Published:Updated:

சார்தாம் யாத்திரை

ஆன்மிகம் / ப.முத்துக்குமாரசாமி

சார்தாம் யாத்திரை

ஆன்மிகம் / ப.முத்துக்குமாரசாமி

Published:Updated:

றைவனை நம் உள்ளத்தில் வைத்தும் இல்லத்தில் வைத்தும் வழிபட முடியும். ஆனால், ஆண்டவனைத் தேடிப்போய் தரிசனம் செய்யும் அனுபவமே பேரா னந்தம் என்கிறார்கள், ஆன்மிகப் பெரியோர்கள். அப்படி மேற்கொள்ளும் தீர்த்த யாத்திரைகளில் முதன்மையானது சார்தாம் யாத்திரை. யமுனோத்திரி, கங்கோத்திரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய நான்கு திருத்தலங்களையும் ஒரே சுற்றில் சென்று தரிசித்து வழிபடுவதே சார்தாம் யாத்திரை! 

யமுனோத்திரி

இமய மலையில் யமுனை உற்பத்தியாகும் திருத்தலம் யமுனோத்ரி. இதற்கு 'ஜமுனா’ 'ஜம்னோத் கிரி’ என்கிற பெயரும் உண்டு. இந்தப் புனிதத் தலத்துக்கு புது டெல்லியில் இருந்து ஹரித்துவார் சென்றும் அல்லது ரிஷிகேஷ் சென்றும் தீர்த்த யாத்திரையைத் துவங்கலாம். ரிஷிகேசத்தில் இருந்து நரேந்திரா நகர், சம்பா, தெஹ்ரி, தாராசு, பார்கோட்,சயனாச்சட்டி, ஹனுமன்சட்டி வழியாக ஜானகிபாய்ச்சட்டிக்கு செல்ல வேண்டும். ஜானகிபாய்ச்சட்டியில் இருந்து 6 கி.மீ. தூரம் ஏறுமுகமான மலைப் பாதையில் செல்ல மட்டக் குதிரைகளும், தண்டிகளும் சவாரிக்குக் கிடைக்கும். கடைசி அரை கி.மீ. பாதை மிகவும் செங்குத்தானது. நடந்து மலை ஏற முடியாத வர்களுக்கு குதிரைக் காரர்களும், டோலிவாலாக்களும் குவிந்து உள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சார்தாம் யாத்திரை

ஆஞ்சநேயர் வாலில் ராவணனின் படை வீரர்கள் தீயைப் பற்றவைக்க, ஆஞ்சநேயர் இலங்கையைத் தீக்கிரை யாக்கியதை ராமாயணம் மூலம் அறிந்து இருப்போம். இலங்கையை எரித்த பின்னர் தன் வாலில் உள்ள நெருப்பை அணைக்க, அனுமன் நேராக இமாலயத்தில் உள்ள இந்த மலைச் சிகரத்துக்குத்தான் வந்தாராம். இங்கு உள்ள உறைபனியில் தன் வாலைத் தேய்த்து நெருப்பை அணைத்துக் கொண்டதால், 'குரங்கு வால்’ (பந்தர் பூஞ்ச்) என்றும் இதற்குப் பெயர் உண்டு. இந்த மலைத் தொடருக்குப் பின்னால் உள்ள 'களிந்தீ’ என்ற மலைச் சிகரத்தில் இருந்துத யமுனை உற்பத்தியாகிறது.

19-ம் நூற்றாண்டில் ஜெய்ப்பூர்மகா ராணி குலாரி, இங்கு யமுனா தேவி கோயிலைக் கட்டியுள்ளார். யமுனா தேவியின்  சிலை கறுப்புச் சலவைக் கல்லால் ஆனது. எமனின் சகோதரிதான் யமுனா தேவி என்று கருதப்படுவதால், யமுனையில் நீராடுவோர்க்கு மரணம் எளிதில் வாய்க்காது என்பதும் நம்பிக்கை. யமுனோத்திரி திருக்கோயிலுக்கு அருகில் சூரிய குண்டம் என்ற தீர்த்தத் துறை உள்ளது. இது ஒரு வெந்நீர் ஊற்று. ஒரு துணியில் அரிசியை முடிந்துக் கட்டிப் போட்டால் சோறாகிவிடும். இந்தச் சோறுதான் யமுனா தேவியின் பிரசாதம். 16-ம் நூற்றாண்டில் வல்லமாச்சார்யா என்ற கவிஞரால் எழுதப்பட்ட, 'யமுனா சதகம்’ என்ற நூலில் கிருஷ்ணன் மீது யமுனை காதல் கொண்ட செய்தி சொல்லப்பட்டு உள்ளது. இந்தத் திருத் தலத்தினைத் தரிசித்து மகிழ, மே முதல் அக்டோபர் வரை உகந்த மாதங்கள் ஆகும்!

கங்கோத்திரி

கங்கை உற்பத்தியாகும் புண்ணி யத்தலம், கங்கோத்திரி. இது, ஹரித்து வாரில் இருந்து தாராசு உத்தரகாசி வழியாக 272 கி.மீ. தொலைவில் உள்ளது. பகீரதனின் தவத்தால் கங்கை மண்ணுலகத்துக்கு வந்து அருள்பாலிப்பதாக புராணப் பதிவு உள்ளது. பகீரதன் தவம் இருந்த பாறையின் மீதுதான் பாகீரதி திருக்கோயில் உள்ளது. கங்கையின் வலது கரையில் கங்காதேவி ஆலயமும் இடது கரையில் ஆசிரமங்களும் உள்ளன. பாற்கடல் கடைந்து அதில் இருந்து அமுது தோன்றியபோது, அதனுடன் பொங்கி வந்த நஞ்சினை செயல் இழக்கச் செய்யும் சக்தி, அமுதம் கலந்த கங்கை நீருக்கு மட்டுமே இருக்கிறது என நம்பப்பட்டு வருகிறது. அதனால்தான் கங்கோத்திரியில் இருந்து கங்கை நீர் ராமேஸ்வரத்துக்கு சிவ பூஜைக்காக எடுத்துச் செல்லப்படுகிறது.

சார்தாம் யாத்திரை

கங்கோத்ரியில் உள்ள கோயிலின் கருவறையில் கங்காதேவி மகர வாகனத்தின் மீது கம்பீரமாக வீற்றிருக்கிறாள். மேல் கரங்களில் கமலமும் கலசமும் வைத்திருக்க, வலது கீழ்க்கரம் அபயஹஸ்தமாக இருக்கிறது. இடது கையைத் தொடையின் மீது வைத்து இருக்கிறாள்.

கருவறையில் மூலமூர்த்திக்குக் கீழே ஆதிசங்கரரின் சிறிய மூர்த்தி ஒன்றும் இருக்கிறது. அதன் அடியில் அஷ்ட தாதுக்களான ஸ்ரீசக்கரம் ஒன்றும் உள்ளது.

கேதார்நாத்

ஆதிசங்கரர் பூஜித்து மகிழ்ந்த கேதார்நாத் திருத்தலம் துவாதா லிங்கத் திருத்தலங்களுள் ஒன்று. ஹரித்வாரில் இருந்து ரிஷிகேஷ், ருத்ர பிரயாகை, குப்தகாசி, கௌரிகுண்டம் வழியாக 230 கி.மீ. வரை பேருந்தில் பயணித்து கௌரி குண்டம் செல்லலாம். அங்கு இருந்து 14 கி.மீ நடந்தோ அல்லது மட்டக் குதிரை, டோலி அல்லது ஹெலிகாப்டரிலோ கேதார்நாத் ஆலயம் சென்று அடையலாம். 3,583 மீட்டர் உயரத்தில் உள்ளது செங்குத்தான அடர்ந்த பனி படர்ந்த மலை கோடுகள் நிறைந்த பாதை.

கேதார் என்பது சிவனின் இன்னொரு பெயர். சிவபெருமானின் பண்ணிரண்டு ஜோதிலிங்கங் களுள் தேதார்நாத்தும் ஒன்று, முன்னாளில் இந்தக் கோயில் பாண்டவர்களால் கட்டப்பட்டதாம். பின்னர் தற்போதையத் திருக்கோயில் ஆதிசங்கரரால் கட்டப்பட்டதாம். கருவறைக்கு உள்ளே கூம்பு வடிவில் உள்ள ஒரு பாறை சிவபெருமான் சதாசிவ வடிவமாக வணங்கப்படுகிறது.

மகா பா£ரதப் போர் முடிந்த பிறகு, பாண்டவர்கள் தம் சகோதரர்களைக் கொன்ற  பாவத்தைப் போக்கிக் கொள்ள சிவ பெருமானை தரிசிக்க வருகிறார்கள். சிவபெருமான் அவர்களைச் சந்திக்க விரும்பவில்லை. பாண்டவர்கள் வருவதை அறிந்த சிவன்  எருதாக மாறி, மாட்டுச் சந்தையில் ஒளிந்து கொள்கிறார். பீமன் அவரைஅடை யாளம் கண்டுகொண்டு, எருதை பிடிக்க முயற்சித்தபோது, தன் கொம்பால் பூமியைக் குத்தி, பள்ளம் தோண்டி அங்கே தன்னை மறைத்துக்கொள்கிறார் சிவபெருமான். பீமன் அவர் பூமிக்குள் சென்று மறையாமல் இருக்க, பின்னால் இருந்து அவரை இழுக்க, சிவபெருமானின் உடலின் பல பாகங்களும் சிதறி பல இடங்களில் விழுகின்றன. காட்மண்டுவில் பசுபதீநாத்தில் நெற்றி, கேதார்நாத்தில் திமில், மத்ம கேஸ்வரில் உடலின் நடுப்பாகம், துங்கா நத்தில் கைகள், ருத்ரநாத்தில் முகமும் விழுந்ததாக ஓர் புராணக் குறிப்பும் உள்ளது.

பத்ரிநாத்

அலகாநந்தா நதிக் கரையின் வலது கரையில் நரநாராயணச் சிகரங்களுக்கு இடையே உள்ளது தொன்மை வாய்ந்த பத்ரிநாத் ஆலயம். திருக்கோயிலுக்குப் பின் புறம் உயர்ந்த நீலகண்ட சிகரம் காணப்படுகிறது. ஹரித்துவாரில் இருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் ஐந்து புண்ணிய சங்கமங்கள் இருக்கின்றன. அலகாநந்தா நதியுடன்... பாகீரதி சங்கமமாகும் தேவப்பிரயாகை; தேவப்பிரயாகையும், மந்தாகினி சங்கமிக்கும் ருத்ரபிரயாகை; அலகாநந்தாவுடன் பிண்டர்நதி சேரும் கர்ணபிரயாகை; நந்தாகினி சேரும் நந்தப்பிரயாகை; கருடகங்கா என்ற தௌலி நதி சேரும் விஷ்ணுப்பிரயாகை என ஐந்து பிரயாகைகள் உள்ளன. சார்தாம் யாத்திரை மேற்கொள்வோர் ஐந்து சங்கமங்களிலும் நீராடிச் செல்ல வேண்டும் என்பது மரபு.

சார்தாம் யாத்திரை

பத்ரிநாராயணனின் ஆலயத்தை 'ஊர்வசி’ பீடம் என்றும் 'நாரத க்ஷேத் ரம்’ என்றும் குறிப்பிடுகிறார்கள். ஆலயத்துக்குத் தெற்கில் ஊர்வசிக்கு ஒரு சிறு கோயில் இருக்கிறது. ஹரித்வாரில் இருந்து ரிஷிகேஷ் தேவபிரயாகை, கர்ணபிராயகை, விஷ்ணுப் பிராயதை - அனுமன்சட்டி வழியாக 322 கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் பத்ரிநாத். 3,133 மீட்டர் உயரத்தில் பனிபடர்ந்த இமயமலையில் உள்ளது. திருக்கோயில் வரை பேருந்தில் பயணிக்கலாம்.  வேத காலத்துக்கு முற்பட்ட திருத்தலம். கி.பி 8-ம் நூற்றாண்டில் சங்கரரால் புதுப்பிக்கப்பட்டு தற்போது உள்ள திருக்கோயிலை கார்வால் மன்னர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டியுள்ளனர்.  இதற்கு  பூலோக வைகுந்தம், விசால் பத்ரி என்ற பெயர்களும் உண்டு. வருடத்தில் ஏப்ரல் மாதம் கடைசி வாரத்தில் இருந்து நவம்பர் இரண்டாவது வாரம் வரை  திருக்கோயில் வழிபாட்டுக்காகத் திறந்துவைக்கப்படுகிறது. நவம்பர் முதல் ஏப்ரல் உறை பனியானது கோயிலை மூடிவிடுவதால் திருக்கோயில் நடை சாத்தப்பட்டுவிடுகிறது.

பத்ரிநாராயணனின் ஆலயத்தில் காலை 7 மணிக்கு ராவல்ஜி எனப்படும் நம்பூதிரி அர்ச்சகர் பூஜைக்கு வந்துவிடுகிறார். பின்னர் நிர்மால்ய தரிசனம், அபிஷேக தரிசனம், திருமேனி தரிசனம், அலங்கார தரிசனம், ஆரத்தி தரிசனம் என்று நாராயணப் பெருமானின் திவ்விய மங்களக் காட்சி அற்புதங் கள் நிகழ்வுறும். அபிஷேகத்துக்குப் பிறகு, பத்ரிநாராயணனின் திருமேனி முழுவதும சந்தனக் காப்பு நடைபெறுகிறது. அதற்கு மேல் மலர்களாலும் கண்கவர் அலங்காரம் செய்கிறார் ராவல்ஜி. 'திருமேனி தரிசனத்தின்போது நாம் கண்ட அந்தச் சிறிய மூர்த்தியா, இப்படி மாறிவிட்டது’ என்று நாம் பிரமிக்கும் வகையில் அலங்காரம் அமைகிறது. சரியாக பகல் 12 மணிக்குக் கோயிலை அடைத்துவிடுகிறார்கள். பிறகு, மாலை 4 மணிக்குத்தான் தரிசனம். இரவு 8 மணி வரை அஷ்டோத்திர, சகஸ்ரநாம அர்ச்சனைகள் நடைபெறுகின்றன. கடைசியாக, கீதகோவிந்தம் என்ற சயன ஆரத்தி நடைபெறுகிறது. இரவு மங்களாரத்தி நடைபெற்ற பிறகு, மலர்களையும் நகைகளையும் ஒவ்வொன்றாகக் கலைந்து, சந்தனத்தை மட்டும் விட்டுவைத்து கருவறையை மூடிவிடுகிறார்கள். மறுநாள் காலை நிர்மால்ய தரிசனத்தின்போது அந்தச் சந்தனத்தை எடுத்து உருண்டையாக உருட்டி பத்ரி நாராயணனின் பாதங்களில் ஒற்றிவைத்து, பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதமாக கொடுக்கிறார்கள்.

இந்த சார்தாம் யாத்திரை முடித்து வந்தால் கிடைக்கும் மன நிம்மதிக்கு ஈடாக, இந்த உலகில் எதையும் சொல்ல முடியாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism