கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் போன்ற அனைத்தையும் கடந்ததுதான், காதல் யோகம். இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தவன் இறைவன். அதனால் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே... ஏன் இந்தப் பிரபஞ்சமே அவன்தான். இறைவனிடம் இருந்து தொடங்கியதை அவனிடமே முடித்துக்கொள்வதுதான் முழுமை. இறைவனைப் பல்வேறு வழிகளில் அடைய முடியும் என்று வேதங்களும் சாஸ்திரங்களும் வழி காட்டி உள்ளன.
படைத்தவன் வேறு... படைப்பு வேறு என்று எண்ணாமல், படைத்தவன் மீதே காதல்வயப்பட்டு அவனாகவே மாற விரும்புவதுதான் காதல் யோகம். கிருஷ்ணன் மீது கோபியர்கள் கொண்ட காதலும் இந்த வகைதான். ஆண்டாளின் பக்தி உணர்வு இவை எல்லாவற்றிலும் மேம்பட்டது.
தண்ணீரில் மூழ்குபவன் மூச்சுக்காக எத்தனை தூரம் ஏங்குவானோ, அப்படி வரவேண்டும் இறைவன் மீது பக்தி என்பார்கள். இங்கே ஆண்டாள் அதையும் தாண்டிப் போய்விட்டாள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'கொள்ளும் பயனொன் றில்லாத
'கொங்கைதன்னைக் கிழங்கோடும்
அள்ளிப்பறித்திட்ட வன்மார்வில்
எறிந்தென் அழலை தீர்வேனே ’- என்கிறாள். 'கண்ணனுக்காகக் காத்திருந்து... காத்திருந்து பயனில்லாத என் மார்பகத்தைப் பறித்து அவன் மீதே வீசியெறிகிறேன்!’ என்று ஆவேசப்படுகிறாள். இந்த ஊடல் காதலுக்கே உரியது. காதல் வசப்பட்டவர்களுக்கு எங்கேயும் எப்போதும் எல்லாமே காதல்தான் என்பதை கவனியுங்கள்.

'பைம்பொழில் வாழ்குயில்காள்!
மயில்காள்! ஒண்கருவிளைகாள்!
வம்பக் களங்கனிகாள்!
வண்ணப்பூவை நறுமலர்காள்!
ஐம்பெரும் பாதகர்காள்!
அணிமாலிருஞ் சோலைநின்ற,
எம்பெரு மானுடைய
நிறமுங்களுக் கெஞ்செய்வதே?’
குயில்களையும் மயில்களையும் மலர்களையும் அன்போடு அழைப்பவள், அடுத்த கணமே, பஞ்சமா பாதகர்களே என்று திட்டவும் செய்கிறாள். ஏனாம், அவற்றை எல்லாம் பார்க்கும்போது காதலன் கண்ணனின் ஞாபகம் வருகிறதாம்.
இறைவனுடன் பேதமறக் கலந்துவிட்ட தால், மதுசூதனனின் கைத்தலம் பற்றுவதாகக் கனவு காணுகிறாள். வாழை, கமுகு பந்தலிட, பூரண பொற்கும்பத்துடன் தோரணம் நாட்டப்படுகிறது. இந்திரலோகத்து தேவர்கள் எல்லோரும் வாழ்த்த வந்திருக்க, ஆண்டாள் பட்டுடுத்தி வருகிறாள். வாரணமாயிரத்துடன் மாயவன் வந்துசேர, மத்தளம் கொட்ட, சங்குகள் ஊதப்பட்டது. முத்துகளால் அலங்காரம் செய்யப்பட்ட பந்தலில் மதுசூதனன் கைத்தலம் பற்றினாளாம் மங்கை. கண்களில் இறைவனுடன் தொடங்கிய உறவு காதலாகிக் கனவிலே கனிந்து கருவறையில் இணைந்து கொண்டது.
இதைவிட ஒரு பக்தி உண்டா அல்லது இதைவிட ஒரு காதல் உண்டா? உண்மையில் காதல் இறைவனைவிட உயர்வானது; ஆண்டாள் காதலைவிடப் பெரியவள்!