Published:Updated:

அன்பை விதைப்போம்!

ஸ்ரீஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள்ஸ்ரீ மஹா சன்னிதானம் - சிருங்கேரிஅருளாசிபடங்கள்:ஜெ.வேங்கடராஜ்

பிரீமியம் ஸ்டோரி

சில்லென்று உடலின்மீது படுகிற காற்று, சின்னச் சின்னதாய் விழுகிற மழைத் துளி,  அங்கே, நெடிதுயர்ந்த மலையில், அழகிய கோயிலுக்குள் காட்சி தருகிறாள் ஸ்ரீசாரதாம்பாள். அந்தக் கோயிலுக்குப் பின்னே சிறியதொரு பாலம். அந்தப் பாலத்தின் கீழே சலசலத்து ஓடும் துங்கபத்ரா நதி. பாலத்தின் வழியே நடந்தால், மரங்கள் அடர்ந்த பூக்களின் நறுமணம் சூழ்ந்த அற்புதமான இடம்... அதுவே, சிருங்கேரி மடம்! ஆதிசங்கரர் ஸ்தாபித்த மடங்களில் ஒன்று.

அன்பை விதைப்போம்!

புராதனமான, ஆசாரக் கட்டுப்பாடுகள் நிறைந்த, ஆன்மிகத் தேடலுக்கு வழி கிடைக்கும் அந்த மடத்தின் பிரதான அறை ஒன்றில்... பூமியே குளிர்ந்து சில்லென்றிருந்த ஒரு மாலை வேளையில்... சிருங்கேரி சுவாமிகளின் தரிசனம் கிடைத்தது பாக்கியம்! ஸ்ரீபாரதீ தீர்த்த சுவாமிகளும் காரியதரிசிகள் ஓரிருவரும் மட்டுமே உடன் இருக்க... சக்திவிகடனுக்காக நிகழ்ந்த அந்தச் சந்திப்பு, ஒரு பரவச தித்திப்பு!

விகடன் குழுமத்திலிருந்து பத்து பத்திரிகைகள் வெளிவருவதைச் சொன்னதும், முகத்தில் வியப்புக் காட்டி, ''அடேங்கப்பா... ஆனந்த விகடன் புஸ்தகத்துலேருந்து இப்போ இத்தனைப் புஸ்தகங்கள் வர்றதா..? ரொம்ப நல்ல விஷயம்! மனுஷாளுக்குப் படிக்கிற ஆர்வமே குறைஞ்சிண்டு வர்ற இந்தக் காலத்துல, விகடன் மாதிரியான பாரம்பரியமான பத்திரிகைகள், இப்படி நிறையப் புஸ்தகங்களைக் கொண்டு வர்றது ரொம்பவும் ஆரோக்கியமான விஷயம். நல்லது... நல்லது!'' என்று விமர்சனம் போலவும், ஆசீர்வாதம் போலவும் இயல்பாகப் பேசினார் சுவாமிகள்.

''விகடன் தீபாவளி மலருக்குத்தானே... பேஷா சொல்றேன். எழுதிக்கோங்கோ'' என்று உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். அதில், மக்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லவேண்டும் என்கிற அவரின் கடமை உணர்வும், பொறுப்பு உணர்ச்சியும் தெளிவுறத் தெரிந்தது.

''நியாயம், தர்மம், நீதி... இவையெல்லாம் நமக்குக் கிடைத்தால், நாம் மகிழ்வோம்தானே! கிடைக்காவிட்டால், துவண்டு கதறி அழுவோம், இல்லியா? அப்படியானால் அதே நியாயமும், தர்மமும், நீதியும் இந்த உலகம் முழுமைக்கும் தேவை என்பதை நாம் உணரவேண்டும். அநியாயம், அநீதி, அதர்மம் ஆகிய திசையின் பக்கம் ஒரு அடி கூட எடுத்துவைக்காமல், தர்மத்தின் பாதையே நம் பாதையாக, நியாயத்தின் வழியே நம்முடைய வழியாக இருக்கவேண்டும்.

நியாயம், தர்மம், நீதி இவையெல்லாம் வெறும் சொற்கள் இல்லை. அவை நம்மால் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படவேண்டிய செயல்கள். அப்படிக் கடைப்பிடிக்கும்போது, அந்தச் செயல்கள் அனைத்திலும் இறைச் சக்தி நிறைந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.  

அன்பை விதைப்போம்!

இல்லறம் நல்லறமாக இருக்கவேண்டும். ஆனால், அதில் சிக்கல்களும் பிரச்னைகளும் தற்போது அதிகரித்துவிட்டன. விவாகம் என்பது இந்தக் காலத்தில் படாடோபம் நிறைந்ததாகிவிட்டது. பரபரப்புடன் நடைபெறுகிறது. எத்தனை வேகமும் பரபரப்புமாகக் கல்யாணங்கள் நிகழ்கிறதோ, அதற்குச் சற்றும் குறையாத பரபரப்புடன் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடந்து முடிகின்றன. கணவனை மனைவியும், மனைவியைக் கணவனும் ஏமாற்றி, வேறொரு ரகசிய வாழ்க்கை நடத்துகிற வேதனை அதிகரித்து வருகிறது. இதனால், விவாகங்கள் ரத்து ஆகிற மோசமான நிலையும் தொடர்கிறது. இந்து தர்மத்தில் விவாகம்தான் உண்டே தவிர, விவாகரத்தெல்லாம் கிடையாது. தர்மத்தை உடைக்கவோ, மீறவோ, மாற்றவோ நமக்கு எந்த அதிகாரமும் அருகதையும் இல்லை.

இல்லற தர்மத்துக்கு மிகச் சிறந்த உதாரணம்... ஸ்ரீராமர்தான். அவரைப் போல் முழுதுமாக வாழ்ந்து முடிப்பது மிகப்பெரிய வேள்வி. ஸ்ரீராமர்போல் வாழவேண்டும் என்று நினைத்தாலே, சங்கல்பம் செய்துகொண்டாலே, நாம் எடுத்திருக்கும் இந்தப் பிறவியைச் சீரிய முறையில் பூர்த்தி செய்துவிடுவோம்.

நல்ல இல்லறத்தின் விளைவுகள், மணிமணியான குழந்தைச் செல்வங்கள். ஒவ்வொரு வீட்டுக்கு மட்டுமின்றி நாட்டுக்கும் தேவையான விஷயம்... நமது வாரிசுகள்! நாம் நல்ல செயல்களைச் செய்தால்தான், அதைப் பார்த்து வளர்கிற நமது குழந்தைகளும் அவ்விதமே செயல்படுவார்கள். எனவே, நல்ல விஷயங்களை வெறுமே போதனையாக மட்டுமல்ல; அதன்படி வாழ்ந்து காட்டவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. அப்போதுதான் குழந்தைகள் எனும் நாளைய தலைமுறைகள் நமது கலாசார, பண்பாடுகள் கெடாமல், கெடுக்காமல், அதை அடியொற்றி வாழ்வார்கள். நமது பண்பாடும் கலாசாரமும், இறை வழிபாடுகளும் மிக மிக உன்னதமானவை. உலகிலேயே இதுபோன்ற கட்டமைப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிற வசதியும் மேன்மையும் நமக்குத்தான் இருக்கிறது. எனவே, நமது இந்து சமயக் கோட்பாடுகளையும் நியதிகளையும் ஒருபோதும் விட்டுவிடக் கூடாது.

நியதிகளின்படி ஒழுக்கத்துடனும், ஆகமங்களின்படி வழிபாடுகளுடனும் பின்னிப் பிணைந்தது நம் வாழ்க்கை. நம் முன்னோர்கள் வகுத்துத் தந்த பண்டிகைகளும் அவ்விதமே! பண்டிகைகள் என்பவை வெறும் குதூகலத்துக்கான கொண்டாட்டம் மட்டுமல்ல! இந்து தர்மத்தின்படி, உறவுகளிடத்தும் உலகில் உள்ள மனிதர்களிடத்தும் அன்பைப் பரிமாறிக் கொள்வதற்கான அற்புத நிகழ்வாகவே அவை திகழ்கின்றன.

பண்டிகைகளில், புனித நீராடுவதும் புத்தாடை அணிவதும் உடலையும் மனத்தையும் மலர்ச்சிப்படுத்தும். உறவுகள், தோழமைகள் என எல்லோருக்கும் வாழ்த்துச் சொல்லியும், பட்சணங்கள் பரிமாறியும் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். இல்லாதவர்க்கு முடிந்த அளவு உதவி செய்வதும், இருப்பதை எல்லோர்க்கும் பகிர்ந்து கொடுப்பதுமான மனோபாவத்தை நமக்குள் விதைப்பவை, பண்டிகைகளே! நமக்குள்ளே நல்ல விஷயங்கள் விதைக்கப்பட்டால், அது நம் குழந்தைகளிடம் விருட்சமென வளரும். பல்கிப் பெருகும்.

இந்து தர்மத்தின் தாத்பரியத்தைப் பேணிக் காத்து, பண்டிகையைக் கொண்டாடுங்கள். பரஸ்பரம் அன்பை விதைத்து, அதனை இன்னும் இன்னும் வளர்த்து விருட்சமாக்குங்கள்!

அனைவருக்கும் ஆசீர்வாதங்கள்!  ஆசீர்வாதங்கள்!!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு