Published:Updated:

22 வயதினிலே... 23 குழந்தையம்மா! - கருணைத் தாய் ஹன்சிகா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
22 வயதினிலே...  23 குழந்தையம்மா! - கருணைத் தாய் ஹன்சிகா
22 வயதினிலே... 23 குழந்தையம்மா! - கருணைத் தாய் ஹன்சிகா

மறுபக்கம் குணா

பிரீமியம் ஸ்டோரி
22 வயதினிலே...  23 குழந்தையம்மா! - கருணைத் தாய் ஹன்சிகா

ளைஞர்களின் மனசைத் தனது அழகால் சுண்டி இழுக்கும் நடிகை ஹன்சிகா மோத்வானியின் இன்னொரு முகமும் ரொம்ப அழகானதுதான்! கேட்டால், ஆச்சர்யப்படுவீர்கள். ஆம்... ஆதரவற்ற குழந்தைகள் பலரைக் கருணையோடு தத்தெடுத்து, சீராட்டிப் பாராட்டி வளர்த்து வருகிறார் ஹன்சிகா.

''நான் சின்ன வயசுலேயே சினிமாவுல நடிக்க வந்துட்டேன். அதனால இங்கே இருக்குற அதிசயமான விஷயங்கள் எதுவுமே எனக்குப் பிரமிப்பா தோணலை. தவிர, நான் என்னைப் பத்தி எப்பவுமே பெரிசா கற்பனை செஞ்சுகிட்டது கிடையாது. அது எனக்குப் பிடிக்கவும் பிடிக்காது. கார், பணம், பங்களான்னு ஆடம்பர வாழ்க்கையைவிட, சாதாரண மக்களின் இயல்பான வாழ்க்கைதான் என்னைக் கவர்ந்திருக்கு!'' என்ற ஹன்சிகாவிடம், அவர் தத்தெடுத்து வளர்க்கும் குழந்தைகள் பற்றிக் கேட்டோம்.

''எத்தனை அனாதைக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறீர்கள்?''

''அனாதை என்று சொல்லாதீர்கள். அனாதை என்கிற வார்த்தையே பொய்யானது. இங்கே யாருமே அனாதை கிடையாது. அதனால, அப்படி ஒரு வார்த்தையை என்கிட்ட சொல்லாதீங்க. எனக்கு கோபம் கோபமா வருது. இந்தச் சமூகத்துல இருக்கிற ஒவ்வொருவரும், தங்களால முடிஞ்சவரைக்கும் மற்றவருக்கு உதவ வேண்டியது அவசியம். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரின் கடமை அது. எந்த ஒருவரும் தன்னை அனாதை என்று ஏங்கும்படி விடக்கூடாது. அதைப் போல பாவம் வேறு கிடையாது. நம்மோடு சேர்ந்து வாழும் ஜனங்களுக்குச் சேவை செய்யறதுல எல்லோருக்குமே பங்கு இருக்குது. என்னால் இயன்ற பங்களிப்பை நான் அமைதியா செய்யறேன். இதுவரை 23 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வர்றேன்''.

''எந்தத் அடிப்படையில் குழந்தைகளைத் தேர்வு செய்கிறீர்கள்?'

22 வயதினிலே...  23 குழந்தையம்மா! - கருணைத் தாய் ஹன்சிகா

''வளரும் குழந்தைகளுக்கு இடம், உணவு, கல்வி... இந்த மூணும் ரொம்ப முக்கியம். சில குழந்தைகளுக்குப் பெற்றோர் இருக்கமாட்டாங்க. நோயாலோ, விபத்துலயோ தவறியிருப்பாங்க. சில குழந்தைகளுக்கு அம்மா, அப்பா ரெண்டு பேர்ல, ஒருத்தர் மட்டும் இருப்பாங்க. இந்தக் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமா கவனிச்சுக்க அவங்க மாமா, அத்தைன்னு யாராவது உறவுக்காரங்க இருப்பாங்க. ஆனா, சில குழந்தைகளுக்கு அம்மா, அப்பா ரெண்டு பேரும் இருந்தும், குழந்தைகளோட அடிப்படைத் தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்யமுடியாத அளவுக்கு வறுமைல இருப்பாங்க. அதனால, பெற்றோர் உள்ளவங்களா, இல்லாதவங்களான்னு பார்க்காம, எந்தக் குழந்தைகளுக்கு கவனிப்பு அதிகம் தேவைன்னு பார்த்து, அதன் அடிப்படையில்தான் குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து வளர்க்கிறேன்.''  

''குழந்தைகளை எங்கு வைத்துப் பராமரிக்கிறீர்கள்?

''இதுக்காக ஒரு ஹோம் மாதிரி எதுவும் நான் ஏற்பாடு பண்ணலை. நான் வளர்க்கும் எல்லாக் குழந்தைகளும் அவங்க அவங்க வீட்டுலதான் இருக்காங்க. அந்தக் குழந்தைகளோட சாப்பாடு, டிரெஸ், படிப்புச் செலவுன்னு அவங்களுக்கான அத்தியாவசிய செலவுகளை மட்டும் நான் பார்த்துக்கறேன். பெற்றோருடன் வசிக்கும் ஒரு சில குழந்தைங்க தங்குறதுக்கான இடம்கூட இல்லாம இருந்தாங்க. அவங்களுக்காக வீடு பார்த்துக் கொடுத்து, மாத வாடகையும் கொடுக்கறேன்.''

''நடித்துச் சம்பாதிக்கும் பணத்தை இப்படிக் குழந்தைகளுக்குச் செலவு செய்வதை உங்கள் குடும்பம் எப்படிப் பார்க்கிறது?''

''குழந்தைகளை வளர்க்கும் பழக்கத்தை எனக்குக் கற்றுக் கொடுத்ததே என் பாட்டிதான். பெற்றோரால் கைவிடப்பட்டு, தெருவுல சுத்தித் திரிஞ்ச குழந்தைகளைக் கண்டுபிடிச்சு, என் பாட்டி எடுத்து வளர்த்தார். அதன் பின்பு, என் அம்மாவும் ஆதரவற்ற குழந்தைகளை எடுத்து வளர்த்தாங்க. அவங்க பண்ணினதைத்தான், நான் இப்போ தொடர்ந்து பண்றேன்!''

''சினிமாவில் பிஸியாக இருக்கும் நீங்கள், குழந்தைகளுக்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்?'

22 வயதினிலே...  23 குழந்தையம்மா! - கருணைத் தாய் ஹன்சிகா

''ஐயோ, அதை ஏன் கேக்கறீங்க! நேரமே கிடைக்கலைன்னு சொல்லவே கஷ்டமா இருக்கு. குழந்தைகளுக்கான தேவை அனைத்தையும் வெளியில இருந்து பூர்த்தி செஞ்சாலும், அவங்களை அடிக்கடி போய் நேர்ல பார்த்துப் பேச முடியலையே, அவங்களோடு நேரத்தைச் செலவிட முடியலையே என்கிற குற்ற உணர்ச்சி என்னைத் தினம் தினம் கொன்னுக்கிட்டே இருக்கு. சினிமா ஷூட்டிங்குக்காக சென்னை, ஹைதராபாத், வெளிநாடுகள்னு சுத்திக்கிட்டே இருக்கேன். எப்பவாவது மும்பை வந்து இறங்கினா, அந்தேரியில் இருக்கும் என் வீட்டுக்குக்கூடப் போக மாட்டேன். முதல்ல, என் 23 குழந்தைகளையும் ஒரு ரவுண்டு போய்ப் பார்த்துட்டு அப்புறம்தான் என் வீட்டுக்கே போவேன்.''

''உங்கள் கல்யாணத்துக்குப் பிறகு, இந்தக் குழந்தைகளின் நிலை..?''

''என்ன, விளையாடறீங்களா? இந்த 23 பேரும் என் வயித்துல பிறக்கலைன்னாலும், இவங்க என்னோட குழந்தைங்கதான்! என் கல்யாணத்துக்கு அப்புறமும் சரி... இவங்க எல்லோரும் என்னோடதான் இருப்பாங்க. என் பாதுகாப்பில்தான் வளருவாங்க. இவங்களை ஒருபோதும் நான் கைவிடமாட்டேன்!''

ஹன்சிகாவின் குரலில் தாய்மையின் படபடப்பு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு