Published:Updated:

நினைத்தாலே இனிக்கும்

நினைத்தாலே இனிக்கும்
பிரீமியம் ஸ்டோரி
நினைத்தாலே இனிக்கும்

நகைச்சுவை: சி.காவேரி மாணிக்கம், படம்/வீ.நாகமணி, ஓவியங்கள் /ஹரன்

நினைத்தாலே இனிக்கும்

நகைச்சுவை: சி.காவேரி மாணிக்கம், படம்/வீ.நாகமணி, ஓவியங்கள் /ஹரன்

Published:Updated:
நினைத்தாலே இனிக்கும்
பிரீமியம் ஸ்டோரி
நினைத்தாலே இனிக்கும்

விஞர்கள் என்றாலே சீரியஸாகத்தான் இருப்பார்கள் என்பது பலரது நினைப்பு. ஆனால், 'நாங்களும் ஜாலியான ஆளுங்கதாம்பா!’ என்று சொல்லும் சில கவிஞர்கள், தங்களது சுவாரஸ்யமான அனுபவங்களை நம்முடன் இங்கே பகிர்ந்து கொள்கின்றனர்! 

கபிலன்

.கே. நகர் ஸ்டுடியோவுல நைட் ரெக்கார்டிங். கார் டிரைவர் வரலை. அதனால ஆட்டோவுலேயே ஸ்டுடியோவுக்குப் போனேன். ரெக்கார்டிங் முடிய அதிகாலை 3 மணி ஆகிடுச்சு. ஸ்டுடியோவுக்கு வெளியே ஒரு ஆட்டோகூட இல்லை. கொஞ்ச தூரம் தள்ளி ஒரு ஆட்டோ நின்னுச்சு. கிட்டப்போய் பார்த்தா ஆட்டோக்காரர் து£ங்கிட்டு இருந்தார். சபரிமலைக்கு மாலை போட்டிருந்தார். அவரை எழுப்பி, 'எம்.எம்.டி.ஏ. காலனி போகணும்’னேன். அவரும் என்னை உட்காரச்சொல்லி ஆட்டோவை எடுத்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நினைத்தாலே இனிக்கும்

கொஞ்ச து£ரம் போனதும் ஆட்டோ அப்படியும் இப்படியுமா தடுமாறிக்கிட்டே போகுது. என்னன்னு பார்த்தா... ஆட்டோக்காரர் தூக்கக் கலக் கத்துலேயே ஓட்டுறார். எனக்கு 'பகீர்’னு ஆச்சு. அவரை எழுப்பி, 'தூங்காம வண்டியை ஓட்டுங்க’ன்னு சொன்னேன். அவரும் தலையை ஆட்டிட்டு மறுபடியும் தூங்கிக்கிட்டே ஆட்டோவை ஓட்ட... வடபழனி சிக்னல் கிட்ட ஒரு டீக்கடை திறந்து இருந்தது. நாலைஞ்சு ஆட்டோ நின்னது. உடனே அந்த டீக்கடைகிட்ட வண்டிய நிப் பாட்டச் சொல்லி டீ வாங்கிக் கொடுத்தேன். மறுபடி ரெண்டு பேரும் ஆட் டோவுல  ஏறி உட்கார்ந்து கிளம்பினோம்.

கிளம்பின கொஞ்ச நேரத்தில், 'சார், ஆட்டோவை மாத்தி எடுத்துக்கிட்டு வந்துட்டேன்’னு அலர்றார் அவர்! 'இன்னும் உங்களுக்கு தூக்கம் கலையலையா? ஒழுங்காப் பாருங்க’னு சொன்னேன். 'இல்லை சார், என் ஆட்டோவுல ஐயப்பன் போட்டோ இருக்கும். இதுல இயேசுநாதர் போட்டோ இருக்குதே’ங்குறார்!

நினைத்தாலே இனிக்கும்

அவசர அவசரமா ஆட்டோவைத் திருப்பிக்கிட்டு டீக்கடைக்கே போனோம். அங்கே, தன்னுடைய ஆட்டோவைக் காணாம தேடிக்கிட்டு இருந்தார் ஒரு ஆட்டோ டிரைவர். அந்த இடமே பரபரப்பா இருக்குது. அப்புறம் ஒருவழியா சமாதானப்படுத்தி, அவரோட ஆட்டோவைத் திருப்பிக் கொடுத்திட்டு, நாங்க வந்த ஆட்டோவை எடுத்துக்கிட்டு வந்தோம். 'முகம் கழுவி, டீ குடிச்சதுக்குப் பிறகும் ரொம்பத் தெளிவா வேற ஒரு ஆட்டோவை எடுத்துக்கிட்டு வந்தீங்களே... அது எப்படிண்ணே’ன்னு சிரிச்சிக்கிட்டே ஆட்டோ டிரைவர்கிட்ட கேட்டேன். பதில் சொல்ல முடியாம அவர் சிரிச்ச சிரிப்பு இன்னமும் என் காதில் ஒலிக்குது!

விவேகா

சின்ன வயசுல நடந்த சம்பவம். எங்க நிலத்துல ஏர் உழுது கொண்டிருந்த ஆட்களுக்கு வீட்டில் இருந்து ஒரு பித்தளைத் தூக்குச்சட்டியில் சாப்பாடு எடுத்துட்டுப் போனேன். ஊரைவிட்டு விலகி இருந்தது வயற்காடு. மதிய உணவு முடித்து ஏரைத் தெறித்துக்கொண்டு எல்லாரும் போய்விட்டனர். நானும், என் சித்தி பையனும் பித்தளைத் தூக்கை புழுதியில் (ஏர் உழுத மண்) வைத்துவிட்டு, தூரத்தில் தென்னை மரங்களுக்கு அடியில உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தோம். அப்போது தெற்கத்திக் கொல்லையைச் சேர்ந்த அளவுக்காரர் (என்ன காரணமெனத் தெரியவில்லை. ஊரில் அவரது பெயரே 'அளவுக்காரர்’தான்) புல் வரப்பின் மீது நடந்து சென்று கொண்டிருந்தார். யதேச்சையாக அவரது பார்வை பித்தளைத் தூக்கின் மீது பட்டது.

நினைத்தாலே இனிக்கும்

நாங்கள் மரத்தின் மறைவில் இருந்ததால் அவருக்கு எங்களைத் தெரியவில்லை. சுற்றுமுற்றும் பார்த்தார். யாரும் இல்லை என்பது உறுதியானவுடன்... அவசர அவசரமாக ஓடி புழுதியின் ஓரத்தில் குழி தோண்டினார். ஏர் ஓட்டிய புழுதியில் பள்ளம் தோண்டுவது எளிது. கையை வைத்தாலே மண் பொதபொதவென வரும். பள்ளம் தோண்டியதும் பித்தளைத் தூக்கை அதற்குள் வைத்து மண்ணைப் போட்டு மூடினார். எந்த வித்தியாசமும் தெரியாமல் இருப்பதற்காக மேலே மண்ணை லேசாகக் கலைத்துவிட்டு விறுவிறுவென்று நடையைக் கட்டினார். இரவானதும் யாருக்கும் தெரியாமல் வந்து எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்திருப்பார் போல.

நினைத்தாலே இனிக்கும்

இதை எல்லாம் மரத்தடியில் ஊமைச் சிரிப்போடு பார்த்துக்கொண்டிருந்த நாங்கள், அவர் உருவம் மறைந்தவுடன் அந்த இடத்துக்குப்போய் மண்ணைத் தோண்டி தூக்கை எடுத்துகொண்டோம். 'இந்தக் கிழவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்' என்று ஒரு திட்டம் வகுத்தோம்.

சித்திபையன் ஓடிப்போய் காரமுள், பனங்கருக்கைக் கொண்டுவந்து குழிக்குள் போட்டான். அதன்மேல் 'கொழகொழ’வென மாட்டுச் சாணியைக் கொஞ்சம் போட்டு மேலே மண்ணால் மூடி பழையமாதிரியே வைத்துவிட்டோம்!

அந்தச் சம்பவத்துக்குப் பின்னர் அளவுக்காரரை சந்திக்கும் வாய்ப்பு அமையவில்லை. சில தினங்களுக்குப் பிறகு ஒரு நாள் மாலை எங்கள் வரப்பில் நடந்து போனார்.

''என்ன அளவுக்காரரே... சௌக்கியமா?'' என்று பேச்சுக் கொடுத்தேன்.

''மானம் காயுற காய்ச்சல்ல சௌக்கி யத்துக்கு எங்கடா போறது?'' என்றார்.

''அதுசரி... பித்தளத்தூக்குல ராகிக் கூழ் இருக்கு. ஒரு சொம்பு குடிச்சிட்டுப்  போலாம்ல...'' என்றேன்.

கண்ணைச் சுருக்கிக் கொண்டு ஒரு அர்த்தத்தோடு என்னைப் பார்த்தார். பின்னர், உறுதிசெய்து கொண்டவராக வாய்கொள்ளாச் சிரிப்போடு, கீழே இருந்த கல்லை எடுத்து அடிக்கப் பாய்ந்தார். நான் கம்பங்காட்டுக்குள் ஓடிப் புகுந்து கொண்டேன்.

பா.விஜய்

'இளைஞன்’ பட ஷூட்டிங்குக்காக பின்னி மில்லில் பெரிய கப்பல் செட் போட்டிருந்தாங்க. அந்தக் கப்பலோட அகலம் 100 அடி, உயரம் 70 அடி. தொடர்ச்சியா ஷூட்டிங் போயிட்டிருந்தது. ஒரு நாள், பாடல் காட்சி ஒன்றை எடுப்பதற்கான ஆலோசனையில ஈடுபட்டிருந்தோம். நான் ரொம்ப ஆர்வமா, 'கப்பலோட 60 அடி உயரத்துல இருந்து கயிறைப் பிடிச்சிக்கிட்டு இறங்குற மாதிரி எடுத்தா நல்லா இருக்கும்’னேன். 'அதுக்கென்ன சார், பிரமாதமா பண்ணிடலாம்’னார்னு ஃபைட் மாஸ்டர். டைரக்டர், டான்ஸ் மாஸ்டர் எல்லாரும் ஓகே சொல்ல, தேவையான பாதுகாப்பு வசதி களோட படமாக்கலாம்னு முடிவு பண்ணாங்க.

நினைத்தாலே இனிக்கும்

தேவையான ஏற்பாடுகளைச் செய்ததும், என்னோட இடுப்புல ஒரு கயிறு, தோள்ல இரண்டு கயிறு கட்டி கிரேன் மூலமா மேலே தூக்குனாங்க. மேலே போகும் போதுதான் இன்னொரு யோசனை வந்துச்சு. என்கூட சேர்ந்து குரூப் டான்ஸர்களும் அதேமாதிரி கயித்தைப் பிடிச்சிக்கிட்டு இறங்குனா சூப்பரா இருக்கும்னேன் (என்னா ஒரு கொலைவெறி?). அதுக்கும் ஓகே சொன்ன டைரக்டர், நாலு குரூப் டான்ஸர்களையும் மேலே தூக்குறதுக்கான முயற்சியில் இறங்குனார்.

60 அடி உயரத்துக்குப் போனதுக்குப் பிறகு கீழே குனிஞ்சி பார்த்தேன். அப்படியே உலகமே தலைகீழா சுத்துற மாதிரி இருக்கு. நானா கீழே இறங்க முடியாது. அவங்களையும் இறக்கச் சொல்ல முடியாது. ஒரு ஆர்வத்துல ஏதோ சொல்லப்போக, அது இப்படி இருக்கும்னு நினைச்சி கூடப் பார்க்கல. 'ஆகா... வலிய வந்து மாட்டிக்கிட்டோம்டா கைப்புள்ள’னு நினைச்சிக்கிட்டு மேலேயே தொங்கிக்கிட்டு இருக்கேன். முகம் பேயறைஞ்ச கணக்கா ஆகிடுச்சி. கொஞ்ச நேரத்துல குரூப் டான்ஸர்கள் நாலு பேரையும் மேலே கொண்டு வந்தாங்க.

நினைத்தாலே இனிக்கும்

இன்னொரு முக்கியமான விஷயம், அந்தப் பாடல் காட்சிக்கு சிரிச்சிக்கிட்டே கயித்தைப் பிடிச்சு இறங்கி வரணும். 60 அடி உயரத்துல தொங்கும்போது சிரிப்பு எப்படி வரும்? இருந்தாலும் ஒருவழியா சமாளிச்சு, மனசுக்குள்ள பயந்துக்கிட்டே வெளியில சிரிக்கிறாப்ல இறங்கி வர்றேன். ஷாட் முடிஞ்சதும் கயிறை அவுத்துட்டு அவசர அவசரமா மானிட்டரைப் பார்த்தா... குரூப் டான்ஸர்ல ஒருத்தர் சைடா இறங்கி இருக்கார். அடுத்த டேக் எடுக்கணும்னு சொல்லிட்டாங்க. 'மறுபடியும் முதல்ல இருந்தா...’ங்கிற வடிவேலு டயலாக்குதான் ஞாபகத்துக்கு வந்தது. அதுல இருந்து இனிமே எந்த ஐடியாவும் சொல்லக்கூடாதுங்கிற முடிவுக்கு வந்துட்டேன். அந்தக் காட்சியை இப்ப நினைச்சாலும் சிரிப்பு வரும்.

நெல்லை ஜெயந்தா

திருமணத்துக்குப் பின் மதுரையில் வசித்து வந்தோம். அப்போது பக்கத்தில் காலியாக இருந்த வீட்டுக்கு ஒரு குடும்பம் குடிவந்தது. அந்த வீட்டில் சிறுமி ஒருத்தி இருந்தாள். சில நாட்களுக்குப் பிறகு வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது அந்தச் சிறுமி எதிரே வந்தாள். அவளிடம் பெயரைக் கேட்டேன். 'சுமதி’ என்றாள். 'சுமதி என் சுந்தரி’ என்று செல்லமாக அவள் கன்னத்தைத் தட்டியபடி வெளியே சென்றுவிட்டேன்.

நினைத்தாலே இனிக்கும்

வீட்டுக்குத் திரும்பியபோது, அவள் அப்பாவுடன் வாசலில் நின்று கொண்டிருந்தாள் அந்தச் சிறுமி. அப்போதும் 'சுமதி என் சுந்தரி’ என்று அவள் கன்னத்தைத் தட்டியபடி வீட்டுக்குள் சென்று விட்டேன். மறுநாள் காலையில் அலுவலகம் கிளம்பியபோது, அந்தச் சிறுமி வாசலில் தென்பட்டாள். அவளைப் பார்த்ததும் வழக்கம்போல 'சுமதி என் சுந்தரி’ என்று சொல்வதற்காக வாயைத் திறந்தேன். அவசர அவசரமாக ஓடிவந்த என் மனைவி, திடீரென வாயைப்பொத்தி, என்னை வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

நினைத்தாலே இனிக்கும்

பிறகுதான் தெரிந்தது... சுந்தரி என்பது அந்தச் சிறுமியின் அம்மா பெயர் என்பது. இது தெரியாமல் நான் அடிக்கடி 'சுமதி என் சுந்தரி’ என்று சொல்லப்போக... அதுவும் அந்தச் சிறுமியின் அப்பா இருக்கும்போதே சொல்ல... தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது. 'உண்மையிலேயே எனக்குத் தெரியாது சார், தெரிஞ்சிருந்தா அப்படிச் சொல்லியிருக்க மாட்டேன்’ என்று அவரிடம் சொன்னேன். 'பரவாயில்லை சார், விடுங்க’ என்றார் பெருந்தன்மையுடன் அவர். இந்தச் சம்பவத்தை இப்போதும் அடிக்கடி சொல்லி கேலி செய்வார் என் மனைவி!

பழநிபாரதி

என் நண்பன் ஒருவன் மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம். ஓய்வு நேரங்களில் விடுதிக்குச் சென்று மாணவர்களுடன் சேர்ந்து காசு வைத்துச் சீட்டு விளையாடுவது அவனுடைய வழக்கம்.

நினைத்தாலே இனிக்கும்

ஒரு நாள், அவனிடம் விளையா டுவதற்கு காசு இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தவனுக்கு ஒரு ஐடியா உதித்தது. அப்போதெல்லாம் பேங்க் பேலன்ஸ் 10 ரூபாய்தான். அந்தப் 10 ரூபாயையும் எடுக்கலாம் என்று நினைத்து என்னையும் அழைத்துக்கொண்டு பேங்குக்குச் சென்றான். நேராக மேனேஜரிடம் சென்று, 'நான் வங்கிக் கணக்கை முடித்துக்கொள்ள விரும்புகிறேன்...' என்றான். மேனேஜர் காரணம் கேட்க, வேறு ஊருக்கு வீடு மாறிச் செல்வதாகக் கூறினான். 'எந்த ஊருன்னு சொல்லுங்க. அந்த ஊருக்கு கணக்கை மாத்திக்கலாம்!'' என்றார் மேனேஜர்.

நினைத்தாலே இனிக்கும்

இவன், 'வேண்டாம் சார். கணக்கை முடிச்சிக்குறேன்...' என விடாப்பிடியாக நிற்க... வேறு வழியில்லாமல் மேனேஜரும் கணக்கை முடித்தார். பணம் வாங்குவதற்காக கேஷியர் இருக்கும் இடத்துக்குச் சென்றோம். அவனுடைய தொகையைப் பார்த்தவர், எங்களைப் பார்த்துச் சிரித்தார்.

'பத்து ரூபாயைக்கூட விடாமல் வாங்கிகிட்டுப் போறானே’ என்று நினைத்திருப்பார் போல. 'பணத்தை எப்படி வாங்கிக் கொள்கிறீர்கள்?’ என சிரித்துக்கொண்டே கேட்டார். கொஞ்சம்கூட அசராத என் நண்பனும் சிரித்துக்கொண்டே... 'ஒன்ஸா கொடுங்க’ (ஒவ்வொரு ரூபாயாக) என்றான். அதைக் கேட்டு நான் உட்பட வங்கியில் இருந்த அனைவருமே சிரித்தோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism