Published:Updated:

எல்லை இல்லையே!

எல்லை இல்லையே!
பிரீமியம் ஸ்டோரி
எல்லை இல்லையே!

சிந்தனை: தென்னம்பட்டு ஏகாம்பரம்

எல்லை இல்லையே!

சிந்தனை: தென்னம்பட்டு ஏகாம்பரம்

Published:Updated:
எல்லை இல்லையே!
பிரீமியம் ஸ்டோரி
எல்லை இல்லையே!
எல்லை இல்லையே!

’ஆசையே துன்பத்துக்குக் காரணம்’ என்று புத்தன் சொல்லி வைத்து இத்தனை ஆண்டுகள் ஆனபின்னரும் யாரும் ஆசையை விடுவதற்கு மட்டும் ஆசைப்படுவதே இல்லை! புத்தருடைய மொழியில் மனமே ஆசை, ஆசைதான் மனம்.

சபலத்துக்கும் ராஜா மனமே. அது எவ்வளவு பிரமாண்ட ரூபம், சக்தி கொண்டது என்பதை யாராலும் அளவிட முடியாது. ஒன்றைக் கஷ்டப் பட்டுத் தேடி அடைந்ததும்... அதோடு போதும் என்று அந்த நினைவு நின்று கொள்வதுண்டா? இல்லை. அடுத்ததைத் தேடி அலையும்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தான் இச்சைப்பட்டது எல்லாம் கைவசமான பிறகும், அந்த பூமி வேண்டும், இந்தப் பதவி வேண்டும் என்று தன் ஆசைக் கரத்தை நீட்டித் துழாவிக் கொண்டேபோகும்.

நடந்து செல்பவன் சைக்கிள் இருந்தால் தேவலாம் என்று நினைப்பான். சைக்கிளுக்குப் பிறகு மோட்டார் சைக்கிள் மேல் மனம் தாவும். பிறகு கார், ஆகாய விமானம் என்று மனம் ஒன்றைவிட்டு ஒன்றைத் தாவிக் கொண்டே போகும். நம்முடைய ஓர் ஆசை நிறைவேறிய உடனே, பத்து ஆசைகள் முளைத்து விடுகின்றன.

ஆசைகள் என்பது அவற்றின் இயல்பில் தீயவை அல்ல. அவற்றை நெறிப்படுத்த வேண்டும் அவ்வளவுதான். தங்களது தேவைக்கும், ஆடம்பரத்துக்கும் உள்ள வேறுபாட்டை ஒருவர் தெரிந்து கொள்ளவேண்டும். ஏனெனில், ஒருவருக்கு அவசியத் தேவையாக இருப்பது, மற்றொருவருக்கு ஆசையாக... ஆடம்பரமாக இருக்கலாம். எனவே, அவரவர் ஆசையின் எல்லைக்கோடு அறிந்து, அதனைத் தாண்டாமல் இருக்க வேண்டும். ஆசையின் எல்லை குறித்த நீதிக் கதை இது.

கோடை வெயில் காலம். நல்ல உச்சி வேளையில், காலில் செருப்பு இல்லாமல், கையில் குடை இல்லாமல், ஓரு வழிப் போக்கன் மணல் பாதையில் வெப்பம் தாங்காமல் வேகமாக நடந்து கொண்டிருந்தான். அந்த சமயத்தில் இன்னொருவன் குதிரை மீது அமர்ந்து அந்த வழியில் வந்தான். அவன் காலில் செருப்பும், கையிலே குடையும் இருந்தன.

நடந்து கொண்டிருந்தவன், குதிரை மேல் அமர்ந்து பயணம் செய்பவனைப் பார்த்து, ''ஐயா! நீங்களோ குதிரை மேல் போகிறீர்கள், அதனால் உங்களுக்கு அந்தச் செருப்பு எதற்கு? அதை எனக்குக் கொடுத்து உதவலாமே!'' என்று கேட்டான்.

குதிரை மீது இருந்தவன், 'இவன் சொல்வதும் நியாயம் தானே’, என்று யோசித்து செருப்பைக் கழற்றிக் கொடுத்தான்.

அதன்பிறகு மீண்டும் வழிப் போக்கன், ''ஐயா, நீங்கள் குதிரையில் போவதால், உங்களுக்குக் குடை எதற்கு? நான் இந்தக் கடுமையான வெயிலில் நீண்ட தூரம் நடக்க வேண்டியிருக்கிறது, அதனால் குடையையும் கொடுக்கலாமே...'' என்று கேட்டான்.

இதுவும் நியாயந்தான் என்று குதிரை மேல் இருந்தவனுக்குத் தோன்றவே, குடை யையும் வழிப்போக்கனிடம் கொடுத்து விட்டான்.

அதன்பிறகும் குதிரைமேல் செல்பவனை நிறுத்தினான்.

''அந்தக் குதிரையையும் எனக்குக் கொடுங்களேன்!'' என்று கேட்டான். குதிரைமேல் அமர்ந்திருந்தவன் ஒரு கணம் யோசித்தான். உடனே ஆத்தி ரத்துடன் தன்னிடமிருந்த குதிரைச் சவுக்கை எடுத்து அந்த ஆளை விளாசித் தள்ளிவிட்டான்.

எல்லை இல்லையே!

அவ்வளவு சவுக்கடிகளையும் வாங்கிக் கொண்டு அந்த ஆள் சிரித்தான். அடி வாங்கிக் கொண்டு யாராவது சிரிப்பார்களா? குதிரையில் அமர்ந்து இருந்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

''என்னப்பா இது? அடி வாங்கிக் கொண்டு ஏன் இப்படிச் சிரிக்கிறாய்?'' என்று கேட்டான்.

அதற்கு அந்த வழிப்போக்கன், ''ஐயா, இப்படிக் குதிரையைக் கேட்டு நான் உங்களிடம் அடி வாங்கவில்லை என்றால், என் உயிருள்ள வரையிலும் மனதில் ஒரு தவிப்பு இருந்து கொண்டே இருக்கும். செருப்பையும் குடையையும் கேட்டவுடன் கொடுத்தாரே, குதிரையையும் கேட்டி ருந்தால் கொடுத்திருப்பாரே... என்ற பேராசையில் ஏங்கிக் கொண்டே இருப்பேன். இப்போது எனது ஆசைக்கு எல்லை எது என்பது எனக்குப் புரிந்து விட்டது!'' என்று சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினான்.

ஆம், ஆசைகள் என்றைக்குமே நிறைவடையாது... காட்டுத் தீயாக ஒன்றை யடுத்து மற்றொன்றைப் பற்றிக் கொண்டு பேராசையாக மாறி வாழ்க்கையின் அமைதியைக் கெடுத்துவிடும். நாம் வாழும் முறையில்தான் மகிழ்ச்சி, திருப்தி இருக்கிறதே தவிர, கோடானு கோடிப் பணம், நகைகள், மாடமாளிகை வீடுகள் போன்றவற்றில் திருப்தி இல்லை. பிறந்த போது எதையும் கொண்டு வரவில்லை; மரணத்துக்குப் பிறகு எதையும் கொண்டு செல்லப் போவதுமில்லை என்பதை உணர்ந்து, இருப்பதைக் கொண்டு வாழ்வ துதான் சுகமான வாழ்வு!

எல்லை இல்லையே!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism