Published:Updated:

"இதை யாரிடமும் சொல்லக் கூடாது!"

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"இதை யாரிடமும் சொல்லக் கூடாது!"
"இதை யாரிடமும் சொல்லக் கூடாது!"

எம்.ஜி.ஆர். இட்ட அன்புக் கட்டளை நினைவுகள்ஆர்.கோவிந்தராஜன்

பிரீமியம் ஸ்டோரி

மிழ்த் திரையுலகிலும் தமிழக அரசியல் களத்திலும் சரித்திர நாயகனாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆருக்கு 30 ஆண்டுகளுக்கு மேல் மெய்க்காப்பாளராகப் பணியாற்றியவர், கே.பி.ராமகிருஷ்ணன். திரையுலகில் ஸ்டன்ட் இயக்குநரான இவர், எம்.ஜி.ஆரின் சொந்தத் திரைப்படமான 'நாடோடி மன்னன்’ முதல் அவருடைய இறுதித் திரைப்படமான 'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்’ வரை எம்.ஜி.ஆருடன் ஸ்டன்ட் காட்சிகளிலும் இதர காட்சிகளிலும் நடித்துள்ளார். குறிப்பாக, எம்.ஜி.ஆர். இரட்டை வேடம் ஏற்று நடித்துள்ள திரைப்படங்களில், எம்.ஜி.ஆருக்கு டூப்பாக மற்றொரு வேடத்தில் நடித்துப் பெருமை பெற்றவர். இப்போது திரைத் துறையில் பணிபுரிந்து வரும் அவரின் மகன் ஆர்.கோவிந்தராஜ், எம்.ஜி.ஆர். பற்றித் தனது தந்தை தன்னிடம் பகிர்ந்து கொண்ட தகவல்களை விகடன் தீபாவளி மலர் வாசகர்களுக்காகத் தருகிறார்.

எம்.ஜி.ஆரின் தமிழ்ப் பற்று!

"இதை யாரிடமும் சொல்லக் கூடாது!"

1969-ம் ஆண்டு. மதுரை வைகை அணைப் பகுதியில் 'மாட்டுக்கார வேலன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற 'பட்டிக்காடா பட்டணமா’ என்ற டூயட் பாடல் படமாக்கப்பட்டுக்கொண்டிருந்தது. எம்.ஜி.ஆர். அப்போது சிறுசேமிப்புக் குழுத் தலைவராக இருந்தார். அமைச்சருக்கு ஈடான பதவி என்பதால், மரியாதை நிமித்தமாக எம்.ஜி.ஆரைச் சந்திக்க அவர் தங்கியிருந்த விருந்தினர் இல்லத் துக்கு மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மோகன்தாஸ் ஐ.பி.எஸ். வந்தார். எம்.ஜி.ஆருடன் மோகன்தாஸ் பேசும்போது அவரது பேச்சில் அதிகமான மலையாள உச்சரிப்பு இருந்தது. அவர் கேரளத்துக்காரர் என்பதால், தமிழும் மலையாளமும் கலந்து பேசினார். அவருக்கு விடை கொடுக்கும்போது, ''நீங்கள் இப்போது தமிழ்நாடு கேடரில் பணிபுரிகிறீர்கள். எனவே, தமிழ் மட்டுமே உங்களது முழு உச்சரிப்பாக இருக்க வேண்டும். எனவே, தமிழில் பேச துரித முயற்சி செய்யுங்கள். நாம் அடுத்து சந்திக்கும்போது தங்களது நல்ல தமிழை கேட்க வேண்டும்'' என்றார் எம்ஜி.ஆர். அவரும் ஆமோதித்து விடைபெற்றார். எம்.ஜி.ஆர். சொன்னபடியே நன்கு தமிழ் பேசக் கற்றுக்கொண்ட மோகன் தாஸ், பின்னாளில் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உளவுத் துறை தலைவரானார்.

எம்.ஜி.ஆரின் தேர்தல் பிரசார வேன்!

இன்றைய தேர்தல் பிரசாரத்தில் முக்கிய இடம் வகிப்பது, அரசியல் தலைவர்களின் பிரசார வேன். முக்கி யத் தலைவர்கள் பலரும் இந்தப் பிரசார வாகனத்தில்தான் மக்களைச் சந்திக்கின்றனர். இந்த வேன் பிரசார முறையை முதன்முதலில் தொடங்கி யவர் எம்.ஜி.ஆர்-தான்.

"இதை யாரிடமும் சொல்லக் கூடாது!"

எம்.ஜி.ஆருக்கு இந்த வழிமுறையைப் பின்பற்றச் சொன்னவர் பேரறிஞர் அண்ணா. ''மக்கள் அனைவருக்கும் தெரியும்படி நீங்கள் பிரசார பயணம் மேற்கொள்ள வேண்டும். எனவே அனைவரும் காணுமாறு வேனை வடிவமைத்துக்கொள்ளுங்கள்'' என எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை சொன் னார் அண்ணா. அதன்படி 1962-ம் ஆண்டு ஃபர்கோ வேன் ஒன்றை வாங்கி, அதற்குச் செலவு செய்து, வேனில் ஒரு பெரிய மர பெஞ்ச் பொருத்தி, அதன் மீது நின்றுகொண்டு மக்களைச் சந்தித்தார் எம்.ஜி.ஆர். அந்த மர பெஞ்ச்சில் அவரது பாதுகாவலர்களாகிய என் அப்பா உள்ளிட்டவர்கள் அவரை சுற்றி நிற்பார்கள். அவ்வாறே 1962, 71, 77, 80 தேர்தல்கள் வரை ஃபர்கோ மற்றும் வில்லீஸ் வேனை தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தினார் எம்ஜி.ஆர். இந்த வேன்களில் இப்போதைய தலைவர்களின் வேனைப் போன்ற ஆடம்பர வசதிகள் கிடையாது. பேட்டரியால் இயங்கும் விசிறிகள் மட்டும் உண்டு. இப்போது உள்ளதுபோல் தேர்தல் கமிஷனின் கெடுபிடிகளும் அப்போது இல்லை என்பதால், இரவு முழுவதும் பிரசாரம் நடைபெறும். தனது உடல் நிலையைக் கடுமையாக வருத்திக்கொண்டு இரவு பகல் பாராது மக்களைச் சந்தித்தார் எம்.ஜி.ஆர். வேனின் உள்ளே ஒரு ஆள் படுக்கக்கூடிய வகையில் இருபுறமும் நீளமான இருக்கைகள் இருக்கும். இதில் சற்று நேரம் கண் அயர்வார். அவ்வளவே!

எம்.ஜி.ஆரின் ஸ்டன்ட் சகாக்கள்

"இதை யாரிடமும் சொல்லக் கூடாது!"

பொதுவாக திரைப்பட நடிகர்கள் தாங்கள் திரையில் தோன்ற முயற்சி மேற்கொண்ட பின்னரே சண்டைக் கலைகளைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவர். ஆனால், எம்.ஜி.ஆர் இதில் விதிவிலக்கு! உடற்பயிற்சியைப்போல தற்காப்புக் கலைகளிலும் மிகுந்த நாட்டம் கொண்டவர் அவர். திரைக்காக அல்லாமல், அதில் தோன்றும் முன்பே சண்டைக் கலைகளில் நன்கு தேர்ச்சி பெற்றிருந்தார். அதன் காரணமாகவே திரையில் தலைசிறந்த ஆக்ஷன் ஹீரோவாகப் பரிணாமம் பெற்று, தனக்கென ஒரு ஸ்டன்ட் குழுவை ஏற்படுத்தியிருந்தார். அந்த ஸ்டன்ட் குழுவினர் எம்.ஜி.ஆரது அனைத்துத் திரைப்படங்களிலும் தொடர்ச்சியாகப் பணிபுரிந்தவர்கள். அவர்கள் மீது எம்.ஜி.ஆருக்கு அலாதி பிரியமும் பாசமும் உண்டு. அவர்களும் சினிமாவைத் தாண்டி, எம்.ஜி.ஆரை தனது உயிரினும் மேலாக நேசித்தனர். இதில் மக்களிடம் நன்கு அடையாளம் காணப்பட்டவர்கள் என ஸ்டன்ட் இயக்குநர் ஷ்யாம் சுந்தர், ஜஸ்டின், புத்தூர் நடராஜன், குண்டுமணி ஆகியோரைக் கூறலாம். இவர்களில் ஷ்யாம் சுந்தரும் நடராஜனும், எம்.ஜி. ஆரைவிட வயதில் மூத்தவர்கள். இதில் புத்தூர் நடராஜனை, 'நடராஜண்ணே’ என்றே அழைப்பார் எம்.ஜி.ஆர். இவரது சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலை அடுத்த இரணியல் என்ற ஊர். அதுபோல், கே.கே.மணி என்கிற குண்டுமணி மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்தவர். தனது ஆஜானுபாகுவான உருவத்தைக் கொண்டு சண்டைக் காட்சிகளில் இவர் விழுவதை எம்.ஜி.ஆர் மிகவும் ரசிப்பார். ஜஸ்டின், நாகர் கோவிலை அடுத்த மறவன் குடியிருப்பைச் சேர்ந்தவர். தனது கட்டுடலால் எம்.ஜி.ஆரைக் கவர்ந்து திரையில் பணியாற்றத் துவங்கினார். எம்.ஜி.ஆர். திரைப்படங்களின் ஆஸ்தான ஸ்டன்ட் மாஸ்டர் ஷ்யாம் சுந்தர் மங்களூர் பகுதியைச் சேர்ந்தவர். துளுவைத் தாய்மொழியாகக் கொண்டவர். ஸ்டன்ட் துறைக்கு வருவதற்கு முன்பு, ஒலிப்பதிவுப் பொறியாளராக இருந்தவர்.

எம்.ஜி.ஆரின் முன்னோடிகள்!

"இதை யாரிடமும் சொல்லக் கூடாது!"

சினிமா துறையைப் பொறுத்தவரை இயக்குநர் விஷயத்தில் தனது முன்னோடியாக ராஜா சந்திரசேகரைக் கருதியிருந்தார் எம்.ஜி.ஆர். தொழில் நுட்ப விஷயங்கள் சிலவற்றை இவரிடம் பார்த்துத் தெரிந்துகொண்டார். எம்.ஜி.ஆர். நடித்த தட்சயக்ஞம், மாயா மச்சீந்திரா, அசோக்குமார், ராஜமுக்தி போன்ற படங்களை இயக்கியவர் இயக்குநர் ராஜா சந்திரசேகர். இவர் எம்.ஜி.ஆர். நடித்த சீதா ஜனனம் படத்தை இயக்கிய டி.ஆர்.ரகுநாத்தின் சகோதரர் இவர். அதேபோல் திரைத் துறையில் சண்டைக் காட்சியில் தனது முன்னோடியாக எம்.ஜி.ஆர். கருதியது பி.யூ.சின்னப்பா அவர்களைத்தான். பி.யூ.சின்னப்பாவின் சண்டைக் காட்சி களை மிகவும் ரசித்துப் பார்ப்பார். வள்ளல் தன்மையிலும், மனிதநேயச் செயலிலும் எம்.ஜி.ஆருக்கு முன்னோடி என கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ண னைக் குறிப்பிடலாம்.

எம்.ஜி.ஆரின் இசை ஞானம்

"இதை யாரிடமும் சொல்லக் கூடாது!"

இசை ஞானம் இருந்தால்தான் நடிகனாகும் வாய்ப்பு கிடைக்கும் என்றிருந்த காலத்தில் நடிக்க வந்தவர் எம்.ஜி.ஆர். இசை ஞானம் என்பது சிறு வயது முதலே அவரது உடலில் கலந்துவிட்ட ஒன்று. கர்னாடக இசை பண்டிதர்களுக்கு நிகரான இசை ஞானம் எம்.ஜி.ஆரிடம் இருந்தது. எம்.ஜி.ஆர். படத்துக்கு இசையமைப்பவர்கள் அவரது இசை ஞானம் கருதி தாங்கள் அமைத்த மெட்டுக்களைப் போட்டுக் காண்பித்து, அவரது கருத்தைக் கேட்பார்கள். அவர் அவற்றைக் கூர்ந்து கவனித்து எந்தெந்த இடங்களில் என்ன வரிகளைப் போடுவது போன்ற நுட்பமான ஆலோசனைகளைச் சொல்வார். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற காலங்களில்கூட கர்னாடக இசையையே கேட்டு மகிழ்ந்தவர் எம்.ஜி.ஆர். அவரது ஞானமும் ரசனையும்தான் அவரது படங்களின் பாடல்கள் சிறப்பாக அமைய காரணம்.

மூத்தவர்களுக்கு மரியாதை!

தனது எதிரிகளே ஆனாலும், அவர் களின் மனம் நோகும்படி நடந்துகொள் ளக் கூடாது என்பதில் மிகுந்த கவன முடன் செயல்படுபவர் எம்.ஜி.ஆர். திரைத்துறை மூத்த கலைஞர்களான எஸ்.எஸ்.வாசன், தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், ஏவி.எம்.செட்டியார், கே.சுப்ரமணியம், எம்.கே.ராதா, நாகி ரெட்டியார் போன்றவர் களிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டு, இறுதி வரை அதில் இம்மிய ளவும் குறையில்லாமல் செயல்பட்டு வாழ்ந்தார். அவ்வாறு அவர்களின் பெயருக்கோ, புகழுக்கோ வேறு ஒருவ ரால் தன் கண்ணெதிரே களங்கம் ஏற் படும் நிலை ஏற்பட்டாலும், அந்த இடத்திலேயே கண்டனம் தெரிவித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்துவார்.

கே.எஸ். என்று எம்.ஜி.ஆரால் அன் புடன் அழைக்கப்பட்ட பழம்பெரும் இயக்குநர் கே.சுப்ரமணியத்தின் புதல்வர் அபஸ்வரம் ராம்ஜியின்

இன்னிசை விழா சென்னையில் நடை பெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் எம்.ஜி.சி.பாலு 'உரிமைக்குரல்’ திரைப் படத்தில் இடம்பெற்ற ஜேசுதாஸ் பாடிய 'விழியே கதை எழுது’ என்ற பாடலை சிதம்பரம் ஜெயராமன் குரலில் பாடினால் எப்படியிருக்கும் என்று மிமிக்ரி செய்து பாடிக்காட் டினார். அரங்கத்தில் ஆரவாரமும் கைத் தட்டல்களும் பலமாக இருந்தன. இதில் மகிழ்ச்சியடைந்த எம்.ஜி.சி. பாலுவும், சித்தப்பா எம்.ஜி.ஆர். பேசுகையில் தன்னைப் பாராட்டிப் பேசுவார் என்று மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தார். மேடையில் பேச வந்த எம்.ஜி.ஆரோ, ''பாலுவுக்குப் பக்குவம் போதாது. ஒரு கலைஞன் இன்னொரு கலைஞனின் மனம் நோகும்படி நடந்துகொள்வதும், அப்படிக் கைத்தட்டல்கள் வாங்க விரும்புவதும் பாராட்டத்தக்கது அல்ல. அது கீழ்த்தரமான உத்தி! ஒருவரது மனத்தை நோகடித்து ஓராயிரம் மனங்களைச் சிரிக்க வைப்பது சிறப்பு ஆகாது!'' என்று பேசினார். அவையிலோ நிசப்தம்! அனைவரும் எம்.ஜி.ஆரது கருத்தை ஆமோதித்தவாறு கேட்டுக்கொண்டிருந்தனர். மிமிக்ரி என்பது ஒரு கலையாக இல்லாமல், வெறுமே நையாண்டியாகப் பார்க்கப்பட்ட காலகட்டம் அது. எம்.ஜி.ஆரின் கருத்து என்னவெனில், எந்தவொரு கலையுமே - குறிப்பாக நகைச்சுவை - ஒருவர் மனதுகூட வருத்தப்படாத அளவுக்குச் சிறப்பாக அமைந்தால் மட்டுமே நிறைவு பெறும் என்பதே!

எம்.ஜி.ஆரின் மனிதநேயம்!

"இதை யாரிடமும் சொல்லக் கூடாது!"

'நாடோடி மன்னன்’ தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த சமயம். அப்போது எம்.ஜி.ஆரும் படத்தில் நடித்த கலைஞர்களும் ரசிகர்களை மகிழ்விக்க திரையரங்குகளுக்குச் சென்று, படத்தின் இடைவேளையில் தோன்றி, ரசிகர்களை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தனர்.

திருநெல்வேலியில் 'நாடோடி மன்னன்’ படத்தின் 100-வது நாள் விழா கொண்டாட்டம். வழக்கம்போல் மாலை நேரக் காட்சியின் இடையில் எம்.ஜி.ஆர். மற்றும் பி.எஸ்.வீரப்பா, நம்பியார், சந்திரபாபு, சரோஜாதேவி ஆகியோர் மேடையில் தோன்றி ரசிகர் களை மகிழ்வித்தனர். எம்.ஜி.ஆருடன் பாதுகாவலர்கள் குழுவில் என் அப்பா, தர்மலிங்கம் மற்றும் திருப்பதிசாமி, புத்தூர் நடராஜன், குண்டுமணி உள்பட பலரும் உடன் செல்வது வழக்கம். நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று முடிந்து கலைஞர்கள் அவரவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த இடங்களுக்குச் சென்று விட்டனர்.

எம்.ஜி.ஆருக்கு ஏற்பாடு செய்திருந்த பங்களாவில் எம்.ஜி.ஆர்., வீரப்பா, நம்பியார், சந்திரபாபு ஆகியோர் உரையாடிக்கொண்டிருந்தனர். பக்கத்து அறையில், பாதுகாவலர் குழுவினரும் இரவு உணவை முடித்துப் பேசிக்கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் அவர்களும் எம்.ஜி.ஆரிடம் விடைபெற்றுச் சென்று விட்டனர். எம்.ஜி.ஆரும் அப்போதுதான் ஓய்வுக்காக சற்று அயர்ந்தார். அப்போது இரவு 10 மணி இருக்கும். அந்த நேரத்தில், 'ஒரு முக்கிய உதவிக்காக எம்.ஜி.ஆரைக் காண வேண்டும்’ என்று ஒரு முதியவர் வந்து நின்றார். எம்.ஜி.ஆரின் உதவியாளர் சபாபதி, எம்.ஜி.ஆரிடம் சென்று விஷயத்தைச் சொன்னார். 'மணி பத்துக்கும் மேலாகிறதே! இந்த நேரத்தில் முதியவர் ஒருவர் வந்துள்ளார் எனில், விஷயம் முக்கியமானதாகவே இருக்கும். உடனே அவரை அழைத்து வா’ என்றார் எம்.ஜி.ஆர். அந்த முதியவருக்கு சுமார் 70 வயது இருக்கும். அழுக்கான ஆடைகள் அணிந்து, ஒட்டுத் துணியுடன் கூடிய வெள்ளைச் சட்டையுடன் கையில் ஒரு கந்தலான கோட்டும், ஒரு பழைய குடையும் வைத்திருந்தார்.

அவரைக் கனிவுடன் அழைத்த எம்.ஜி.ஆர்., ''சொல்லுங்கள்... நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று அவர் கரம் பற்றிக் கேட்டார். எம்.ஜி.ஆரைக் காண முடியுமா என்ற சந்தேகத்துடன் வந்த அந்த முதியவர், தான் காண்பது கனவா அல்லது நிஜமா என்ற உணர்ச்சிப் பெருக்கில் வார்த்தைகள் தடுமாற, ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அவரைத் தேற்றிய எம்.ஜி.ஆர்., 'பதற்றப்படாமல் கூறுங்கள்’ என்றதும், ''நான் ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியர். எனக்கு பென்ஷன் மட்டுமே வருகிறது. இப்போது எனது மகள் நிறைமாத கர்ப்பிணி. மருமகன் கூலி வேலை செய்துவருகிறார். மகளின் பிரசவச் செலவுக்கு என்னிடம் பணம் இல்லை’ என்று தட்டுத் தடுமாறிக் கூறி முடிப்பதற்குள், ''அவ்வளவுதானே..! கவலைப்படாதீர்கள். நல்ல ஏற்பாடாகச் செய்துவிடலாம்!'' என்று ஆறுதலாக அவரது தோளை மென்மையாகத் தட்டிக் கொடுத்தார். தன் உதவியாளர் சபாபதியை அழைத்துக் காதில் கூற, அவர் உடனே ஒரு கவரில் பணத்தை வைத்து எடுத்து வர, அதை அந்த முதியவருக்கு அன்போடு கொடுத்தார் எம்.ஜி.ஆர். உணர்ச்சிப் பெருக்கில் எம்.ஜி.ஆரின் கரம் பற்றித் தனது நன்றியைத் தெரிவித்த பெரியவர், சிறு தயக்கத்துடன், ''தங்களைக் காண என் மகளும் ஆவலோடு என்னுடன் வந்திருக்கிறாள். அவளையும் நீங்கள் ஆசீர்வதிக்க வேண்டும். இதோ, அவளை அழைத்து வருகிறேன்'' என்று சொல்லிக்கொண்டே புறப்பட, அவரைத் தடுத்து நிறுத்திய எம்.ஜி.ஆர்., ''என்ன காரியம் செய்தீர்கள்! இரவு 10 மணிக்கு மேல் ஆகிறது. இந்த அகால வேளையில் நிறைமாத கர்ப்பிணியை எதற்காக அழைத்து வந்தீர்கள்? மகள் எங்கே? இருங்கள், நானே வந்து பார்க்கிறேன்'' என்று வெளியே வந்து, அந்த முதியவரின் மகளை ஆசிர்வதித்தார்.

அதன்பின் அவர்கள் புறப்பட்டபோது, எங்களிடம் எம்.ஜி.ஆர்., ''அவர்களை நிறுத்துங்கப்பா'' என்றார். ''இந்த இரவு நேரத்தில் கர்ப்பிணிப் பெண்ணுடன்  பாவம் அந்தப் பெரியவர் எப்படி வீடு செல்வார்! எனது காரில் அவர்களைப் பத்திரமாகக் விட்டுவிட்டு வாருங்கள்!'' என்று கூறி, தனது காரில் இருவரையும் அனுப்பிவைத்தார். இருவரும் ஆனந்தக் கண்ணீருடன் விடைபெற்றனர். பின்னர் மற்றவர்களை அருகே அழைத்த எம்.ஜி.ஆர்., ''இதையெல்லாம் நீங்கள் வெளியே சொல்லிக்கொண்டிருக்கக் கூடாது!'' என அன்புக் கட்டளையிட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு