Published:Updated:

"நல்லி கடையில் வாங்கின புடைவையா?" - கேட்டார் இந்திராகாந்தி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"நல்லி கடையில் வாங்கின புடைவையா?" - கேட்டார் இந்திராகாந்தி
"நல்லி கடையில் வாங்கின புடைவையா?" - கேட்டார் இந்திராகாந்தி

அனுபவம் எஸ்.ரஜத், படங்ககள்:சொ.பாலசுப்ரமணியன்

பிரீமியம் ஸ்டோரி
"நல்லி கடையில் வாங்கின புடைவையா?" - கேட்டார் இந்திராகாந்தி

சென்னை, தி.நகரிலே பிறந்து வளர்ந்த பிரபலம் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டி. இவர் தனது 50 வருட வியாபார அனுபவத்தில் சந்தித்த வி.வி.ஐ.பி. வாடிக்கையாளர்களைப் பற்றியும், சென்னை தி.நகர் பற்றியும் சுவாரஸ்ய தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்...

 ''நல்லி சின்னசாமி செட்டி என்ற நிறுவனம், 85 ஆண்டுகளாக பட்டு ஜவுளித் துறையில் ஒரு முன்னோடி என்றே சொல்லலாம்.

என் தாத்தா நல்லி சின்னசாமி செட்டி 1928-ல் ஆரம்பித்த ஜவுளி வியாபாரத்தை மூன்றாவது தலைமுறையாக நான் நடத்தி வருகிறேன். என் மகன் நல்லி ராமனாதன் சென்னையைத் தவிர உள்ள மற்ற கிளைகளை கடந்த 20 ஆண்டுகளாக நிர்வாகம் செய்கிறார். பேரன் நல்லி கார்த்திக் பர்மிங்ஹாமில் (இங்கிலாந்து) டெக்ஸ்டைல் டிசைனிங் படித்தவர். அவர் என்னுடன் சேர்ந்து பனகல் பார்க்கில் உள்ள பிரதான கடையின் நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்கிறார். மற்றொரு பேரன் நல்லி நிரந்த், புதிதாகத் தொடங்கப்பட்ட நல்லி ஜுவல்லரியை நிர்வகிக்கிறார். இப்படி எங்கள் நிறுவனத்தில் ஐந்தாவது தலைமுறையும் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டுவிட்டது.

1953-ம் ஆண்டு, பிப்ரவரி 2-ஆம் தேதி, இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான பாபு ராஜேந்திர பிரசாத் எங்கள் கடைக்கு வருகை தந்தார். அப்போது என் தந்தை நல்லி நாராயணஸ்வாமி செட்டி, கடையின் நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டிருந்தார். திரு.ராஜேந்திர பிரசாத் தாம் வாங்கிய துணிமணிகளுக்கான தொகை ரூ.1,052-க்கு யுனைடெட் கமர்ஷியல் வங்கி டெல்லி கிளையின் காசோலை கொடுத்தார். அதை வங்கியில் டெபாஸிட் செய்யாமல் பொக்கிஷமாக இன்று வரை அப்படியே வைத்திருக்கிறோம்.

அதே போன்று, ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தபோது, குடும்பத்துடன் எங்கள் கடைக்கு வந்து ஷாப்பிங் செய்தார் மல்ஹோத்ரா. ''செக் தரட்டுமா? பணம் தரட்டுமா!'' என்று என்னிடம் கேட்டார். உடனே, 'இரண்டிலும் உங்கள் கையெழுத்துதானே இருக்கும்!’ என்று நான் சொன்னதும், ரசித்துச் சிரித்துவிட்டார்

"நல்லி கடையில் வாங்கின புடைவையா?" - கேட்டார் இந்திராகாந்தி

நீண்ட காலம் மேற்கு வங்காளத்தின் முதலமைச்சராகப் பணியாற்றிச் சாதனை படைத்தவர் ஜோதிபாசு. அவரது மனைவி, சென்னை ராமகிருஷ்ணா மடத்துக்கு வந்திருந்தார். ராமகிருஷ்ண மடத்துடன் சம்பந்தப்பட்டவன் என்ற முறையில் நான் அவரைச் சந்தித்தேன். அவர் எங்கள் கடைக்கு வந்து புடவைகள் வாங்கினார். இந்த விஷயம் அதற்குள் எப்படியோ ஜோதிபாசுவுக்கு தெரிந்துவிட்டது. அவர் உடனே கோபமாகத் தன் மனைவியிடம், 'நான் கம்யூனிஸ்ட் பார்ட்டியிலே இருக்கிறவன். நீ நல்லிக்குப் போய் அதிக விலையில் பட்டுப் புடவை எல்லாம் வாங்கலாமா?’ என்று டெலிபோனில் கடிந்துகொண்டார். அதற்கு அவரது மனைவி, ''நான் விலை உயர்ந்த பட்டுப் புடவை வாங்குவேனா, கட்டுவேனா என்பது உங்களுக்குத் தெரியாதா? நான் நல்லியில் வாங்கியது மிகச் சாதாரண காட்டன் புடவை. நல்லியில் விற்பவை எல்லாம் விலை உயர்ந்த பட்டுப் புடவைகள்தான் என்று உங்களுக்கு யார் சொன்னது? வெறும் 34 ரூபாயிலிருந்து விலை மலிவான புடவைகளும் நல்லியில் விற்கிறார்கள்'' என்று மிகவும் சாந்தமாகவும், தெளிவாகவும் பதில் சொன்னார். மறுநாள், மீண்டும் என்னைச் சந்தித்தபோது, திருமதி பாசுவே இந்தத் தகவலை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டபோது, நீதிபதி

பி.எஸ்.கைலாசமும் அவரது மனைவி பிரபல தமிழ் அறிஞர் சௌந்திரா கைலாசமும் மரியாதை நிமித்தமாக அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்தார்கள். எங்கள் கடையில் இருந்து வாங்கியிருந்த காஞ்சிபுரம் பட்டுப்புடவையை அவருக்கு பரிசாக அளித்தார்கள். புடவையை தொட்டுப் பார்த்த இந்திரா காந்தி, ''நல்லி கடையில் வாங்கினீர்களா?'' என்று கேட்டார். ''எப்படி உங்களுக்குத் தெரியும்? என்று ஆச்சர்யத்துடன் சௌந்தரா கைலாசம் கேட்டதற்கு, ''தமிழ்நாடு, தென் இந்தியாவில் இருந்து என்னை சந்திக்க வரும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் பட்டுப் புடவைகள் கொண்டுவந்து கொடுத்து, 'நல்லி கடையில் வாங்கியது’ என்று பெருமையாக சொல்வார்கள். அதுதான் கேட்டேன்'' என்றாராம் இந்திரா காந்தி. டெல்லியில் தங்கள் வீட்டுக்குப் போனதும், திருமதி சௌந்தரா கைலாசம் தொலைபேசியில் என்னை அழைத்து இந்தத் தகவலை மகிழ்ச்சியாகச் சொன்னார்கள். இந்திய நாட்டின் பிரதமர் எங்கள் நிறுவனத்தின் தரத்தைப் பார்த்து உயர்வாக எண்ணுவது, எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சி.

நான் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை, தியாகராய நகரில் வசித்து வருகிறேன்

"நல்லி கடையில் வாங்கின புடைவையா?" - கேட்டார் இந்திராகாந்தி

1923-ம் ஆண்டில்தான் தி.நகர் உருவானது. ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த பிட்டி தியாகராய செட்டியின் பெயரில் தியாகராய நகர் என்று உருவாகி, அது பின்னர் தி.நகர் என்று சுருங்கிவிட்டது.

தி.நகர் அமைக்கும்போதே பார்க், விளையாட்டு மைதானம் இவற்றுக்கெல்லாம் இடம் ஒதுக்கப்பட்டது. இன்று சென்னையின் மிக முக்கியப் பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் பனகல் பார்க், 1923-ல் உருவாக்கப்பட்டது. சென்னை, ராஜதானியின் முதலமைச்சராக இருந்த ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் பனகல் ராஜா, இந்தப் பூங்காவைத் திறந்து வைத்ததால், அவர் பெயரிலேயே இது பனகல் பார்க் என்று வழங்கப்பட்டது. பனகல் பார்க்கில் பனகல் ராஜாவுக்குச் சிலை வைக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கியவர், பிரபல சிற்பி எம்.எஸ்.நாகப்பா.

தி.நகரில் முதலில் கட்டப்பட்ட பெரிய பங்களா, எம்.ஆர்.எஃப் நிறுவனத்தின் தலைவர் மாமன் மாப்பிள்ளை கட்டியதுதான்! ஜி.என்.செட்டி ரோட்டில் ஒரு ஏக்கர் பரப்பில் 5,000 சதுர அடி உள்ள பங்களாவை அவர் கட்டினார். அதற்கான மொத்த செலவைச் சொன்னால், இன்றைக்கு யாரும் நம்ப மாட்டார்கள். வீட்டு மனை 2,000 ரூபாய்; கட்டடச் செலவு 3,000 ரூபாய். ஆக, மொத்தச் செலவு 5,000 ரூபாய்தான்! அதன் இன்றைய மதிப்பு?!

1915-ம் ஆண்டு வரை, ஜார்ஜ் டவுன் என அழைக்கப்படும் என்.எஸ்.ஸி.போஸ் ரோடு (நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ரோடு), நைனியப்ப நாயக்கன் தெரு போன்ற பகுதிகள்தான் சென்னையில் நகை, பட்டு ஜவுளி வாங்கும் முக்கிய மார்க்கெட்டாக இருந்தது. அதன்பின் 1915 முதல் 1929 வரை ஜவுளி வியாபாரத்தின் மையமாக சிந்தாதிரிப்பேட்டை விளங்கியது. சின்னதறிப்பேட்டை என்பதுதான் மருவி சிந்தாதிரிப்பேட்டை ஆகியது. 1929 முதல் 1939 வரை, ஜவுளி வியாபாரத்தின் மையமாக திருவல்லிக்கேணி இருந்தது. 1951-ம் ஆண்டு என் தந்தை ஜவுளி வியாபாரத்தை ஆரம்பித்தார். அன்றிலிருந்து இன்று வரை 62 ஆண்டுகளாக தி.நகர்தான் பட்டு ஜவுளிக்கு மிகவும் முக்கியக் கேந்திரமாக உருவாகி, கோலோச்சி வருகிறது. சென்னைவாசிகள் மட்டுமல்ல, தமிழ்நாட்டின் பிற பகுதிகள், அண்டை மாநிலங்களில் இருந்தெல்லாம் ஷாப்பிங்குக்கு ஜனங்கள் இங்கு வருவது வாடிக்கையாகிவிட்டது.

தி.நகர் உஸ்மான் ரோட்டில் ஆரம்பிக்கப்பட்ட முதல் நகைக் கடை

கே.ராமச்சந்திர அய்யர் அண்ட் கோ கடை!

1928-ல் தி.நகரில் பேங்க் வசதியே கிடையாது என்றால் நம்புவீர்களா? ஆழ்வார்பேட்டையில் மெட்ராஸ் லேண்ட் டெவலப்மென்ட் வங்கி என ஒரு வங்கி இருந்தது. என் அப்பா தினமும் சைக்கிளில் சென்று, அன்றைய கலெக்ஷனை அந்த வங்கியில் டெபாசிட் செய்வார். 1932-ல் எஸ்.என்.என். சங்கரலிங்க அய்யர் ஆரம்பித்த இண்டோகமர்ஷியல் வங்கி, தி.நகரில் கிளை திறந்தார்கள். தி.நகரில் முதல் வங்கி அதுதான். இன்று தி.நகரில் கிளைகள் இல்லாத வங்கிகளே இல்லை என்று சொல்லலாம்!

இப்போது தி.நகர் பஸ் டெர்மினஸ் அருகே உள்ள சிவா-விஷ்ணு ஆலயம் 1935-ல் கட்டப்பட்டது

"நல்லி கடையில் வாங்கின புடைவையா?" - கேட்டார் இந்திராகாந்தி

தி.நகரில் உள்ள ஹபிபுல்லா சாலை, பர்கிட் சாலை இரண்டும் அன்றைக்கு சென்னை மாநகராட்சி கமிஷனர்களாக இருந்தவர்களின் பெயர்களைத் தாங்கியுள்ளன. நாதமுனி தெரு, கோவிந்து தெரு என்று பனகல் பார்க் அருகே இரண்டு தெருக்கள் உள்ளன. அவற்றுக்குப் பின் தனிக் கதை உண்டு. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி போன்ற பகுதிகளில் பாதாள சாக்கடை அமைப்பு வருவதற்கு முன்பே, அதாவது 80 ஆண்டுகளுக்கு முன்பே, தி.நகரில் பாதாள சாக்கடைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளிகள் இருவர் மண் சரிந்து அதிலேயே புதையுண்டு இறந்துபோனார்கள். அவர்களுக்கு அஞ்சலி செலுத்திக் கௌரவிக்கும் வகையில்தான் சென்னை மாநகராட்சி அவர்கள் பெயர்களை அடுத்தடுத்து இருக்கும் இரண்டு தெருக்களுக்கும் சூட்டியது.

பாண்டிச்சேரியைச் சேர்ந்த சொக்கலிங்க முதலியார், தியாகராயா சாலையில், பத்து கடைகள் கொண்ட வணிக கட்டடத்தைக் கட்டினார். தி.நகரின் முதல் பஜார் அதுதான்! அவர் பாண்டிச்சேரிக்காரர் என்பதால், பிறந்த மண்ணின்மீது உள்ள அபிமானத்தால், அதற்கு 'பாண்டி பஜார்’ என்று பெயர் வைத்தார். இன்று, அது இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்ட இடமாக திகழ்கிறது.

பாண்டி பஜாரில் உள்ள ஹோலி

ஏஞ்சல்ஸ் கான்வென்ட் (பெண்கள் பள்ளி) ஒழுக்கத்துக்கும் கல்விக்கும் புகழ்பெற்றது. இரண்டாம் உலகப் போரின்போது சென்னை நகரின் மீது குண்டுகள் வீசப்படலாம் என்ற அச்சம் நிலவியது. அப்போது, சென்னை உயர் நீதிமன்றம் சில காலம் இந்தப் பள்ளியில்தான் இயங்கியது.

தமிழ்நாட்டின் பல முதலமைச்சர்கள், சென்னை தி.நகரில் வாழ்ந்துள்ளார்கள். மூதறிஞர் ராஜாஜி, தி.நகர் பஸுல்லா ரோட்டில் சொந்த வீட்டில் வசித்தார். முதலமைச்சராக இருந்தபோதும், அதற்கு முன்னும் பின்னும் திருமலைப்பிள்ளை தெருவில் வசித்தார் காமராஜர் (இப்போது காமராஜர் நினைவிடம்). தி.நகர் சிவஞானம் தெருவில் ஜெயலலிதா சில வருடங்கள் வசித்தார். தி.நகர் ராஜாம்பாள் தெருவில் கலைஞர் சில காலம் குடியிருந்தார். எம்.ஜி.ஆருக்கு ஆற்காடு தெருவில் அலுவலகம் இருந்தது (இப்போது எம்.ஜி.ஆர். நினைவிடம்). நடிகராக இருந்தபோதே பஸுல்லா ரோட்டில் என்.டி.ஆர். சொந்த வீட்டில் வசித்தார்

"நல்லி கடையில் வாங்கின புடைவையா?" - கேட்டார் இந்திராகாந்தி

இப்போதைய ஜி.என்.செட்டி ரோட்டில் கண்ணதாசன் சிலைக்கு அருகே அந்தக் காலத்தில் ஒரு பெரிய பொதுக் கிணறு இருந்தது. அப்போதெல்லாம் பனகல் பார்க் ஜங்ஷனில் இருந்து (இப்போது போத்தீஸ் நிறுவனம் இருக்கும் இடம்) பார்த்தால் லயோலா கல்லூரி சர்ச் தெரியும். காரணம், இடையே கட்டடங்கள் ஏதும் இல்லை.

காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு வியாபார நிமிர்த்தமாக வந்து போய்க்கொண்டிருந்த என் தாத்தா நல்லி சின்னசாமி செட்டி, சென்னையில் குடியேற முடிவுசெய்து, மாம்பலம் ரயில் நிலையத்துக்கு அருகே மங்கேஷ் தெருவில் வீடு பார்த்தார். அமைதியான இடம். அப்போது என் தாத்தா தங்கிய வீட்டில் இரண்டு குடித்தனங்கள். ஆனால், ஒரே சமையல் அறை. சமைக்கவேண்டிய பொருள்கள், பாத்திரங்களை எடுத்துக்கொண்டு போய் ஒரு குடும்பத்தினர் சமைத்த பிறகு, அடுத்த குடும்பம் கிச்சனுக்குச் செல்லும். சமையல் அறைக்கு ஷிஃப்ட் முறை!'' என அன்றைய தி.நகர் வாழ்க்கையை மலரும் நினைவுகளாகப் பகிர்ந்துகொண்டார் நல்லி குப்புசாமி செட்டி. அவருடைய மகள் ஜெயஸ்ரீ ரவி சொந்தமாக 'பாலம்’ என்ற ஜவுளிக் கடையை நடத்தி வருகிறார்.

"நல்லி கடையில் வாங்கின புடைவையா?" - கேட்டார் இந்திராகாந்தி

சமீபத்தில் வெளியான 'சென்னை எக்ஸ்பிரஸ்’ இந்தித் திரைப்படத்தின் புரமோஷனுக்காக 'பாலம்’ ஜவுளி நிறுவனத்தில் ஃபேஷன் பரேடு நடைபெற்றது. அதில் பங்கேற்ற நல்லி குப்புசாமி செட்டி, ஷாருக்கானுக்கும் தீபிகா படுகோனுக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கினார். அப்போது, ''என் அத்தை சென்னை தி.நகரில்தான் இருந்தார். சென்னைக்கு நான் வரும்போதெல்லாம், என் அத்தை என்னை நல்லி கடைக்குக் கட்டாயம் அழைத்துச் செல்வார். நான் வாழ்க்கையில் முதன்முதலாகக் கட்டிய பட்டுப்புடவை நல்லியில் வாங்கியதுதான்'' என்றார் தீபிகா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு