பிரீமியம் ஸ்டோரி
அறிவுப் பண்டிகை!

ஞானம் நிறைந்த பாரதப் புண்ணிய பூமியில் பிறந்த நாம், ஆண்டுதோறும் பல்வேறு பண்டிகைகளைக் கொண்டாடி வருகிறோம்.

லட்சக்கணக்கான உயிர்க் கூட்டங்களில் நமக்கு அரிதாக வாய்த்துள்ள இந்த மனிதப் பிறவியின் மேன்மையை உணரக் கடமைப்பட்டிருக்கிறோம் நாம்.

நம் வாழ்க்கைப் பயணத்தைத் திரும்பிப் பார்ப்பதற்கும், நல்வழியில் செல்வதற்குரிய புத்துணர்வைப் பெறுவதற்கும் பண்டிகைகள் பெரிதும் உதவுகின்றன. சத்தை விட்டுவிட்டுச் சக்கையை எடுத்துக்கொள்வதுபோல், வெறும் வெளிச்சடங்குகளை மட்டும் ஏனோதானோவென்று கடைப்பிடிப்பதை விடுத்து, பண்டிகைகளின் நோக்கங்களை, அதனுள் மறைந்திருக்கும் உள்ளார்ந்த தத்துவங்களை அறிந்துகொள்ள முயற்சி செய்யவேண்டும்.  

பண்டிகைகள் ஒவ்வொன்றும் வெறும் பொழுதுபோக்குக்காக ஏற்படுத்தப்பட்டவை அல்ல. நம் வாழ்க்கையை, குறிக்கோளை நினைவூட்டுவதே பண்டிகையின் நோக்கம். பண்டிகைகளின் உள்ளார்ந்த தத்துவங்களை அறிந்து கடைப்பிடிப்பதே சிறந்த அறமாகும்.

உடலில் வாழ்கிற உயிர் நலமாக வாழ வேண்டுமானால் அதற்கு அறிவுநலம், மனநலம், செவிநலம், செயல்நலம், உடல்நலம், உறவுநலம், பொருள்நலம் ஆகிய ஏழு நலன்கள் வேண்டும். பண்டிகைகளை முறையாகக் கொண்டாடி, வழிபாடுகளை நிகழ்த்தி, இந்த ஏழு நலன்களையும் நாம் ஒவ்வொருவரும் பெற முடியும்.

மனிதனை விலங்குகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது அவனது அறிவே!

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ

நன்றின்பால் உய்ப்ப தறிவு

மனம் போன போக்கில் செல்லாமல், தீமையானதில் இருந்து நீக்கிக் காத்து, நன்மையானதில் செலுத்திப் பயணிப்பதே அறிவு என்று அறிவுக்கு இலக்கணம் கூறுகிறார் திருவள்ளுவர்.

அத்தனை பண்டிகைகளும், நம் அறிவு சரியான வழியில் இயங்க வேண்டும் என்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளன. செங்கதிர் ஆதவன் சிறந்த ஒளியினைத் தருவதைப் போற்றுகிறோம். 'அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக...’ என்று காயத்ரி மந்திரத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் மகாகவி பாரதியார்.

அறிவை, ஒளியால் குறிப்பது மரபு. அறிவுத் துறைகளை விளக்குகளாக வைத்து, தீபாவளிப் பண்டிகை நாளில், அறிவைப் போற்றுகிறோம். கார்த்திகைத் திருநாளும் அறிவே வடிவான பரம்பொருளைப் போற்றுகிறது. நம் மனமானது இறுக்கம், அழுத்தம், சலிப்பு, வெறுப்பு, கோபம், இயந்திரத்தனம் என எத்தனையோ வகையான எதிர்மறை உணர்ச்சிகளில் நாள்தோறும் ஆட்பட்டு அல்லாடுகிறது.

வண்ணமயமான கோலங்கள், மாவிலைத் தோரணங்கள், ஒளிவீசும் தீபங்கள், அழகும் நறுமணமும் இணைந்த மலர்கள் எனப் பண்டிகைக் காலங்களில் இல்லங்களும் ஆலயங்களும் மனத்துக்கு உகந்த உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அள்ளித் தருகின்றன.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

மழை பெய்யவில்லை என்றால், கோயில்களில் நாள்தோறும் செய்யப்படும் வழிபாடுகளும் திருவிழாக்களும் நடைபெறாது என்கிறார் திருவள்ளுவர்.

நாள்தோறும், முக்கியமாகப் பண்டிகைக் காலங்களில், நம் உள்ளத் தாமரையில் வீற்றிருக்கும் இறைவனை ஆழ்ந்து நினைத்து வேண்டுவதால், மனம் தூய்மை பெறும்; உறுதி பெறும்; அமைதி பெறும்; நலம் பெறும். சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற தினங்களில் உபவாசம் இருந்து உள்ளத்தில் இறைவனை நினைத்தபடியே இருப்பதால், உடலுக்கும் உள்ளத்துக்கும் வலிமை சேர்கிறது.

சித்திரைத் திருநாள் என்று போற்றப்படும் முதல் நாள், இறைவழிபாட்டுடன்தான் துவங்குகிறது. இனிப்பும் களிப்பும் நிறைந்ததுதான் வாழ்க்கை. இரண்டையும் ஒன்றாக ஏற்றுப் பழக வேண்டும் என்கிற சமநிலை எண்ணத்தை உள்ளத்தில் பதித்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக, அன்றைய நாளில் வேப்பம்பூவையும் களி சேர்த்துக்கொள்வதும் வழக்கத்தில் உள்ளது.

தெய்வத் திருவுருவங்கள் ஒவ்வொன்றையும் சிறப்பாகப் போற்றும் பண்டிகைகள் அனைத்துமே தனிச்சிறப்பு வாய்ந்தவை. முதற்கடவுளான ஸ்ரீவிநாயகர் வழிபாட்டில், நிவேதிக்கப்படும் கொழுக்கட்டைகள் தத்துவம் நிறைந்தவை. உடல் வெள்ளை அரிசி மாவு; பரம்பொருள் இனிப்புப் பூரணம். நம் உடலுக்குள், அழியாத, இன்பமே வடிவான பரம்பொருள் வீற்றிருப்பதை உணர்த்தும் உயர்ந்த குறியீடு அது.

ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாளும் பண்டிகைகளுள் தனிச்சிறப்பு வாய்ந்தது. பூதனையையும் மற்றுமுள அரக்கர்களையும் வதைத்த கண்ணபிரானுக்குச் சீடை, முறுக்குகளை நைவேத்தியம் செய்து மகிழ்கிறோம்.

இதேபோல், அறுவடைக் காலங்களில் அம்பிகையை வழிபட்டு, அதிக வரம் பெறுகிற மரபும் நமக்கு உண்டு. நவராத்திரிகளில் மூன்று இரவுகள், உடல் ஆரோக்கியத்துக்காக ஸ்ரீதுர்கையை வழிபடுகிறோம். அடுத்த மூன்று இரவுகள், செல்வத் திருமகளை வணங்குகிறோம். செல்வ வளங்களை வரமாகப் பெறுகிறோம். நிறைவாக உள்ள மூன்று நாட்களில், ஸ்ரீசரஸ்வதி தேவியை வழிபட்டு, அறிவாற்றலைப் பெறுகிறோம். ஆக, உடல் நலம், அறிவு நலம், பொருள் நலம் ஆகிய மூன்றும் இருந்தால், ஒருவர் நன்கு செயலாற்றி வெற்றி பெறுவார் என்பதில் ஐயமே இல்லை.

விஜயதசமி நாளில், எல்லாக் காரியத்திலும் வெற்றி பெற வேண்டும் என்கிற வேண்டுதலுடன் புதிய முயற்சிகளைத் துவங்குதல், தொன்றுதொட்டு மரபாகவே இருந்து வருகிறது.

இப்படியான பண்டிகைகளில், மிக முக்கியமானது தீபாவளிப் பண்டிகை. அறிவு நலத்தை அருள்கிற அருமையான, உயர்ந்த பண்டிகை இது. அறிவுத் துறைகளில், சிறந்து விளங்க வேண்டும் என்று அன்றைய நாளில், ஆண்டவனைப் போற்றி வழிபடுகிறோம்.

கார்த்திகைத் திருநாளில், அறிவே வடிவான முருகக் கடவுளை தீபங்களேற்றி வழிபடுகிறோம். தேவர்களின் காலைப் பொழுது என்று போற்றப்படும் மார்கழி மாதம் முழுவதுமே இறை வழிபாட்டுக்கு உரியதுதான்.

'உடல்கள் உணவுப் பொருட்களில் இருந்து உருவாகின்றன. உணவுப்பொருட்கள், மழையில் இருந்து உற்பத்தியாகின்றன. மழை அறத்தில் இருந்து வெளிப்படுகிறது. அறம், முறையான வாழ்க்கையில் இருந்து தோன்றுகிறது. முறையான வாழ்க்கை பற்றிய தெளிவு, வேதங்களில் இருந்து விளங்குகிறது. வேதங்கள், இறைவனிடம் இருந்து வெளிப்பட்டன. எனவே, அனைத்தையும் விளக்குகிற வேதங்களும், அவற்றை அருளிய இறைவனும், அறத்தை அருளும் முறையான வாழ்க்கை நெறியில் நிலைகொண்டு உள்ளனர், என்கிறார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்.

வாழ்க்கை என்பது இடையறாத சுழற்சி என்பதை உணர்ந்து, நன்றி உணர்ச்சியின் வெளிப்பாடாகவும் பண்டிகையைக் கொண்டாடி வருகிறோம். தைத் திருநாளன்று, நம் பூமியில் உயிர் வாழத் தேவையான, முக்கியக் காரணமாகத் திகழும் சூரிய பகவானை வழிபடுகிறோம். வருடம் முழுவதும் நமக்குத் தேவையான உணவைத் தருவதற்காக உழைக்கிற விவசாயியையும் மாடுகளையும் நன்றியுடன் போற்றுகிறோம். இப்படி, வருடம் முழுவதும், காரணங்களோடு பண்டிகைகளைக் கொண்டாடி மகிழ்கிறோம். இவற்றில், வயது வித்தியாசமின்றி அனைவராலும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில், தீபாவளிக்குத் தனியிடம் உண்டு.

அறிவை வேண்டுகிற அற்புதமான திருநாள்.

மனத்து விளக்கினை மாண்புற

சினத்து விளக்கினைச் செல்ல நெருக்கி

அனைத்து விளக்கும் திரியொக்கத் தூண்ட

மனத்து விளக்கது மாயா விளக்கே!

(திருமந்திரம்)

அறிவு நூல்களைக் கற்பதன் மூலம், உள்ளத்தில் இருக்கக்கூடிய அறிவை முறையாகப் பண்படுத்தி, அறியாமையால் கோபப்படுகிற தன்மையை நீக்கி, அனைத்தையும் விளக்குகிற கடவுளை நோக்கி மனத்தை ஒருமுகப்படுத்தி தியானித்தால் மனத்தில் உள்ள அறிவு அழியாது; நற்பயனைக் கொடுக்கும் என்கிறார் திருமூலர்.

தீபாவளித் திருநாளன்று, அறிவின் பெருமையை உணர்ந்து, மெய்யறிவு நூல்களைக் கற்க முயற்சி செய்யுங்கள்.

தமோ குணத்தின் வெளிப்பாடாகிய சோம்பேறித்தனத்தை உதறும் நோக்கத்துடன் பட்டாசுகளை வெடியுங்கள். நல்லெண்ணெயில் திருமகள் வீற்றிருக்கிறாள், வெந்நீரில் கங்காதேவி குடியிருக்கிறாள் என நினைத்து, நன்னீராடுங்கள். புத்தாடைகளை அணிந்து, விளக்கேற்றி வழிபடுங்கள். பெரியோரின் பாதங்களில் பணிந்து வணங்குங்கள். இனிப்புகளை எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.  

முக்கியமாக, இவை அனைத்திலும் உங்கள் குழந்தைகளையும் முழுவதுமாக ஈடுபடுத்துங்கள். வாழ்வின் குறிக்கோள், அதை அடையும் வழி ஆகியவற்றை அறிந்து, பண்டிகைக் காலங்களில்  பரம்பொருளை சிறப்புறப் போற்றி, வணங்கி, வாழ்வாங்கு வாழுங்கள்.

அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு