Published:Updated:

காட்டுக்குள்ளே...

காட்டுக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
காட்டுக்குள்ளே...

ஆல்பம் /டி.எல்.சஞ்சீவிகுமார்

காட்டுக்குள்ளே...

ஆல்பம் /டி.எல்.சஞ்சீவிகுமார்

Published:Updated:
காட்டுக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
காட்டுக்குள்ளே...

ருடத்தில் பாதி நாட்கள் ராம் நாராயணன் வாசம் செய்வது காடுகளில்தான் - கூடவே, எட்டாவது படிக்கும் அவரது மகன் கவுரவ் நாராயணனும்! 

''இந்தியா முழுவதும் நாங்கள் காடுகளில் சுற்றுவது இது ஒன்றும் முதல் தலைமுறை அல்ல... மூன்றாவது தலைமுறை. என்ன... என் தாத்தா என் அப்பாவுடன் துப்பாக்கியுடன் காடுகளில் சுற்றி, வேட்டையாடினார். அதற்குப் பிராயச்சித்தமாக, நான் என் மகனுடன் கேமராவுடன் காடுகளில் சுற்றி, விலங்கினங்கள் மற்றும் அரிய வகைப் பறவைகளைப் படம் எடுத்து, அவற்றையும் காடுகளையும் பாதுகாப்பது குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறேன்...'' தெளிவாகப் பேசுகிறார் கோவையின் தொன்மையான நிறுவனங்களின் ஒன்றான தண்டபாணி ஃபவுண்டரி நிறுவனங்களின் வாரிசுகளில் ஒருவரான ராம் நாராயணன்.

காடுகளையும், விலங்கினங்களையும் புகைப்படம் எடுக்கும் ஒரு சிலரில், முக்கிமானவர் ராம் நாராயணன். பிரபல வெப்சைட்டான, இந்தியன் நேச்சர் வாட்ச் நிறுவனம், காடுகள் சார்ந்த வெகு அரிய புகைப்படங்களை மட்டுமே அங்கீகரித்து தனது சைட்டில் வெளியிடும். அதில் ராம் நாராயணனின் படங்கள் ஏராளம். வாரத்தில் நான்கு நாட்கள் காடுகளில் பயணிக்கும் இவர், அதற்காகவே பிரத்யேகமாக ஒரு ஜீப்பை வடிவமைத்து, முகப்பில் கேமராவையும் பொருத்தி இருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காட்டுக்குள்ளே...

''பூர்வீகம் கோவை. போதும் என்ற அளவுக்கு என் முன்னோர்களும் நானும் சம்பாதித்துவிட்டோம். பணம் மீதான ஆசை போய்விட்டது. அதனால், காடுகளில் சுற்றி அலைந்து, தினம் குறைந்தது ஒரு புதிய உயிரினத்தையாவது கண்டுபிடிக்கிறேன். என் அப்பா தாமோதரன், ஒரு முறை, 'உன் தாத்தாவுடன் சேர்ந்து சில ஆண்டுகள் முன்பு வரை விலங்குகளை வேட்டையாடினேன். ஆனால், இன்று விலங்கினங்கள் நிறைய அழிந்துவிட்டன. உன் தலைமுறையில் இருந்து காடுகளும், விலங்கினங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு உன்னால் முடிந்த வரை உழைக்க வேண்டும்’ என்று சொல்லி ஒரு கேனான் கேமராவை வாங்கிக் கொடுத்தார். இப்படித்தான் சுமார் 30 வருடங்களாக கேமராவுடன் என் பயணம் தொடர்கிறது...'' என்கிறார்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மசிங்னகுடி, பரம்பிக்குளம், டாப்ஸ்லிப், மாயாறு, பவானி சாகர், தெங்குமரஹடா, திம்பம், தாளவாடி, முதுமலை - பண்டிப்பூர், கர்நாடகாவில் கபினி, பி.ஆர்.மலைகள், ரங்கன்திட்டு பறவைகள் சரணாலயம், மத்தியப்பிரதேசத்தின் பாந்தம்கர் காடுகள், கானா தேசிய பூங்கா, ராஜஸ்தானின் தார் பாலைவனம், அஸ்ஸாமின் காசிரங்கா என்று இவர் கால் படாத காடுகள் வெகு குறைவு.

காட்டுக்குள்ளே...

''காடுகள் பற்றிய அக்கறை அடுத்த தலைமுறைக்கும் ஏற்பட வேண்டும் என்று காடுகளுக்குச் செல்லும்போது மூன்று வயதில் இருந்தே என் மகன் கவுரவையும் அழைத்துச் செல்கிறேன். அவன் மூன்று வயதிலேயே படம் எடுக்கக் கற்றுக்கொண்டான். இப்போது என்னைவிட மிக அருமையாகப் படம் எடுக்கிறான். முதுமலை மற்றும் மத்தியப் பிரதேசத்தில் புலிகளை நேருக்கு நேர் சந்தித்து அவன் எடுத்த படங்கள் அற்புதமானவை. அந்தப் படங்கள், கோவை பி.எஸ்.ஜி. கல்வி நிறுவனங்கள் நடத்திய தேசிய அளவிலான காடுகள் தொடர்பான புகைப்படப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றன. அடுத்ததாக, பி.பி.சி. நிறுவனம் அறிவித்த புகைப்படப் போட்டிக்கும் படங்களை அனுப்பி இருக்கிறான்.

காட்டுக்குள்ளே...

உலகின் மிகச் சிறந்த பறவைகள் சரணாலயம் கோவை. இது பலருக்குத் தெரியாது. கோவையில் இருக்கும் வாலாங்குளம் ஏரி, சுண்டக்காமுத்தூர் ஏரி, வேடப்பட்டி ஏரி ஆகிய நீர் நிலைகளுக்குப் பல நாடுகளில் இருந்தும் அரிய பறவைகள் வருகின்றன. கொரியாவில் இருந்து தென் ஆப்பிரிக்காவுக்கு இடம் பெயரும் பறவை 'அமுர்’. இதை, பூனாவில் சில பறவை ஆராய்ச்சியாளர்கள் பார்த்துள்ளனர். ஆனால், படம் எடுக்க முடியவில்லை. முதல் முறையாக கோவையில் அந்தப் பறவை என் கேமராவில் சிக்கியது. அந்தப் பறவை இனத்துக்கான ஒரே ஆதாரம் என் படம்தான்.

காட்டுக்குள்ளே...
காட்டுக்குள்ளே...

காட்டு வாழ்க்கைக்காகவே மசினங்குடி உள்ளிட்ட சில காட்டுப் பகுதிகளில் முறையான அனுமதியுடன் வீடு கட்டி இருக்கிறேன். ஆனால், அந்த வீடுகளில் மின்சார வசதி இருக்காது. காடுகளுக்குள் சென்றுவிட்டால் குறைந்தது 25 நாட்களாவது தங்குவேன். காரணம், மற்ற புகைப்படங்களை எப்படி வேண்டுமானாலும் எடுத்துவிடலாம். ஆனால், விலங்கினங்களையும் பறவைகளையும் அப்படி எடுக்க முடியாது. காத்திருக்க வேண்டும்... அது நாட்களோ அல்லது மாதங்களோ!

காட்டுக்குள்ளே...
காட்டுக்குள்ளே...

மசினங்குடி அருகே இருக்கும் எனது காட்டு வீடு அருகேயே ஓர் ஆண் புலி உலவுவதாக தகவல் சொன்னார்கள். அதை எப்படியும் படம் எடுத்துவிடலாம் என்று வீட்டுக்குப் போனேன். வீட்டின் மேல் பகுதி... அந்த பகுதியில் இருக்கும் உயரமான மரங்களில் ஏறி, பல நாட்களாக கேமராவுடன் காத்திருந்தேன். புலி சிக்கவில்லை. மான்களும், யானைகளும்தான் வந்தன. சுமார் 20 நாட்கள் முடிந்துவிட்டன. வீட்டில் இருந்து மனைவி போன் செய்து திட்டினாள். முதல் இரவு எல்லாவற்றையும் பேக் செய்துவிட்டு, மறுநாள் அதிகாலை கிளம்பலாம் என்று கதவைத் திறந்து வெளியே வந்தேன். எனக்கு எதிராக 10 அடி தொலைவில் அந்தப் புலி ஒரு புள்ளி மானை அடித்துத் தின்றுகொண்டு இருந்தது. கதவைத் திறந்த சத்தத்தில் அது என்னைப் பார்த்து கோபமாக உறுமிவிட்டு என்னை நோக்கி பாய... நான் படாரென்று கதவை சாத்திக்கொண்டேன். அந்த அனுபவத்தை நான் மறக்கவே முடியாது. யானையைப் படம் எடுக்கச் செல்லும்போது என்னையும், என் மகனையும் பல முறை யானை துரத்தி இருக்கிறது. ஆனால், யானையை எப்படிப் போக்குக் காட்டித் தப்ப முடியும் என்பது எங்களுக்கு அத்துப்படி...'' என்கிறார் கானகத் தோழர் ராம் நாராயண்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism