் பறவைகள் மற்றும் விலங்குகளுடன் ஒப்பிட்டு வரைந்த அரிய ஓவியமும் இங்குள்ளது.  

மூலிகைத் தாவரங்களை அடையாளம் காட்டக்கூடிய தத்ரூபமான நிறத்திலும் தோற்றத்திலும் வரையப்பட்ட பழங்கால ஓவியங்களும், இங்கிலாந்து மற்றும் இந்திய நகரங்களின் பழங்கால ஓவியங்களும் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன. மன்னர் இரண்டாம் சரபோஜி காசி யாத்திரை சென்றபோது வரையப்பட்ட ஓவியமும் மிக முக்கியமானது. கங்கையாற்றின் படித்துறைகள் ஓவியமாக வரையப்பட்டுள்ளன. இந்த ஓவியத்தின் நீளம் 40 அடி.

அரிய சுவடிகள்...அற்புதமான ஓவியங்கள் !

'கஜ சாஸ்திரம்’ என்ற தொகுப்பு நூலில் யானைகள் உயிரோட்டமாக வரையப்பட்டுள்ளன. பாலகாப்பிய முனி என்பவர், யானையைப் பற்றிய விளக்கங்களைச் சான்றுகளுடன் சமஸ்கிருதத்திலும் மராத்தியிலும் எழுதியுள்ளார்'' என, பட்டியலிட்டுக்கொண்டே போனார், சரஸ்வதி மகால் நூலக இயக்குநர் சுப்பையன்.

''இந்த நூலகத்துக்கு, மன்னர் சரபோஜி 4,298 புத்தகங்களைத் திரட்டித் தந்துள்ளார். பொதுமக்கள் அன்பளிப்பாக அளித்த புத்தகங்கள் 4000, சுவடிகள் 200. இந்த நூலகத்தின் வளர்ச்சிக்கு ஆங்கிலேயர்களும் பேருதவி புரிந்திருக்கின்றனர். தஞ்சையில் அப்போது செஷன்ஸ் நீதிபதியாக இருந்த ஏ.சி.பர்னல் என்பவர் இங்குள்ள வடமொழிச் சுவடிகளைச் சரிபார்த்து, பட்டியலிட்டுத்  தொகுத்திருக்கிறார். கி.பி. 1880-ம் ஆண்டு லண்டன் மாநகரில் மூன்று தொகுதிகளாக அவை வெளியிடப்பட்டுள்ளன.

இங்குள்ள ஓலைச்சுவடிகள் உடையாமல் இருக்கவும், பூச்சிகளால் பாதிக்கப்படாமல் இருக்கவும், 'சிட்ரோனெல்லா’ என்ற எண்ணெய் பூசப்படுகிறது. காகிதச்சுவடிகள், புத்தகங்கள், ஓலைச்சுவடிகள் வைக்கப் பட்டுள்ள மரப்பேழைகளுக்குள் கறையான் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, வசம்பு, மிளகு, கிராம்பு, கருஞ்சீரகம், லவங்கப்பட்டை ஆகியவற்றைப் பொடியாக்கி, இவற்றுடன் ஒரு கட்டி சூடம் வைத்து துணியில் கட்டி வைக்கப்படுகிறது.

அரிய சுவடிகள்...அற்புதமான ஓவியங்கள் !

கால வெள்ளத்தால் செல்லரித்துப்போன சுவடிகளும் புத்தகங்களும் ஓவியங்களும், மிக நுண்ணியப் படங்களாக ஃபிலிம்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. இது நீண்ட காலத்துக்குத் தரமானதாக இருக்காது. இப்போதே தரமிழக்கத் தொடங்கிவிட்டன. எனவே, இப்போது புதிய முயற்சிகளில் இறங்கியுள்ளோம். இங்குள்ள அனைத்துச் சுவடிகளையும், இப்போதுள்ள நவீன கேமிராக்களில் படம் எடுத்து, தரமான சி.டி-களில் பதிவுசெய்யப் போகிறோம். அவற்றை இணையதளங்களில் வெளியிடப்போகிறோம். ஓலைச்சுவடிகளில் உள்ள வரிவடிவத்தை இப்போது எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாது. அதனை அனைவரும் எளிதாக புரிந்துகொள்ளும் வகையில், இப்போது நடைமுறையில் உள்ள வரிவடிவத்தையும் இணையதளங்களில் வெளியிடப்போகிறோம். இதனால், சுவடிகளில் உள்ள அரிய தகவல்கள் அனைத்து மக்களையும் சென்றடையும். சாகாவரம் பெற்று நிலைத்து நிற்கும். அழிவே இருக்காது.

அரிய சுவடிகள்...அற்புதமான ஓவியங்கள் !

இங்குள்ள பழைய சுவடிகளையும், பழைமையான அச்சுப் புத்தகங்களையும் மூல ஆதாரங்களாகக் கொண்டு, 555 தலைப்புகளில் ஒன்றரை லட்சம் புத்தகங்களை சரஸ்வதி மகால் நூலகம் வெளியிட்டுள்ளது. இதுவரை இங்கு வந்துதான் இவற்றை வாங்க வேண்டிய நிலை இருந்தது. இனி ஆன்-லைனில் விற்பனை செய்யப்படும். சுவடிகளில் உள்ள வரிவடிவத்தைப் படிப்பதற்கு, சரஸ்வதி மஹால் நூலகத்தில் பொதுமக்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறோம். வயது வேறுபாடு இல்லாமல், அனைத்துத் தரப்பினரும் பயிற்சிக்கு வருகி றார்கள்'' என மகிழ்ச்சி பொங்கப் பேசினார் சுப்பையன்.

அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு சரஸ்வதி மகால் நூலகத்தின் பிரமிப்பைக் கொண்டு சேர்க்கும் இவரது உன்னத முயற்சியும் காலத்தால் போற்றப்படும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism