Published:Updated:

தம்பியின் தம்பி!

தம்பியின் தம்பி!
பிரீமியம் ஸ்டோரி
தம்பியின் தம்பி!

பயணம் /இ.ரா.சரவணன், படங்கள்/கே.குணசீலன்

தம்பியின் தம்பி!

பயணம் /இ.ரா.சரவணன், படங்கள்/கே.குணசீலன்

Published:Updated:
தம்பியின் தம்பி!
பிரீமியம் ஸ்டோரி
தம்பியின் தம்பி!

புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறையை, இலங்கையில் 'தம்பி ஊர்’ என்றே சொல்வார்கள். தமிழ்நாட்டில் 'தம்பி ஊர்’ என்றால், அது சீமானின் சொந்த ஊரான அறனையூர். ''சொந்த ஊருக்குப்போய் வருவோமா?'' என அவரிடம் கேட்டோம். நெற்றிச் சுருக்கி, அரசியல், சினிமா கால்ஷீட் தேதிகளை எல்லாம் கணக் கிட்டவர், 

''பொதுக்கூட்டங்கள், போராட் டங்கள்னு அனுதினமும் காலில் சக்கரம் கட்டிட்டுப் பறக்கிறதால், அரனை யூருக்குப் போவதே மறந்திடுச்சு. என் அண்ணன் பிரபாகரன் நாடு கட்டுவதற்குப் போராடியது போன்று சொந்த ஊரில் ஒரு வீடு கட்ட முடியாமல் இந்தத் தம்பி போராடிக்கிட்டு இருக்கேன். மனை பார்த்த இடத்தில் இப்போ புதர் மண்டிக் கிடக்கு. வாங்க... பார்க்கப் போகலாம்...'' என்றார் உற்சாகமாக.

தம்பியின் தம்பி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாண்டி வருகையில் தஞ்சை மாவட் டத்தைத் தரிசிப்பதுபோல் பசுமையான உணர்வு. ''அங்கே பச்சப் பசேல்னு தெரியுது பாருங்க... அதுதான் எங்க ஊர். பசுமையா தெரியிறதைப் பார்த்துட்டு ரொம்ப செழிப்பான மண்ணுன்னு நினைச்சிடாதீங்க. நிறத்தில்தான் அது பச்சை; குணத்தில் பொசுங்கும் வெக்கை! ஊருக்கு நுழைவாயில் மாதிரி தோரணமா தெரியிற அத்தனையும் கருவேல மரங்கள். எங்க ஊரோட ஈரத்தையே ஒட்டு மொத்தமா உறிஞ்சி, வறட்சியோட பிடியில் எங்க மக்களை அல்லாட வெச்சிருக்கிறது அந்த மரங்கள்தான். 200 வருஷங்களுக்கு முன்னால், உலகத்தின் அதியற்புதமான ஆரஞ்சுப் பழங்கள் சிவ கங்கை மண்ணில்தான் விளைஞ்சதா வரலாறு சொல்லுது. ஆரஞ்சுப் பழங்கள் விளைஞ்ச மண்ணில் இன்னிக்கு கருவேலக் காடுன்னா... நாலஞ்சு தலைமுறைகளுக்கு இடை யிலேயே இந்த மண்ணு இப்படி மகத்துவம் இழந்து போச்சே!'' - நெஞ்சில் கைவைத்து ஆதங்கமாகச் சொன்னவர், அறனையூர் நுழை வாயிலில் கால் வைத்ததும் சொந்த ஊர் நினைவுகளை அசைபோடத் தொடங்கினார்.

''சின்ன வயசிலேயே அய்யனார் கோயில் காவல் தொடங்கி எலி வேட்டை வரைக்கும் அறனையூரில் நான் பண்ணிய சேட்டை கொஞ்சநஞ்சம் இல்லை. மழை பேய்ஞ்சாதான் விவசா யம்னு வானம் பார்த்த பூமி. அதனாலேயே பாதி நிலங்கள் தரிசுதான். விவசாய வேலை இல்லாத நாட்களில் முயல் வேட்டைக்குப் போவோம். அஞ்சாறு பேர் சேர்ந்து போனால் ரெண்டு முயலாச்சும் சிக்கிடும். அதைப் பங்கு வெச்சா ஆளுக்கு 100 கிராம்கூட தேறாது. ஆனாலும், கூட்டா சேர்ந்து அதை ஆக்கிச் சாப்பிடுற சுகம் இருக்கே... இப்பவும் நாக்கில் எச்சில் ஊறுது. வயக்காட்டு நண்டு பிடிச்சு ரசம் வைப்போம். எலிப் பொந்துகளைத் தோண்டி அது சேர்த்து வெச்சிருக்கிற கடலை, நெல்லு எல்லாத்தையும் அள்ளிகிட்டு வருவோம். எலிக் கடலையை வறுத்துச் சாப்பிட்ட ஞாபகங்களை இன்னிக்கும் மறக்க முடியலை!'' என்றபடியே ஊரின் வயக் காடுகளைச் சுற்றி வந்தார்.

இந்தத் தகவல் புலிப் பாய்ச்சலில் ஊருக்குள் பரவ, அன்பைப் பூசியபடி ஓடி வருகிறது உள்ளூர்க் கூட்டம்.

தம்பியின் தம்பி!

''என்னப்பு நல்லா இருக்கீங்களா?'' என பெரியம்மாக்கள் குசலம் விசாரிக்க, அவரது தாய் அன்னம்மாள் வரப்புகளைத் தாண்டி ஓடிவருகிறார். ''தள்ளுங்கடி, எம்புள்ளையப் பார்த்து எத்தனை நாளு ஆகிப்போச்சு...'' என்றபடியே மகனை உச்சி முகர்கிறார். ''எப்பவுமே எம்புள்ள மண்ணு மரம்னு நேசம் வெச்ச புள்ளைடி... அம்மா, அப்பா பாசம் எல்லாம் எம்புள்ளைக்கு அப்புறம்தான்!'' என்றபடியே மகனை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார் தாய். உறவுகளின் உபசாரம், நண்பர் களின் விசாரிப்பு, இயக்கத்தினரின் மரியாதை என அறனையூரே அமளிதுமளியானது. ''ஏய் அண்ணே வந்திருக்கார்... யார் வீட்ல இருந்தாலும் கோழி புடிங்கடா... அண்ணனுக்கு மொக்கச் சோறு, கோழிச் சாறுன்னா அம்பூட்டு பிரியம்!'' - சீமானின் தங்கை உறவுப் பெண் சத்தம்போட, அடுத்தகணமே கோழி துரத்தும் படலம் ஆரம்பிக்கிறது.

''நீங்க சாப்பாடு செய்றதுக்குள்ள நான் படிச்சு வளர்ந்த இடங்களைப் பார்த்திட்டு வந்திடுறேன்!'' என்றபடி நம்மைக் கூட்டிக்கொண்டு புதூருக்குக் கிளம்பினார் சீமான். பழைமை மாறாத ஹாஜி கே.கே.இப்ராஹிம் அலி மேல்நிலைப் பள்ளியின் முன்னால் கார் நிற்க, ''ஹே... சீமான் வந்திருக்கார்'' என கோரஸ் பாடினார்கள் மாணவர்கள்.

தலைமை ஆசிரியர் உள்ளிட்டவர்கள் ஓடிவந்து, ''என்ன தம்பி திடீர்னு இந்தப் பக்கம்?'' எனக் கேட்க, ''நான் படிச்ச பள்ளிக்கூடத்தைப் பார்க்கணும்னு தோணுச்சு. பார்க்கலாமா?'' என்றார் சீமான். அதற்குள் அத்தனை ஆசிரியர்களும் வந்துவிட, அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தவர், ''சார், நீங்களா... நான் நினைச்சுக்கூட பார்க்கலையே...'' என்றபடி ஒருவரை ஆச்சர்யத்தோடு கட்டிக்கொண்டார். சீமான் 10-ம் வகுப்பு படித்தபோது உடற்பயிற்சி ஆசிரியராக இருந்த நடராஜன்தான் அவர்.

''எங்கிட்ட படிச்ச புள்ள... இன்னிக்கு இவ்வளவு பெரிய ஆளா மாறி இருக்கு. இதை நான் உடனே ஸ்கூல் முழுக்கச் சொல்லணுமே...'' என்றபடியே பரவசமான நடராஜன் விசில் அடித்து மொத்த மாணவர்களையும் பள்ளியின் மேடைக்கு முன்னால் திரட்டினார்.

மாணவர்களின் கோரஸ் சத்தத்துக்கு மத்தியில் மைக் பிடித்த சீமான், ''நீங்க எல்லோரும் கொடுத்து வெச்சவங்க. நல்ல நிழலில் உட்கார்ந்து இருக்கீங்க. ஆனா, நாங்க படிச்ச காலத்தில் மரங்களே இருக்காது. பள்ளிக்கூடமே அனல் அடிக்கும். அப்ப, நாங்க வெச்ச மரங்கள்தான் இப்போ நிழல் தரும் விருட்சங்களாக மாறி இருக்கு. இந்தப் பள்ளியில் படிச்சவனா நான் உங்ககிட்ட சொல்ல விரும்புறது, வெறும் பாடங்களை மட்டுமே படிக்காதீங்க. தொழில் சார்ந்து படிப்பது படிப்பு அல்ல; அது பிழைப்பு. வளரும் நாற்றுகள் மாதிரி இருக்கும் நீங்கள் அறிவார்ந்த பெருமக்களாக மிளிர வேண்டும்!'' எனச் சொல்ல, ஒரே கைத்தட்டல்!

தான் விளையாடிய மைதானத்தைச் சுற்றிப் பார்க்க சீமான் கிளம்ப, அங்கே அவரைச் சூழ்ந்துகொண்டார்கள் மாணவர்கள். ''அண்ணே, நீங்க விஜய்யை வெச்சுப் படம் எடுக்கப் போறீங்களாமே... யாருண்ணே ஜோடி?'' என அவர்கள் கேட்க, ''இப்பத் தானடா அறிவுப்பூர்வமா வளரணும்னு சொன்னேன். அதுக்குள்ள விஜய்க்கு ஜோடி யாருன்னு கேட்குறீங்களே... இதுதான் அறிவுபூர்வமா?'' என ஆதங் கப்பட்டார் சீமான்.

தம்பியின் தம்பி!

''சினிமாவும் அறிவுப் பூர்வமான துதானே?'' என பசங்க மடக்க, ''உங்களைச் சொல்லி குத்தமில்ல... மட க்கிப் பேசுறதில் நம்ம மண்ணோட மகிமை அப்படி!'' என்றபடியே கைகாட்டி விடை பெற்றார் சீமான்.

அடுத்து இளையான்குடி சந்தையை நோக்கிப் புறப்பட்டது கார். ''அறனையூர் கண்மாய் வழியா மிளகாய், கத்தரியை மூட்டையா கட்டித் தூக்கிட்டு வருவேன். சனிக்கிழமை சந்தை. கேட்கிற காசுக்குக் கொடுத்துட்டுப் பள்ளிக்கூடம் போவோம். நாங்க படிச்சப்ப அஜந்தா தியேட்டர்னு ஒண்ணு இருந்துச்சு. அங்கேதான் எந்நேரமும் இருப்போம். சந்தைக்குப் பக்கத்திலேயே கராத்தே வகுப்பு நடக்கும். அந்த வயசிலேயே கராத்தே கத்துக்க எனக்குப் பயங்கர ஆர்வம்!'' என்றவர், பள்ளியின் நுழைவுவாயிலில் அப்படியே நின்றுவிட்டார்.

''நேற்றைக்குத்தான் இந்தப் பள்ளியைவிட்டுப் போன மாதிரி இருக்கு. இங்கு படிச்சு முதல் மதிப்பெண் வாங்கிய முக்கியமான ஆள் ஒருத்தர் இருக்கார். இங்கே படிச்சப்ப அவர் பேர் அலெக்ஸாண்டர். சென்னைக்கு வந்ததுக்கு அப்புறம் அவர் பேர் மகேந்திரன். தமிழ்த் திரை உலகத்தின் யதார்த்த சிற்பியா அடையாளம் காணப்பட்ட அதே மகேந்திரன் அண்ணாதான்!'' என்றார் சிலாகிப்பு அடங்காதவராக.

பள்ளி நெகிழ்வில் இருந்து சீமான் மீள்வதற் குள்ளேயே சுற்றிக்கொண்டது மாணவர் கூட்டம். ஒவ்வொரு வகுப்பாக உள்ளே நுழைந்தவர், தான் உட்கார்ந்து இருந்த பெஞ்சை அடையாளம் காட்டி நெகிழ்ந்தார். 11-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன், ''அண்ணா, நீங்க உட்கார்ந்து இருந்த இடத்திலதான் இப்போ நான் உட்கார்ந்து இருக்கேன். அப்போ நானும் சினிமா டைரக்டரா ஆகிடுவேனா?'' என கனவுகளை நிரப்பியபடி கேட்க, ''நல்ல படங்களைப் பார். கற்பனை சக்தியைப் பெருக்கிக்க... நிச்சயம் நீயும் நாளைக்கு இயக்குநராகலாம். இந்த இருக்கை உருவாக்கிய இரண்டாவது இயக்குநர் நீதான்!'' எனத் தட்டிக் கொடுத்தார் சீமான்.

அப்போது அந்த வகுப்புக்கு வந்த ஓர் ஆசிரியர், ''ஏய், என்னையத் தெரியலையா?'' என இழுக்க, நெற்றி சுருக்கி யோசித்த சீமான், ''ஏய் நீ மீரா உசேன்தானே... நீ எப்படி இங்கே?'' என்றார் ஆச்சர்யத்தோடு.

''உங்களை மாதிரி ஆளுங்க எல்லாம் இந்தச் சீமையைவிட்டுப் போனா சரின்னு சென்னையை நோக்கி ஓடிட்டீங்க. நாங்க இந்த மண்ணை மறக்க முடியாம இங்கேயே படிச்சு, இங்கேயே வாத்தியாரா உட்கார்ந்திட்டோம்!'' என்றார் மீரா உசேன் பரவசமாக. பள்ளியின் முகப்பில் பொறிக்கப்பட்டிருக்கும் 'சீனம் சென்றும் சேர்க்க நல்லறிவை’ என்கிற வரியை மீரா உசேனிடம் காட்டிய சீமான், ''அறிவைப் பெருக்க சீனத்துக்கே போகச் சொன்னது நம்ம பள்ளிதான். ஆனா, நான் சென்னை வரைக்கும்தானே போயிருக்கிறேன்!'' என்றார் அதிர் சிரிப்பாக.

''நமக்குப் பாடம் சொல்லிக்கொடுத்த ஆயிஷா டீச்சர் இன்னும் இங்கேதான் இருக்காங்க...'' என மீரா உசேன் சொல்ல, சீமானுக்கு சட்டென கண் கலங்கியது.

''சின்ன வயசில் எந்தப் பாடமா இருந்தாலும் என்னையத்தான் வாசிக்கச் சொல்வாங்க. 'தமிழ் உச்சரிப்பு உனக்கு நல்லா வருது’னு சொல் வாங்க. இன்னிக்கு உயிரும் உணர்வுமா தமிழ் கலந்திருக்கிறதுக்கு அவங்கதான் காரணம்!'' என சீமான் சொல்ல, எதிரே ஆயிஷா டீச்சர்!

தன் மாணவன் ஈழத்தையும், இனத்தையும் ஆதரிக்கும் தலைவனாகி நிற்கும் பெருமிதம் அந்த ஆசிரியையின் முகத்தில் பெருமிதமாகத் தெரிய, பள்ளி மாணவனாகவே மாறி நலம் விசாரிக்கிறார் சீமான். பெருமிதமும் நெகிழ்ச் சியுமாக கரைந்தன அந்த நிமிடங்கள்.

தம்பியின் தம்பி!

அடுத்து, வண்டி இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் போய் நிற்கிறது. வாசலிலேயே நின்ற பேராசிரியர் ஜலீல், ''நீ இங்கே வரப்போற தகவலை உன்னோட டிரைவர் ஏற்கெனவே சொல்லிட்டார்... ஏதாச்சும் பூங்கொத்து ரெடி பண்ணவா?'' என்றார் கட்டிப் பிடித்துச் சிரித்தபடி. தான் வைத்த மரங்கள், விளையாடிய திடல், பயின்ற வகுப்பறை என பல இடங்களுக்கும் பேராசிரியரின் விரல் பிரியாத பிள்ளையாகச் சென்ற சீமான், ''இவர் எனக்கு ஆசிரியர் இல்லை; நண்பன்! கல்லூரியில் கலை இலக்கிய விழா நடக்கிறப்ப எல்லாம் என்னை நம்பிக்கையூட்டி பாட வைப்பார். நானே எழுதி நானே பாடுவேன். 'கபடி ஆடினாலும் நீதான் கில்லி. பாட்டுப் பாடினாலும் நீதான் கில்லி’னு தட்டிக் கொடுப்பார்!'' என நெகிழ்ந்தார்.

பேராசிரியர் ஜலீலோ, ''சீமான் சிறையில் இருந்து வெளியே வந்த நேரம். பல தலைவர்களும் அவருக்காக விழா எடுத்த மேடையில் எனக்கும் அழைப்பு. என்னை நடுநாயகமாக உட்கார வெச்சு, 'எனக்குத் தமிழார்வம் ஊட்டிய  பேராசிரியருக்கு கடமைப் பட்டு இருக்கேன்’னு சீமான் பேசினார். கண்ணில் இருந்து கடகடனு தண்ணிக் கொட்டுது. ஓர் ஆசிரியனுக்கு இதைவிட பெரிய பெருமை வேற என்ன இருக்கப்போகுது?'' என்றார் மீண்டும் துளிர்க்கும் கண்ணீரோடு.

மீண்டும் அறனையூருக்குப் பறக்கிறது கார். அம்மா பரிமாறிய சாப்பாட்டை நண்பர்களோடு ரசித்து சாப்பிடுகிறார் சீமான். அன்பு, உறவு, உற்சாகம் எனப் பெருக்கெடுத்தது செங்கல் பெயர்ந்த அந்தப் பழைமை மாறாத வீட்டில்!

கிளம்பும் நேரத்தில் புதிய வீட்டுக்கு மனை பார்க்கப்பட்ட இடத்தைக் காட்டுகிறார் சீமான். வல்வெட்டித் துறையில் இருந்து நினைவோடு கொண்டு வரப்பட்ட மண், குவியலாகக் கிடக்க... அதில் வீரம் பூசி எழும்பத் தயாராகி வருகிறது வீடு. அதற்கு சீமான் வைத்திருக்கும் பெயர் 'தேசியத் தலைவர் இல்லம்’!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism