மேல்சித்தாமூர்...

தமிழ்நாட்டில் வாழும் சமணர்களுக்கு முக்கியமான ஊர்.

''என்ன, தமிழ்நாட்டில் இன்னும் சமணர்கள் வாழ்கிறார்களா?'' எனக் கேட்கத் தோன்றுகிறதா?

ஆம், தமிழ்நாட்டில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில், அன்னைத் தமிழுக்கு ஏராளமான நூல்களை எழுதி, சிறப்புச்செய்த தமிழ் சமணர்களின் வழித்தோன்றல்கள் இன்னும் வாழ்ந்துவருகிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் சுமார் 40 ஆயிரம் பேர் இருப்பதாகப் புள்ளிவிவரம் சொல்கிறது. இந்த 40 ஆயிரம் சமணர்களுக்கும் புண்ணியத்தலமான மேல்சித்தாமூரை நோக்கித்தான் நாம் பயணம் செய்தோம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஊர், திண்டிவனத்தில் இருந்து செஞ்சி செல்லும் சாலையில் 20 கி.மீ தூரத்தில் உள்ளது.

ஒரு காலத்தில் மன்னர்களும் துறவிகளும் சென்ற பாதையில் நம்முடைய பயணம் தொடர்ந்தது. ஊருக்குள் பிரமாண்டமான கோயில் நம்மை வரவேற்கிறது. மடத்தில் மந்திரங்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. ஆடை அணியாத, திகம்பர சமணத் துறவி ஒருவரிடம் மக்கள் ஆசீர்வாதம் பெற்றுச் சென்றனர்.

அருகில் சிவப்பு வண்ண உடையில், கம்பீரமாக ஒருவர் உட்கார்ந்து இருந்தார். ஒவ்வொரு மதத்துக்கும் தலைமை இடம் இருப்பதுபோல, தமிழ்நாட்டில் சமணத்தின் தலைமையிடம் இந்த மேல்சித்தாமூர். வீரசேனாச்சாரியாரால் சீரமைக்கப்பட்ட, பழைமையான இந்த மடத்தின் பெயர்

'ஜின காஞ்சி’. சிவப்பு வண்ண உடையில் இருந்தவர்தான் இந்த மடத்தின் மடாதிபதி லக்ஷ்மிசேன பட்டாரக பட்டாச்சார்யவர்ய சுவாமிகள். இவரே தமிழ்நாட்டில் உள்ள தமிழ் சமணர்களுக்கான சமயத் தலைவர்.

''மடம் இருப்பது, விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அருகில். ஆனால், பெயர் 'ஜின காஞ்சி மடம்’ என உள்ளதே?'' என்றோம்.

''ஒரு காலத்தில் சமண மதம் தமிழ்நாட்டில் செல்வாக்குமிக்கதாக இருந்தது. அப்போது, காஞ்சிபுரத்தில் 'ஜின காஞ்சி’ என்ற பெயரில் இந்த மடம் இயங்கிவந்தது. சமணத் துறவிகளுக்கும் புத்த துறவிகளுக்கும் சமய மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இந்த மோதல் பெரிய அளவுக்கு வெடித்தது. இதனால்,

காஞ்சிபுரத்தில் இருந்து சமணத் துறவிகள், 'மேல்சித்தாமூர்’ என்ற இந்தக் கிராமத்துக்கு வந்து, சமயப் பணிகளை செய்யத் தொடங்கினார்கள். அதனால்தான், சமணர்கள் காஞ்சிபுரத்தைவிட்டு வந்துவிட்டாலும், பெயர் மட்டும் 'ஜின காஞ்சி’ என்றே உள்ளது'' எனச் சொன்னவர், கோயிலைச் சுற்றிப்பார்க்க அழைத்தார்.

இங்கு மலைநாதர் கோயிலும் பார்சுவநாதர் கோயிலும் உள்ளன. மலைநாதர் கோயில், கி.பி 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்தக் கோயிலில் திருவறம் அருளிய ஆதிபகவன், நேமிநாதர், பார்சுவநாதர் மற்றும் பாகுபலி உருவங்கள் ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. தூணில் உள்ள தருமதேவி சிலை எழில்கோலம் மிக்கதாக இருந்தது. பிரமாண்டமாக இருந்த கோயிலுக்குள் நுழைந்தோம். 10 அறங்களைக் கூறிய பகவான் பார்சுவநாதருக்கான ஆலயம். கருவறையில் சிம்மபுரிநாதர் என்கிற பகவான் பார்சுவநாதர், அமர்ந்த கோலத்தில், கருநிறக் கல்லில், பரந்து விரிந்த உடலோடு, நீண்ட காதுகளும் கூரிய மூக்கும் சுருள் முடியும் கொண்டு ஆழ்தியானத்தில் உள்ளார். பார்சுவநாதரின் தலைக்கு மேல் ஐந்துதலைப் பாம்பும் அதற்கு மேல் முக்குடையும் உள்ளன. சிங்க முகத்துடன் பிரபாவளியும் அதில் 23 தீர்த்தங்கரர்களின் சிற்பங்களும் உள்ளன. பீடத்தின் கீழே தரணேந்திரனும் பத்மாவதிதேவியும் சாசன தேவதைகளாக இருக்கின்றனர். பார்சுவநாதரின் முதுகுப்புறத்தில் ஆகமங்களைக் குறிக்கும் சுருதஸ்கந்தம் வடிக்கப்பட்டுள்ளன.

அடுத்த கருவறையில் நேமிநாதர் கம்பீரமாகக் நிற்கிறார். இந்தச் சிலை கி.பி 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சென்னை, மயிலாப்பூர் கடலோர சமணக் கோயிலில் இந்தச் சிலை முன்பு இருந்துள்ளது. கடல் அலைகளால் பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்பதால், இந்தச் சிலை மேல்சித்தாமூருக்கு எடுத்து வரப்பட்டுள்ளது. கோயிலின் மானஸ்தம்பம் (கொடிமரம் போன்றது) 50 அடி உயர ஒரே கல்லில் உருவாக்கப்பட்டுள்ளது. தூண்கள், மண்டபங்களோடு பல்வேறு சிற்பங்களையும் செய்திகளையும் தாங்கி நிற்கின்றன. கோயில் அருகிலுள்ள தேர்வடிவ மண்டபம், இரு யானைகள் இழுத்துவருவதுபோல் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பங்குனியில்,

10 நாட்கள் பெருவிழா நடைபெறுகிறது. 7-ம் நாள் மகாவீரர் ஜெயந்தி அன்று தேரோட்டம் மிகச் சிறப்பாக இருக்கும். அப்போது, தமிழ்நாட்டில் உள்ள அத்தனை சமணர்களும் இங்கு கூடுவார்கள்.

ஆசி வாங்க காத்திருந்த மக்களுக்கு மயில் தோகையால் ஆசி வழங்கி விட்டு, மறுபடியும் பேச்சைத் தொடர்ந்தார்...

''தமிழ்நாட்டில் திகம்பர சமணர்களுக்கு உள்ள பழைமையான கோயில் இது. இங்கு தமிழ் சமணர்கள் மட்டும் அல்ல, பிற மொழி பேசும் சமணர்களும் வந்து செல்கிறார்கள். இந்தக் கோயில் சோழர்கள், நாயக்கர்கள் என பலரது ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோயிலில் சோழ நாட்டு அரசிகள், இளவரசிகள் வந்து, தங்கி வணங்கிச் சென்றுள்ளனர். இந்தக் கோயிலுக்கு பல 100 ஏக்கர் நிலங்களும் கிராமங்களும் தானமாக வழங்கப்பட்டுள்ளன. தற்போது, நன்கொடைகளை வைத்து மட்டுமே மடம் நிர்வகிக்கப்படுகிறது. கோயிலுக்கும் மடத்துக்கும் வரும் பக்தர்களை வெறும் வயிற்றுடன் செல்லவிடுவது இல்லை. சமணத்தில் 'பசியாற்றுவித்தல்’ என்பது முக்கியமானது. உணவு, அடைக்கலம், மருந்து, கல்வி ஆகிய நான்கு தானங்களைச் செய்வதை சமணத்தில் பேரறமாகக் கருதுகிறோம்.

அச்சத்தால் தங்களை நாடி அடைக்கலம் அடைந்தவர்களுக்கு, அபயமளித்துக் காப்பது 'அபய தானம்’ எனப்பட்டது. இதற்காகச் சமணக் கோயில்களை அடுத்துக் குறிப்பிட்ட சில இடங்கள் இருந்திருக்கின்றன. இவற்றுக்குப் பொதுவாக 'அஞ்சினான் புகலிடம்’ எனப் பெயர். இந்த இடங்களுக்கு வந்தோரை சமணர்கள் பாதுகாத்து இருக்கிறார்கள். இப்போதும், இந்த அபய தானம் தொடர்கிறது.

மூன்றாவதான ஒளடத தானத்தையும் (மருத்துவ உதவி) சமணப் பெரியார்களும் செய்து வந்துள்ளனர். இதற்காக மருத்துவம் கற்று, நோயாளிகளுக்கு மருந்து கொடுத்து நோயைத் தீர்த்து வந்திருக்கின்றனர். சமண மடங்களில் இலவசமாக மருந்து கொடுக்கப்பட்டது. இந்தக் காலகட்டத்திலும் மருத்துவ உதவி மடத்தின் மூலம் அளிக்கப்படுகிறது. சமணர்கள் மூலிகை மருத்துவத்தில் வல்லவர்களாக இருந்துள்ளனர். இதனால்தான் சமணத் துறவிகள் இயற்றிய நூல்களுக்கு, 'திரிகடுகம்’, 'ஏலாதி’, 'சிறுபஞ்சமூலம்’ என மருந்துகளின் பெயரைச் சூட்டியுள்ளார்கள்.

நான்காவது, சாத்திர தானத்தை மற்ற எல்லாவற்றையும்விட மிகப் பெரியதாக மதித்திருக்கிறோம். தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கல்வியை இலவசமாக முதலில் கொடுத்தவர்கள் சமணர்கள்தான்.

சமண மதம் இயற்கையை அழிக்காது வாழ வேண்டும் என்ற கொள்கையை உடையது. இதனால்தான் சமணத் துறவிகள் மலைகளில் இயற்கையாக அமைந்த படுகை, குகைகளில் வாழ்ந்து வந்தனர். அந்த இடங்கள் உறங்குவதற்குப் பயன்பட்டதால் 'பள்ளிகள்’ எனப்பட்டன. இந்தச் சமணப் பள்ளிகள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக இருந்துள்ளன. சமணத் துறவிகள் தாங்கள் தங்கிய இடங்களில் இலவசமாக கல்வி அளித்த இடங்கள் பள்ளிகள் எனப்பட்டதால்தான், இப்போதும்கூட மாணவர்கள் கல்வி கற்கும் இடங்கள் 'பள்ளிக்கூடங்கள்’ என அழைக்கப்படுகின்றன. இந்தப் பெயர், சமணர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் வழங்கியுள்ள மரியாதை. வட இந்தியாவிலும், கர்நாடகா, ஆந்திராவிலும்கூட சமணத் துறவிகள் பள்ளியில் தங்கித்தான் பாடம் சொல்லிக்கொடுத்தார்கள். ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமே 'பள்ளி’ என்ற பெயர் தொடர்கிறது. மேலும், சமணர்கள் அதிகமாக வாழ்ந்த ஊர்களும் 'பள்ளி’ என்ற பெயருடன் முடிந்துள்ளன. 'மின்னாம்பள்ளி’, 'சீராபள்ளி’... எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்தத் தானங்கள் அனைத்தையும் சமணத் துறவிகளும், இல்லறத்தில் உள்ள சமணர்களும் இன்றளவும் பின்பற்றிவருகிறோம். மேல்சித்தாமூரில் உள்ள பள்ளிக்கூடத்துக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் மடத்தின் நிலத்தைத்தான் வழங்கியுள்ளோம். நிறையப் பொதுக்காரியங்களுக்கு எங்களால் முடிந்த பணியைச் செய்து வருகிறோம். உலகில் முதன்முதலாக கம்யூனிஸம் பேசியவர்கள் சமணத் துறவிகள்தான். முதல் தீர்த்தங்கரர் ரிஷப தேவர் தொடங்கி 24-வது தீர்த்தங்கரர் மகாவீரர் வரை, பகுத்துண்டு வாழும் வாழ்க்கையினையும், எந்தக் காலத்திலும் அடுத்தவர்களின் உடைமையை அபகரிக்காமல் வாழ வேண்டும் என்பதையும், மிகுபொருள் விரும்பாமையும் வாழ்நாள் முழுவதும் முழங்கி வந்தார்கள்'' என்றவரிடம், ''தமிழ்நாட்டில் வாழ்ந்த சமணர்களைக் கழுவேற்றம் செய்து, துன்புறுத்தியதாகச் சொல்லப்படுகிறதே..?'' எனக் கேட்டோம்.

''இங்கு வரும் ஒவ்வொருவரும் தவறாமல் கேட்கும் கேள்வி இது. ஆயிரக்கணக்கான சமணர்களைக் கழுவேற்றம் செய்த சம்பவங்களும், அடித்துத் துரத்திய நிகழ்வுகளும் பிற மதநூல்களில் மட்டுமே உள்ளன. ஆனால், எங்கள் முன்னோர்களும் சரி, அந்தக் காலத்தில் எழுதப்பட்ட நூல்களும் சரி... எங்களைத் துன்புறுத்திய தகவல்களை ஓர் இடத்தில்கூட குறிப்பிடவில்லை.

'ஆக்குவ தேதெனில் அறத்தை ஆக்குக

போக்குவ தேதெனில் வெகுளி போக்குக,

நோக்குவ தேதெனில் ஞானம் நோக்குக

காக்குவ தேதெனில் விரதம் காக்கவே...’

என மடாதிபதி லக்ஷ்மிசேன பட்டாரக பட்டாச்சார்யவர்ய சுவாமிகள் சொல்லி முடிக்கவும், இரவுநேர பூஜைக்காக கோயில் மணி அடிக்கத் தொடங்கியது.

திருக்குறள் சொல்லும் வடநாட்டுத் துறவி!

மேல்சித்தாமூர் மடத்தில் நிர்வாணத் துறவி ஒருவர் தங்கியுள்ளார். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த, இவரது பெயர் விஷ்வேஷ் சாகர் முனிமகராஜ்.

''பத்து ஆண்டுகளுக்கு முன்பு துறவிகள் குழுவுடன் தமிழ்நாட்டுக்கு வந்தோம். எனது குருநாதர், 'தமிழ்நாட்டிலேயே தங்கி சமயப் பணி செய்யுங்கள்’ எனக் கட்டளையிட்டார். அதனால், நான் மட்டும் இங்கேயே தங்கிவிட்டேன்'' எனஅழகான தமிழில் பேசினார். ஆண்களும் பெண்களுமாக நிறையப் பேர், ஆசி வாங்க வந்துநின்றனர்.

'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு’ என திருக்குறள் சொல்ல ஆரம்பித்தவர்,

'யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்...’ அதாவது, ஒருவன் எந்தப் பொருளில் இருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவது இல்லை'' என அழகுத் தமிழில் அறவுரையாற்றி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இவர்தான் நிஜ பாகுபலி!

'பாகுபலி’... இந்தப் பெயரில் படம் வந்துள்ளதால், அந்தப் பெயர் எல்லோருக்கும் பரிச்சயம். ஆனால், 'பாகுபலி’ என்னும் பெயரில் உண்மையிலேயே ஒரு பெரிய மாவீரர் இருந்தார். இளங்கோவடிகள் எவ்வாறு சேர வம்சத்தில் பிறந்து தனது அண்ணன், மன்னன் ஆக வேண்டும் என்பதற்காகத் துறவி ஆனாரோ, அதேபோல், பாகுபலி தனது அண்ணன் பரதனுக்காக ராஜ வாழ்வைத் துறந்து, சமணத் துறவி ஆனார் என்பது வரலாறு.

பெங்களூரில் இருந்து சுமார் 160 கி.மீ தொலைவில் 'சரவணபெலகுலா’ எனும் ஊரில் பாகுபலிக்கு வழிபாட்டுத் தலம் இருக்கிறது. ரிஷப தேவர் தன் நாட்டை மைந்தர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு, காடு சென்று தவம்செய்து தீர்த்தங்கரராக ஆனார். பாகுபலியின் அண்ணனின் பெயர் பரதன். பாகுபலி இளமையிலேயே அழகும் அறிவும்கொண்டவராக இருந்தார். மக்கள் அவரையே விரும்பினார்கள். ஆகவே, அண்ணனுக்கு அவர் மேல் பொறாமை ஏற்பட்டது. அண்ணன், தம்பியின் பங்கையும் அபகரிக்க நினைத்துப் படைதிரட்டினார். போரில் பலர் மாள்வதைத் தடுப்பதற்காக பாகுபலியும் பரதனும் ஒரு மல்யுத்தத்தில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டது. 'திருஷ்டியுத்தம்’, 'ஜலயுத்தம்’, 'மல்யுத்தம்’ ஆகிய போர்களில் அவர்கள் ஈடுபட்டார்கள். பரதனை பாகுபலி வென்றார். போரில் அண்ணனைக் கடைசியாக அடித்துக் கொல்ல வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாகத் தன் தலைமயிரைத் தானே பறித்து வீசி, சமணத் துறவியாகக் கிளம்பிச் சென்றார். ஞானம் தேடி சமண தீர்த்தங்கரரான ரிஷப தேவரை அணுகி சீடரானார்.

திகம்பரர்களும் ஸ்வேதாம்பரர்களும்!

சமணத் துறவிகளில் இரு பிரிவினர் உள்ளனர். 'திகம்பரர்கள்’ என்பவர்கள் திசைகளை மட்டும் ஆடைகளாக அணிந்தவர்கள். இவர்கள் நிர்வாணமாக இருப்பார்கள். சமணத் துறவிகளில் வெள்ளாடை உடுத்தியவர்கள், ஸ்வேதாம்பரர்கள் என அழைக்கப்படுகின்றனர்.

தீபாவளியும், மகாவீரரும்!

தீபாவளி பண்டிகையை சமணர்கள் வெகுவிமர்சையாகக் கொண்டாடுகிறார்கள். தீபாவளி அன்றுதான் 24-வது தீர்த்தங்கரான மகாவீரர் வீடுபேறு (மோட்சம்) அடைந்த நாள். ஆகையால், அன்று வீடுகளில் விளக்கு ஏற்றியும், லட்டு செய்து, அதை மகாவீரருக்குப் படைக்கிறார்கள்!