Published:Updated:

நிலவில் தமிழன்

சந்திப்பு /இரா.வினோத், படங்கள்/ சு.குமரேசன்

நிலவில் தமிழன்

சந்திப்பு /இரா.வினோத், படங்கள்/ சு.குமரேசன்

Published:Updated:

ரவில் விண்வெளியைப் பார்த்தால், மின்மினிப் பூச்சிகளாக ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் கண் சிமிட்டும். நாம் அறியாத கோடானுகோடிப் புதிர்களை ஒளித்து வைத்திருக்கும் 'விண்வெளி’ எப்போதும்... யாவருக்கும் ஆச்சர்யமே! அதிலும் அந்த நிலவு தரும் பரவசத்தை வார்த்தைகளில் அளக்கமுடியாது. கோவை தொழிற்சாலைகளின் புகை எட்டாத கோதவாடி கிராமத்தில் பள்ளி நாட்களில் கயிற்றுக் கட்டிலில் என்னோடு விளையாடிய அதே நிலா இன்று பெங்களூருவில் என்னோடு கண்ணாமூச்சி காட்டுகிறது’ என கவிதையாகப் பேசுகிறார், மயில்சாமி அண்ணாதுரை. 

சந்திரயான்-1 திட்டம் மூலமாக உலகின் பார்வையை இந்தியாவில் பதிய வைத்த தமிழன். இப்போது இஸ்ரோவில் சந்திரயான்-2 திட்ட இயக்குநராக இருக்கிறார். மயில்சாமி அண்ணாதுரையின் வாழ்வை சந்திரயானுக்கு முன், சந்திரயானுக்குப் பின் என்றுதான் பிரிக்க வேண்டும். ஏனென்றால் இப்போது சனி, ஞாயிறுகளில்கூட குடும்பத்தோடு செலவிட முடியாத அளவுக்குக் கூட்டங்கள். சென்னை, மும்பை, டெல்லி என பறந்துகொண்டே இருக்கிறார். ஒரு மழை நேரக் காலையில் பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். இதமாய், பதமாய் பேசுகிறார்.

''விண்வெளியில் எத்தனை எத்தனை கோள்கள் இருந்தாலும் நமக்கு மிக அருகில் இருப்பது நிலாதான். அதனால், உலக விண்வெளி ஆராய்ச்சி என்பது நிலவில் இருந்தே தொடங்குகிறது. 'சந்திரயான்’ என்றால் சம்ஸ்கிருதத்தில் 'நிலவுக்குப் பயணம்’ என்று அர்த்தம். நமது முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் இந்தப் பெயரை சூட்டினார். பூமியில் இருந்து 400 கி.மீ தூரத்தில் இருக்கும் விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு வேண்டுமானால் அடிக்கடி போய் வரலாம். ஆனால், நிலவுக்குப் போக வேண்டும் என்றால், ஒரு வாரம் ஆகும். ஏனென்றால் அத்தனை ஆயிரம் மடங்கு தூரத்தில் இருக்கிறது நிலா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நிலவில் தமிழன்

என் முகவரியை உலகுக்கு அறிவித்த சந்திரயான்-1, நிலவில் 100 கி.மீ. தூரத்தில் இருந்தபடி படம் பிடித்து, அதன் அமைப்பியலை ஆராயும் கலன். நிலவில் நீர் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தது. அது மட்டுமின்றி, சூரிய ஒளியில் இருந்து நீர் உருவாகிறது என்பதனையும் கண்டறிந்து, எங்களுக்கே புதுப் பாடம் கற்றுத் தந்தது. அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையமே, அதனுடைய புத்தகத்தில் இதை எழுதி இருப்பது நமக்கு நிகரற்ற பெருமை. சந்திரயான்-1 தோல்வி அடைந்துவிட்டது என்பதை என்னால் ஏற்க முடியாது. எங்களுடைய திட்டப்படி, நிலவில் மோதும் கலன் மோதி வெடித்துச் சிதறவேண்டும். ஆனால், சந்திராயன்1 முன்கூட்டியே மோதிச் சிதறிவிட்டது. அந்தக் கலன் எடுத்து அனுப்பிய படங்கள்தான் நிலா குறித்த எல்லா ஆராய்ச்சிகளுக்கும் முன்னுதாரணமாக இருக்கின்றன.

சந்திராயன்-1ன் எடை 1,350 கிலோ. இப்போது தயாராகிவரும் சந்திரயான்-2, சுமார் 1,500 கிலோ எடை கொண்டது. அது நிலவின் கதிரியக்கத்தை சமாளிக்கும் வகையில் இருக்க வேண்டும். பிறகு நாங்கள் ஆய்வுக் கூடத்தில் இருந்து அனுப்பும் உத்தரவுகளை அறிந்து, ஆறு மாதம் நிலவில் தங்கி ஆராய வேண்டும். பிறகு அந்த ரோவர் பத்திரமாக பூமிக்குத் திரும்ப வேண்டும். அதன் பிறகே நிலவுக்கு மீண்டும் மனிதனை அனுப்புவதா? வேண்டாமா? என்பதைக் குறித்து முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால், வெறுமனே நிலவில் கொடி நட்டுவிட்டுத் திரும்புவதில் என்ன பிரயோஜனம்? ஒருவேளை சந்திரயான்-2 நமது எண்ணங்களை ஈடேற்றினால், 2020-ல் நிச்சயம் மனிதன் நிலவில் இறங்கி, வேண்டியதை எடுத்து வெற்றியோடு வருவான். 2013 இறுதியில் அல்லது 2014 தொடக்கத்தில் சந்திராயன் -2 நிலவில் இறங்கப் போகிறது. அதனால், உலகின் அத்தனை நாடுகளின் பார்வையும் இப்போது நம்மீதுதான். விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு அடுத்து ஐந்தாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. ஆனால், சந்திரயனுக்குப் பிறகு நம் மதிப்பு பல மடங்கு உயர்ந்துவிட்டது. அதன் காரணமாகவே உலகின் எந்த மூலையில் நிலா குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்றாலும், நமக்கு முதல் மரியாதை கிடைக்கிறது. சந்திரயான்-2-க்குப் பிறகு நம் மதிப்பு இன்னும் பல மடங்கு உயரும்.

நிலவில் தமிழன்

வல்லரசு என்பது ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதில் இல்லை. அறிவு, தொழில்நுட்பம் மற்றும் தொழில் வளர்ச்சியில்தான் இருக்கிறது. உலகத்திலே அதிக இளைஞர்களைக் கொண்டது நம் நாடு. நமது 60 கோடி இளைஞர்களுக்குத் தீனி போடும் வகையில், வேலைகளை அரசாங்கம் ஏற்படுத்துமானால், இந்தியாவின் வளர்ச்சியை எவராலும் தடுத்துவிட முடியாது.

நம்மைப் பொறுத்த வரை நிலா ஒரு மைல் கல். இன்றைக்கு கூடங்குளம் மட்டுமல்ல, உலகில் இருக்கும் அத்தனை அணு மின் நிலையங்களும் ஆபத்தானவை. நிலவில் இருக்கும் ஹீலியம்-3 வாயுவை பூமிக்கு டன் கணக்கில் கொண்டுவந்தால், தடையில்லா மின்சாரம் கிடைக்கும். மின்வெட்டுக்கு டாடா காட்டிவிடலாம். இந்த நிலா இந்தியர்களுக்குத்தான்...'' என புன்னகைக்கிறார், மயில்சாமி அண்ணாதுரை.

நிலவைப் பிடிக்க...

''பூமியிலிருந்து 3.86 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது நிலா. நிலவுக்குச் செல்ல கிட்டத்தட்ட ஒரு வார காலம் ஆகலாம். 386 கோடி பட்ஜெட்டில் தயாரானது சந்திரயான்-1. சந்திரயான் - 2-வின் பட்ஜெட் 425 கோடி. சந்திரயான் திட்டத்தில் இன்னொரு மிக முக்கிய அம்சம், அது நாங்கள் உருவாக்கியுள்ள மாதிரி நிலா'' என்கிறார் அண்ணாதுரை. சுமார் 10 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு இருக்கும் மாதிரி நிலவில் மண், தட்ப வெப்பம், சூழல் போன்றவை அப்படியே நிலவின் தன்மையில் இருக்கிறதாம்.

''பூமியிலுள்ள புவி ஈர்ப்பு விசையின் ஆறில் ஒரு பங்கு புவி ஈர்ப்பு விசையே நிலவில் இருக்கும். எனவே அதனைக் கருத்தில்கொண்டு பிரத்யேக பலூன் ஒன்றை உருவாக்கி உள்ளோம். அதுதான் நிலவில் இருக்கும் எடையின் அளவை நமக்குத் தெரிவிக்கும். இங்குதான் நாங்கள் உருவாக்கி உள்ள ரோவர் கருவியை ஓட்டிப் பார்க்கிறோம். இந்த ரோவர் எங்கள் கட்டளைகளைக் கேட்டு, ஆறு மாதங்கள் நிலவிலே தங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்...'' என்கிறார்.

இவர்தான் அண்ணாதுரை

மயில்சாமி அண்ணாதுரை விஞ்ஞானியாக அறியப் பட்டாலும், தீவிர இலக்கிய வாசகர். அவ்வப்போது உணர்ச்சி பீறிடும் கவிதைகளை எழுதியும் அசத்துவார். கூடிய விரைவில் கவிதைத் தொகுப்பு வெளியிடவும் போகிறாராம்.

நிலவில் தமிழன்

பெங்களூருவாசியாகவே மாறிவிட்டாலும் பிறந்த மண்ணை மறக்காமல் இருக்கிறார். குடும்ப விழாக்கள் எதுவாக இருந்தாலும் மண் மணம் மாறாமல் கிராமத்தில்தான் நடக்கிறது.

தான் இத்தனை பெரிய நிலையை அடையக் காரணம், 'தாய்மொழி தமிழில் கல்வி பயின்றதுதான்’ என்று உறுதியாகச் சொல்கிறார்.

சந்திரயானை விண்ணில் ஏவியவுடன் முதன் முதலாக வாழ்த்து தெரிவித்துப் பூங்கொத்து அனுப்பிய அன்றைய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, கர்நாடக அரசின் மிக உயர்ந்த விருதான 'கன்னட ராஜ்யோத்சவா பிரஷாதி’ என்ற விருது வழங்கி கொளரவித்தார். இந்த விருதை பெற்ற முதல் தமிழர் அண்ணாதுரை என்பது குறிப்பிடத் தக்கது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism